முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதூர், கலை, பண்பாடு, கலாசாரத்தை நல்வகை பேணும் நான்மாடக் கூடல் நகர், தூங்கா நகரம் என இத்தனை சிறப்புப் பெற்ற நகரம் மதுரை. பழைமையான கோயில்களிலும் கட்டடங்களிலும் கோட்டைகளிலும் தன் பழம்பெருமைகளைக் கட்டிக்காத்து வரும் பெருமைமிக்க ஊர் மதுரை. பாண்டியர்கள் முதல் நாயக்கர்கள் வரை பல்வேறு ஆளுகைகளின் கீழிருந்த மதுரை மாநகரைச் சுற்றிலும் வரலாற்றின் எச்சங்கள் எங்கெங்கும் காணக்கிடைக்கின்றன. அதன் வீதிகள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இப்படிப் பல பெருமைகள் கொண்ட மதுரையைப் பற்றிய வரலாறு, நிகழ்காலத் தகவல்களைக் கொண்டு விகடன்.காம்-ல் வெளியான கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்த நூல். தொழிலாளர்களுக்கென தனியே ரயிலை இயக்கிய மதுரா கோட்ஸ் ஆலை, முதன்முதலில் ரயிலைக் கண்ட மதுரை மக்களின் மனநிலை, மருதநாயகம் கான் சாகிப் ஆன பிறகு மதுரை கவர்னராக இருந்து மதுரை மக்களுக்குச் செய்த பணிகள், வெளிநாட்டினர் ஏன் மதுரை மாநகரை அதிகம் நேசிக்கிறார்கள்... இதுபோன்ற பழம்பெரும் மதுரை பற்றிய வரலாற்றுப் பக்கங்களைக் காட்டுகிறார் நூலாசிரியர். தொல்மதுரையைக் காணத் தொடங்குங்கள்.
அ. முத்துக்கிருஷ்ணன் (a. muthukrishnan) தமிழ் எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். 1973 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். தென்னிந்தியாவின் மதுரை மாவட்ட மங்கல்ரேவு கிராமத்தில் பிறந்த இவர் தனது இளம் பருவம் வரை கோவா, ஹைதரபாத், மும்பை நகரங்களில் வசித்தார். 1986 இல் மதுரைக்கு பயணமானது இவரது குடும்பம்.
தமிழைக் கற்பதற்காகப் பல்வேறு எழுத்தாளர்களைச் சந்தித்த முத்துகிருஷ்ணன் அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு இடதுசாரிகள் மற்றும் சுற்றுச்சூழலியல் அறிஞர்களைச் சந்தித்து பல்வேறு மக்கள் பிரச்சினைகளை அறிந்து கொண்டார். உலக அளவில் பல்வேறு மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து தொடர்ந்து வருகிறார். தமிழ் நாளிதழ்களிலும் மாதாந்திர இதழ்களிலும் வார இதழ்களிலும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல், தீண்டாமை, அரசியல், விளிம்புநிலை மக்கள், வாழ்வியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தியாவில் பெரு நிறுவனங்களால் எங்கெல்லாம் மக்கள் சுரண்டப்படுகிறார்களோ பாதிக்கப்படுகிறார்களோ அங்கே எல்லாம் சென்று உண்மை நிலையை அறிந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பந்தமாக குஜராத் மாநிலத்திற்கும் விதர்பா விவசாயிகளின் தற்கொலை பற்றி அறிய மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரித்துக் கொன்றது தொடர்பாக அறிய காந்தமால் நகரத்திற்கும் போஸ்கோ திட்டத்தைப் பற்றி அறிய ஒடிசா மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள உண்மை நிலையை அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்காக நேரில் கள ஆய்வு செய்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக ஏற்படுத்தப்படும் உண்மை கண்டறியும் குழுவில் ஒரு உறுப்பினராக பல பகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்துள்ளார். எட்டு நாடுகளின் வழியே 10000 கி.மி தரை வழியே பயணித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு சென்ற சர்வதேச குழுவில் இடம் பெற்றவர். ஜோர்தானில் நிகழ்ந்த பாலஸ்தீன நிலமீட்பு போராட்டத்தில் பங்கு கொண்டவர். குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை முதலாவதாக தமிழில் தந்தவர்.
இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "அப்சலைத் தூக்கிலிடாதே" மற்றும் "தோழர்களுடன் ஒரு பயணம்" என்ற இரு நூல்களையும் "குஜராத் 2002 இனப்படுகொலை", "அமைதிக்காகப் போராடுவோம்", "மதவெறி" மற்றும் “குரலின் வலிமை” நூல்களையும் தமிழில் மொழிபெயர்துள்ளார். புரட்சியாளர் சே குவாரா பற்றிய ஆவணப்படத்தை 2002 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டதன் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை பரவலாக பெற்றுள்ளார். ஸ்டார் விஜய் தொலைகாட்சியின் நீயா நானா மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொன்டு தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூகம் சார்ந்த உரையாடல்களில் தொடர்ந்து தன் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.
