நிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான்.
உச்சினியென்பது… ❤️ • கவிதைகள் அழகியலைத் தாண்டியும் ஆழமானவை. வாசிப்பவர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. மனித உணர்வின் அத்தனை சாயல்களையும் ஓவியமாக்கும் வல்லமை அதன் சொற்களுக்குண்டு. இந்த உச்சினியின் சொற்கள் அவ்வாறானவை. தனது வாழ்வின் வலிகளை, சமூக சமநிலையின்மையை, அதன் மீதான தன் பெருங்கோபத்தை, நிகழ் உலகின் முரண்பாடுகளை, மனிதத்தின் மீதான தன் காதலை என அவரின் மனப்பாட்டினை அன்றாடத்தின் அழகினைக்கொண்டு இயல்பான வரிகளில் பரியேற்றியிருக்கிறார் மாரி செல்வராஜ். • “பொறுத்தலின் வரிகளில் சலிப்படைந்து உடைத்தலின் வரிகளை எழுதுகிறபோது மட்டுமே சுரக்கும் ஓர் பெருஞ்சுனை சுதந்திரம்” • பல சமயங்களில் கல்லென ஆயுதமாகும் இவர் வரிகள், ஆங்காங்கே பூக்களாக மணம் வீசவும் செய்கின்றன. • “சிட்டுக்குருவிகளை நோக்கி அச்சிறுவன் வீசியெறிந்த கல்லில் வந்தமர்ந்தது மணிப்புறா.” • என் மட்டில் இக் கவிதைத் தொகுப்பில் பல தாக்கத்தை ஏற்படுத்தின. வலியை உணர வைத்தன. சில கவிதைகள் என் புரிதலுக்கு தற்சமயம் எட்டவும் இல்லை. ஒரு கல், என் புத்தர், அபாயகரமான வெளிச்சம், கரப்பான் பூச்சிகளின் தேநீர்க்கோப்பை, பன்றிக்குட்டிகளை ஏன் பரிசளிப்பதில்லை, பசித்த பிரபஞ்சத்தின் புலி, எப்போதும், மௌனத்தை வைத்திருந்தேன், பிடுங்கியே ஆக வேண்டிய மயிர் போன்ற தலைப்பிலான கவிதைகளும், மூன்றே வரிகளில் அமைந்த குக்கூ, கத்துவம், மூர்க்கம் ஆகிய கவிதைகளும் என்னை அணைத்துக்கொண்டன. • “இந்த இருள் அபாயகரமானது இருளுக்கெதிரான நம் வெளிச்சமும் அபாயகரமானதாக இருந்தே ஆகவேண்டும்.”
உச்சினியென்பது" மாரி செல்வராஜின் இந்த கவிதை தொகுப்பு கடந்த மார்ச் 2022ல் வெளியானது, என்ன காரணமோ தெரியவில்லை, உடனே வாங்கிட்டேன், வாசிக்கத் தான் நாட்கள் எடுத்துக் கொண்டேன், காரணம் இது அவ்வளவு எளிதான கவிதை தொகுப்பு அல்ல, இதை வாசிக்க கூட ஒரு கனத்த இதயம் வேண்டும், ஒரு ஆழமான புரிதல் வேண்டும்.
கவிதைகள் என்றால் அழகு, காதல், ரசனை என்ற பிம்பத்தை உடைத்து நிராகரிப்பு, அடக்குமுறை, ஒடுக்கம், கோபம் என்ற கவிதை ஜூவாலைகள் இந்த புத்தகத்தில் பற்றி எரிகின்றன..
"நிச்சயமாக, நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள்"
இந்த புத்தகத்தை எல்லோரும் வாசித்துவிடலாம் ஆனால் உணர்வது கடினம், முடிந்தால் ஒருமுறை உணர்ந்து பாருங்கள்✨
மாரி செல்வராஜ், 'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பின் வழியே தமிழ்ப் புனைவு வெளிக்குள் ஆவேசமாக நுழைந்தவர். 'ஆனந்த விகடன்' இதழில் வெளிவந்த 'மறக்கவே நினைக்கிறேன்' எனும் தொடரின் வழியே பரந்துபட்ட தமிழ் வாசகர்களைப் பெற்றார். 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய இரு திரைப் படைப்புகளின் இயக்குநராக, இந்திய அளவிலும் உலகளாவிய தமிழர்களையும் சென்றடைந்தார். நிராகரிப்புகளின் உக்கிரத்தில் வாழ்தலின் தீவிரத்தை உணர்ந்த சொற்களால், அதிகாரத்தின் மீதான பெருங்கோபத்தையும் சகமனிதர்கள் மீதான பேரன்பையும் இத்தொகுப்பில் கவிதைகளாய்ப் புனைந்திருக்கிறார். எதிர்ப்புணர்ச்சியின் மின்மினிகளை, நினைவுகளின் உன்மத்தப் பறையை, காதலின் பனிப்புகையாலான கனா பிம்பங்களைக் கவிதைகளாய் ஏந்தி ‘உச்சியினி'யின் கைப்பிடித்துத் தமிழ்க் கவிதைக்குள் நுழைகிறார்.
"நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடுசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாயத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான்" - மாரி செல்வராஜ்
புத்தகப் பரிந்துரையில் இன்றளவும் முதலில் இருக்கும் "மறக்கவே நினைக்கிறேன்" மற்றும் "தாமிரபரணியல் கொல்லப்படாதவர்கள்" என்னும் புத்தகங்களின் வரிசையில் "உச்சினியென்பது" கவிதை வடிவில்.. உரக்க ஒலிக்க வேண்டிய குரலாக!!!