சாணக்யாவின் சொற்கள் மந்தகாசத் தொனியும் மந்திரப் பண்பும் கொண்டவை. கடலால் சூழப்பட்ட கண்டத் துணுக்குகளைப் போல அண்டப் பேரியக்கத்தின் நடுவே மனித உயிரியின் அற்பச் சலனங்களை இந்தச் சொற்களால் அவர் பதிவுசெய்கிறார். குற்றம், ஏழ்மை, நோய்மை ஆகியவற்றை இயல்புகளாகக் கொண்ட அந்தச் சலனம் பேரியக்கத்தின் கதியில் சிலவேளை தண்டிக்கப்படலாம்; சிலவேளை மன்னிக்கப்படலாம். ஆனால் பேரண்டத்தின் பெருங்கருணை ஒருபோதும் அந்த மீச்சிறு சலனத்தைத் தன் கதியிலிருந்து விலக்கிவைப்பதை சாணக்யாவின் புனைவுகள் ஒப்புக்கொள்வதில்லை.பா. வெங்கடேசன்
கதைக்களங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருப்பினும் தொகுப்பில் இருக்கின்ற எட்டு கதைகளுக்குள்ளும் கதை சொல்லல் மட்டும் கதை கேட்டலின் மீதான தீரா மோகம் இழையோடுகிறது.
ஒவ்வொரு கதையிலும் கதைசொல்லி புனைவு நிலத்தில் தணியா தாகங்கொண்ட தேசாந்திரியாக உலவுகிறார். நம்மையும் விரிகின்ற அந்தந்த உலகங்களுக்குள் நுழைத்துக் கொள்ளும்படியாக வசீகரிக்கிறது அவரது கூறுமுறை.
ஆசிரியர் : ஜே.பி.சாணக்யா சிறுகதை தொகுப்பு 151 பக்கங்கள் காலச்சுவடு பதிப்பகம்
நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிற்கு நெருக்கமான, ஆழமான, உணர்வுமிக்க கதைகளை வாசகர்களுக்கு கொடுத்ததற்கு சாணக்யா அவர்களுக்கு நன்றி. எழுத்துக்களின் வலிமையும் தரமும் அதன் பக்கங்களின் எண்ணிக்கையில் இல்லை, அவை சுமந்து வரும் கருத்திலும், உயிரோட்டத்திலும் தான் உள்ளது. ஒரு வரி, ஒரு சொல் போதும் ஒரு வாசகனின் உள்ளம் வரை சென்று பல நாட்கள் அவனுக்குள் நடமாடி அவனுக்குள் பல வித மாற்றங்களையும் அவன் வழி இந்த சமூகத்தின் செயல்பாட்டையும் மாற்ற வல்லமை படைத்தவை.அப்படி ஒரு எழுத்துக்கு சொந்தக்காரர் தான் சாணக்யா. சாணக்யாவின் கதைகளின் உலகம் முற்றிலும் மாறுபட்டவை, நிலம், காலம், களம் கடந்து கதை மாந்தர்களும், அவர்களின் உணர்வுகளுமே கதை முழுக்க நிரம்பியிருக்கும். அப்படி நிரம்பிய மனிதர்கள் நமக்கு வாழ்க்கையை சொல்லிக்கொடுக்கின்றனர். " மனிதர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் மட்டுமே சிந்திக்க தெரிந்த அற்புத பிறவிகள் " எவ்வளவு ஆழமான அர்த்தங்கள் நிறைந்த வரி. இப்படி பல வரிகளை இந்த தொகுப்பு முழுக்க நாம் வாசிக்கலாம்.
இத்தொகுப்பில் மொத்தம் 8 கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தில் பயணிக்கூடியவை. ஒவ்வொரு கதையிலும் ஒரு நுன்னுணர்வை ஆசிரியர் ஒளித்துவைத்துள்ளார் அதனை தேடி கண்டடைந்தால் அந்த கதையின் உணர்வு உங்களுக்குள்ளும் வந்து சேர்ந்துவிடும். என் மனதிற்கு நெருக்கமான கதைகள் விருந்தினர் இல்லம் ரோஜாவின் கண்களும் வார்த்தைகளும் அன்றுமுதல் கடையடைப்பு விலங்குகளின் அணிவகுப்பு
ரோஜாவின் கண்களும் வார்த்தைகளும் என்ற கதையில் வரும் ரம்யா என்ற சிறுமி உருவத்திலும் வயதிலும் சிறியவளாக இருந்தாலும் இந்த புத்தகத்திலேயே மிகவும் கனமானவள் அவள் தான். ஆம், ஆசிரியர் கூறுவது போல " அவள் முகத்தில் யாரோ இருந்தார்கள் "
அன்று முதல் கடையடைப்பு கதை நமக்கு மிகவும் பரீட்சையமான ஒரு களமாகவும், கதையாகவும் இருந்தாலும் - பரபரப்பாக சுற்றி திரிந்த தள்ளுவண்டி கிழவர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை வெறுப்பாகவும், விரக்தியாகவும் வெளிக்காட்டும் நேரம் அது வரை இருந்த இடம் தெரியாமல் இருந்த அவர் மனைவி கிருஷ்ணம்மாள் அந்த சூழ்நிலையை இலகுவாக்கி அவரை தாங்கி செல்லும் காட்சி என் கண்களையும் இதயத்தையும் ஈரமாக்கியது. விலங்குகளின் அணிவகுப்பு - இது வெறும் சிறுகதை அல்ல. நவீன சிறுகதை உலகின் அடுத்த கட்டத்திற்கான ஒரு முன்னெடுப்பாக தான் இந்த கதையை நான் பார்க்கிறேன். ஒரு சிறுகதை வடிவில் மூன்று தலைமுறை கதையை கூறியுள்ளார் சாணக்யா. ஆயுதங்கள் வெறும் கருவிகளே அதனை இயக்கும் மனிதனும் அவன் மனமும் தான் உண்மையான ஆயுதங்கள் என்பதை சிறுகதை வடிவில் ஒரு இதிகாசமாக படைத்துள்ளார்.
உயிரற்ற பொருட்களுக்கும் உயிர் கொடுப்பது இலக்கியம் மட்டுமே. மேலும் அந்த பொருட்களுடன் மனித மனங்களை பொருத்தி பார்ப்பதும் இலக்கியத்தின் ஒரு விளையாட்டு. அப்படி இந்த தொகுப்பில் என் பார்வைக்கு தெரிந்த வரையில் ஒவ்வொரு கதையிலும் ஒரு பொருள் உயிர்பெற்று அந்த கதையில் ஒருவர் போல உருமாறுகிறது. உதாரணமாக அசலை மிஞ்சும் நகல் கடிகாரம், கிழவருடன் சேர்ந்து தள்ளாடும் தள்ளுவண்டி, ரம்யாவின் குரலுக்கு அடங்கும் அரவை எந்திரம், நிஜ முதலாளியின் முகம் காட்டும் கண்ணாடி, காமப்பார்வையை மாற்றும் காமம், உண்மையான மனித மிருகத்தை எதிர்த்து நிற்கும் காட்டெருமை என்று கதைகள் முழுக்க புதைந்து கிடக்கும் இந்த உயிர்கள் எங்கோ நம் மனதின் மூலையில் ஏதோ ஒன்றை நினைவு படுத்திக்கொண்டே இருக்கின்றன.