பொன்னியின் செல்வன் - பாகம் 1 - புது வெள்ளம்
திரைப்படம் வந்ததையொட்டி, நமது வீட்டில் இருக்கும் ஜூனியரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியும், சற்றே நமது ஆர்வத்திற்கு தீனியாகவும், பத்து வருடத்திற்கு பிறகான மீள்வாசிப்பை தொடங்கினோம்.
தங்கு தடையற்ற எழுத்தோட்டத்திலும், வரலாறும் கற்பனையும் கலந்த அலங்கார வர்ணனையாக செல்கையிலும், 2000த்து சொச்ச பக்கங்களை மீள்வாசிப்பதற்கு ஏது தடை!
இப்பாகத்தின் கதையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இருப்பினும், வந்தியத்தேவன்., வீரநாராயண ஏரியில் தொடங்கி, இலங்கை செல்ல கோடியக்கரைக்கு பயணப்படுவதாயும், ஆதித்ய கரிகாலன் தனது முன்னாள் காதலியான நந்தினியுடன் ஏற்பட்ட துர்நிகழ்வுகளை பார்த்திபேந்திரனுக்கும் திருக்கோவலூர் மலயமானுக்கும் விளக்குவதாகவும் இப்பாகம் முடிகிறது.
திரைப்படம் எடுத்த முறை மீது, தொழில்நுட்ப ஆக்கங்களில் விமர்சனம் இருந்தாலும், முக்கியமான நிகழ்வுகளை கோர்வையாக திரைப்படத்தில் கொண்டு வந்ததில் பெரும் திருப்தி. சிதைவுபடவில்லை!
திரைப்படத்திற்கு முன்பு வரை, ஒவ்வொரு கதைமாந்தர்களின் உருவங்களை, கோட்டைகளை, அரண்மனைகளை, நீர்நிலைகளை பற்றி புத்தகத்தின் அட்டைப்படத்திலோ அல்லது கதையில் சொல்லப்பட்ட வர்ணனையின் மூலமாகவோ, நம்மை போல வாசிப்பவரின் மனத்திரையில் அவர்களை சித்திரங்களாக வடித்திருப்போம். வாசிப்பு நெடுகிலும் அச்சித்திரங்களையே நம் மனத்துள் பயன்படுத்தி பயணித்திருப்போம்.
ஆனால், திரு மணிரத்தினத்தின் முயற்சியால், தற்போதைய வாசிப்பின்போது, அந்தந்த நடிகர்களே நம் மனக்கண் முன் வருகின்றனர்.
இனிவரும் தலைமுறை, "பொன்னியின் செல்வன்" நாவலை தேடிப் படிக்கும் ஆர்வத்தை தூண்டியமைக்கும், தகுதியான பாத்திர படைப்பிற்கும், இயக்குனருக்கு நமது பாராட்டுக்கள்.!
வந்தியத்தேவன், 'புதுவெள்ளமாக' பாய்ந்து காஞ்சி, பாலாறு, வடபெண்ணையாறு, தென்பெண்ணையாறு, வீரநாராயணபுர ஏரி, கடம்பூர், கொள்ளிடம்(வடகாவேரி), குடந்தை, அரசலாறு, மண்ணியாறு, திருப்புறம்பியம் பள்ளிப்படை, தஞ்சை, பழையாறை என தொண்டை மண்டலம் முதல் சோழ தேசம் வரை பயணப்பட்டதை பக்கமிருந்து அவனுடன் பயணப்பட்ட உணர்வை தருகிறது இப்பாகம்.
கல்கி அவர்கள் இந்நாவல் முடிந்தவுடன் இறந்து விட்டார். தொடர்ந்து 6, 7 போன்று எழுதும் பாகங்களுக்கான சிறு விதையை*, முதல் பாகத்திலேயே விட்டு சென்றிருக்கிறார். அவர் உயிரோடு சில காலம் இருந்திருந்தால், மேலும் சில பாகங்கள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கலாம். இந்நாவலின் மூலம் தொண்டை நாடு முதல் இலங்கை வரை பயணப்பட்ட நாம், காம்போஜம் (கம்போடியா), ஸ்ரீ விஜயம் (சுமத்திரா), சாவகம் (ஜாவா), சீயம்-மாபப்பாளம் (தாய்லாந்து), கடாரம் (மலேசியா), நக்காவரம் (நிக்கோபார் தீவு கள்), முந்நீர்ப்பழந்தீவு (மாலைதீவு) போன்ற தூரதேசங்களுக்கும் திரு கல்கியின் உதவியுடன் பயணப்பட்டிருப்போம்.
