#Metoo இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கும் இந்தக் கட்டுரைகள் அந்த இயக்கத்தின் சமகாலச் சிக்கல்களுடன் நிற்காமல் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு வெளிப்பாடுகள், பாலுறவில் பெண்ணின் சம்மதம், பால் அடையாளங்களின் உருவாக்கம் எனப் பல புள்ளிகளையும் தொட்டு விரிந்து செல்கின்றன. கோட்பாட்டுரீதியான பார்வையின் உள்ளார்ந்த வலிமையுடன் தகவல்களின் பலமும் தர்க்கரீதியான அணுகு முறையும் கொண்டவை இக்கட்டுரைகள். இவற்றை சுய சிந்தனை கொண்ட அசலான பெண்ணியப் பிரதி என்று சொல்லலாம். சமூக யதார்த்தங்கள் குறித்த பிரக்ஞையுடன் எழுதப்பட்ட காத்திரமான பெண்ணியக் கட்டுரைகளைத் தமிழில் மிக அரிதாகவே காண முடிகிறது. அத்தகைய கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு தமிழுக்கு மிக அவசியமான வரவு. பாலியல் வன்முறையின் மாறுபட்ட பரிமாணங்களைப் புரிந்துகொள்ள இலக்கியப் பனுவல்கள் எந்த வகையில் உதவக்கூடும் என்னும் புரிதலையும் இத்தொகுப்பு அளிக்கிறது. -அரவிந்தன்
கவிஞர். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சமயம், பெண்ணியம், பண்பாட்டியல் ஆகிய துறைகள் சார்ந்து ஆய்வு செய்துவருகிறார். Journal of Asian Studies, Anthropological Quarterly போன்ற இதழ்களிலும் கல்வித்துறை சார்ந்த ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு நூல்களிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. காலச்சுவடு, காலக்குறி ஆகிய தமிழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு அர்த்தம் தருவது வாசிப்பும் எழுத்தும் என்று நம்பும் பெருந்தேவி, சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம் ஆகியவற்றிலும் ஈடுபாடுகொண்டவர்.