தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

வீரயுக நாயகன் வேள்பாரி  Vol. 1&2
58 views
புதினம்/நாவல் > தோழமை வாசிப்பு: வேள்பாரி

Comments Showing 1-12 of 12 (12 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (last edited Oct 14, 2020 11:19AM) (new) - rated it 4 stars

Prem | 230 comments Mod
நண்பர்கள் சிலர் ஒரே நேரத்தில் வேள்பாரி புத்தகம் வாசிக்க உள்ளோம். வாசிக்கும் போதே அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, ஒருவரது வாசிப்பில் தொய்வு ஏற்படின் அவரை ஊக்கப்படுத்த இந்த தோழமை வாசிப்பு (Buddy Read) உதவியாக இருக்கும். வேள்பாரி சமகாலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சரித்திர நாவல். நீங்கள் இந்த வாசிப்பில் பங்குபெற விரும்பினால் இந்த இழையில் பதிவிடலாம். கைவசம் புத்தகம் இல்லையெனில், விகடன் இணைய தளத்தில் இக்கதையை அத்தியாயம் வரிசையாக வாசிக்கலாம். முதல் அத்தியாயம்

ஏற்கனவே வாசித்திருந்தால் உங்கள் அனுபவங்களைப் கதைக் கருவை சொல்லாத வண்ணம் இங்கே பதிவிடலாம்.


message 2: by Prem (last edited Nov 20, 2020 08:39PM) (new) - rated it 4 stars

Prem | 230 comments Mod
வேள்பாரி புத்தகம் வாசித்து முடித்து, பின் புத்தகம் பற்றிய பிற வாசிப்புகள் மற்றும் YouTube தளத்தில் காணக் கிடைக்கும் உரைகள் என கடந்த மூன்று வாரங்களாக பறம்பாகிய மெய்நிகர் உலகத்திலேயே இருந்து வருவதான நிலையில் இருக்கின்றேன். சு.வெங்கடேசன் சொல்வது போல இயற்கை-இலக்கியம்-சூழலியல் என்ற முக்கோணப் பரப்பில் கதை நகர்வதாயும், தமிழ் மரபும், அறமும், குலமும் அதன் மையக் கருத்தாக்கமுமாக இருப்பதாக உணர்கிறேன். அவ்வகையில் வேள்பாரி புத்தகத்தையும், சு.வெங்கடேசன் அவர்களையும் சிறப்பு செய்யும் விதமாக "பறம்பு மைந்தனுக்கு பாராட்டு விழா" என்ற முழு நீள நிகழ்வு காணக் கிடைக்கின்றது. சமகாலத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இத்துணை தீவிர வாசகர்களையும், இத்தகைய கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தி இருப்பது ஒரு பிரமிக்கத்தக்க நிகழ்வாக இருக்கின்றது.

சிறப்பு விருந்தினர்களான திரு. மணியன் செல்வன் (ஓவியர்), திரு. மரு. கு. சிவராமன் (சித்த மருத்துவர்), திரு. வெய்யில் (கவிஞர்), திரு. கார்க்கி பவா (விகடன் குழுமம்), திருமதி. நீலா (எழுத்தாளர், த.மு.எ.க.ச) அவர்களின் பேச்சு மற்றும் பறை இசை நிகழ்ச்சி, பரத நாட்டியம் என முதல் காணொளி (இணைப்பு) அமைந்துள்ளது.

வேள்பாரி வாசகர்களின் கவிதை வாசிப்பு மற்றும் சு.வெங்கடேசன் அவர்களுடன் கேள்வி பதில் மற்றும் அவரது உரை என இரண்டாவது காணொளி (இணைப்பு) அமைந்துள்ளது.


Prem | 230 comments Mod
வேள்பாரி தொடர் 100 வாரங்கள் வந்ததை கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்வு மற்றும் வேள்பாரி புத்தக வெளியீட்டு விழாவின் போது நடந்த நிகழ்வு இரண்டுமே முக்கியம் வாய்ந்தவை. இயக்குனர் வசந்தபாலன், பேச்சாளர் பாரதி பாஸ்கர், பேச்சாளர் பழ. கருப்பையா, மருத்துவர்-அரசியல் செயல்பாட்டாளர் தமிழிசை சௌந்தரராஜன், த. உதயசந்திரன் IAS, அரசியல் செயல்பாட்டாளர் ஸ்டாலின், அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், ஆர். பாலகிருஷ்ணன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் சு.வெங்கடேசன் அவர்கள் சிறப்பு உரையாற்றியுள்ளனர். புத்தகம் பற்றிய அறிந்த, அறியாத பல விடயங்கள் இந்த உரைகளில் கிடைக்கின்றது. புத்தகம் வாசித்தவர்கள் கண்டிப்பாக இந்த தொடர் காணொளிகளைக் காண வேண்டும்!


message 4: by Prem (last edited Nov 15, 2020 11:48AM) (new) - rated it 4 stars

Prem | 230 comments Mod
களம் என்ற இலக்கிய அமைப்பு "வேள்பாரியைக் கொண்டாடுவோம்" என்று நடத்திய நிகழ்ச்சியின் காணொளிகள் வேள்பாரி புத்தகத்தையும் அதன் வழியே வெளிப்படும் அரசியல், அறம் ஆகியவற்றைப் பற்றி பிரபலங்களின் எண்ணத்தை பதிவு செய்கிறது.