*அதாவது, அருள் மொழி வர்மன் எனும் ராஜராஜனுக்கும் வானதி தேவிக்கும் பிறக்கப்போகும் மகன்(ராஜேந்திர சோழன்) பலதேசங்களடைந்து புகழ் பல பெறுவான் என குடந்தை சோதிடர் வானதியை பற்றி குந்தவையிடம் சொல்வதாக இம்முதல்பாகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்திலிருந்து...
\
ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் தான் அடையும் காலம் நெருங்கி விட்டதென்று அவனுடைய உள்ளுணர்ச்சி சொல்லியது. சோழ நாட்டை அணுகும்போதே இவ்வளவு ஆனந்தக் கோலாகலமாயிருக்கிறதே? கொள்ளிடத்தைத் தாண்டி விட்ட பின்னர் அச்சோழ நாட்டின் நீர்வளமும் நிலவளமும் எப்படியிருக்கும்? அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள்? எத்தனை நதிகள்? எத்தனை குளங்கள்? எத்தனை தௌிநீர் ஓடைகள்? கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற பொன்னி நதியின் காட்சி எப்படியிருக்கும்? அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? நீரோடைகளில் குவளைகளும் குமுதங்களும் கண்காட்டி அழைப்பதும் செந்தாமரைகள் முகமலர்ந்து வரவேற்பதும் எத்தகைய இனிய காட்சியாயிருக்கும்? காவேரியின் இர�� கரைகளிலும் சிவபக்திச் செல்வர்களான சோழப் பரம்பரையினர் எடுப்பித்துள்ள அற்புத வேலைப்பாடமைந்த ஆலயங்கள் எவ்வளவு அழகாயிருக்கும்?
ஆகா! பழையாறை நகர்! சோழ மன்னர்களின் தலைநகர்! பூம்புகாரையும் உறையூரையும் சிறிய குக்கிராமங்களாகச் செய்துவிட்ட பழையாறை! அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும்? அந்த ஆலயங்களில் இசை வல்லவர்கள் இனிய குரலில் தேவாரப் பாடல்களையும் திருவாய்மொழிப் பாசுரங்களையும் பாடக்கேட்டோர் பரவசமடைவார்கள் என்று வந்தியத்தேவன் கேள்வியுற்றிருந்தான். அவற்றையெல்லாம் கேட்கும் பேறு தனக்கு விரைவில் கிடைக்கப் போகிறது இது மட்டுந்தானா? சில நாளைக்கு முன்பு வரையில் தான் கனவிலும் கருதாத சில பேறுகளும் கிட்டப்போகின்றன. வீரத்தில் வேலனையும் அழகில் மன்மதனையும் நிகர்த்த பராந்தக சுந்தர சோழ மகாராஜாவை நேருக்கு நேர் காணப்போகிறான். அவ்வளவுதானா? அவருடைய செல்வப் புதல்வி, ஒப்புயர்வில்லாத நாரீமணி, குந்தவைப் பிராட்டியையும் காணப் போகிறான்.
/
\
தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன்(பராந்தக சோழன்) பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ்பெற்றவன், பராந்தக சோழன். சோழ சிகாமணி, சூரசிகாமணி முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.
...லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன்(பராந்தகரின் மூத்த மகன்) ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும் பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த எண்ணித் தன் வசமிருந்த வீரர்களைக் கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரால் வீரநாராயண ஏரி என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயண புரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். விஷ்ணுக்கிருஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு வழங்கிற்று. ஸரீமந் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.
....
நாதமுனிகளின் பேரராக அவதரிக்கப்போகும் ஆளவந்தார் பல அற்புதங்களைச் செய்தருளப் போகிறார்.