2010 ஆம் ஆண்டு மதுரை யானைமலையைக் காக்கும் பொருட்டு முத்துகிருஷ்ணன் ஆரம்பித்த "பசுமை நடை" என்ற பயணத்தைத் தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறன்று ‘பசுமை நடை’ பயணம் நடைபெறுகிறது. இதுநாள் வரையிலுமான பசுமை நடையில் தொகுக்கப்பட்ட ஆவணங்களை ‘மதுரை வரலாறு- சமணப் பெருவெளியின் ஊடே...’ என்ற பெயரில் நூலாகவும் வெளியிட்டுள்ளார்கள்.
மதுரைக்கு என் இதயத்தில் ஒரு நெருக்கமான இடம் எப்பொழுதும் உண்டு . பல குழந்தைப்பருவ இனிய அனுபவங்களையும், நினைவுகளையும் அள்ளித்தந்த பெருமை இவ்வூருக்கும் இம்மக்களுக்கு உண்டு. இந்த தொகுப்புக்காக ஆசிரியர் முத்துகிருஷ்ணன் செய்துள்ள ஆய்வுகளும், தகவல் சேகரிப்பும் மலைப்பை ஏற்படுத்துகிறது . கண்டிப்பாக முத்துகிருஷ்ணன் என்னை விட மதுரையை வெறித்தனமாக காதலிப்பவராக இருக்க வேண்டும் . இல்லையேல் இப்படி ஒரு சுவாரசியமான காலவரிசைப்படுத்தப்பட்ட மதுரையின் வரலாற்று தொகுப்பை பெரும் ஆர்வத்துடன் எழுத முடியாது. மதுரை மக்களின் மனசு ஏன் விசாலமாக இருக்கிறது என்ற ஒரு நீண்ட நாள் கேள்விக்கு வரலாற்று மனுடவியலின் மூலம் முத்துகிருஷ்ணன் பதிலளித்திருக்கிறார். மலைப்பான ஒரு தகவல் குவிப்பு இந்நூல் . ஆசிரியர்க்கு பாராட்டுக்கள் .என் போல் மதுரையின்மீதும், மதுரை மக்களின் மீதும் தீராத வேட்கையை கொண்ட யாவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பனுவல். மதுரை என்றுமே ஜனநாயக மற்றும் பிற கருத்தியல் சகிப்புத்தன்மையின் முன்னோடியும் உதாரணமும். வெறுப்பு அரசியலை மய்ய கருவாக கொண்டு மக்களை வசியம் செய்தும் திசைதிருப்பி ஆளும் எந்த தந்திரத்துக்கும் முற்றிலும் எதிராக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வலிமையுடன் நிற்கும் மதுரையும் அதன் மக்களும் கொண்டாடப்பட வேண்டியவர்களே.அவர்களின் கதை சொல்லப்படவேண்டிய ஒன்றே !
மதுரை - பொதுவாக தமிழ் சினிமாவில் மதுரையையும், மதுரை மக்களையும் ஏதோ வன்முறைக்காகவே பிறந்தவர்கள் என்று சர்வ சாதராரணமாக மிகைப்படுத்தி காட்டுவதை பார்க்கலாம். மதுரையின் வரலாற்றை அறியாமல் மேம்போக்காக செய்யப்படும் ஒரு கேவலமான செயல்களை தான் இந்த "மீசை வெச்ச ஆம்பள" இயக்குனர்கள் செய்கிறார்கள்.
உண்மையில் மதுரையின் வரலாறு என்ன, மதுரையின் மக்கள் வாழ்வியல் எப்படி, மதுரைக்கென்றே இருக்கும் தனித்துவமும், அதில் உள்ள பொக்கிஷங்களை பற்றி விவரிப்பது தான் இந்த புத்தகம்.
மதுரையின் மனிதகுல வரலாறு, ஆதி மனிதன் பாறை ஓவியங்கள், நம்ம மூதாதையர்கள் விட்டு சென்ற செம்மொழி சான்றுகள், இந்த நகருக்கு என்ற இருக்கு நாகரிகம், இந்கு நடந்த வணிகமும், கிரேக்க, ரோமானிய, யவன மக்கள் மதுரை வருகையும், சங்கம் வளர்த்த நகரமாகவும், பாண்டியன் ஆண்ட நகரமாகவும், கிழக்கிந்திய பிரிட்டிஷ் கம்பெனியின் ஆதிக்கமும், மருதநாயகம் கலெக்டர் ஆகவும், காந்தி பல முறை வருகை தந்ததும் என்று எண்ணற்ற வரலாற்று சுவடுகள் நிறைந்தாய் இருக்கும் ஒரு பழம்பெரும் நகரம் தான் மதுரை.
இந்த புத்தகத்தை படித்த முடித்தவுடன் மதுரை முழுக்க சுற்றி அலைந்த மாதிரி ஒரு உணர்வை அடைந்தேன். மதுரையை பற்றி மேலும் அஆழமாக படிக்க இந்நூல் ஒரு பிள்ளையார் சுழியாக இருக்கும்.