* க.துளசிதாசன் பேச்சு
* பறம்பின் அரசியல் - கரு.பழனியப்பன் பேச்சு
* சு. வெங்கடேசன் உரை
* பறம்பு பேசும் தமிழர் பண்பாடும் நாகரீகமும் - நந்தலாலா பேச்சு
* பாஸ்கர் சக்தி, மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு
* எம். பழனியப்பன் பேச்சு


message 5: by Prem (last edited Nov 20, 2020 08:02PM) (new) - rated it 4 stars

Prem | 230 comments Mod
அழியக்கூடாத மனிதப் பண்பின் பேரடையாளம்! - வீரயுக நாயகன் வேள்பாரி நூலின் முன்னுரை விகடன் இணையத் தளத்தில் இருக்கின்றது.

வேள்பாரி வாசித்தவர்களும், வாசிக்க வேண்டும் அல்லது வேண்டுமா என்று நினைப்பவர்களும் இக்கட்டுரையில் இருந்து தொடங்கலாம்!

அழியக்கூடாத மனிதப் பண்பின் பேரடையாளம்! - வீரயுக நாயகன் வேள்பாரி நூலின் முன்னுரை

கட்டுரையில் இருந்து சிறு பகுதிகள்:
* நீர் எவ்வளவு விரைவாக ஓடினாலும் மண்ணுக்குள் உறிஞ்சப்படுதல் அதன் விதி. அப்படித்தான் சங்க இலக்கியத்துக்குள் நாம் ஓடி மறைவதும்.

* இனக்குழு சமூகவாழ்வு முடிந்து, உடமைச் சமூகம் மேலெழுகின்ற காலத்தை மிகத் துல்லியமாகவும் மிக விரிவாகவும் பதிவு செய்துள்ளது சங்க இலக்கியம். எண்ணற்ற இனக்குழுக்கள், அவற்றின் அடையாளங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பேசும் சங்க இலக்கியமானது, ஒருகட்டத்தில் வேந்தர்கள், வேளிர்கள் என்ற இரு புள்ளியில் வந்து நிற்கிறது.

* இரு சமூக அமைப்புகள் (வேந்தர்கள், வேளிர்கள்), அவை உருவாக்கிய இரு வகையான விழுமியங்கள் இவற்றுக்கு இடையில், பல நூறு ஆண்டுகள் நடந்த மோதல்களைச் சங்க இலக்கியப் பரப்பெங்கும் பார்க்க முடியும். இம்முரண்பாடுகள் உக்கிரத்தோடு மோதிய நிகழ்வின் பேரடையாளம்தான் வேள்பாரி. ஒருவகையில் வேள்பாரி, சங்க இலக்கியக் காலத்தின் மையக் குறியீடு என்றே சொல்ல முடியும்.



Prem | 230 comments Mod
வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்கள்

பாகம் ஒன்று இணைப்பு
பாகம் இரண்டு இணைப்பு

வேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்

குறிப்புகள்:
* இலக்கியங்களை, ஆளும் தத்துவங்கள் தமதாக்குகின்றன. தத்துவங்களை இலக்கியங்கள் உட்செரிக்கின்றன.

* இயற்கையின் எல்லாமும் தன்னைப் போலவே ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறது என ஆதிமனிதன் நம்பினான். மேகசாஸ்திரத்தில் ஆண் மேகம், பெண் மேகம் பற்றிய குறிப்பு வருகிறது. மேகங்கள் ஒன்றினையொன்று விரட்டியும் விலகியும் கூடியும் கரைந்தும் முடிகின்றன. ஆணாகவும் பெண்ணாகவும் நிகழும் அக்கூடுகையிலேதான் மழைபொழிந்து மண் செழிக்கிறது.

