"புத்ர "
ஆசிரியர் - லா .ச . ரா
நாவல்
144 பக்கங்கள்
டிஸ்கவரி வெளியீடு
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்று தமிழில் ஒரு வாக்கியம் உண்டு. அது வெறும் வாய் வாக்கியம் கிடையாது . அது ஒரு வலியின் ஓங்காரம் , உணர்ச்சி பெருக்கின் உச்சம் , உள்ளக்குமுறலின் வெடிப்பு . தவறான தீர்ப்பால் தன் தலைவனை இழந்து தவித்த கண்ணகியின் ஒரு சொல் ஒரு நகரையே எரித்து சாம்பலாக்கியது. அந்த நகரில் அப்பாவிகளும் , பல நல்லவர்களும் இருக்கத்தான் செய்தனர் , ஆனால் அந்த நொடி , அந்த கோபம் , அந்த கண்கள் , அந்த உணர்ச்சி , அந்த சொல் - இவையனைத்திற்கும் எந்த பாகுபாடும் தெரியாது . இப்படி நம் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் பல்வேறு சூழ்நிலைகளில் நம்மிடம் இருந்தும் சில சொற்கள் விழுந்திருக்கும் , விழுந்த இடமும் , காலமும் ஆறாத வடுவாக இன்னும் அவ்வப்போது நின���வுகளில் ஒரு நெருடலை கொடுத்துக்கொண்டே இருக்கும் . மனிதனின் ஒவ்வொரு சொல்லும் மூலையில் இருந்துதான் உருவாகும் என்றால் , இந்த சொற்கள் எங்கிருந்து வந்தன ? மனம் என்ற ஒன்று நம் உடலில் எங்கிருக்கிறது என்று இதுவரை நாம் அறியவில்லை என்றாலும் அவ்வப்போது தன் இருப்பை இவ்வாறு நம்மை உணரச்செய்கிறது .
" அடே ! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது " இப்படி ஒரு தாய் தான் பெற்ற வயிறு பற்றி எரிந்து தன் மகனுக்கு எதிரே புத்ர சாபம் விடுவதோடு கதை தொடங்குகிறது . கிழவி தன் ஊருக்கு திரும்பி படுக்கையாக இருக்கும் தன் கணவனிடம் நடந்ததை கூறவும் , அன்று பொழுது விடிய விடிய அவள் கணவனின் உயிரும் அவளை தூற்றிவிட்டு தன்னந்தனியே விட்டு விலகுகிறது.தன் தந்தையின் உடலை காண மூன்று நாள் கழித்து வந்த மகனிடம் மீண்டும் கோபம் . ஆனால் இம்முறை அவனுக்கு கரணம் இருக்கிறது , கருவுற்றிருந்த அவள் மனைவியின் கரு கலைந்துவிட்டது ,கலைந்த கரு ஒரு ஆண் .சாபம் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிவிட்டது . அத்துடன் கதை இரண்டாக பிளவுறுகிறது . ஒரு பக்கம் தன் மனைவி மக்கள் வேலை என்று சராசரி வாழ்க்கையில் மகன் . மற்றொரு பக்கம் வாழ்வின் அணைத்து ஒளிகளும் மங்கிய வீட்டில் ஒற்றை தீபத்தின் ஒளியில் தள்ளாத வயதில் தன் வாழ்க்கையை தனியே நடத்தும் கிழவி . சாபம் ? சாபம் என்றும் சாவதில்லை . மகனின் கடைக்குட்டி ராஜு ,தன் தந்தை ஆசையாய் கொடுத்த பெப்பெர்மிண்டை விழுங்க சாபம் அவனை விழுங்கிவிட மீண்டும் இறப்பு , மீண்டும் ஆண் .இம்முறை அந்த இறப்புடன் கிழவியின் இறப்பும் சேர்ந்துகொள்ள , கதை முடிந்துவிட்டதோ ? இல்லை கிழவியின் நினைவு பறவை போல பறந்து தான் ஐந்து வயதில் இந்த வீட்டிற்கு வந்த இடத்தில இருந்து கதை மீண்டும் தொடங்குகிறது . அந்த கதை தான் இதுவரை நாம் படித்த கதைக்குள் இருக்கும் தர்க்கங்களை நமக்கு புரியவைக்கும் . சாபம் என்ன ஆனது ? சாபம் , அதை தொடுத்தவரையே ஒரு கட்டத்தில் சர்ப்பம் போல விழுங்கிவிடுகிறது . இதற்கு பிறகாவது மகனுக்கு ஒரு மகன் கிடைப்பானா ?
லா ச ரா தமிழ் இலக்கிய உலகில் தனித்து நடைபோட்டவர் . தனக்கென ஒரு மொழி , ஒரு நடை , ஒரு களம் என ஒப்பீடுகளுக்கு அப்பார்பட்டவர் . அவரை விமர்சிக்க இன்னும் ஒருவர் பிறக்கவில்லை , பிறக்கப்போவதும் இல்லை . கவிநடையில் உரைநடை , அதற்கும் மேலே இசை வடிவில் உரைநடை , உணர்வுகளே உயிர்பெற்று கதைக்குள் நுழைவது , காலத்திற்கு கைகால்கள் முளைத்து நம்முடன் பயணிப்பது , ஒரு கதைக்கு ஒரு வண்ணம் பூசுவது இப்படி இவரின் தனித்துவம் ஏராளம் . அதுசரி புரிந்தால்தானே படிப்பதில் ஒரு அர்த்தம் ? என்று ஒரு வகுப்பு கேட்கலாம் . மண்ணை முட்டாமல் விதை முளைப்பதா ? விண்ணை கீறாமல் ஒளி படருவதா ? வலி தாங்காமல் வாரிசு கிடைக்குமா ? அப்படித்தான் இலக்கியமும் . ஒளித்துவைத்து பொருள் தேடுவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது .அது வினை பொருளாக இருந்தாலும் சரி , அகப்பொருளாக இருந்தாலும் சரி .
இந்த கதைக்கு ஒரு வண்ணம் இருக்கிறதென்றால் அது நீலம் . நீலம் மெல்ல மெல்ல கதை நெடுக பரவி பரவி காகிதத்தை கூட நீலம் ஆக்கிவிடும் . இந்த கதைக்கென ஒரு காலம் உள்ளது அது இருளும் வெளிச்சமும் தங்களுக்குள் ஒளிந்து விளையாடும் புலரும் வேளை . அந்த வேளை ஒரு உயிரோட்டம் அதனை ஒரு படமாகவோ , ஓவியமாகவோ பிடித்து வைப்பது அரிது , அந்த அரிதான ஒன்றை தன் இலக்கியம் வழி இவர் பிடிக்க முயன்றுள்ளார் .இந்த கதையில் பிரதானமாக வரும் மூன்று பெண் பாத்திரங்கள் . சமகால பெண்கள் இவர்களை வாசிக்க வேண்டும் . இவர்கள் இன்றும் பல வீடுகளில் மாட்டுப்பெண்களாக வாழ்ந்துகொண்டுதான் வருகின்றனர் . அவர்கள் அந்த வாழ்வை அப்படி ஏற்றுக்கொண்டதற்கும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது . ஆம் , தன்னை ஒரு நாள் இருளாக்கும் என்று தெரிந்தேதான் இரவு அந்த நிலவை சுமந்து செல்கிறது .
--இர.மௌலிதரன்
22-2-2023