மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் என்னும் முறையில் பல்வேறு நூல்களை அசோகமித்திரன் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார். தான் வாசித்த ஒரு நூலை முன்வைத்துத் தன்னுடைய இலக்கிய மேதமையைப் பறைசாற்றிக்கொள்ளும் போக்கு மதிப்புப் பெற்றுவரும் ஒரு காலகட்டத்தில் நூலை முன்னிறுத்திப் பேசும் அசோகமித்திரனின் கட்டுரைகள் பெரும் ஆறுதல் அளிக்கின்றன. உணர்ச்சிவசப்படாமல் நூல்களை அசோகமித்திரன் அறிமுகப்படுத்துகிறார். படைப்புகளைக் காலத்தின் பின்னணியில் பொருத்திக்காட்டுகிறார். சிறப்புகளை மிகையின்றிச் சொல்கிறார். போதாமைகளைக் கூடியவரை நுட்பமாகச் சொல்லும் அசோகமித்திரன், ஒரு சில சில இடங்களில் வெளிப்படையாகச் சொல்லும்போதும் காரமான சொற்களைப் பயன்படுத்துவதில்லை. எந்த ஒரு நூலைப் பற்றியும் ஒவ்வொருவரும் தன்னுடைய வாசிப்பின் மூலம் முடிவுக்கு வர வேண்டும் என்று நம்பும் அசோகமித்திரன் தன் வாசிப்பின் முடிவுகளை வாசகர்களிடத்தில் திணிக்காமல் நூல்களைப் பற்றிப் பேசுகிறார்.
எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் கலாபூர்வமான, கச்சிதமான சொற்சித்திரங்களாக உருப்பெற்றிருக்கின்றன. பல சித்திரங்கள் சிறுகதைக்கு இணையாக உள்ளன. படைப்பாளிகளின் தனிப்பட்ட ஆளுமைகளைப் பற்றிச் சொல்லும்போது அவர்கள் படைப்பைப் பற்றிய தன் பார்வையையும் இயல்பாக அதில் இணைத்துவிடுகிறார். எளிய கோடுகளால் ஆன இந்தச் சித்திரங்கள் அழிக்க முடியாமல் மனத்தில் பதிந்துவிடக்கூடியவை. - அரவிந்தன்
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.