கடல் புறா ((மூன்று பகுதிகளும்))
ஆசிரியர்:சாண்டில்யன்
கதாபாத்திரங்கள்:கருணாகர பல்லவன் ((இளையபல்லவன் )) மஞ்சளழகி,காஞ்சனா தேவி,அநபாயன், அமீர்,கண்டியத் தேவன்,கூலவாணிகன் அமுதன், குணவர்மன்,பலவர்மன்,ஜெயவர்மன்,அகூதா, கங்கதேவன், பாலிக்குள்ளன்,வீர ராஜேந்திர சோழன்,விஜயசந்திரன் ..
கதை இடம் பெறும் வரலாற்று பகுதிகள்: பாலூர் துறைமுகம், அக்ஷயமுனை, மோகினி தீவு, மலையூர் கோட்டை,ஸ்ரீ விஜயம் மற்றும் புகார்...
இது ஒரு சரித்திர நாவல்...!!!
கதை சுருக்கம்:
ஸ்ரீவிஜயத்தை தலைநகராக கொண்டு கொடுங்கோலன் ஜெயவர்மனால் ஆண்டுவரப்படும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தில் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட சோழர்களின் உதவி நாடி ஜெயவர்மனின் மூத்த சகோதரர்,குணவர்மனும் அவரது மகளுமான காஞ்சனாதேவியுடனும் கலிங்க தேசத்தை சார்ந்த பாலூர் துறைமுகத்தை வந்தடைகிறார்.
குணவர்மனை சோழநாட்டுக்கு செல்லவிடாமல் கலிங்கத்திலேயே ஒழித்துவிட ஜெயவர்மன் முயலவே அந்த சதித்திட்டம் சோழ பேரரசுக்கு தெரிந்ததால் குணவர்மனையும்,காஞ்சனா தேவியையும் பாதுகாப்புடன் சோழநாட்டுக்கு அழைத்துவர கருணாகர பல்லவன் (( என்ற இளையபல்லவன்)) என்னும் சோழ படைத்தலைவனை அனுப்புகிறார் சோழ சக்ரவர்த்தி வீர ராஜேந்திர தேவர். மேலும் கலிங்கம் - சோழமிடையே நல்லுரவு இல்லாததாலும், கலிங்கத்தில் குறிப்பாக பாலூரில் தமிழர்கள் கொடுமை படுத்தப்படுவதை நிறுத்தவும் கருணாகர பல்லவனிடம் ஒரு சமாதான ஓலையையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்த்து விடவும் வீர ராஜேந்திரர் உத்தரவிடுகிறார். இந்த சமாதான நடவடிக்கைக்காக சோழ இளவரசர் அநபாயர் முன்னரே கலிங்கம் சென்று பீமனால் சிறைப்படுத்தப்பட்டு பின் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாய் இருக்கிறார்.
சமாதான ஓலையுடன் வந்த கருணாகர பல்லவன் பாலூர் பெருந்துறை துறைமுகத்தில் சிக்கிக்கொள்கிறான்...அங்கிருந்து தப்பி ஓடும் போது விருந்தினர் மாளிகையில் கடாரத்தின் சிற்றரசர் குணவர்மரையும்,அவரது புதல்வி காஞ்சனாதேவியையும் சந்திககிறான். கலிங்கவீரர்களால் தந்திரமாக பிடிக்கப்பட்ட கருணாகர இளையபல்லவனை கலிங்க நீதிமன்றத்திலிருந்து துணிச்சலாக இளவரசர் அநபாயர், காஞ்சனாதேவி ஆகியோர் காப்பாற்றுகின்றனர்.
கருணாகர பல்லவன்,குணவர்மன்,காஞ்சனா தேவி,இளவரசர் அநபாயர், கலிங்க நாட்டில் சுங்க அதிகாரியாகவும் சோழ உளவாளியாகவும் பணியாறௌறும் கண்டியத்தேவன்,கலிங்கத்தின் வணிகன் சேந்தன் ஆகியோர் பாலூர் துறைமுகத்திலிருந்தும் கலிங்க மன்னனின் பிடியிலிருந்தும் அரபு நாட்டு அமீர் மற்றும் அந்த பிராந்தியத்திலேயே பயங்கர கடல் கொள்ளைக்காரனும் அமீரின் ஆசானுமான அகூதாவின் உதவியுடன் தண்ணீர் பானாகளுக்குள் மறைந்து தப்ப முயற்சிக்கின்றனர். துறைமுகத்தில் நடை பெற்ற பெரும் சண்டையில் அநபாயர்,குணவர்மன்,காஞ்சனாதேவி ஆகியோர் மட்டும் தப்பி சோழநாடு செல்கின்றனர். கருணாகர பல்லவன்,அமீர்,கண்டிய தேவன், சேந்தன் ஆகியோர் கலிங்க வீரர்களால் தடுக்கப்பட்டு பின் கொள்ளைக்காரன் அகூதா மூலம் தப்பிக்கின்றர். கருணாகர பல்லவனின் வீர தீர செயல்களை கண்ட காஞ்சனா தேவி அவனிடம் காதல் கொள்கிறாள்...!!!! பாலூர் பெருந்துறையில் இளையபல்லவனை பிரிய நேரிட்டதால் அவன் நினைவுடனே மரக்கலத்தில் பாலூரை விட்டுச்செல்கிறாள் காஞ்சனாதேவி.
