கல்கி சாஹித்திய விருது பெறுவதற்கு காரணமான படைப்பு அலை ஓசை. கல்கியே பெருமையுடன் தன்னுடைய உன்னதமான படைப்பு என்று கருதும் நாவல் அலை ஓசை. ஆகவே, அலை ஓசையை விமர்சனம் செய்வது எளிதல்ல.
அலை ஓசையில் கணக்கில் அடக்கமுடியாத அளவு கதாபாத்திரங்கள் உள்ளன. கிட்டாவய்யரின் குடும்பம் - கிட்டாவய்யர், சரஸ்வதி அம்மாள், சூர்யா, லலிதா, கங்காதரன், சுண்டு... ராஜம்பேட்டைவாசிகள் - போஸ்ட் மாஸ்டர், பாலகிருஷ்ணன், சீமாச்சு அய்யர்... கிட்டாவய்யரின் பம்பாய் சகோதரி ராஜம், அவளுடைய குடும்பத்தார், சீதா, துரைசாமி; கதாநாயகன் என்று கல்கி (தவறாக) கருதும் சௌந்தரராகவன், ராகவனுடைய பெற்றோர்; தாரிணி; தேவப்பட்டிணவாசிகள் - அமரநாத், பட்டாபி, அவர்களுடைய பெற்றோர்; ரஜனிபூர் மற்றும் டெல்லி கதாபாத்திரங்கள்... இவர்களிலிருந்து சீதாதான் இந்தக் கதையின் ப்ரொடகோனிஸ்ட் (Protagonist) என்றும், சௌந்தரராகவன் கதையின் நாயகன் அல்ல, ஆனால் அந்த இடத்துக்கு சூர்யா பொருந்தக்கூடும் என்பதும் மெதுவாகவே தெரியவரும்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நடக்கும் 1930 - 1948 சமயத்தில் நடக்கும் இக்கதை, ஒரு விதத்தில் பார்த்தால் பிரேசில் கால் பந்தாட்டக் குழு எப்படி பந்தை இங்கும் அங்கும் இழுத்தடித்து, இறுதியில் கோல் செய்வார்களோ, அதேபோல் வாசகர்களை தமிழ்நாடு, டெல்லி, ஆக்ரா, கல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற பல இடங்களுக்கு இட்டுச்செல்லும். ஒரு சிலர் இந்தக் கதை ஏன் இப்படி இழுத்தடிக்கிறதே என்று எண்ணலாம். ஆனால், இத்தனை கதாபாத்திரங்களை இணைத்து, அவர்களின் கதைகளையும், கனவுகளையும் பிணைத்து, அதில் மனித பலவீனத்தை கலந்து, இந்திய சுதந்திரத்தின் பின்னணியில் ஒரு கற்பனைச் சித்திரம் உருவாக்கவேண்டுமென்றால் அது கல்கியைத் தவிர வேறு யாராலும் செய்ய இயலாது.
அப்படிப்பட்ட படைப்புக்கு சாஹித்திய அகாடமி விருது கிடைத்ததில் ஆச்சரியம் என்ன?
அலை ஓசை பொன்னியின் செல்வனோ, சிவகாமியின் சபதமோ, பார்த்திபன் கனவோ அல்ல. இருப்பினும், அந்த சரித்திர புனைகதைகளில் காணப்படும் அதே தெள்ளத் தெளிவான எழுத்து நடை, நான்கு பாகங்கள் அடங்கிய அலை ஓசையில் ஒவ்வொரு பக்கத்திலும் பிரதிபலிக்கும்.