2012ஆம் ஆண்டில் வெளியான ‘சி. மோகன் கட்டுரைகள்’ நூலுக்குப் பின்னான கடந்த 9 ஆண்டுகளில் எழுதப்பட்ட தனிக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘சில பார்வைகள் சில அஞ்சலிகள்’. தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கட்டுரைகள் கொண்ட இப்புத்தகம் இரு பகுதிகளாக அமைந்திருக்கிறது.
முதல் பகுதி, சில பார்வைகள். இப்பகுதி, கலை இலக்கியம் பற்றிய என்னுடைய பார்வைகளின் வெளிப்பாடுகளாக அமைந்த பல கட்டுரைகளைக் கொண்டது. இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை, பல்வேறு கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டவை. புதுக்கவிதை இயக்கம், சிறுபத்திரிகை இயக்கம், மொழிபெயர்ப்பு இயக்கம், நவீன கலை இயக்கம் என 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை கலை நம்பிக்கையுடன் காலந்தோறும் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்தேறி நம் கலாசார வளத்துக்குப் பெரும் பங்காற்றிய பல இயக்கங்கள் பற்றிய ஆவணப் பதிவுகளாக அமைந்திருக்கும் கட்டுரைகள் இவை.
இரண்டாவது பகுதி, சில அஞ்சலிகள். இப்பகுதி, கலை இலக்கிய ஆளுமைகளுக்குச் செலுத்தப்பட்ட அஞ்சலிகளின் தொகுப்பு.. இவற்றுள் பெரும்பாலானவை, அவர்களுடைய மரணத்துக்குப் பின் இதழ்களும் பத்திரிகைகளும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுதப்பட்டவை. ப. சிங்காரம் மற்றும் எஸ். தனபால் குறித்த கட்டுரைகள் அவர்களுடைய நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதமாக இந்து தமிழ் திசையில் எழுதப்பட்டவை. கி.ரா பற்றிய கட்டுரை, கி.ராவின் மரணத்தூக்குப் பின் ‘கதை சொல்லி’ இதழின் ‘கி.ரா. நூற்றாண்டு மலருக்காக எழுதப்பட்டது. நம் கலை இலக்கிய ஆளுமைகளின் பெறுமதிகளைப் போற்றும் கட்டுரைகள் இவை.
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.