குமரி மாவட்டத்தில் துறைமுகத்தையொட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப் போவது இந்தநாவலின் வெற்றி. குறிப்பாக காசீம் சுவற்றில் விழும்போது அந்த சுவரில் படிந்திருக்கும் அவனின் வாப்பாவின் வாசத்தை உணர முற்படும் இடம் மனதை வலிக்கச் செய்கிறது. கதை முழுதும் வலி சுமக்கும் பிம்பங்களை முன்னிறுத்தி நகர்த்துகிறார். அவர்களின் வாழ்நிலை குறித்த பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது.
Thoppil Mohamed Meeran was an Indian Nagercoil based author who wrote in Tamil.
Meeran was awarded the Highest Indian Government award for Literature, Sahitya Akademi Award in 1997 for his novel Saivu Narkali (The Reclining Chair). He also received the Tamil Nadu Kalai Ilakkiya Perumantam Award, the Ilakkiya Chintanai Award, and the T N Govt. Award. He published six novels and seven short story collection.
மீனவர் வாழ்வின் எதார்த்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்த படைப்பு. கல்வி இல்லாவிட்டால் இந்த சமூகம் எப்படியிருந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது, இதை உணரச் செய்ததையே இந்தப் புத்தகத்தின் வெற்றியெனக் கருதுகிறேன்.
தோப்பில் முஹம்மது மீரான் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர். அவரின் ‘துறைமுகம்’ நாவலை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முஹம்மது மீரானின் கடலோரத்து கிராமத்து வர்ணனைகள், நம்மை கடலை நோக்கி அழைத்துப் போகிறது. நாமும் கடலின் அருகே ஒரு குடிசையில் வாழ்வதைப் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துவது, எழுத்தாளரின் வெற்றி. தோப்பில் முஹம்மது மீரான் குரானில் நன்கு தேர்ந்தவர் என்று அவரின் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில், இந்தியாவின் கடலோர கிராமத்தில் இஸ்லாமியர்களை எவ்வாறு வேண்டுமென்றே பின்தங்க வைத்துள்ளனர் என்பதை மிக அழகாக படமாக்கியுள்ளார். அதை எவ்வாறு கிராமத்தை சேர்ந்த காசிம் என்கிற இளைஞன் மேம்படுத்த எண்ணுகிறான் என்பதை விவரித்துள்ளார். வட்டார மொழி நடையை நாவல் முழுவதும் கையாண்டுள்ளதால், பல மலையாள, அராபிய வார்த்தைகளை பிரயோகம் செய்துள்ளதால், சில இடங்களில் படிப்பதற்கு கடினமாக உள்ளது. வட்டார வார்த்தைகளுக்கு அங்கங்கே அர்த்தம் வழங்கியபோதும், பின் இணைப்பாக, வார்த்தைகளின் அகராதியை சேர்த்திருந்தால், படிப்பதற்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும்.
தனது மதத்தை சேர்ந்தவன், தனது சாதியை சேர்ந்தவன் என்ற குருட்டு நம்பிக்கை எவ்வாறு ஒருவரை ஏமாற்றுகிறது. ஈனா பானா கூனா மாதிரி ஏமாற்றுக் கார முதலாளிகள் மதத்தின் பெயரால் எவ்வாறு ஒரு கிராமத்தையே தங்களின் கீழ் கொண்டுவருகின்றனர். ஐதுரோஸ் போன்ற நல்ல முஸ்லீம் முதலாளிகள் கூட, எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர்.
மீராசா, மீரான் பிள்ளை, காசீம் என பல்வேறு கதாபாத்திரங்களை உரையாடலில், மிக அழகாக கதையை நகர்த்துகிறார். படிப்பறிவு எவ்வளவு முக்கியம், கிராமத்து மக்கள் காந்தியை பற்றிக் கூட அறிமுகமில்லாமல் இருப்பதை, அவர்களின் அப்பாவித்தனத்தை மிக அருமையாக படம் பிடிக்கிறார்.
ஒரு இஸ்லாமியனாக இருந்துக் கொண்டு, அதன் முன்னோக்கு, பின்னோக்கு விஷயங்களை நேர்மையான முறையில் பதிவு செய்வதால், எழுத்தாளரின் மீது ஒரு மிகப் பெரிய மரியாதை நமக்கு ஏற்படுகிறது. எவ்வாறு ஆங்கிலம் படிப்பது, பள்ளிக் கூடத்திற்கு அனுப்பவது, தடுப்பூசி போட்டுக் கொள்வது கூட, மூட நம்பிக்கையால், ஒரு கிராமத்தில் விலக்கப் படுகிறது. இஸ்லாமிய அறிஞர்களின் மேல்நோக்கு சிந்தனையில் ஊறாமல், மதத்தை எவ்வாறு தவறாக ஊர்தலைவர் பயன்படுத்துகிறார் என்பதை விரிவாக விளக்குகிறார். இது இஸ்லாமிற்கு மட்டுமல்ல, மதமோ, சாதியோ வைத்து பிழைப்பு நடத்தும் ஒவ்வொரு அதிகார மையத்திற்கும் பொருந்தும். ஒவ்வொரு இஸ்லாமியரும், மேலும் ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய ஒரு நல்லதொரு புத்தகம்.