Book review
ஒரு தீவிர வாசகருடனான உரையாடலில் இந்த புத்தகத்தின் பெயர் அடிப்பட்டது, புத்தகம் வெளியிடும் சமயத்தில் பார்பனர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய புத்தகம் என்பதால் கூடுதல் ஆர்வம். அதன் பின் படிக்க தொடங்கி இந்த வருடத்தின் முதல் புத்தகமாக அமைந்தது கர்நாடக இசைக்கலைஞர் TM KRISHNA எழுதிய SEBASTIAN AND SONS.
மிருந்தங்கத்தை பற்றியும் அதை சுற்றி நடக்கும் சமுகவியல்/கலாச்சார/அரசியல் மாற்றங்களையும் மிக தெளிவாக பதிவுசெய்த்துள்ளார். புத்தகம் முழுக்க முழுக்க மிருதங்கம் செய்பவர்களை பற்றிய ஆவணம் அத்தோடு சாதி, வர்க்கம், பாலினம் என அணைத்து காரணிகளையும் தொடர்புபடுத்தி எழுதியுள்ளார். “மிருதங்கம் தயாரிக்கும் முறை” பற்றிய பகுதி அவரது எழுத்துக்கள் மூலம் கண்முன் காட்சியாக விரிகிறது.
TM கிருஷ்ணா பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்றாலும், அவர் தனக்கான சமூக சிறப்புரிமையை(SOCIAL PRIVELAGE) கருத்தில் கொண்டு இந்நூலை மிக பக்குவமாக அணுகியுள்ளார். கர்நாடக சங்கீதம் என்றாலே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் நினைவுக்கு வருவார்கள். கர்நாடக சங்கீதத்தில் வீணை, வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், கடம் என வாத்தியங்கள் இருந்தாலும், மிருதங்கம் தனிச்சிறப்பு உடையது,காரணம் அது தோல் வாத்தியம், மாட்டுத்தோல் ஆட்டுத்தோல், பலா மர கட்டை[தவிர] என இதன் மூலப்பொருட்கள் அனைத்தும் பார்ப்பனர்களால் தீண்டப்படாத பொருட்கள்.
மிருதங்கத்திற்கு பராமரிப்பும் மிக மிக அவசியமாகும், இதன் தயாரிப்பு மற்றும் பராமரிப்பின் காரணமாகவே சாதிய உற்பத்தி உறவு முறையில் மிருதங்கம் தயாரிப்பவர்களுக்கும்(makers of mirdangam), அதனை வாசிப்பவர்களுக்கும்(mirdangam artist) ஒரு தொடர்பு வாழ்க்கை முழுக்க இருந்தபடியே உள்ளது. தயாரிப்பவர்கள் பெரும்பாலும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்களாவே இருகிறார்கள், பின்னாளில் இவர்கள் காலனிய ஆதிக்கத்தின் காரணமாகவும் சாதிய ஒடுக்குமுறையின் காரணமாகவும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள். அவற்றில் ஒருவர் தான் செவாடியன்(SEBASTIAN), அவரது குடும்பம் தஞ்சாவூரை பின்புலமாக கொண்டது, பின்னாளில் ஒரு மிருதங்க தயாரிப்பு சாம்ராஜியமாக உருமாறியதால் நூலின் பெயரும் அவ்வாரே அமைந்தது.
நூல் முழுக்க மிருதங்கம் தயாரிப்பவருக்கும்-வாசிப்பவருக்கு இடையே இருந்த சாதிய முரண்பாடுகளையும், பிற் காலத்தில் நகர்மயமாதலாலும், நவீனமயத்தின் காரணமாகவும் அது எவ்வாறு மாற்றம் அடைந்தது என்பதையும் கதையோடு பிணைந்துள்ள யுத்தி சிறப்பு. இந்த உற்பத்தி உறவுமுறையில் பெரியார் கண்ட திராவிட இயக்கத்தின் தாக்கத்தையும் அவர் ஒரு இடத்தில் பதிவுசெய்கிறார்.
மிருதங்கத்தின் தயாரிப்பு முறை மிகவும் கடிமானது, மனித உழைப்பை உறிஞ்சி எடுக்க கூடியது, அதே சமயத்தில் கலைத்துவம் நிறைந்த வேலைப்பாடுகளால் ஆனது.
பலா மர கட்டைகளை சேகரித்து பதப்படுத்துதல், மாட்டுத்தோல் மற்றும் ஆட்டுத்தோல் தயாரிப்பு முறை, அனைத்தையும் தோல் கயிறின் மூலம் இணைத்தல், பின் சத்தத்திற்கு ஏற்ப முறைப்படுத்துதல் என சிக்கலான தயாரிப்பு முறையை உள்ளடக்கியது தான் மிருதங்கம். இதை பற்றி மிக விரிவாகவும், கள ஆய்வுகளுடனும், பல நேர்காணல்களுடனும் பதிவுசெய்த்துள்ளார்.
செபாஸ்டியன் குடும்பத்தை தவிர தென்னிந்தியாவில் மிருதங்கம் செய்யும் பிற தயாரிப்பாளர்களையும், அதில் மாறுபடும் விஷயங்களையும், அவர்களின் அனுபவங்களையும் பதிவுசெய்த்துள்ளார்.
இதில் வியப்பாக ஒரு பார்ப்பன தயாரிப்பாளரும்(maker), பெண் தயாரிப்பாளரும்(maker) இடம்பெறுகிறார்கள், ஒருவர் சமூக அடுக்கில் உயர்நிலையில் பல சிறப்பு சலுகைகளை அனுபவிப்பவர், மற்றொருவர் அனைத்திலும் பின்தங்கிய வர்கத்தை சார்ந்தவர், இவர்கள் வாழ்கையையும் அந்த துறையில் இவர்கள் சந்தித்த இன்னல்களையும் நேர்காணல்கள் மூலம் விவரித்துள்ளார்.
நூலின் அமைப்பே சிறப்பான முறையில் கையாளப்பட்டுள்ளது, அந்தந்த குடும்பங்களின் வரலாறும், அவர்கள் இத்தொழிலில் அடைந்த சரிவுகளும்,அதிலிருந்து கற்ற பாடங்களும் இவர்களின் இந்த பாரம்பரியம் தொடர பெரும்பங்காற்றியுள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இருந்தாலும் இவர்களின் வாழ்க்கைத்தரம் சாதி என்ற ஒற்றை காரணத்திற்காக பெரிய அளவில் பொருளாதார மாற்றம் பெற வில்லை.
மிருதங்க கலைஞனுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் அதனை வடிவமைக்கும் தயாரிப்பாளனுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதை வருத்தமாக பதிவு செய்கிறார் நூல் ஆசிரியர்.
இந்நூலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் எழுதிய டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுகளும் அன்பும். இது போன்ற நூல்கள் சாதி அமைப்பையும் அதன் கொடுரங்களையும் தோலுரிக்க அவசிய தேவையாகும்.
தோழர்கள் அவசியம் வாசிக்கவும். தமிழில் எழுதி இருக்கலாம், அல்லது மொழிபெயர்த்து வெளியிடலாம் என்பது என் வேண்டுகோள்.
BOOK: SEBASTIAN AND SONS - a brief history of mirudhangam makers
AUTHOR: TM KRISHNA.
#must_read