இந்த இருவரும் அவதரித்த க்ஷேத்திரத்தைத் தரிசிக்க, உடையவராகிய ஸரீ ராமானுஜரே ஒரு நாள் வரபோகிறார். வரும்போது வீரநாராயண ஏரியையும் அதன் எழுபத்து நான்கு கணவாய்களையும் பார்த்து அதிசயிக்கப் போகிறார். ஏரித் தண்ணீர் எழுபத்து நாலு கணவாய்களின் வழியாகப் பாய்ந்து மக்களை வாழ வைப்பது போலவே, நாராயணனுடைய கருணை வெள்ளத்தை ஜீவகோடிகளுக்குப் பாயச் செய்வதற்காக எழுபத்து நாலு ஆச்சார்ய பீடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அம்மகானின் உள்ளத்தில் உதயமாகப் போகிறது. அதன்படியே எழுபத்து நான்கு ‘சிம்மாசனாதிபதிகள்’ என்ற பட்டத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்கள் ஏற்படப்போகிறார்கள்.
இந்த மகத்தான நிகழ்ச்சிகளையெல்லாம் வைஷ்ணவ குரு பரம்பரைச் சரித்திரம் விவரமாகச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டு, மறுபடியும் நாம் வந்தியத்தேவனைக் கவனிப்போம்.
/
\
பழுவேட்டரையரின் முன்னோர்கள் சேர நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று உனக்குத் தெரியும் அல்லவா?”
“கேள்விப்பட்டிருக்கிறேன் ஏன், நீதான் முன்னொரு தடவை சொல்லியிருக்கிறாய்.
/
\
பழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார். தான்தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்கமுத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான். இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச் செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது.
சிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்களுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச் சொல்லும் மரபும் இருந்தது.
/
\
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி! காவேரி!
பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி! காவேரி!
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம், நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே
அறிந்தேன் வாழி! காவேரி!
இந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா? ஆம், சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை.
/
\
“அக்கா! அக்கா! நான் அவ்வளவு மடமதி உடையவளா? சூரியன் எங்கே? காலைப் பனித்துளி எங்கே? சூரியனுடைய நட்புக்குப் பனித்துளி ஆசைப்பட்டால் என்ன பயன்?”
“பனித்துளி சிறியது தான்! சூரியன் பெரியது, பிரகாசமானது தான்! ஆனாலும் பனித்துளி அப்படிப்பட்ட சூரியனைச் சிறைப்படுத்தித் தனக்குள் வைத்திருக்கிறதோ, இல்லையோ?”
வானதி உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த குரலில், “அப்படியா சொல்கிறீர்கள்! பனித்துளிகூடச் சூரியனை அடையலாம் என்று சொல்கிறீர்களா?” என்றாள். பிறகு திடீரென்று மனச் சோர்வு வந்து விட்டது. “பனித்துளி ஆசைப்படுகிறது; சூரியனையும் சிறைப்பிடிக்கிறது. ஆனால் பலன் என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது. வெயிலில் உலர்ந்து, இருந்த இடம் தெரியாமல் மறைகிறது!”
“அது தவறு, வானதி! பனித்துளியின் ஆசையைக் கண்டு சூரியன் தன்னுடன் பனித்துளியை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். தன் ஆசைக்குகந்த பனித்துளிப் பெண் பிற புருஷர் கண்ணில் படக் கூடாது என்று அவன் எண்ணம். இரவு வந்ததும் மறுபடியும் வெளியே விட்டு விடுகிறான். மறைந்த பனித்துளி மறுபடியும் வந்து உதிக்கிறது அல்லவா?”
/
\
" இந்தத் (வானதி)தேவியை அடையும் நாயகன் எல்லாத் தடைகளையும் மீறி மகோன்னத பதவியை அடைவான்…. இதைவிட முக்கியமான செய்தி ஒன்று உண்டு தாயே! நான் வயதானவன் ஆகையால் உள்ளதை ஒளியாமல் விட்டுச் சொல்கிறேன். இந்தப் பெண்ணின் வயிற்றை நீங்கள் ஒருநாள் பாருங்கள். அதில் ஆலிலையின் ரேகைகள் இல்லாவிட்டால் நான் இந்த ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன்…”
“ஆலிலையின் ரேகையில் என்ன விசேஷம் ஜோதிடரே?”
