குமுதம் பக்தி நாளிதழில் வெளிவந்த 'ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்' என்ற தொடரைப் Amazon Kindleஇல் புத்தகமாக வாசிக்க நேர்ந்தது. பன்னிரண்டு ஆழ்வார்களைப் பற்றிய அறிமுகம், அவர்களைச் சுற்றியுள்ள mythological stories மற்றும் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்டப் பாசுரங்கள் என்று வாசிப்போருக்கு ஆர்வமூட்டும் விதமாக எதார்த்தமான பாணியில் அழகாக எழுதியிருக்கிறார் சுஜாதா. அப்பாசுரங்களின் இலக்கண வகையைப் பற்றி சுஜாதா கூறியிருப்பதும் இப்புத்தகத்தின் மற்றுமொரு சிறப்பு.
'ஆழ்வார்' என்ற சொல்லுக்கு விளக்கம் கூறி ஆரம்பிக்கிறார் சுஜாதா. 'ஆழ்வார்' என்னும் சொல் வெறும் வைணவத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. சமண மற்றும் பௌத்தச் சமயத்தார்களும் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கிறார். எடுத்துக்காட்டாக ஒரு சமண முனிவருக்கு 'அவிரோதியாழ்வார்' என்ற பெயரும் பௌத்தத்தில் புத்ததேவருக்கு 'மயித்திரியாழ்வார்' என்ற பெயரும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. பாணர் குலம் தொடங்கி, வேயர் குலம், அரச குலம் என்று வெவ்வேறு குலத்தைச் சார்ந்தவர்களும்ஆழ்வார்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் வேதம் பயிலாமலும், சந்தியா வதனம் போன்ற சடங்குகளைச் செய்யாமலும், எந்தக் குலத்தைச் சார்ந்தவர்களும் இறைவனை அடையாளம் என்பதைப் பொய்கை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் நம்மாழ்வார் போன்ற ஆழ்வார்களின் பாசுரங்கள் கூற்றாக இருந்திருக்கிறது. இதுவே வைணவம் தன்னை சமூகத்தில் தக்கவைத்துக்கொள்ள அணைத்து சமூக மக்களுடன் எப்படி உறவு கொண்டது என்பதற்கான சாட்சி.
சமஸ்க்ரிதம் கலக்காத ஆழ்வார்களின் இசையும், கவிதையும் நிறைந்த தமிழ் பாசுரங்கள் பக்திக்கு அப்பாற்பட்டு வாசிப்போரை வியக்க வைக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது என்பதை இந்தப் புத்தகத்தை வாசித்தால் தெரிய வரும்.
இந்தப் பிரபஞ்சம் எப்படி உண்டானது, உலகம் உருவான விதம் இவை அனைத்திருக்கும் விஷ்ணுவே காரணம் என்று அனைவராலும் ஏற்க முடியாத கருத்தை ஆழ்வார்கள் வைத்தாலும், அந்த பாசுரங்களில் இயற்பியல் காஸ்மாலஜிய கூறுகள் இருப்பதை நாம் கவனிக்காமல் இருக்கமுடியாது என்பதனை நம்மாழ்வார், பொய்கையாழ்வார் பாடல்கள்கொண்டு விளக்குகிறார் சுஜாதா.
சைவம், வைணவம் ஒன்றுக்கொன்று எது பெரியது என்று மோதிக்கொண்டிருக்கும்போது பொய்கையாழ்வாரே சிவனும் திருமாலும் ஒன்று என்று முதல் குரலை எழுப்பியிருக்கிறார். இருந்தாலும் விஷ்ணுவை தவிர அவர் எந்தத் தெய்வத்தையும் வணங்கமாட்டேன் என்று பாடியிருப்பது ஆழ்வார்கள் தங்கள் சமயத்தை எப்படிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கான சான்று.