* பாண்டியநாட்டு இளவரசி, வணிகர்குலத் தலைவனுக்கு மகள் என்று பெருஞ்செல்வத்தின் உச்சியிலிருக்கும் பொற்சுவை தனக்கான சுதந்திரத்தை முற்றிலுமாக இழந்து நிற்கிறாள். ஆனால், மாந்தபுல் கூரையை வியந்து பார்க்கும் மலைமகள் ஆதினி தனக்கான முழுச்சுதந்திரத்துடன் வாழ்வைத் தேர்வுசெய்கிறாள். இக்குறியீடுகளின் வழியே பெண் ஏன், எவ்வாறு அடிமையானாள் என்ற அரசியல் விளக்கத்தை முழுமையாக எழுதலாம்

* தமிழ்மரபென்பது வைதீக புராண மரபுக்கு நேரெதிரானது. அதை எழுதவேண்டியது இன்றைய அடிப்படைத் தேவையென உணர்கிறேன்.

* மரத்தின் பெயரையும் மலர்களின் பெயரையும் இழந்துவிட்ட நகரவாசிகளின் மொழியாகத்தான் இன்றைய தமிழ் இருக்கிறது.

* சங்க இலக்கியப் பதிவுகளின் வழியேயும் இன்றும் நமது சமூகத்தில் மிஞ்சியுள்ள தொல்நினைவுகளின் வழியேயும் நமது இயற்கையியல் மரபை மீட்க வேண்டியுள்ளது. அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் வேள்பாரி.

* முருகன்மீது படிந்துள்ள பிற அம்சங்களை எல்லாம் நீக்கிவிட்டு சங்க இலக்கியத்தில் உள்ள வள்ளிமுருகனை அடிப்படையாகக்கொண்டு பெருங்காவியமே எழுதலாம். வேட்டை சமூகத்துக்குள் உழவுத் தொழில் உருவாகத் தொடங்கிய காலத்தில் உருவான அழகான காதல் கதை.

* முல்லைக்குத் தேரைக் கொடுப்பது, இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுக்கும் செயலல்ல. எதன் பொருட்டும் யாதும் அலைவுறக் கூடாது எனக் கருதும் செயல். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பு.

* கதைகள் உருண்டோடும் பந்தைப் போன்றவை. ஒருமுறை உருவாக்கப்பட்டுவிட்டால் காலங்களைக் கடந்து பயணித்துக்கொண்டிருப்பவை. இலக்கியங்களாக உருமாறிய கோட்பாடுகள் எளிதில் வீழ்ச்சியடைவதில்லை!



Prem | 230 comments Mod
வேள்பாரி குறித்து இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும் சில கருத்துக்கள்:

நூல் அறிமுகம்: வீரயுக நாயகன் “வேள்பாரி” -தொகுதி 2 – பா. அசோக்குமார்
* அன்பையும், பரிவையும் பூசித்து பல்லுயிர் அறிவுடன் பல்லுயிர் ஓம்புதலையும் நீதிநெறி வழுவாமல் காக்கும் மாண்பை போதிக்கும் மாபெரும் காவியமாக இதனைக் கருதலாம் தானே!

“வீரயுக நாயகன் வேள்பாரி” | மதிப்புரை வழக்கறிஞர்.சிவக்குமார்
* குறிஞ்சி நில மக்களின் வாழ்க்கை, இயற்கை சார்ந்ததாக, அறம் சார்ந்தாக, மன்னனும் மக்களும் சமத்துவம் பேணுவதாக உள்ளது
* இயற்கையை கைகொள்ள தெரிந்த மலை மக்களுக்கு காற்றும், சிறு பூச்சிகளும், காட்டு விலங்குகளும் கூட போரில் உதவியாய் நிற்பதை ஆசிரியர் புனைவாக சொன்னாலும் இயற்கையோடு இயந்தும், அறிந்தும் வாழும் பறம்பு மக்களுக்கு இயற்கையே ஆயுதமாகவும் மாறியது ஆச்சரியமில்லை.


Prem | 230 comments Mod
கற்றது கைமண்ணளவு - வேள்பாரி
* நாம் அறியாத தகவலின் பின் ஒளிந்திருக்கும் வரலாறு கடலளவு என்பதும் அந்தக் கடலின் ஆழம் நம் கண்முன் விரியும்போது அவை பல்வேறு விதமான கொந்தளிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

வேள்பாரி – கதாபாத்திர வடிவமைப்பும், கதைக் கட்டுமானமும்
* பறம்பின் எல்லைக்குள் நுழைந்த மறுகணமே கபிலருக்குப் புரிந்து விடுகிறது அந்த நிலம் குறித்தும் அங்கு வசிக்கும் மக்கள் குறித்தும் தனக்கு எதுவுமே தெரியாது என்று. அனைத்தும் அறிந்தவன் எனும் எண்ணம் இருப்பவனால் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. தன் பலவீனத்தை உணரும் கபிலர், நொடிப்பொழுதில் அதிலிருந்து வெளியேறி தெளிந்த மனதுடன் தனக்கான கேள்விகளை கேட்கத் தொடங்குகிறார்.
* நீலனை நாம் சந்திக்கும் முதல் தருணமே அவன் படபடவென்று ஓடுகிறான், செய்ய வேண்டிய காரியங்களை சடுதியில் செய்கிறான். தன்னுடைய வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்க முடியாத கபிலர் குறித்து அவன் கூறும் “வீரர்களின் வாழ்நாள் மிகக்குறைவு, காத தூரத்தை இத்தனை நாழிகைக் கடக்க மாட்டார்கள்”, வார்த்தைகளின் மூலமே அவனுள் இருக்கும் துடிப்பை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
* இந்த நாவலில் ஒரு பகுதி மிக அழகாகக் கூறப்பட்டிருக்கும்.