“ஆலிலைய���ன் மேல் பள்ளிகொண்ட பெருமான் யார் என்பது தெரியாதா? அந்த மகாவிஷ்ணுவின் அம்சத்துடன் இவள் வயிற்றில் ஒரு பிள்ளை பிறப்பான். இவளுடைய நாயகனுக்காவது பல இடைஞ்சல்கள், தடங்கல்கள், அபாயங்கள், கண்டங்கள் எல்லாம் உண்டு. ஆனால் இந்தப் பெண்ணின் வயிற்றில் அவதரிக்கப் போகும் குமாரனுக்குத் தடங்கல் என்பதே கிடையாது. அவன் நினைத்ததெல்லாம் கைகூடும்; எடுத்ததெல்லாம் நிறைவேறும், அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்; அவன் கால் வைத்த இடமெல்லாம் அவனுடைய ஆட்சிக்கு உள்ளாகும்; அவன் கண்ணால் பார்த்த இடமெல்லாம் புலிக்கொடி பறக்கும்.தாயே! இவளுடைய குமாரன் நடத்திச் செல்லும் சைன்யங்கள் பொன்னி நதியின் புது வெள்ளத்தைப் போல் எங்கும் தங்குதடையின்றிச் செல்லும். ஜயலக்ஷ்மி அவனுக்குக் கைகட்டி நின்று சேவகம் புரிவாள். அவன் பிறந்த நாட்டின் புகழ் மூவுலகமும் பரவும். அவன் பிறந்த குலத்தின் கீர்த்தி உலகம் உள்ள அளவும் நின்று நிலவும்!…”
இவ்வாறு ஜோதிடர் ஆவேசம் வந்தவர் போல் சொல்லி வந்தபோது குந்தவை தேவி அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டு, அவர் கூறிய வார்த்தைகளை ஒன்றுவிடாமல் விழுங்குபவள் போல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
/
\
அந்த காலத்து சைவ – வைஷ்ணவப் போரை விளக்கும் அருமையான கதை ஒன்று உண்டு.
ஸ்ரீரங்கத்து வைஷ்ணவர் ஒருவர் திருவானைக்காவல் ஆலய வெளிச் சுவரின் ஓரமாகப் போய��க் கொண்டிருந்தார். தலையில் திடீரென்று ஒரு கல் விழுந்தது. காயமாகி இரத்தமும் கசிந்தது. வைஷ்ணவர் அண்ணாந்து பார்த்தார். கோபுரத்தில் ஒரு காக்கை உட்கார்ந்தபடியால் அந்தப் பழைய கோபுரத்தின் கல் இடிந்து விழுந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். உடனே அவருக்குக் காயமும் வலியும் மறந்து போய் ஒரே குதூகலம் உண்டாகி விட்டது. “ஸ்ரீரங்கத்து வீர வைஷ்ணவக் காக்காயே! திருவானைக்காவல் சிவன் கோயிலை நன்றாய் இடித்துத் தள்ளு!” என்றாராம்.
அந்த நாளில் இத்தகைய சைவ – வைஷ்ணவ வேற்றுமை மனப்பான்மை மிகப் பரவியிருந்தது.
/
\
ஆதிகாலத்திலிருந்து மனித குலத்துக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் பிரேமை இருந்து வருகிறது. அரசர்களுக்கும் அந்தப் பிரேமை உண்டு; ஆண்டிகளுக்கும் உண்டு; முற்றும் துறந்த முனிவர்களுக்கும் உண்டு; இல்லறத்தில் உள்ள ஜனங்களுக்கும் உண்டு; அறிவிற் சிறந்த மேதாவிகளுக்கும் உண்டு; மூடமதியினர்களுக்கும் உண்டு. இத்தகைய பிரேமை, நாடு நகரங்களைக் கடந்து பல அபாயங்களுக்குத் துணிந்து, அரசாங்க அந்தரங்கப் பணியை நிறைவேற்றுவதற்காகப் பிரயாணம் செய்துகொண்டிருந்த நம்முடைய வாலிப வீரனுக்கும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா?