பாலூர் பெருந்துறையில் இருந்து கொள்ளைக்காரன் அகூதாவின் உதவியுடன. தப்பிய இளையபல்லவன் சோழநாட்டுக்கு செல்லாமல், அகூதாவிடம் உபதலைவனாகி கடல் போர் முறைகள்,கடலாடும் முறை ஆகியவற்றை அடுத்த ஒரு வருடத்தில் கற்று மிகச்சிறந்த மாலுமியாகவும் கடல் கொள்ளைக்காரனாகவும் ஆகிறான். இளையபல்லவனும்,அகூதாவும் சேர்ந்து பல கலிங்க மரக்கலங்களை கொள்ளையடிக்கிறார்கள். இளைய பல்லவனின் திறமையை கண்டு வியந்த அகூதா அவனுக்குதன் மரக்கல்தில் ஒன்றை பரிசளிக்கிறான்.
அகூதாவால் பரிசளிக்கப்பட்ட மரகலத்துடன் அக்ஷயமுனைக்கு அமீர்,கண்டியத்தேவன் துணையுடன் வருகிறான். அக்ஷயமுனை ஸ்ரீ விஜய சாம்ராஜ்ஜியத்துக்கு கட்டுப்பட்ட கலிங்கத்தின் நட்பு துறைமுகமாக இருக்கிறது. ஒரு முறையான படைகள் இல்லாமல் கொள்ளைக்காரர்களே மாலுமிகளாய் இருக்கிறார்கள். அந்தப்பகுதியின் கோட்டை தலைவனாக பலவர்மன் என்னும் நயவஞ்சகன் இருக்கிறான். அக்ஷயமுனைக்கோட்டையும, நகரமும் நிலத்தில் "பதக்குகள்" என்ற பழங்குடியினராலும், நீரில் மற்றொரு பழங்குடி இனமான "சூலுக்கள்" என்பவர்களால் கொள்ளையிடப்படுகிறது. இந்த கொள்ளையர்களை நகருக்குள் அனுமதித்து கொள்ளையடிக்க பலவர்மன் துணைபோகிறான். அக்ஷயமுனையில் இப்படி ஒரு கட்டுப்பாடில்லாத கொள்ளைக்கூட்டத்தையும் கோட்டைத்தலைவன் பலவர்மன் முன்னிருத்தி ஆள்வதால்.,அந்த வழியாக தமிழகத்தில் இருந்து வரும் வணிக மரக்கலங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன..!!!
இதையெல்லாம் நேரில் காணும் இளைய பல்லவன் இந்த அக்ஷயமுனையை கைப்பற்றினால்தான் தமிழ்நாட்டு மரக்கலங்கள் அச்சமில்லாமல் அப்பகுதியால் பயணிக்கமுடியும் என முடிவுசெய்து அமீர்,கண்டியதேவன் துணையுடன் பலவர்மனை முறியடித்து அக்ஷயமுனையை கைப்பற்றுகிறான். பலவர்மனின் வளர்ப்புமகளும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தை ஆளும் ஜெயவர்மனின் மகளுமான மஞ்சளழகியும் இதற்கு பெருந்துணை புரிகிறாள்...அவளும் இளையபல்லவனிடம் காதல் கொள்கிறாள்.
இளையபல்லவன் அக்ஷயமுனையில் அகூதாவால் பரிசளிக்கப்பட்ட மரக்கலத்தை கண்டியதேவன் உதவியுடன் புறா வடிவில் அமைத்து "கடல் புறா"எனும் போர்க்கப்பலாக்கி, கைப்பற்றிய அக்ஷயமுனையை மஞ்சளழகியிடம் ஒப்படைத்து கோட்டையை ஆண்டுவரும் படி பணிக்கிறான்.
பின்னர் இளையபல்வன்கடல்புறாவுடன் மாநக்காவரம் என்றழைக்கப்படும் கடல்மோகினித்தீவுக்கு சென்று அங்கு கங்கதேவன் என்ற கலிங்க கடற்படைத்தலைவனை கொன்று மீண்டும் அதை தமிழர்வசம் ஒப்படைத்து சோழர்களின் கடற்தளமாக்குகிறான். சோழநாட்டில் இருந்து கடாரத்துக்கு பயணமான குணவர்மனும்,காஞ்சனாதேவியும் சிறைப்பட்டு கிடந்த கலிங்க கப்பலில் இருந்து அவர்களை மீட்டு கடல்புறாவில் தங்க வைக்கிறான்.
பின் இறுதியாக ஸ்ரீவிஜயத்தின் மலையூர் கோட்டையை மஞ்சளழகயின் உதவியுடன் கைப்பற்றி, கடல் போரில் ஜெயவர்மனை தோற்கடித்து ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை வெற்றி கொள்கிறான்...
பின்னர் அநபாயர் ஆணைக்கிணங்க ஸ்ரீவிஜயத்தின் பெரும்பகுதியை குணவர்மனும்..ஒரு சிறு பகுதியை ஜெயவர்மனும் ஆண்டுவரவும் சோழஅரசின் நட்பு நாடுகளாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இளைய பல்லவன் கருணாகரனின் துணிச்சலாலும் வீரத்தாலும் கலிங்கத்தின் கடல்பலம் உடைக்கப்படுகிறது. மேலும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்திலும் குணவர்மன் அரசராக்கப்பட்டதால், ஸ்ரீ விஜயம் கலிங்கம்போன்ற நாடுகளால் ஆக்கிரமிக்கப்படாத, தமிழர்பால் அன்புள்ள சுதந்திர அரசாகிறது....
வெற்றி வீரனாக புகார் ((சோழநாடு)) திரும்பும் இளையபல்லவன் வீரத்தை போற்றும் வகையில் குறுநில மன்னனாக்கப்பட்டு "கருணாகர தொண்டைமான்" என்றழைக்கப்படுகிறான். தன் மனம் கவர்ந்த காதலியர் காஞ்சனா தேவி,மஞ்சளழகி இருவரையுமே மணந்து , சிறந்த படைத்தலைவனாகவும்,கடல் மாலுமியாகவும் சோழ நாட்டிற்கு தொடர்ந்து தொண்டாற்றுகிறான்.
#என்னுரை..
ஒரு புதினத்தை படிக்கும் ரசிகர்களை அதனுடன் ஒன்றச்செய்து ரசிக்கவைப்பது ஒரு வகை...புதினத்தை படிப்பவர்களை அதன் கதாபாத்திரங்களோடு பயணப்பட்டு மெய்மறக்கவைப்பது இரண்டாவது வகை..இந்த மாபெரும் புதினத்தின் ஆசிரியர் சாண்டில்யன் இரண்டாவது வகை.
படிக்கும் நேயர்கள் இந்த புதினத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் பயணிக்கிறோம்..குறிப்பாக இளையபல்லவனுடன் ஒன்றிப்போகிறோம்.
ஆசிரியர் இதன் முன்னுரையில் தெரிவித்தபடி "இவ்வளவு தொழில் நுட்பங்கள், வசதிகள் நிறைந்த இக்காலத்திலேயே கடல் பயணம் துன்பமாயும் ஆபத்து நிறைந்ததாயும் இருக்கிறது, இது எதுவும் இல்லாத சோழர்காலத்தில் எப்படி கடலாடடினார்கள்...எப்படிப் போரிட்டு அரசுகளை கைப்பற்றினார்கள் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தவே இந்த நாவல் உதயமானது" என்பதை பக்கத்துக்கு பக்கம் ஆசிரியர் நிரூபித்துள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது....
அக்காலத்து அக்ஷயமுனையில் இருந்த பழங்குடி மக்கள், "அக்ரமந்திரம்" என்ற போர்க்கப்பலை பற்றிய செய்திகள், திசை காட்டும் கருவி ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே சீனர்களால் பயன்படுத்தப்பட்ட செய்திகள், புதினத்தின் மூன்று பாகங்களிலும் ஒவ்வொரு சரித்திர நிகழ்வுகள் தம்மால் எங்கிருந்து தகவலாக பெறப்பட்டது என்ற அடிக்குறிப்புகள்...என நேயர்களை அசர அடித்து பெரிதும் வியப்பிலாழ்த்துகிறார் ஆசிரியர் சாண்டில்யன்....!!!
கடல்புறா----பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்...!!!
எனக்குப்பிடித்த வசனம்:
மஞ்சளழகி இளைய பல்லவனிடம்:
" இதோ பாருங்கள்...இந்த அலை வந்து காலை தடவுகிறது...மீண்டும் போய் விடுகிறது.மறுபடியும் வருகிறது, போகிறது. அற்ப கால ஸ்பரிசம் இது. விட்டு விட்டு விலகும் நிலை...என் வாழ்க்கையில் நீங்களும் இப்படித்தான் மோதியிருக்கிறீர்கள். அலை போலப் போய்விடுவீர்களா? போய்ப்போய் வருவீர்களா...??