ஆசிரியர் : சாண்டில்யன்
கதாபாத்திரங்கள்: ஜடாவர்மன் வீரபாண்டியன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இந்திரபானு, வீரரவி உதயமார்த்தாண்ட வர்மா, பரதபட்டன், சிங்கணன், ராமவர்மன், சாத்தன்,கூத்தன், இளநங்கை, முத்துக்குமரி, குறிஞ்சி,
கதையின் வரலாற்றுப்பகுதிகள்: கொற்கை, பொதிகை மலை, கொட்டுந்தளம், கோட்டாற்றுக்கரை ((தற்போதைய கொட்டாரக்கரா)),பரலி மாநகர் ((தற்போதைய திருவிதாங்கூர்)).
புதினத்தின் மொத்த பக்கங்கள்: 1195 பக்கங்கள் ((முதல் தொகுதி 620 பக்கங்கள்; இரண்டாவது 575 பக்கங்கள்.
கதை:
ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மதுரை அரியணையில் ஏறிய பதின்மூன்றாவது நூற்றாண்டின் இடைப்பகுதியில் பாண்டியநாடு பலமற்றுக்கிடக்கிறது. அதை பொலிவுறச்செய்து பெரும் வல்லரசாக்க கனவுகண்ட சுந்தரபாண்டியன், படைதிரட்டவும், பாண்டியநாட்டுப்பொருளாதாரம் மேம்படவும் அடிப்படை ஆதாரமாக இருக்கும், பாண்டிய நாட்டின் முத்து பெருமளவில் கொற்கையின் முத்தங்காடியிலிருந்து களவு போவதை அறிந்து அந்த களவை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் தன் தம்பி வீரபாண்டியனையும், தன் மகள் முத்துக்குமரியையும் அனுப்புகிறான் மன்னன் .
முத்துக்குமரியுடன் கொற்கை வந்து அங்கு ஆராய்ந்த வீரபாண்டியன் அங்கே நடைபெறும் முத்துக்களவு வெறும் களவல்ல என்பதையும் பாண்டியநாட்டை எழ விடாமல் சேரமன்னராகிய வீரரவி உதயமார்த்தாண்டனால் நடத்தப்படும் அரசியல் களவு என்பதையும் நன்கு உணர்கிறான் . இந்த களவு ஆராய்ச்சியின்போது கொற்கையின் கோட்டை காவலன் மகளான இளநங்கையிடம் காதல் கொள்கிறான் வீரபாண்டியன்.
கொற்கையில் மறைந்து முத்துக்களவுக்கு பொறுப்பாளியுமான சேரமன்னன் வீரரவி உதயமார்த்தாண்ட வர்மாவிடமிருந்து இளநங்கையை காப்பாற்றுகிறான் வீரபாண்டியன். கொற்கையை கைப்பற்ற சேரமன்னன் செய்த முயற்சியையும் முறியடிக்கிறான் பாண்டிய இளவல்.
இளநங்கையையும், பாண்டிய இளவரசி முத்துக்குமரியையும் இந்திரபானு என்ற வாலிபனுடன் பொதியமலை பீடபூமியான கொட்டுந்தளத்தின் படைத்தலைவனுக்கு ஓலை கொடுத்து அனுப்பி வைக்கிறான் வீரபாண்டியன்.
கொற்கையில் தனது திட்டம் பலிக்காமல் போகவே முன்னதாகவே விரைந்து கொட்டுந்தளத்தை கைப்பற்றிய சேராமன்னன் அங்கே இளநங்கையையும், முத்துக்குமரியையும் சிறை செய்கிறான். இந்திரபானு தனது சாமர்த்தியத்தால் இருவரையும் தப்ப வைத்து பொதியமலை பள்ளத்தாக்கிலிருக்கும் காட்டுக்கோட்டைக்கு அழைத்துச்சென்றுவிடுகிறான். அங்கே அவர்களை பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் சந்திக்கிறான். பாண்டிய இளவரசி முத்துக்குமரிக்கும் இந்திரபானுவுக்கும் காட்டுக்கோட்டையில் காதல் மலார்கிறது.
சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் காட்டுக்கோட்டை பலமாகப்பாதுகாக்கப்பட்டும் அங்கே சேரமன்னனின் ரகசிய ஒற்றனாயிருக்கும் போசளநாட்டு தாண்டநாயகன் சிங்கணன் காட்டுக்கள்வர் உதவி கொண்டு பாண்டியநாட்டு இளவரசி முத்துக்குமரியை கடத்திச்செல்கிறான். அவள் சேரநாட்டு அரண்மனையில் பரலி மாநகரில் சிறைவைக்கப்படுகிறாள். அவளை பின் தொடர்ந்து செல்லும் இந்திரபானு, சேரநாட்டு அரண்மனையில் குருநாதரான பரதபட்டனின் உதவியோடு தன் முகத்தை விகாரமாக மாற்றிக்கொண்டு முத்துக்குமரியை தப்புவிக்க முயல்கிறான்.