/
\
"வந்தனம், இன்னும் ஒரு விஷயம் மட்டும் முடியுமானால் சொல்லுங்கள். எனக்கு கப்பல் ஏறிக் கடற் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ரொம்ப நாளாக இருக்கிறது…”
“அந்த விருப்பம் நிச்சயமாகக் கைகூடும்; நீ சகடயோகக்காரன். உன் காலில் சக்கரம் இருப்பது போலவே ஓயாமல் சுற்றிக் கொண்டிருப்பாய். நடந்து போவாய்; குதிரை ஏறிப் போவாய்; யானை மேல் போவாய்; கப்பல் ஏறியும் போவாய்; சீக்கிரமாகவே உனக்குக் கடற் பிரயாணம் செய்யும் யோகம் இருக்கிறது.”
“ஐயா! தென்திசைப் படையின் சேனாபதி, தற்சமயம் ஈழத்திலே யுத்தம் நடத்தும் இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றித் தாங்கள் சொல்லக் கூடுமா? கிரஹங்களும் நட்சத்திரங்களும் அவரைப் பற்றி என்ன சொல்லுகின்றன?”
“தம்பி! கப்பலில் பிரயாணம் செய்வோர் திசையறிவதற்கு ஒரு காந்தக் கருவியை உபயோகிக்கிறார்கள். கலங்கரைவிளக்கங்களும் உபயோகப்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம்விட, நடுக்கடலில் கப்பல் விடும் மாலுமிகளுக்கு உறுதுணையாயிருப்பது எது தெரியுமா? வடதிசையில் அடிவானத்தில் உள்ள துருவ நட்சத்திரந்தான். மற்ற நட்சத்திரங்கள் – கிரஹங்கள் எல்லாம் இடம்பெயர்ந்து போய்க் கொண்டேயிருக்கும். ஸப்தரிஷி மண்டலமும் திசைமாறிப் பிரயாணம் செய்யும். ஆனால் துருவ நட்சத்திரம் மட்டும் இடத்தைவிட்டு அசையாமல் இருந்த இடத்திலேயே இருக்கும். அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்றவர் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் கடைக்குட்டிப் புதல்வரான இளவரசர் அருள்மொழிவர்மர். எதற்கும் நிலைகலங்காத திட சித்தமுடையவர். தியாகம், ஒழுக்கம் முதலிய குணங்களில் போலவே வீரபுருஷத்திலும் சிறந்தவர். கல்வியறிவைப் போலவே உலக அறிவும் படைத்தவர். பார்த்தாலே பசி தீரும் என்று சொல்லக் கூடிய பால்வடியும் களைமுகம் படைத்தவர்; அதிர்ஷ்ட தேவதையின் செல்வப் புதல்வர். மாலுமிகள் துருவ நட்சத்திரத்தைக் குறிகொள்வது போல், வாழ்க்கைக் கடலில் இறங்கும் உன் போன்ற வாலிபர்கள் அருள்மொழிவர்மரைக் குறியாக வைத்துக்கொள்வது மிக்க பலன் அளிக்கும்.”
/
\
பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது ‘பள்ளிப்படை’ என்று வழங்கப்படும்.
...
...
...
காவேரி நதியிலிருந்து பல கிளை நதிகள் பிரிந்து சோழ நாட்டை வளப்படுத்துவதை யாவரும் அறிவார்கள். அக்கிளை நதிகள் யாவும் காவிரிக்குத் தெற்கே பிரிகின்றன. கொள்ளிடத்திலிருந்து பிரிந்து காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் பாயும் நதி ஒன்றே ஒன்றுதான்; அதற்கு மண்ணியாறு என்று பெயர். இந்த மண்ணியாற்றின் வடகரையில், திருப்புறம்பயம் கிராமத்துக்கு அருகில், பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இறுதியான பலப்பரீட்சை நடந்தது. இரு தரப்பிலும் படைபலம் ஏறக்குறைய சமமாக இருந்தது. பல்லவ அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு பிரிதிவீபதி வந்திருந்தான். ஆதித்த சோழனும் அபராஜிதவர்மனுடைய கட்சியில் சேர்ந்திருந்தான்.