பூதத்தாழ்வார் இறைவனை அடைவதற்கு வேதமே தேவையில்லை என்ற புரட்சி குரலை எழுப்பியிருப்பது அவர் வாழ்ந்த காலத்தில் அணைத்து சமூக மக்களையும் கவரும் விதமாக இருந்திருக்கும்மென்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆழ்வார்களிலே பெரியாழ்வார் கண்ணனுக்காக இயற்றிய பாசுரங்கள் கவிதை கொஞ்சும் அழகிய பாசுரங்கள் என்று சுஜாதா கூறியிருப்பதை நாமும் உணர முடியும். ஒரு தாய் தன் குழந்தையைத் தாலாட்டும் விதமாக அன்போடும் கொஞ்சலுடனும் அமைந்திருக்கும் பாசுரங்களை ரசிக்காமல் கடந்துபோகமுடியவில்லை. பிள்ளைத் தமிழ் இலக்கிய வகையை முதலில் இயற்றியவர் பெரியாழ்வார் என்று சுஜாதா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புறத் தாலாட்டு தொனியிலும் பெரியாழ்வார் பாடல்கள் இயற்றியிருப்பது அழகு. 'குட்டன்' என்ற சொல்லை மலையாளத்துச் சொல் என்று நம்மில் நிறையப் பேர் நினைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெரியாழ்வார் கண்ணனை தன் பாசுரங்களில் குட்டன் என்று பாடியிருப்பது, அந்தச் சொல் தமிழிலிருந்து மலையாளத்திற்குச் சென்றிருப்பதைத் தெரியப்படுத்துகிறது.
நான் ரசித்து வாசித்த மற்றுமொரு அத்தியாயம் 'ஆண்டாள்'. நளினம், தீராக்காதல் என்று கவிதை நயத்துடன் அமைந்திருக்கும் ஆண்டாளின் தமிழுக்கு 'திருப்பாவையே' சாட்சி. மேலும் சாதாரணக் குடும்பத்தில் வாழ்ந்துகொண்டிருந்த ஆண்டாளுக்கு விஞ்ஞானக் குறிப்போடு எப்படி ஒரு மழை காட்சியை 'ஆழி மழை கண்ணா' என்ற பாடல் வழியாக வெளிப்படுத்த முடியும் என்று ஆச்சரியப்படுகிறார் சுஜாதா. திருமாலுடன் தன் காதல் கைகூடுவதற்காக மன்மதனையும், காமதேவனையும் ஆண்டாள் வணங்கியிருப்பதனால் காதலர் தினத்தை ஆண்டாள் தினமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சுஜாதா முன்வைக்கிறார். ஆண்டாள் திருமாலை பாடாமல் சாதாரண மனிதனை இவ்வளவு வர்ணனையோடு பாடியிருந்தால் அவர் வாழ்ந்த சமூகம் அவரை இப்படி கொண்டாடி இருக்குமா என்று எண்ணம் எழுந்ததை என்னால் மறுக்கமுடியவில்லை.
திருமங்கை ஆழ்வார் தன்னை திருமாலின் காதலியாகப் பாவித்துக்கொண்டு Bridal mysticism என்னும் நாயகி பாவனை வகைமையைச் சார்ந்த பாடல்களை இயற்றியிருப்பதை நாம் அறிந்து கொள்ளலாம். திருமங்கை ஆழ்வார் எவ்வாறு திருமால் பக்தனாக மாறினார் என்று சொல்லப்பட்டிருக்கும் கதை படத்தில் வரும் கதை போல இருந்தது. இப்படி ஒவ்வொரு ஆழ்வார்க்கும் பின்னே ஒரு ஆர்வமான கதை இருந்தாலும், சுஜாதா அந்தக் கதையெல்லாம் உண்மை என்று நிரூபிக்க முயலாமல் சற்று தள்ளி இருந்து கதையை மட்டும் நம்மிடம் கடத்த முயற்சி செய்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்று.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் மறுபிறவி ஒன்று வேண்டாம் என்ற ஆழ்ந்த கருத்தைக் கொண்டிருந்தாலும், சமணத்தையும் பௌத்தத்தையும் தன் பாசுரங்கள் மூலமாகக் கடுமையாக எதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபஞ்சம் ஆரம்பித்த கனத்தைத் தன் பாடல் வழியாக உணர்த்திய நம்மாழ்வாரை வேதத்தைப் பாராட்டாத ஒரு புரட்சிகரமான ஆழ்வாராக நம்மிடம் அவரின் பாசுரங்கள் கொண்டு அறிமுகப்படுத்துகிறார் சுஜாதா. அவரின் சீடரான மதுரகவி ஆழ்வார் பத்து பாடல்களே இயற்றியிருந்தாலும், நம்மாழ்வாரின் புகழ் பரவுவதற்கு அவரின் பாடல்களே உதவி புரிந்தது என்பதற்காக அவரும் ஆழ்வார்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் என்று கூறுவதன் மூலம் குரு சீடன் உறவை வைணவச் சமயம் எவ்வளவு மதித்திருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளமுடியும்
இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு வைணவச் சமயம் மற்றும் பக்தியின் மீதோ நாட்டமிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. தமிழ் மீது ஆர்வங்கொண்டிருந்தாலே போதும். ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கும் புத்தகம் இது.