சந்தை கூடுகிற நாள் அனிதா கேட்டாள் “வாயா புரு! வாயேன் போய் வேடிக்கை பார்க்கலாம். தமாஷாயிருக்கும்.”புரு ஆச்சரியமாகப் பார்த்தான்.இவ்வளவு கலகலப்பான இவளா... இந்த அளவு குழந்தைத் தனமான ஆசையுள்ள இவளா - நேற்று ராத்திரி இவ்வளவு பயமுறுத்தியது?“வாயேன் போகலாம்!”“சரி வா” கிளம்பினான். “நானும் இதுவரை கிராமத்து சந்தையை வேடிக்கை பார்த்ததில்லே. சீக்கிரமா கிளம்பி வா” என்று அவளை அனுப்பிவிட்டு-“கொஞ்சமிருங்க தம்பி” என்ற குரல் கேட்டுத் திரும்பினான்.காவல்காரக் கிழவன்!“என்ன தாத்தா?”“வேணாம் தம்பி. அவளைக் கூட்டிக்கிட்டு உடனே ஊரை பார்க்கப் போய்ச் சேரு. இந்த ஊரை விட்டே போயிடு.”“ஏன்?”“அது இங்கே இருக்கிறது அவ்வளவு நல்லதில்லே!”“அதைத்தான் ஏன்னு கேட்கறேன்!”