பாண்டிய சைன்யத்துடனும் பல்லவ சைன்யத்துடனும் ஒப்பிட்டால், சோழ சைன்யம் மிகச் சிறியதாகவே இருந்தது.எனினும், இம்முறை பாண்டியன் வெற்றி பெற்றால், சோழ வம்சம் அடியோடு நாசமாக நேரும் என்று ஆதித்தன் அறிந்திருந்தான். ஆகையால், பெரிய சமுத்திரத்தில் கலக்கும் காவேரி நதியைப் போல் பல்லவரின் மகா சைன்யத்தில் தன்னுடைய சிறு படையையும் சேர்ந்திருந்தான்.
/
\
சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய்க் கொண்டிருந்தான். நதிகளில் புதுப்புனல் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த காலம். கணவாய்கள், மதகுகள், மடைகளின் வழியாக வாய்க்கால்களிலும் வயல்களிலும் குபுகுபுவென்று ஜலம் பாய்ந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் தண்ணீர் மயமாயிருந்தது. சோழ தேசத்தை ‘வளநாடு’ என்றும் சோழ மன்னனை ‘வளவன்’ என்றும் கூறுவது எவ்வளவு பொருத்தமானது? இப்படி எண்ணியவுடனே சோழ நாட்டுக்குச் சோழ மன்னனுக்கும் ஏற்பட்டிருந்த அபாயங்கள் நினைவுக்கு வந்தன.
/
\
“தம்பி! இளவரசர் மதுராந்தகத் தேவரும் கோட்டைக்குள்ளேதானே தங்கியிருக்கிறார்?”
“ஆமாம்; பழுவேட்டரையர் அரண்மனைக்குப் பக்கத்தில் மதுராந்தகரின் மாளிகை இருக்கிறது. சின்னப் பழுவேட்டரையரின் திருமகளை மணம் புரிந்த மருமகர் அல்லவா?”
“ஓஹோ! அதுவும் அப்படியா? எனக்கு இது வரையில் தெரியாதே?”
“ரொம்பப் பேருக்குத் தெரியாதுதான் சக்கரவர்த்தியின் தேக அசௌகர்யத்தை முன்னிட்டுத் திருமணத்தைக் கோலாகலமாக நடத்தவில்லை.”
/
\
கோட்டைக்குள் குதிரையைக் கொண்டு போக வேண்டாம் என்று வல்லவரையன் முன்னமேயே தீர்மானித்திருந்தான். குதிரை நன்றாக இளைப்பாற அவகாசம் கொடுப்பது அவசியம். சீக்கிரத்தில் அக்குதிரையை, தான் துரிதப் பிரயாணத்துக்கு உபயோகப்படுத்த வேண்டி வரலாம், யார் கண்டது? எப்படியானாலும், அது இங்கே இருப்பதுதான் நல்லது. கோட்டை வாசல் போய்ச் சேரும் வரையில் அமுதனுடன் பேச்சுக் கொடுத்து இன்னும் சில விவரங்களைத் தெரிந்து கொண்டான்.
“உன் அன்னையைத் தவிர உனக்கு வேறு உற்றார் உறவினர் யாரும் கிடையாதா?” என்று வல்லவரையன் கேட்டதற்கு அமுதன் கூறியதாவது; “இருக்கிறார்கள், என் அன்னையுடன் கூடப் பிறந்த ஒரு தமக்கையும் தமையனும் உண்டு. தமக்கை காலமாகி விட்டாள்; தமையனார் கோடிக்கரைக் குழகர் கோயிலில் புஷ்ப கைங்கரியம் செய்கிறார். அத்துடன் இரவு நேரங்களில் கலங்கரை விளக்கத்தில் தீபமேற்றிப் பாதுகாக்கும் பணியும் செய்து வருகிறார்… அவருக்கு ஒரு புதல்வனும் புதல்வியும் உண்டு; புதல்வி…” என்று நிறுத்தினான்.
“புதல்விக்கு என்ன?”
“ஒன்றுமில்லை எங்கள் குடும்பத்திலேயே ஒரு விசித்திரம். சிலர் ஊமையாகப் பிறப்பார்கள்; மற்றவர்கள் இனிய குரல் படைத்திருப்பார்கள்; நன்றாய்ப் பாடுவார்கள்…”
“உன் மாமனின் மகள் ஊமை இல்லையே?” என்றான் வந்தியத்தேவன்.
“இல்லை, இல்லை!”
