ஒரு படம் உங்களுக்கு பிடித்திருப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். அது ரசனை சார்ந்தது. ரசனை தனியுரிமை சார்ந்தது. அதனால் அதை குறித்து எந்த விமர்சனமும் இங்கு பேசப்போவதில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கும் படத்தில் நிறைய குறைகள் உண்டு. படத்தில் நிறைகள் குறைகள் அவரவர் பார்வைக்கேற்ப கூடக்குறைய இருக்கும். படத்தில் குறியீடு, மகாபாரத உள்ளர்த்தம் என்றெல்லாம் போகாமல், படத்தினால் பொதுவெளியில் உண்டாகியிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில் மட்டுமே இந்த எழுத்தை அணுகியிருக்கிறேன். இந்த படம் வந்ததிலிருந்து என்னை சுற்றி சுற்றி வந்த பல கருத்துக்களால், அது உண்டாக்கிய மனஉளைச்சலால் எழுதினால் நிம்மதி என்பது போலிருந்தது. பெரிய எழுத்தாளுமைகள், இயக்குனர்கள் எல்லாம் எதிர்மறை எண்ணங்கள் பேசும்போது, என்னுடைய பார்வையை எழுத அதிகம் தயங்கி தயங்கி கூச்சத்துடனேயே எழுதியிருக்கிறேன். என் நெருங்கிய நட்பு வட்டாரத்தில், பெரும் அறிவு கொண்ட நண்பர்களுக்கு வாசிக்க கொடுத்தபோது இன்னும் அதிக பயம் உண்டானது. இதை பதிவேற்ற பலமுறை யோசித்தேன். கையறுநிலையில் நின்றிருந்த நாளொன்றில், பெரும் பாரம் அழுத்த, தொடர்ந்து பன்னிரண்டு மணிநேரம் எழுதிக்கொண்டே இருந்தேன். இதுவரை அப்படி ஒரு அனுபவம் எனக்கு நிகழாதிருந்ததால் மனதிற்கு நெருக்கமாகி போனது இந்த பதிவு என்பதனாலும், மற்றும், குறைந்த அறிவும் அனுபவமும் இருக்கிற என் பார்வையை புரிதலை வெளியே சொல்வது, எனக்கு கற்றுக்கொள்வதற்கான புள்ளியை உண்டாக்கும் என்பதனாலும் இதை பதிவேற்ற முடிவுசெய்தேன். மிகமிக குறைந்த அறிவு இருந்த போதிலும், மிகமிக அதிக மனஉளைச்சல் இருந்ததால் எழுதுகிறேன். பணிவோடும் இல்லாமல் துணிவோடும் இல்லாமல், அன்போடு கருத்துக்களை முன்வைக்கிறேன்!
'கர்ணனும் நானும்' இந்த புத்தகம் அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது.
நண்பர்கள் வாசிக்கலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B094XXXR9N/