பள்ளிக்காலங்களில் பாடநூலில் ஏதேனும் ஒரு கோட்பாடு விளங்கவில்லையென்றால் அடுத்தடுத்த கோட்பாடுகள் குழம்பிவிடும். மனப்பாடம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளிவிடும். வெகுநாட்கள் கழித்து இப்புத்தகத்தை வாசிக்கும்போது பள்ளி மாணவனாக உணர்ந்தேன்.
பல வாக்கியங்களை, பத்திகளை அடிக்கோடிட்டு பயின்றேன். சில கோட்பாட்டம்சங்கள் இன்னும் முழுமையாக விளங்கவில்லை. தேர்ந்த மூத்த வாசகர்களின் நட்பு கிடைப்பின் கேட்டு விளங்கிக்கொள்ள வேண்டும்.
இந்நூலிலிருந்து கற்றுக்கொண்ட கோட்பாடுகள்:
நாவல் என்பது வாழ்வின் முழுமையைச் சித்தரிக்க வேண்டிய ஒரு இலக்கிய வடிவம். வாழ்வின் முழுமையென்றால் என்ன? வாசிப்பவனுக்கு ஒரு முழுவாழ்க்கையை வாழ்ந்த அனுபவத்தை கொடுப்பதை அப்படி கூறுகிறார் என நம்புகிறேன்.
நமக்கு வாழ்க்கையில் நடக்கும் ஒரு அனுபவத்தை மட்டும் குறிப்பால் உணர்த்தி கலையாக்குவது சிறுகதை, கவிதையின் இலக்கணம். மொத்த வாழ்க்கையையும் தொகுத்து கலையாக்குவது நாவலின் இலக்கணம்.
வாசகர் குறிக்கீடு: ஒரு இலக்கிய படைப்பில் சில மெளனங்கள் இருக்கும். அதனை வாசகன் தன் கற்பனையால் நிரப்ப வேண்டும்.
கவிதையின் மெளனங்கள் சொற்களின் இடைவேளையில் உள்ளது. சிறுகதையின் மெளனம் அதன் முடிவில் (ட்விஸ்டில்) உள்ளது. அங்கிருந்து இன்னொரு கதை தொடங்கும் பிரஞ்கை உள்ளது.
நாவலில் மெளனம் இடைவேளிகளாக இருக்கும். அதனை வாசகன் நிரப்பும்போது பிரம்மாண்ட வாழ்க்கைச் சித்திரம் கிடைக்கும்.
ஒரு நாவல் எங்கும் தொடங்காது, எங்கும் முடியாது. அதனால், காலப்பிரஞையை உடைத்துவிடும். எக்காலத்திலும் அதன் தரிசங்களை வாசகன் பொருத்திப்பார்த்துக்கொள்ள முடியும். வரலாறு, தொன்மங்களின் மூலம் நாவல்கள் காலத்தை உடைக்கின்றன.
கதை : தனக்கு நடந்த அனுபவத்தை பிரக்ஞையின் மூலம் தொகுத்துக்கொடுப்பது.
சிறுகதை : ஒரு கதை அதன் முடிவில் திருப்பத்தை கொண்டிருப்பது.
புனைவுத்தருக்கம் : Plot : ஒவ்வொரு கதையும் இரண்டு இழைகளைக்கொண்டிருக்கும். அவ்விரண்டு இழைகளின் முரண்களும் உறவுகளுமே புனைவுத்தருக்கம்.
நீள்கதை : ஒரு மையத்தை நோக்கி எழுதப்படும் கதை, அம்மையத்தை அடைந்தபின் அடுத்த மையத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும்.
நீள்கதையிலிருந்து காவியங்கள் உருவாகின.
உதா: சிலப்பதிகாரம், ராமாயணம், மகாபாரதம்.
தத்துவ நெறிகளை தருக்கத்தால் தொகுத்து காவியங்கள் நமக்களித்தன. ஒரு பண்பாட்டின் ஒட்டுமொத்த விழுமியங்களையும் ஒரு காவியம் கொண்டிருந்தால், அது மகாகாவியமாகிறது.
கம்பராமாயணம் ஒரு மகாகாவியம். தமிழ் இனம் அழிந்துவிட்டால், அவ்வொரு நூலினைக்கொண்டு மீண்டும் தமிழ் பண்பாட்டை புத்தியிருக்க வைத்துவிடலாம்!
தத்துவ நெறிகள் ஒரு பண்பாட்டின் ஒழுங்கிற்கும் செயல்பாட்டிற்கும் அவசியம்.
19ம் நூற்றாண்டின் புதிய கண்டுபிடிப்பு நாவல் எனும் கலை. அதுவரை காவியங்கள் பாடிய நெறிகளை விவாதத்திற்கு உட்படுத்துவதே நாவலின் வேலை. காவியங்களின் நேரெதிர் நாவல்கள். ஒரு மையத்தரிசனத்தை அளிக்காமல் ஒரு தரிசனத்தை எடுத்துக்கொண்டு வரலாற்றின்முன் நிறுத்தி பல்வேறு கோணங்களின் அதை பரிசீலிக்கிறது. வாசகனிடம் அதன் முடிவை விடுகிறது.
ருஷ்ய நாவல்களே இதன் இலக்கணத்தை கட்டமைத்த முன்னோடிகள். இந்நாவல்களை வாசிக்கும்போது சலிப்படைய காரணம், அவை ஒருமைக்கொண்டிருக்காது. இடைவேளிகளுடன் இருக்கும். அதை வாசகன் நிரப்ப வேண்டும்.
உணர்ச்சிக்கதைகள் : நாவல்களை காவியங்களின் ‘எதிர்பிம்பம்’ என்றால் உணர்ச்சிக்கதைகளை அதன் ‘நிழல்’ எனலாம். Fake Epic.
காவியங்களின் விழுமியங்களை உணர்ச்சிப்பொங்க மீண்டும் கொடுப்பதே இதன் வேலை. பொன்னியின் செல்வன், மாபிடிக், கேம் ஆஃப் த்ரோன்ஸ்.
சினிமா திரைக்கதைகளுக்கு ஏற்ற வடிவம் இதுவே.
குறுநாவல்கள் : சிறுகதைகளைப் போல ஒருமைக்கொண்டிருக்காது. சில இடைவேளிகள் இருக்கும். ஆனால், காலத்தை உடைத்து விழுமியங்களை வரலாறின் முன்நிறுத்தி பார்க்காது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடைந்துவிட்டிருக்கும். தன் தரிசனத்தை முக்காலத்திற்கும் அளிக்காமல், குறிப்பிட்ட கதையுலகத்திற்க்கும் மாந்தர்களுக்கும் மட்டும் ஏதுவாக அமைத்துவிடும்.
உதா: அம்மா வந்தாள்
ஒவ்வொரு இலக்கிய வடிவத்திலிருந்தும் என்ன எதிர்ப்பார்க்கலாம்? அதன் அழகியல் கோட்பாடுகளை தெரிந்துக்கொள்ள மிகப்பயன் உள்ளதாக இருக்கிறது இப்புத்தகம்.