வாரிக்கையன், பழையன் – முதல் தலைமுறை
தேக்கன், கூழையன் – இரண்டாம் தலைமுறை
பாரி, முடியன் – மூன்றாம் தலைமுறை
அதிரன், நீலன் – நான்காம் தலைமுறை
* வேள்பாரியில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் கற்றலும் கற்றுக்கொடுத்தலும்.


message 9: by Prem (last edited Dec 04, 2020 03:01PM) (new) - rated it 4 stars

Prem | 230 comments Mod
வேள்பாரி பற்றி எல்லா இடங்களிலும் சிறந்த கருத்துக்கள் வந்திருந்தாலும், கதை சொன்ன விதத்தில் ஒரு எதிர்மறை விமர்சனம் ஒன்றையும் பதிவிடுகின்றேன். மதிப்புரை வழங்கியவர் விஜய் ராகவன்

இந்த மதிப்புரையில் கூறியுள்ளது போலவே, வேள்பாரியின் கதை மாந்தர்கள் முழுவதுமாக கருப்பு (வேந்தர்கள்) வெள்ளை (வேளிர்கள்) பாத்திரங்களே என்று சொல்லப்படுவதை நானும் ஏற்க மறுக்கின்றேன். முடிவில் இது ஒரு வரலாற்று நாயகனை கதைநாயகனாக மட்டும் பார்க்க வேண்டும் என்பதிலும், பல ஆண்டுகள் கடந்து விட்ட ஒரு நிகழ்வை மீள் உருவாக்கும் செய்யப்படும் போது, இவர்கள் நல்லவர்கள், இவர்கள் தீயவர்கள் என்ற நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என்பதையும் கற்றுக் கொள்ள தலைப்படுகின்றேன்.

தமிழ் ஆர்வலர் KRS கூறுவது போல - கீச்சு
"எப்போது.. "பிரமிப்பு" மனப்பான்மை வந்துவிடுகிறதோ.. அப்போதே.. வரலாறாக இல்லாமல், மனப் பிடித்தங்களே படிக்கத் தலைப்பட்டு விடுகிறோம்:))"

அவரே இதையும் கூறுகிறார். கீச்சு
* விகடன் வேள்பாரி:
கதை= 60%, வரலாறு= 40%. நாகர்கள் பற்றிய பல சுவைக்குறிப்பும்= கதையே!

சில பகுதிகள்:
* 2000 ஆண்டுகளுக்குண்டான வரலாற்றுத் தொடர்ச்சியின் கருப்பொருளை கலையாக்குவது மலைப்பான முன்னெடுப்பு. உள் நுழையும் பொழுதே பறம்பு நமை வாரி அணைத்துக் கொள்கிறது. தாய் நிலம் சென்றதைப் போன்றோர் பெரும் மகிழ்வு நம்முடனேயே பயணிக்கிறது.
* தமிழ்ப்பெரும் நிலத்தின் தனித்த அடையாளமாய் காலங்கள் கதை சொல்லும் மூவேந்தர்கள் சூழ்ச்சிக்காரர்களைப் போல் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு, நர வேட்டைக்காரர்கள் போல் ஒருங்கே முகப்படுத்தப்படுகிறார்கள்.
* "வேந்தர்கள் எதைச் செய்தாலும் அது இயற்கைக்கும் மனிதருக்கும் எதிரானது" என்று கூறுவது பாரியா அல்ல பாரியை வைத்து கூற விழைவது ஆசிரியரா?


message 10: by SP (new)

SP Harish | 2 comments வணக்கம். சு வெங்கடேசனின் நூல்கள் கிண்டிலில் கிடைக்குமா?


Udhayakumar Tamileelam  (udhaya93) | 3 comments வேள்பாரி தவிர்த்து காவல்கோட்டம் மற்றும் அலங்காரப்பிரியர்கள் கிண்டிலில் கிடைக்கும் என நம்புகிறேன்


message 12: by Prem (new) - rated it 4 stars

Prem | 230 comments Mod
@SP - இந்த இணைப்பில் amazon தளத்தில் கிடைக்கும் சு. வெங்கடேசன் அவர்களின் புத்தகங்கள் சில உள்ளன.


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread