மயிலன் ஜி சின்னப்பன் (மயிலன் சின்னப்பன்) (ஜூன் 12, 1986) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ் வரலாற்றில் இருந்தும் மருத்துவத்துறையில் இருந்தும் உளவியல் கோணத்தில் புதிய கருக்களை எடுத்து சிறுகதைகள் எழுதிவருபவர்.
சிருங்காரம் என்னும் இந்த நூல் மயிலன் ஜி. சின்னப்பன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் மனித உறவுகளைப் பற்றியதாகவும் அதிலும் குறிப்பாக ஆண் பெண் சார்ந்த உறவுகளை பற்றியும் அவ்வுறவு சார்ந்து எழும் அக மனஓட்டத்தை பற்றியதுமானது. ஒரு செயல் புரிவதற்கு முன் மனதில் ஏற்படும் எண்ணங்களும் அதற்கு மனத்தில் ஏற்படும் விவாதங்களும் என மனிதனின் அக மன ஓட்டங்களை தொடர்ந்து செல்லும் இந்த கதைகள் மனித மனத்தின் பல அடுக்க தன்மையையும் உணர்வுகளின் வலை பின்னல்களையும் விவரிக்கிறது.
மனிதர்கள் தங்களின் எண்ணங்களின் பால் கொண்ட குற்ற உணர்வுகள் அல்லது குற்ற உணர்ச்சி என அடையாளம் கொள்ள முடியாத ஆனால் ஒரு விதமான உறுத்தல்கள் என விரியும் கதைகள், கதை மாந்தர்கள் தாண்டி எவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எண்ணங்களுக்காகவும் செயல்களுக்காகவும் ஏதோ ஒரு வகையில் மன வருத்தத்தை சுமந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை காட்டுகிறது.
சிங்களக் கப்பல் படையினால் தாக்கப்பட்ட மீனவருக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவருக்கும் அவருடைய உதவியாளருக்கும் இடையே நடக்கும் உரையாடல், மனிதர்கள் தங்களை சுற்றி நடக்கும் கொடுமைகளுக்கு ஆற்றும் எதிர்வினையை படம் பிடித்து காட்டுகிறது. நேரடியாக பங்கேற்கவில்லை என்ற பொழுதும் அரசியல் வன்முறையில் நம் ஒவ்வொருவருடைய பங்கை உணரும் பொழுது ஏற்படும் ஆற்றாமை, கோபம் என ஒருபுறமும் மற்றும் அந்த ஆற்றாமையில் இருந்து விடுபட எத்தளிக்கும் மனம் விழையும் எளிய தீர்ப்பு என மறுபுறமும், வன்முறை பார்வையாளனின் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களை விவரிக்கிறது.
மனிதன் தன்னுடைய சொந்த மத நம்பிக்கையை நிலை நிறுத்திக் கொள்ள தேவைப்படும் அதிசயமும், மத நம்பிக்கை சார்ந்து கொள்ளும் சிறு பெருமித உணர்வு தரும் பிடிமானமும், பெருமித உணர்வின் பால் விழையும் வன்முறை ஏற்படுத்தும் விலக்கமும் என மதம் மனித மனத்தின் ஊடே செயல்படும் தன்மையை ஒரு கதை விவரிக்கிறது. நாம் எவ்வாறு நம்முடைய செயல்களுக்கு பிரத்தியேக நியதிகளை உற்பத்தி செய்து கொண்டு ஆனால் மற்றவர்களை எல்லாம் பொதுமைப்படுத்தி புரிந்து கொள்கிறோம் என்பதை வாசகன் இக்கதைகளின் வழியே கண்டடைகிறான்.