இந்திர நீலம் என்று பெயரைக் கேட்டதும் உள்ளுக்குள் ஒரு குரல்,
’இதுவும் நீலம் மாதிரி நீளமா இருக்குமே!'
என்று மனதை தேற்றிக்கொண்டு குழுவினர் வாசிக்கத் தொடங்கும் அளவுக்கு வெண்முரசுடனான இந்த 500 நாட்கள் தாண்டிய பயணம் வாசகர்கள் மனதை ப(பு?)ண்படுத்தியிருக்கிறது.
“ஓம் ஓம் ஓம் அவ்வாறே ஆகுக! ”
என்று ஆசான் ஆமோதித்திருக்கிறார் 954 பக்கங்களாக !!!
ஆரம்பத்தில் இந்திரபிஸ்தம் அமைக்க கிருஷ்ணர் உதவி கேட்டு திருஷ்டத்யும்னனை துவாரகை அனுப்பி வைக்க திரௌபதி ஒரு கேமியோவும், கடைசியில் காண்டீபத்துக்கு ஓப்பனிங் குடுக்க அர்ஜூனனும் வந்து செல்கிறார்கள் மற்றபடி கதை முழுவதும் நீலன் குடும்பத்தாரும் அவர்களுக்குள் சமாதானப்படுத்த செல்லும் திருஷ்டத்யும்னனும் அவனுக்கு நண்பனாகும் சாத்யகியும் தான் !
நீலம் என்றாலே கிருஷ்ணர், இது
இந்திரநீலம் கிருஷ்ணன் கதை தான் ஆனால்,
“மாப்ள இவர் தான்,ஆனா அவர் போட்ருக்க ட்ரஸ் என்னது!”
என்ற கதையாக முழுமையாக பக்கங்களை நிறைத்திருப்பது சியமந்தகம் தான் !!!
புத்தகம் தொடங்கும் போது அது என்ன என்று கூட தெரியாமல் வாசிக்கத் தொடங்குபவர்களை உறக்கத்தில் கூட ‘சியமந்தகம்,சியமந்தகம்‘
என்று உளறும் அளவுக்கு கதறக் கதற வைத்து செய்திருக்கிறார் ஆசான்!!!
முந்தைய அத்தியாயங்களில் பாண்டவர் கௌரவர்கள் கல்யாண மாலை! ‘அப்புறம், கிருஷ்ணன் மட்டும் என்ன தொக்கா?’ என்று ஆசான் இந்த புத்தகத்தை எழுதியிருப்பார் போல.
காதலையும் கிருஷ்ணனையும் பிரித்திறியாத அளவுக்கு அவன் கதைகள் கேட்டு வளர்ந்த நமக்கு பாமையின் கதை ரசிக்கிறது.
உண்மையில் நீலத்தை ரசிக்க முடியாமல் போனது அதன் அதீத கவிதை நடையைப் போல், தான் தூக்கி வளர்த்த குழந்தையான கண்ணனை ராதை காமுறும் காட்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாமையும் தான்.
பாமையை கிருஷ்ணன் காதல் ரசிக்கும் படியாக இருந்தது.
ஒருமுறை கண்டவனை மனதில் வரிந்து கொண்டு காத்திருக்கிறாள்.துவாரகை அவள் பலமுறை கனவில் கண்ட நகரமாக விரித்த காட்சிகளை ரசித்தேன்.
துவாரகை பெருவாயில் கால்கோளிடும் சமயத்தில் அவள் விளக்கேற்றும் போது கிருஷ்ணப் பருந்து மேலே பறக்க “துவாரகையின் அரசி!” “வாழ்க வாழ்க” என்று மக்கள் முழக்கமிட்ட காட்சிகள்,ஊன் உறக்கம் மறந்து காத்திருந்தவளை சியந்தகத்தை கொண்டு வந்து இளைய யாதவர் மணம் கொண்ட காட்சி எல்லாம் புல்லரிக்க வைத்தது.