“அப்படியானால் நன்றாய்ப் பாடக் கூடியவள் என்று சொல்லு, உன்னைக் காட்டிலும் நன்றாய்ப் பாடுவாளா?”
“அழகாயிருக்கிறது உங்கள் கேள்வி ‘குயில், காக்கையை விட நன்றாய்ப் பாடுமா?’ என்று கேட்பது போலிருக்கிறது. பூங்குழலி பாடினால், சமுத்திர ராஜா அலை எறிந்து ஓசை செய்வதை நிறுத்தி விட்டு அமைதியாகக் கேட்பார்.ஆடு மாடுகளும் காட்டு மிருகங்களும் மெய் மறந்து நிற்கும்…”
“உன் மாமன் மகளின் பெயர் பூங்குழலியா? அழகான பெயர்!”
“பெயர் மட்டுந்தானா அழகு?”
“அவளும் அழகியாகத்தான் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், நீ இவ்வளவு பரவசமடைவாயா?”
“மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப் போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்ய வேண்டும்.”
சேந்தன் அமுதனுடைய உள்ளம் சிவபக்தியிலேயே பூரணமாக ஈடுபடவில்லையென்பதை வல்லவரையன் கண்டு கொண்டான்.
“அப்படியானால் உனக்குத் தகுந்த மணப் பெண் என்று சொல்லு. மாமன் மகளாகையால் முறைப் பெண்ணுங் கூடத்தானே? கல்யாணம் எப்போது?” என்று கேட்டான் வந்தியத்தேவன்.
“எனக்குத் தகுந்தவள் என்று ஒரு நாளும் சொல்ல மாட்டேன். நான் அவளுக்கு எவ்விதத்திலும் தகுதியில்லாதவன். பழைய நாட்களிலே போலப் பூங்குழலிக்குச் சுயம்வரம் வைத்தால் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து போட்டி போடுவார்கள்! தமயந்தியை மணந்து கொள்வதற்கு வானுலகத்திலிருந்து தேவர்கள் வந்தது போல் வந்தாலும் வருவார்கள். ஆனால் இந்தக் கலியுகத்தில் அவ்விதமெல்லாம் ஒருவேளை நடவாது…”
“அப்படியானால் உன்னை மணந்து கொள்ள அவள் விரும்பினாலும் நீ மறுத்து விடுவாய் என்று சொல்லு!”
“நன்றாயிருக்கிறது; இறைவன் என் முன்னால் தோன்றி, ‘நீ சுந்தரமூர்த்தியைப் போல் இந்த உடம்போடு கைலாசத்துக்கு வருகிறாயா? அல்லது பூலோகத்திலிருந்து பூங்குழலியுடன் வாழ்கிறாயா?” என்று கேட்டால் ‘பூங்குழலியுடன் வாழ்கிறேன்’ என்றுதான் சொல்லுவேன்;
/
\
ஒரு புலவர் சிகாமணி எழுந்து நின்று, “பிரபு! உலகபுரத்தில் தங்கள் திருப்பெயரால் விளங்கும் சுந்தர சோழப் பெரும்பள்ளியிலிருந்து அடியேன் வந்தேன். சிவநேசச் செல்வராகிய தாங்கள் பௌத்த மடாலயத்துக்கு நிவந்தம் அளித்து உதவியதை இந்தத் தமிழகமெங்கும் உள்ள பௌத்தர்கள் பாராட்டிப் போற்றுகிறார்கள். தாங்கள் உடல் நோயுற்றிருப்பது அறிந்தது முதல், பிக்ஷுக்கள் மிக்க கவலை கொண்டு தங்கள் உடல் நலத்துக்காகப் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். அந்தப் பிரார்த்தனைப் பாடலை இவ்விடம் சொல்ல அருள் கூர்ந்து அனுமதி தரவேண்டும்!” என்றார்.
“அப்படியே சொல்லவேணும்; கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் சக்கரவர்த்தி.
புலவரும் பின்வரும் பாடலை இசையுடன் பாடினார்.
“போதியந் திருநிழல் புனித! நிற் பரவுதும்
மேதகு நந்திபுரி* மன்னர் சுந்தரச்
சோழர் வண்மையும் வனப்பும்
திண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே!”