பலவந்தமாக தூக்கி செல்லப்பட்டு சேர மன்னன் வீரரவியால் சிறை வைக்கப்பட்ட முத்துக்குமரி, பாண்டியர் படை திரட்டிவிட்டால் அவர்கள் முதலில் சேரநாட்டைத்தான் தாக்குவார்கள் என்ற நினைப்புடன் போசளர் மற்றும் சிங்களர் துணையோடு, படை திரட்டலையே தடுக்கவேண்டி சேரமன்னனால் களவாடப்பட்ட கொற்கையின் விலை மதிப்பற்ற முத்துக்கள்...இந்த இரண்டு பொக்கிஷங்களையும் மீட்டு வரவும், மீண்டும் சேரநாடு தலைதூக்காமல் இருப்பதற்காகவும் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனும், இளவல் வீரபாண்டியனும் மிகச்சிறிய படையுடன் இருகூறாக பிரிந்து, முதலில் சேரநாட்டு எல்லையில் உள்ள கோட்டாற்று கோட்டையை கைப்பற்றுகிறார்கள்.
பின்னர் மிகுந்த அறிவுக்கூர்மை கொண்ட போர்திறனுடன் படை நடத்தி சேரன் தலைநகரான பரலி ((திருவிதாங்கோடு))க்குள் புகுந்து பலம் பொருந்தி சேரர் படையை நிர்மூலமாக்குகிறார்கள். போரில் சேரமன்னன் வீரரவி உதயமார்த்தாண்ட வர்மா வீரமரணம் அடைகிறான். கொற்கையின் முத்துக்கள் மீட்கப்படுகின்றன. முத்துக்குமரி-இந்திரபானு திருமணம் நடைபெறுகிறது. இந்திரபானு பாண்டியர் பிரதிநிதியாக சேரர் தலைநகரை ஆள்கிறான்.
வெற்றி வீரனாக கொற்கை திரும்புகிறான் வீரபாண்டியன்.
என் கருத்து:-
சாண்டில்யன் அவர்களின் சரித்திர நாவல்களுக்கும், மற்ற நாவலாசிரியர்களான கல்கி, பாலகுமாரன், விக்கிரமன், அகிலன் ஆகியோர்களின் சரித்திர நாவல்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.
மற்ற சரித்திர ஆசிரியர்கள் அவர்கள் கதைகளில் அவர்கள் விவரிக்கும் மன்னர்களின் அன்றைய ஆட்சிமுறை, எழுப்பிய கோவில்கள், அப்போது இருந்த சமய முறைகள், சமூக நிலைகள்,இராஜ்ஜிய விஸ்தரிப்புகள், அந்த மன்னர்களின் முக்கியமான கல்வெட்டுக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட பெரும் வரலாற்றை புனைவுகளோடு கொடுப்பதுண்டு.
சாண்டில்யன் அவர்கள் வரலாற்றில் ஒரு சிறிய முடிச்சை மட்டும் எடுத்துக்கொண்டு,அதை ஒரு க்ரைம் நாவல் போல் விறுவிறுப்புடன் முதலில் இருந்து கடைசிவரை கொண்டு செல்வதில் வல்லவர்.இந்த புதினத்திலும் கொற்கையின் முத்துக்களவு என்பதை வைத்துக்கொண்டு பாண்டிய-சேர மன்னர்களுக்கிடையே நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க போர்கள்,அதில் மேற்கொள்ளப்பட்ட போர்த்தந்திரங்கள், வேவு பார்த்தல் ஆகிய நிகழ்வுகளை தனக்கே உரிய பாணியில் கொடுத்துள்ளார். இடையிடையே தனது முத்திரையான காதல் வர்ணனைகளையும் ((சில இடங்களில் வரம்பு மீறினாலும்))கலந்து கொடுத்துள்ளார் .
ஆசிரியரின் பிற நாவல்களான கடல் புறா, யவன ராணி, ராஜ பேரிகை, ராஜ திலகம் ஆகியவற்றின் உயரங்களை தொடாவிட்டாலும், படிப்பவர்களின் மனதில் முத்திரை பதிக்கிறது இந்தப்புதினம்.
எனது மதிப்பீடு : 3//5..!!!