ஆனால் அந்த கள்வன் கேப்புல இன்னொரு கல்யாணம் பண்ணி கொண்டு வருவது பாமையை போல நமக்கும் அதிர்ச்சி தான்.
அதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அஷ்டலட்சுமி என்ற பெயரில்,
சங்கு சக்கரத்தோட பிறந்தாள்,
திருவாகவே வளர்ந்தாள்,
எதையும் காணாத விழியோடு இருந்தாள்,
அவளுக்குள் அறியா தெய்வமொன்று குடியேறியதைப் போலனு
எட்டு முறை ஒரே விஷயத்தை ‘காப்பி பேஸ்ட்’ போட்டு கடுப்பேற்றிவிட்டார் ஆசான்.
அது அவருக்கே போரடித்து ஒரு எண்டர்டெயின்மெண்ட்க்குகாக, ‘சியமந்தகம்’ அதிக தடவை வருகிறதா ‘வரதா’அதிக தடவை வருகிதான்னு ‘அடிச்சு காட்டுவோம்னு’ போட்டி போட்டு எழுதியிருக்கிறார்.
நம்மை வரதாவுக்குள் முக்கிவிட்டு, ஒரு கூட்டத்தையே சியமந்தகத்தை வைத்து திருடன் போலீஸ் விளையாட்டு விளையாட வைத்து ஒரு புத்தகத்தை முடித்து விட்டார் ஆசான் !!
சாக்லேட் பாய் மாதவனை சைத்தான் படத்தில் ஆண்ட்டி ஹீரோவாக பார்த்ததை ஏற்றுக்கொள்ள முடியாதது போல், கிருஷ்ணரின் கொடூரமுகம் வெளிப்பட்ட கிருஷ்ணவபுஸ் காட்சிகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எல்லாம் அந்த சியமந்தகத்துக்காக !!! அதை மீட்பதற்காக. சரி அப்படியாவது பிரச்சினை தீர்ந்ததா என்றால் ,அப்போது தான் அடுத்த சண்டை தொடங்குகிறது,
“கிருஷ்ணன் உனக்கா ? எனக்கா ?”
என்று காதல் மிகுந்து சக்களத்தி சண்டை வரும் என்று எதிர்பார்த்தால்,
“சியமந்தகம் உனக்கா ? எனக்கா?”
என்று அஷ்டலட்சுமிகளும் அட்ட எ டைமில் சண்டை போட்டு நம்மை அப்சட் ஆக்குகிறார்கள். கடைசில அந்த சியமந்தகம் யாருக்கு தான் என்று நீலனாவது ஒரு முடிவுக்கு வருவார் என்று பார்த்தால்,
’அதுல ஒன்னுமில்ல,கீழ போட்டுடு’
என்று அவர் தீர்ப்பு சொல்ல, கடலுக்குள் மூழ்கி மறைகிறது சியமந்தகம் !!
‘நாட்டாம தீர்ப்ப மாத்திச் சொல்லு ‘
என்று சொல்லும் அளவுக்கு வாசகர்களுக்கு வாசிக்க ஈடுபாடு இல்லாததாலும், டைட்டானிக் போல கடலுக்குளிருந்து மீண்டும் யாராவது அந்த சியமந்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து பின்னர் கதை சொல்வதாக ஒரு புத்தகம் ஆசான் எழுத வாய்ப்புகள் இருப்பதாலும், தற்சமயம் ஒரு வழியாக நிறைவு பெற்றது இந்திர நீலம் என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறது வெண்முரசு வாசிப்புக் குழு.
இந்த புத்தகத்தில் நான் ரசித்த ஒரே விஷயம் திருஷ்டத்யும்னன் ச��த்யகி நட்பு தான்.
காண்டீபம் கடுப்பேற்றாமல் செல்லும் என்று நம்புவோம் !