பள்ளிப் பாடப் புத்தகங்களில் தேதிகளாகவும், ஆண்டுகளாகவும் மட்டுமே மனப்பாடம் செய்யப்பட்டு நாம் மறந்து போன இந்திய வரலாற்றின் பக்கங்களை அரிய பல தகவல்களுடன், இன்னும் தெளிவாக விளக்குகிறது இந்த புத்தகம்.
பொதுவாகவே எஸ்.ரா. வரலாற்றை அணுகும் விதம் வித்தியாசமானது. இந்திய நிலப்பரப்பினூடே பயணித்து இந்நிலத்தின் பன்மைத்துவத்தை அனுபவித்து உணர்ந்த ஒரு வரலாற்றாசிரியரின் செறிவான அணுகுமுறை அது. இந்தியாவின் வண்ணங்களை ஒரு கலைடாஸ்கோப்பின் வழியே பார்த்து ரசிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது இந்த கட்டுரைத் தொகுப்பு.
‘இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு பகுதி அதன் இயற்கையியல் வரலாறு’ எனச் சொல்கிறார் ஆசிரியர். இந்தியாவில் காலனியத்தின் தாக்கம், இங்கிருந்த இயற்கை வளங்களை அழித்ததையும், பாரம்பரிய விவசாய முறைகளைச் சிதைத்து உற்பத்தி உறவுகளை மாற்றி அமைத்ததையும் தெளிவாக விளக்கி இருக்கிறார். ‘உழைப்பவனிடமிருந்து நிலத்தைப் பறித்து, இந்தியாவின் ஏழை விவசாயிகளின் கடைசி சொட்டு இரத்தம் வரை உறிஞ்சி எடுப்பதற்கு பிரிட்டிஷ் வகுத்த நிலவரி வசூல்முறைகள்’ பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.
தாகூரின் சாந்தி நிகேதன் பற்றிய கட்டுரைகள் ‘பண்பாடும், அறமும், சுய ஒழுக்கமும் கற்றுத்தரப்படாமல் நடைமுறைப்படுத்துகிற கல்வி முழுமையானதாக இருக்காது’ என்பதை வலியுறுத்திச் சொல்கிறது. இந்திய தேசிய ராணுவத்தின் 45 வீரர்களைத் தேர்வு செய்து, வான்படைத் தாக்குதலில் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக டோக்கியோ கேடட்ஸ் என்ற பெயரில் ஜப்பானின் இம்பீரியல் அகாடமிக்கு அனுப்பிய நேதாஜியின் நெஞ்சுரம் வியக்க வைக்கிறது.
வெள்ளையனை வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக உஷா மேத்தா முன்னெடுத்த சுதந்திர ரேடியோ ஒலிபரப்பு பற்றி வாசிக்கையில், நாம் ஒரு ஊடகத்தை கையாள்வதில் எவ்வளவு சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பது விளங்குகிறது. உலகின் மிகப்பெரிய மனிதப் பேரழிவாகக் கருதப்படும் ஆர்மீனிய படுகொலையைப் பற்றிய பதிவுகள் ஆர்மீனியர்களின் துயரத்தை வாசகனுக்குள்ளும் பரவ விடுகின்றன. ஜோதிராவ் புலே, சாவித்திரி பாய் புலே ஆகியோர் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கல்வியால் மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய முடியும் என்பதை உணர்த்துகின்றன.
சுதந்திர போராளி வீரேந்திரநாத் சட்டோபாத்யாய பற்றிய கட்டுரையில் ‘ஒருவன் தேசவிரோதி ஆவதும் தேசபக்தன் ஆவதும் ஆள்பவர்கள் யார் என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஆளும் அதிகார வர்க்கம் தன்னை எதிர்ப்பவர்களை தேச விரோதிகளாக மாற்றுவது காலம்காலமாக நடந்து வரும் ஒரு வன்செயல்’ என்று எழுதியிருப்பதை வாசிக்கையில் சமகால நிகழ்வுகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
எஸ்.ரா. இந்த கட்டுரைகள் எழுத உதவிய குறிப்புதவி நூல்களின் பட்டியலை தந்திருப்பது இந்திய வரலாறு சார்ந்து மேலும் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிவில் சர்வீசஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்காக தயாரித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோரும் கண்டிப்பாக இந்த புத்தகத்தை ஒருமுறை வாசிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.