நூல்: குருதிப்புனல்
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி (இ.பா )
எனக்கு இ.பாவின் முதல் அறிமுகம் இந்நூலின் வழி. சாகித்ய அகாடமி மற்றும் சங்கீத் நாடக் அகாடமி விருதுகள் வாங்கிய ஒரே தமிழ் எழுத்தாளர். இவரது எழுத்து நடை வெளிப்படையானது . எதார்த்த மனிதர்களின் கலந்துரையாடல் (beep words கூட) அப்படியே இருக்கும் எழுத்து வடிவில்.
கதையின் கரு:
1. கீழ்வெண்மணி உண்மைத் துயரச்சம்பவமும் அதன்பின் இருந்த சாதிய அரசியலும்.
2. கூலித்தொழிலாளிகளின் போராட்டமும், ஆதிக்கச் சாதியினர் குடிக்கத் துடித்த ஏழைகளின் குருதியும்.
காலம்:
1968. திராவிட சிந்தனை மேலோங்கி, தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த வேளை. மார்க்சிச கம்யூனிச சிந்தனைகளும் பரவலாக மக்களுக்கு தெரிந்த காலம்.
கதைக்களம்:
கீழ்வெண்மணி. ஒருங்கிணைந்த தஞ்சை (இன்றைய நாகை) மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் தேவூரருகிலிருக்கும் சிற்றூர். அக்காலத்தில் பெருநிலம் கொண்ட நாயக்கர்களிடம் , கூலி வேலைச் செய்தும் பண்ணையாட்களாயும் இருந்த பள்ளர், பறையர் & சக்கிலிய மக்களின் உழைப்பை துச்சமென நினைத்து அடிமைகளாய் நடத்தியத்தன் விளைவு அவர்களின் உரிமை போராட்டமாய் வெடித்தது. இதற்கான தீப்பொறி கம்யூனிசம் பேசியவர்களிடமிருந்து வந்ததென்பதை மறுக்க முடியாது.
படிக்கத் தூண்டிய நிகழ்வு:
கடந்த ஆண்டு கீழ்வெண்மணி நினைவேந்தல் குறித்த நாளேடு செய்தி "ஒருபடி நெல்லும் மார்க்சிசமும் 44 பேரை தீக்கிரையாக்கிவிட்டன."
நிச்சயமாக இது கூலிக்கான கொலையல்ல சாதியத்தின் குரூர முகமென அனைவரும் அறிந்தபின்னும், ஊடகப் பிரதி இப்படியா உருப்பெருற்றுள்ளது?? அதுகுறித்த உணர்வு பூர்வமான உண்மையறியும் என் தேடலில் கிடைத்த நூல்.
கதைமாந்தர்கள் :
சிவா ,கோபால் , ராமைய்யா (காம்ரேடு), கண்ணையா நாயுடு, வடிவேலு , கிருஷ்ணஸ்வாமி நாயுடு, திருமலை, பங்கஜம், பாப்பாத்தி, கனகசபை, கட்டையன், பழனி , சுந்தரவதனம் (காம்ரேடு வக்கீல்),அம்மாசி மற்றும் பலர்.
நூலின் பாதிப்பு:
இ.பா, வெண்மணி நிகழ்வினால் மன உளைச்சலில் இருந்திருக்க வேண்டும். அதன் தாக்கம் தான் தன்னை வம்படியாய் "சிவா" எனும் கதாபாத்திரத்துக்குள் புகுத்தி, மற்ற கதை மாந்தர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். கதையில் தான் ஒரு கெஸ்ட் ரோல் என்பதை மறந்து, போராளியாய் மாறிப்போவதும், சிலர் நிதானமிழந்த வேளைகளில் "இப்படியல்லவா தலைவன் செயல்பட்டிருக்கவேண்டும்" என உதாரண புருஷனாய் சிவாவின் கதாபாத்திரம்.
மனிதம் மரிக்கும் வேளைகளில் அனைவரும் உணர்ச்சியின் பின்னால் செல்வோம். ஆனால் உணர்வு சமன்பாடின்மையே வன்முறையின் திறவுகோல் என்பது நிதர்சன உண்மை.
