கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பின்தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
1801- இல் சுமார் ஆறு மாதங்கள் நடந்த காளையார்கோவில் போரை நாட்டின் முதல் சுதந்திரப் போர் என நிறுவ முடிந்தாலும்கூட இன்னமும் உரிய இடம் அல்லது பெருமை அதற்கு வழங்கப்படவில்லை.
காளையார்கோவில் போரை முன்வைத்து ஆசிரியர் எழுதிய "1801' நாவலின் தொடர்ச்சி அல்லது அதன் ஒரு பகுதிதான் "காலா பாணி' நாவல் என்று கொள்ளலாம். இரு நூறு ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மன்னரும், நாட்டின் முதல் புரட்சித் திலகம் வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்ட கதைதான் இந்த நாவல்.
பெரிய உடையணத் தேவன் கைது செய்யப்பட்டதில் தொடங்கி, திருமயம் கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு, துறைமுகத்தில் கப்பலேற்றி, பினாங்கிற்குக் கடத்தப்பட்டு, அங்கே அவர்கள் மாண்ட துயரக் கதையைச் சிறப்பாக எழுதிச் செல்கிறார் ஆசிரியர். வேங்கை உடையணத் தேவனும் குழுவும் நாடு கடத்தப்பட, அவருடைய உறவுகள் படும்பாடுகள் எழுதப்பட்டுள்ள விதம் சிறப்பு.
கடலுக்கு அப்பால் நடந்த கதையின் சில பகுதிகள் மட்டும் வரலாறும் புனைவுமாகக் கலந்திருக்கிறது. நாவலாசிரியர் நாவல் சம்பந்தப்பட்ட வரலாற்றிடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்து நாவலைச் செறிவூட்டியுள்ளார்.
உடையணத் தேவனின் மனைவியும் மற்றொரு வீரமங்கையுமான மருதாத்தாள் பாத்திரத்தை மேலும் புனைவுகள் சேர்த்து, நாவலின் செயற்படு நாயகியாக வலுப்படுத்தியிருக்கலாம். எந்தவொரு வரலாறு என்றாலும் நெடுகிலும் மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ்களும் கிறிஸ்டியானாக்களும் ஆங்காங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நாவல் செல்லும் தடத்திலேயே அன்றைய தமிழகத்தின், தமிழர்களின் வாழ்க்கைச் சூழல், பிரிட்டிஷாரின் நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகள் என பிறவற்றையும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
மு. ராஜேந்திரன் (M. Rajendran) இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த காலத்திலிருந்தே தன் தீவிரமான அரசாங்கப் பணிகளுடன், இலக்கியம் சார்ந்தும், வரலாறு சார்ந்தும் தொடர்ந்து எழுதி வருகிறார். வரலாற்றின் மீது தீராத காதல் கொண்டு இவர் உருவாக்கும் வரலாற்று நூல்கள் எளிமையான மொழி நடையில் வரலாற்று ஆவணங்களை தமிழ் இலக்கியத்திற்கு வழங்கி வருகின்றன. காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு இவர் எழுதிய 'காலாபாணி' நாவலுக்கு சாகித்ய அகடாமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் தாலுக்கா வடகரை கிராமத்தில் ராஜேந்திரன் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்ட மேற்படிப்பும் முடித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளில் சட்டக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். வரலாற்றை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்து இந்திய ஆட்சிப்பணியாளராக உயர்ந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்களில் இருந்த 1500 கல்வெட்டுகளை பணியெடுக்கும் பணியை துவக்கி வைத்த பெருமை இவருக்கு உரியதாகும். வரலாற்றுச் செப்பேடுகள் சொல்லும் செய்திகளை அனைத்து நிலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய மொழி நடையில் தொடர்ந்து எழுதிவருகிறார். சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள் முதலியவை தொடர்பான இவருடைய நூல்கள் தமிழ் மொழியில் முன்னெடுக்கப்பட்ட புதிய முயற்சிகளாக அமைந்தவையாகும்.
அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இவருடைய மூதாதையரின் கதையில் இருந்து தொடங்கி, மூன்று தலைமுறையின் தொடர் வாழ்வினை ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’ என்ற தன் வரலாற்று நூலாக எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமியின் விருதுக்கான தேர்வில் இறுதிப் பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1801ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் நடந்த காளையார் கோயில் போரை மையமாக வைத்து,1801 என்ற வரலாற்று நாவலை எழுதியுள்ளார். 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளும் சாகித்திய அகாதெமியின் விருதுக்கான தேர்வு இறுதிப் பட்டியலில் இந்நாவல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஐரோப்பிய ஆட்சியில் முதன்முதலில் மன்னர்களை நாடு கடத்துதல், காளையார் கோயில் போரில்தான் தொடங்கியது. அப்போது சிவகங்கையின் அரசராக இருந்த வேங்கை பெரிய உடையணத் தேவரையும் அவருடன் போராளிகள் 71 பேரையும், தங்களின் வெற்றிக்குப் பிறகு பினாங்குக்கு நாடு கடத்தினார்கள். தமிழகத்தின் மிக முக்கியமான இப்போராட்டத்தினை மையமாகக் கொண்டு ‘காலா பாணி’ என்ற நாவலை இவர் எழுதியுள்ளார். 1857 சிப்பாய்க் கலகத்திலிருந்து தொடங்கும் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வரலாறு தென் தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த 1801 போர்களிலிருந்தே தொடங்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களைக் கொண்டிருப்பதால் காலா பாணி நூல் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் நூலாக உள்ளது.
