மணநாள் அன்றே மனப் பிறழ்வு ஏற்பட்ட ஒரு பெண் தன்னை எம்ஜிஆர் என நினைத்துக்கொள்கிறாள். எம்.ஜி.ஆர் பற்றி அவளிடம் சொல்லப்பட்ட கதைகள், நிகழ்ச்சிகள், குறிப்புகள் எல்லாமாக சேர்ந்து அவளுடைய வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. புத்தர், ஏசு, காந்தி போல எம்.ஜி.ஆருக்கும் பிரமிப்பான நிறைய கதைகள் உண்டு. தன்னையே எம்.ஜி.ஆராக நினைத்துக்கொள்ளும் பெண்ணும் அந்த நிகழ்வுகளோடு தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்கிறாள். இந்த நாவலை பிரியா என்பவளும் அவளுடைய கணவரும் இந்தக் கதையை சொல்லியிருக்கிறார்கள். ஒரே கதையை இரண்டு விதமாக. மிகுந்த உளவியல் சிக்கல் நிறைந்த இந்தக் கதையை எம்.ஜி.ஆரின் பின்னணியில் சொல்லியிருப்பதற்குக் காரணம், அவருக்குப் பெண்களிடம் இருந்த மரியாதை... அல்லது ஈர்ப்பு.
தமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.