கண்ணையா நாயுடு, சாதிசகதியில் ஊறி வெள்ளாடை உடுத்திய பெரியமனிதர் (பணம் மற்றும் நிலத்தளவில்). "ஏண்டா பறப்பயலும் பள்ளப்பயலும் சேர்ந்து ஒரு கள்ளப்பய (ராமைய்யா) பேச்சகேட்டு ஆடுறீங்களா?? நாயுடுவா பொறந்து பாப்பாத்திய கூட்டிட்டு ஓடிப்போனவனுக்கு பொறந்த பய நீயெல்லாம் என்முன்னால பேசுறியா??" போன்ற அவரின் வசையாடல், பொருத்தாளரா சமமின்மையை தாண்டி சாதிய குரூர மனப்பான்மையின் வெளிப்பாடு.
இன்றும் சில கண்ணையா நாயுடுக்களை கடந்து போகிறோம். ஏன், சில சமயம் நாமும் அவராய் வாழ்ந்து போகிறோம். என்ன ஒரு வித்தியாசமெனில் அவரவர் சாதியிலிருந்து ஏறு இறங்கு வரிசை மட்டுமே.
சில கீழ்வரிசை சாதிய நண்பர்கள் நம் வீட்டுக்கு வெளியேவும், சில மேல்வரிசை சாதிய நண்பர்களின் வீட்டுக்கு வெளியே நாமும்.
ராமைய்யாவின் கம்யூனிச அறிவு அரைகுறையானாலும், அதன் வழி ஒரு பெரும் புரட்சியை கொண்டு வந்து கம்யூனிசமே சிறந்தது என பேசவைக்க முயலும் அவரின் சுயநலம்.
இது ஒருபுறம் இருக்க, ரஸ்யா போன்ற நாடுகளில் எழுந்த புரட்சி நம் நாட்டு மக்களிடம் ஏற்படாமல் போனதன் உண்மை சாதிய குருதி பாயும் மனித கட்டமைப்பே.
உலகம் குறித்த பல கேள்வி. வாழ்வின் நோக்கம் தேடி கிராமம் போகும் கோபால் "கிஸான்" புரட்சியில் தீப்பொறி. அவ்வபோது வழிமாறிய தடுமாற்றம் தலைவனாய் இருப்பவனுக்கு அழகல்ல.
நான் சில காரணங்களுக்காக கட்டையன், பழனி , வடிவேலு , பாப்பாத்தி, பங்கஜம், திருமலை குறித்து பேசாமல் விடுகிறேன். நீங்களே படித்து அவர்களின் நிலை என்னவென்று உணருங்கள்.
ஆதிக்க குரூரம் கொண்ட நில உரிமையாளர்கள், அவர்கள் கொட்டம் அடக்க "கிஸான்" போராட்டம் தொடங்கிய கம்யூனிஸ்ட், அதன் நெருக்கடியில் எது நம் வாழ்க்கை என வாழும் ஏழை குடியானவர்கள் இவர்களின் உளவியல் வெளிப்பாடாய் இந்த நாவல்.
எது எப்படியோ வெந்து மடிந்தது 44 சுத்தமான மனித உயிர்கள். அப்பழுக்கு கொண்ட மனித உயிர்கள் சில அழுது தீர்த்தன; சில சிரித்து மகிழ்ந்தன.
பலருக்கு வாழ்க்கையின் தேடல் இருப்பவனின் நிழலில் வளரும் செடி. சிலருக்கு சுயமாய் வளர வேண்டும் என்ற வெறி.
44 பேரின் குருதி கலந்த புனல் (ஓடை) அரசியல் பகடைக்கும் அதிகார ஆசைக்கும் கிடைத்த கேவலமான வெற்றி. அதன் வெளிப்பாடாய் கண்ணையா நாயுடு (நிஜக்கதையில் கோபாலகிருஷ்ண நாயுடு) விடுதலைக்கு உயர்நீதி மன்றம் தந்த தீர்ப்பு "கார், நிலம், வீடு வைத்திருக்கும் ஒரு மிராசுதார் தானே இறங்கி வந்து குடிசையை கொளுத்தினார் என்பதை நம்ப முடியவில்லை" மனுநீதி சோழன் ஊரில் நீதி தப்பாகுமா???
இந்த இரத்த வாடையில் சாதியம் அதிகம். கூடவே நீதியும் நிதியும் சேர்ந்து கொண்டன.
ஏன் படிக்க வேண்டும்:
உங்கள் ஆழ் மனதில் ஒருதுளி அளவேனும் சாதிய சிந்தனை இல்லாமல் வாழும் உத்தமரா ?? அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லையென வாய் வார்த்தையில் உலக நடிப்பு நடித்து வாழும் பச்சோந்தியா?? என்ற சுயபரிசோதனைக்கு!!!
நான் முதல் ரகமா இரண்டாம் ரகமா என்ற கேள்வி வைப்பதை தவிர்க்கவும்.