பிரிட்டிஷ் அரசு இந்த மண்ணில் நாடு பிடிப்பதற்காக செய்த கொடுமைகள் ஏராளம் ஏராளம். நயவஞ்சகதந்தால் குறுக்கு வழியில் ஏமாற்றி இங்கே அதிகாரத்திற்கு வந்து சொந்த நாட்டு மக்களை அடிமை படுத்தினார்கள் . தங்கள் மண்ணையும் அரசையும் இந்த கயவர்கள் இடம் இருந்து காப்பாற்ற இந்தியாவிலே முதல் முதலாக மக்களை ஒன்று திரட்டி போர் செய்தவர்கள் சின்ன மருது, பெரிய மருது, கட்ட பொம்மன் வேலுநாச்சியார் ஊமைத்துரை போன்றவர்கள் . காளையார் கோவில் போர் என்று வரலாற்றில் அழைக்கப்படும் இந்த போரில் எந்த விசாரணையும் இல்லாமல் ஐநூறு பேர் தூக்கிலிடப்பட்டனர் குழந்தைகள் முதியவர்கள் என்று அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு ஊர் நடுவில் தொங்கவிட்டு பொது மக்களை பயமுறுத்தினார்கள். சின்ன மருது மக்களை திரட்ட 'ஜம்பு தீவு' என்ற பிரகடனத்தை வெளியிட்டார் முதல் முறையாக இதற்கு பிரிட்டிஷ் அரசு இரண்டு முறை பதில் பிரகடனம் வெளியிட்டது. தெற்கில் சிவகங்கை சீமை பிரிட்டிஷ் அரசுக்கு பெரிய தலைவலியாக இருந்தது ஐநூறு பேரை தூக்கிலிடப்பட்ட பிறகு சிவகங்கை அரசர் வேங்கை வயல் வேங்கை பெரிய உடையணத் தேவன் ( வேலுநாச்சியார் , பெரிய மருது வின் மருமகன்) சின்ன மருதுவின் மகன் துரை சாமி , கட்ட பொம்மன் வளர்ப்பு மகன் தளவாய் குமாரசாமி நாயக்கன் ஆகிய 73 பேரை காலா பாணி என்று பினாங்கு தீவிற்கு முதல் முறையாக நாடு நடத்தினார்கள். கல் கையில் விலங்கோடு நடந்தே தூத்துக்குடி துறைமுகம் வரை அழைத்து வந்து அட்மிரல் நெல்சன் கப்பலில் பினாங்கு அனுப்பபடுகிறார்கள் முறையான உணவு தண்ணீர் இல்லாமல் வழியிலேயே மூவர் இறந்து போனார்கள், பினாங்கு தீவில் பலர் இறக்க பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆகிறார்கள். பிறகு இரும்பு வெட்டும் சுரங்கங்களில் கூளிவேலைக்கு செல்கிறார்கள்.
ஒரு இடத்தில் வேங்கை பெரிய உடையன் சொல்வார்கள் " இனி நாம நம் கரிசல் செம்மண்ணை எப்போதும் போர்போமோ இல்ல பாக்காமலே போய்டுவோமோ" என்று வாசகன் மனம் உடைந்து விடுகிறது.
மால்பரோ கோட்டையில் இருட்டில் அடைக்கப்பட்ட வேங்கையாள் அங்கு முதல் முறையாக கொடுக்காபுளி மரம் நடப்பட்டது. அந்த இரண்டு மரம் இன்றும் இருக்கிறது என்பதை நினைத்தால் அந்த மரத்தை கட்டிக்கொள்ள ஆசை வருகிறது.
வெறும் 35 வயதில் துரைசாமியும் 34 வயதில் வேங்கை வயல் பெரிய உடையார் தேவரும் இறந்து போனார்கள் என்பது நெஞ்சை உலுக்க கூடியதாக இருக்கிறது . தன் அரசை காப்பாற்றவும் சொந்த மண்ணில் விடுதலைக்குப் போர் செய்ததற்காகவும் இந்த மண்ணில் இருந்து கண் காணாத தீவிற்கு அவர்களை நாடு கடத்தியது ஆங்கில அரசு. அந்த 73 பேரையும் கிட்டத்தட்ட என்று தமிழகம் இன்று மறந்தே போய்விட்டது அவர்களை மீண்டும் இந்த நூல் நமக்கு வெளிகாட்டி இருக்கிறது. எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் வாழும் பூர்வகுடி மக்களை கொத்துக்கொத்தாக தூக்கிலிடும் போது அந்த மக்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் ? அவர்கள் இந்த ஆங்கிலேயர்களை எதிர்ப்பதை தவிர வேறு என்ன வழி அவர்களுக்கு இருந்திருக்கிறது ஆனால் அவர்கள் அதற்காக எவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பது கண் முன்னே நமக்கு இருக்கும் வரலாறு .அப்படிப்பட்டவர்களின் தியாகத்தால் எண்ணற்றவர்களின் உயிரின் விலையும் சேர்த்து தான் இன்று இந்த நாடு சுதந்திரம் அடைந்து இருக்கிறது.ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் . தங்கள் சுடுகாட்டிற்கு கோடிகளில் செலவு செய்து பளபளக்கும் கற்களை பதித்துக் கொள்கிறார்கள். பேனாவிற்கு சிலை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தங்கள் உயிரையே இந்த நாட்டிற்காக கொடுத்த எண்ணற்ற வீர மறவர்கள் இந்த மண்ணில் அடையாளமே இல்லாமல் போய்விட்டார்கள் என்பதை நினைக்கும் போது தான் இன்றைய அரசியல்வாதிகள் மீது கடுமையான சினமும் வெறுப்பும் வருகிறது.
வேங்கை பெரிய உடையணத் தேவன் அவர்கள் சகாக்கள் பாதத்தில் என் சென்னியை வைக்கிறேன்.
இந்திய துணைக்கண்டத்தில் முதல் சுதந்திரப் போராளிகள், மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட பின்னர், முதன் முதலில் நாடு கடத்தப்பட்ட வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் 72 போர் கைதிகளின் நாடு (காலா பாணி) கதை. தன் சொந்த மண்ணில் தோற்று நாடு கடத்தப்படுவது எவ்வளவு துயரம் என்பதை நாவலாசிரியர் கள ஆய்வு செய்து, கிடைத்த ஆவணங்களைக் கொண்டு இந்த நாவலை வடிவமைத்து உள்ளார், மேலும் சுதந்திரப் போரில் தென்னிந்தியர்களின் பங்களிப்பை பற்றியும் நாவல் பேசுகிறது. இந்த நாவலைப் படித்த பிறகு, 1801 நாவலையும் படிக்க தோன்றுகிறது.
புத்தகம் : காலா பாணி எழுத்தாளர் : டாக்டர் . மு. ராஜேந்திரன் இ.ஆ.ப பதிப்பகம் : அகநி வெளியீடு பக்கங்கள் : 534 விலை : 650
🔆 வியாபாரம் செய்வதற்காக வந்த வெள்ளையர்கள் , எப்படி நம் நாட்டையும் நம்மையும் ஆட்சி செய்தார்கள் என நமக்கு தெரியும். வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், புலிதேவர், சின்னமலை உள்ளிட்ட பாளையக்காரர்கள் எவ்வாறு ஆங்கிலேயரை எதிர்த்து சண்டை செய்தனர் என்பதும் தெரியும். சின்ன மருது பாண்டியரின் மருமகனும் சிவகங்கை அரசனுமான வேங்கை பெரிய உடைய தேவனையும் சின்ன மருது மகன் துரைசாமியும் சேர்ந்து இன்னும் 71 பேரை பினாங்கிற்கு நாடு கடத்தியது பற்றி தெரியுமா ...
🔆 காளையார் கோவில் போர் முடிவில் ஆங்கிலேயர் மருது பாண்டியர்களை கொன்றது மட்டுமல்லாமல் அவர்களின் தலையை வெட்டி எடுத்து, காட்டில் பதுங்கியிருந்த 73 பேரையும் கைது செய்தனர்.
🔆 துரைசாமியும் மற்றுமொரு சிறுவனையும் மட்டுமாவது விடுவிக்க வேங்கை கேட்டுக் கொண்டும் ஆங்கிலேயர் சம்மதிக்கவில்லை. அவர்கள் அனைவரும் காலா பணியாக செல்வது உறுதி செய்யப்பட்டது.
🔆 கப்பல் பயணத்தின் போதே மூன்று நபர்கள் இறந்துவிட்டனர். பினாங்கில் இறங்கியவுடன் வயிற்றுப்போக்கில் 10 பேர் இறந்துவிட்டனர். மீதமிருந்தவர்களும் பல மன வேதனையில் இருந்தனர். கவர்னர் வேங்கையை சந்தித்தபோது அவரை தவிர மற்ற எல்லோரையும், மற்ற வேலைகளை சேர்த்து விடுவதாகவும். வேங்கை மட்டும் பென்கோலன் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
🔆 சிவகங்கை சீமையின் அரசராக வெள்ளையர்க்கு எதிராக செயல்பட்டவர, சிறையில் மிகவும் அவஸ்தைக்கு உட்பட்டு சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து- வேங்கை உயிர் நீத்தார்.
🔆 ஒவ்வொரு பக்கமும் மிகவும் வலி நிறைந்ததாக இருந்தாலும், அனைவரும் படிக்க வேண்டியவை புத்தகம்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி