தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

வெண்முரசு [Venmurasu]
36 views
புதினம்/நாவல் > வெண்முரசு வாசிப்பை தொடங்குதல்!

Comments Showing 1-9 of 9 (9 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (last edited Jan 21, 2024 05:49PM) (new)

Prem | 230 comments Mod


எழுத்தாளர் ஜெயமோகன் பத்து வருடங்களுக்கு முன்பு (2014 ஜனவரி 1) நாள் ஒன்றுக்கு ஒரு அத்தியாயம் வீதம் "வெண்முரசு Venmurasu " என்று மகாபாரதக் கதையை மீட்டுருவாக்கம் செய்து, நாவல் வரிசையாக எழுதத் தொடங்கினார். "ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள் பத்து வருடங்கள்" எனத் தொடங்கிய எழுத்து, இருபத்திஆறு நாவல்கள், இருபத்தி இரண்டாயிரம் பக்கங்கள் என வளர்ந்து, ஆறு வருடங்களில் நிறைவு செய்தார். இத்தகைய எழுத்து வேகத்துடன், தரத்தில் சிறிதும் குறைவில்லாத அளவில் படைப்பது என்பது அசாத்தியமான சாதனை! கடந்த ஒரு வருடமாக வெண்முரசு வரிசையில் ஆறு புத்தகங்களை வாசித்து முடித்திருக்கும் இவ்வேளையில், பத்து ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் விதமாக இந்த நாவல் வரிசையை முன்னிட்டு இதை எப்படி வாசிப்பது, அணுகுவது என்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் (https://www.jeyamohan.in/) வந்த பதிவுகள் கொண்டு கோடிட்டு காட்ட இந்த இழையைத் தொடங்குகின்றேன். இந்த நாவல் வரிசையை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு இது ஒரு தொடக்கமாகவும், எனக்கும் இவ்வரிசையை தொடர்ந்து வாசிக்க ஊக்கமாகவும் இருக்கும் என நம்புகிறேன். நாவல் வரிசையின் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு இழை தொடர வேண்டும் (முதற்கனல், நீலம் இரு புத்தகங்களுக்கு ஏற்கனவே இழைகள் தொடர்ந்துள்ளேன்) என்ற பேராசையும் இதில் அடக்கம். ஆர்வமுள்ள வாசகர்கள் தங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம்.


message 2: by Prem (new)

Prem | 230 comments Mod
வெண்முரசு மொத்த தொகுப்பான 26 புத்தகங்களும் இணையத்தில் இலவசமாக வாசிக்கக் கிடக்கின்றன. ஓவியர் ஷண்முகவேல் வரைந்த, வடித்த படங்களுடன் அவற்றை இணையத்திலேயே வாசிக்க முடியும்!

இணைப்பு: https://venmurasu.in/

"வாசிப்பை நேசிப்போம்" என்னும் FaceBook குழுமம் நாளுக்கு ஒரு அத்தியாயம் என்று குழுவாக வெண்முரசு நாவல் வரிசையை வாசிக்கவுள்ளதாக தெரியப்படுத்தி உள்ளனர் (https://www.jeyamohan.in/195967/). இந்த இழையைத் தொடர உந்துதலாக இருந்த பதிவும் அதுவே. அத்தியாயத்தின் முடிவில் இணையவழி கலந்துரையாடல், ஒவ்வொரு புத்தகத்தின் முடிவிலும் வாசர்களின் வாசிப்பனுபவக் கட்டுரை என உத்வேகமளிக்கக் கூடிய பதிவாக இருந்தது.

அவர்கள் பதிவில் இருந்து -
"ஐந்தாண்டுகள் திட்டம். இதற்கு முன்பு தமிழ் வாசிப்புலகில் இப்படி முழுமையாக வெளியான புதினத்தை இத்தனை ஆண்டுகள் திட்டமிட்டு குழுவாக இணைந்து யாரேனும் வாசித்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை."

ஜெயமோகன் அவர்களின் பதில்:
"சிறந்த முயற்சி. கூட்டு வாசிப்பு என்பது நான் தொடர்ச்சியாகப் பரிந்துரை செய்து வருவது. அது பலகோணங்களிலானான வாசிப்பை முன்வைத்து ஒவ்வொரு தனிமனிதரின் வாசிப்பையும் மேம்படுத்துகிறது. கூட்டாக வாசிப்பு நிகழ்வதனால் வாசிப்புக்கான ஒரு தொடர்ச்சி நிகழ்கிறது. எதிர்மறை மனநிலையும் கசப்பும் நிறைந்த இன்றைய சூழலுக்கு மாற்றாக ஆரோக்கியமான உளநிறைவூட்டும் ஒரு நிகழ்வாகவும் ஆகிறது"

ஆர்வமிருப்பவர்கள் தொடர்பிற்கு:
கதிரவன் இரத்தினவேல்
(ஒருங்கிணைப்பாளர் – வாசிப்பை நேசிப்போம் குழுமம்)
+91 96008 91269


message 3: by Prem (last edited Jan 24, 2024 01:46PM) (new)

Prem | 230 comments Mod
வெண்முரசு நாவல் வரிசை - அறிமுகக் குறிப்புகள்

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் அவர்கள் வெண்முரசு தொடர்பான பல பதிவுகள் எழுதி உள்ளார். வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள ஒவ்வொரு புத்தகத்திற்கும் இரண்டு வரிகளுக்குள் அவர் எழுதிய அறிமுகக் குறிப்புகள், வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். இணைப்பு: https://sureshezhuthu.blogspot.com/20...

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்
வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல் by Jeyamohan

அஸ்தினபுரியின் அரசனாக பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காக காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும், பீஷ்மரை அம்பை சபிப்பதும், அம்பிகைக்கு திருதராஷ்டிரரும், அம்பாலிகைக்கு பாண்டுவும் பிறப்பது வரையிலான நிகழ்வுகள் நாவலில் இடம்பெறுகின்றன.

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்
வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல் by Jeyamohan

திருதராஷ்டிரர் காந்தாரியை மணமுடிப்பதும் குந்தி பாண்டுவை மணப்பதும் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டுவை மணப்பதற்கு முன் குந்திக்கு கர்ணன் பிறப்பதும் மணமுடித்த பிறகு குந்திக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் பிறப்பதும் மாத்ரிக்கு நகுல சகதேவர்கள் பிறப்பதும் திருதராஷ்டிரருக்கு துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறப்பதும் நாவலில் வருகின்றன. பாண்டுவுடன் வனவாசம் சென்ற குந்தி சிறுவர்களான பாண்டவர்களை அழைதுதுக் கொண்டு அஸ்தினபுரி வருவதுடன் இந்நாவல் நிறைவுபெறுகிறது.

வெண்முரசு – 03 – நூல் மூன்று – வண்ணக்கடல்
வெண்முரசு – 03 – நூல் மூன்று – வண்ணக்கடல் by Jeyamohan

பாண்டவர்களின் கௌரவர்களின் இளமைக்காலத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. துரோணரை துருபதன் வஞ்சிக்கிறார். துரோணர் அர்ஜுனனுக்கு ஆசிரியராவதும் கௌரவர்கள் பீமனுக்கு நஞ்சூட்டுவதும் நிகழ்கின்றன. இந்த நாவல் இளநாகன் என்ற தமிழகப் பாணனின் வழியாக சொல்லப்படுகிறது.

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்
வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம் by Jeyamohan

நீலம் மகாபாரத வரிசையில் இருந்து விலகி பாகவத மறு ஆக்கமாக அமைகிறது. கிருஷ்ணனின் இளமைக் காலத்தை ராதையின் வழியாகச் சொல்கிறது. கவித்துமான நடை கொண்ட ஆக்கம்.

வெண்முரசு – 05 – நூல் ஐந்து – பிரயாகை
வெண்முரசு – 05 – நூல் ஐந்து – பிரயாகை by Jeyamohan

துரோணரின் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று சிறைபிடிக்கின்றனர். கிருஷ்ணன் தன் நாட்டினை மீட்க தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறான்.துருபதன் தவம் இயற்றி திரௌபதியை பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக்கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்கு செல்கின்றனர். அங்கு பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியை பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் பிரயாகை நிறைவுறுகிறது.

[தொடரும்]


message 4: by Prem (last edited Jan 24, 2024 01:44PM) (new)

Prem | 230 comments Mod
வெண்முரசு – 06 – நூல் ஆறு – வெண்முகில் நகரம்:
வெண்முரசு – 06 – நூல் ஆறு – வெண்முகில் நகரம் by Jeyamohan

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகை முற்றுகிறது. அவர்களுக்கு இடையேயான பிரிவினை முற்றி இந்திரபிரஸ்தம் என்ற நகரை பாண்டவர்கள் அமைக்கின்றனர். கிருஷ்ணனின் துவாரகையையும் இந்த நாவல் விவரித்துச் செல்கிறது.

வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம்:
வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம் by Jeyamohan
இந்நாவலும் மகாபாரதத்தின் மையக் கதையில் இருந்து விலகி கிருஷ்ணன் மணமுடிக்கும் அரசிகள் வழியாக நகர்கிறது.

வெண்முரசு – 08 – நூல் எட்டு – காண்டீபம்:
வெண்முரசு – 08 – நூல் எட்டு – காண்டீபம் by Jeyamohan
இந்திரபிரஸ்தம் அமைக்கப்பட்ட பிறகு அர்ஜுனன் யாத்திரை புறப்படுவதை இந்நாவல் விவரிக்கிறது. உலூபி, சித்ராங்கதை ஆகியோரை அர்ஜுனன் மணப்பதை சித்தரிக்கும் இந்த நாவல் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையை மணப்பதுடன் நிறைவடைகிறது. சமண சமயத்தின் தோற்றம் குறித்த சித்தரிப்புகள் நாவலில் உள்ளன.

வெண்முரசு – 09 – நூல் ஒன்பது – வெய்யோன்:
வெண்முரசு – 09 – நூல் ஒன்பது – வெய்யோன் by Jeyamohan

கர்ணனின் அங்க தேசத்தையும் அவன் மனைவியருடனான அவன் வாழ்வு குறித்தும் இந்நாவல் பேசுகிறது. துரியோதனன் இந்திரபிரஸ்தத்தின் பளிங்கு மாளிகையில் தடுமாற்றம் கொள்வதும் அவன் பாண்டவர்களின் மீது வஞ்சம் கொள்வதும் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.

வெண்முரசு – 10 – நூல் பத்து – பன்னிரு படைக்களம்:
வெண்முரசு – 10 – நூல் பத்து – பன்னிரு படைக்களம் by Jeyamohan

சேதிநாட்டு அரசன் சிசுபாலன் கிருஷ்ணனாலும், மகதத்தின் அரசான் ஜராசந்தன் பீமனாலும் கொல்லப்படுவதை சொல்கிறது. யுதிஷ்டிரன் நாற்கள விளையாட்டில் இந்திரபிரஸ்தத்தை இழக்கிறார். திரௌபதியின் துகிலுரிதலுடன் இந்த நாவல் நிறைவு பெறுகிறது.

[தொடரும்]


message 5: by Prem (last edited Jan 24, 2024 05:58AM) (new)

Prem | 230 comments Mod
வெண்முரசு – 11 – நூல் பதினொன்று – சொல்வளர்காடு
வெண்முரசு – 11 – நூல் பதினொன்று – சொல்வளர்காடு by Jeyamohan

பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்லும் நாவல். நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு பிழைப்பதுடனும் யுதிஷ்டிரன் தன் மெய்மையை கண்டடைவதுடன் நாவல் முடிகிறது.

வெண்முரசு – 12 – நூல் பன்னிரண்டு – கிராதம்
வெண்முரசு – 12 – நூல் பன்னிரண்டு – கிராதம் by Jeyamohan

இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான போரினை ஒரு இழையாகவும் சைவ நெறிகளை மறு இழையாகவும் இந்த நாவல் பின்னுகிறது. அர்ஜுனன் பாசுபதத்தை அடைவதுடன் நாவல் நிறைவேறுகிறது.

வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர்
வெண்முரசு – 13 – நூல் பதின்மூன்று – மாமலர் by Jeyamohan

பீமன் திரௌபதிக்காக கல்யாண சௌந்திக மலரை தேடிச்செல்லும் பயணம் இந்த நாவலில் உள்ளது. இணையாக யயாதியின் கதை தேவயானி மற்றும் சர்மிஷ்டையின் வழியே சொல்லப்படுகிறது.

வெண்முரசு – 14 – நூல் பதினான்கு – நீர்க்கோலம்
வெண்முரசு – 14 – நூல் பதினான்கு – நீர்க்கோலம் by Jeyamohan

பாண்டவர்களும் திரௌபதியும் விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்வதை இந்த நாவல் சித்தரிக்கிறது. இணையாக நளன் தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது.

வெண்முரசு – 15 – நூல் பதினைந்து – எழுதழல்
வெண்முரசு – 15 – நூல் பதினைந்து – எழுதழல் by Jeyamohan

உப பாண்டவர்கள் மற்றும் உப கௌரவர்களைப் பற்றிய சித்தரிப்புகள் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான பகை முற்றி போரை நோக்கிச் செல்கிறது.

[தொடரும்]


message 6: by Prem (last edited Jan 25, 2024 02:32PM) (new)

Prem | 230 comments Mod
வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல்
வெண்முரசு – 16 – நூல் பதினாறு – குருதிச்சாரல் by Jeyamohan
போரினை தடுப்பதற்காக பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணன் துரியோதனனிடம் தூது செல்வது பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் மனைவியர் வழியே சொல்லப்படுகிறது.

வெண்முரசு – 17 – நூல் பதினேழு – இமைக்கணம்
வெண்முரசு – 17 – நூல் பதினேழு – இமைக்கணம் by Jeyamohan
இந்த நாவல் கீதையின் மறு ஆக்கம். மகாபாரத மாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாக கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விவரிக்கப்படுகின்றன. கீதையைப் போலவே இந்த நாவலும் ஒரு மாயவெளியில் நடைபெறுகிறது.

வெண்முரசு – 18 – நூல் பதினெட்டு – செந்நா வேங்கை
வெண்முரசு – 18 – நூல் பதினெட்டு – செந்நா வேங்கை by Jeyamohan
குருஷேத்திர போர் நடைபெறுவது உறுதியான பிறகு பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் தரப்புக்கு வலு சேர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் பேரங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. நாவலின் இறுதியில் குருஷேத்திரப்போர் தொடங்குகிறது.

வெண்முரசு – 19 – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்
வெண்முரசு – 19 – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் by Jeyamohan
குருஷேத்திர களத்தில் பீஷ்மர் நிகழ்த்தும் அழிவுகளும் அவரது வீழ்ச்சியும் நாவலில் இடம்பெறுகிறது.

வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல்
வெண்முரசு – 20 – நூல் இருபது – கார்கடல் by Jeyamohan
துரோணரின் மரணம் வரையிலான குருக்ஷேத்திர போர் இந்த நாவலில் இடம்பெறுகிறது.

[தொடரும்]


message 7: by Prem (new)

Prem | 230 comments Mod
வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி by Jeyamohan

துரோணரின் மரணத்துக்குப் பிறகு கர்ணன் கௌரவரப் படைக்குத் தலைமை ஏற்பதும் கர்ணன் அர்ஜுனனால் கொல்லப்படுவது வரையிலான நிகழ்வுகளும் நாவலில் இடம்பெறுகின்றன.

வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை
வெண்முரசு – 22 – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை by Jeyamohan

இந்த நாவலுடன் பாரதப்போர் நிறைவடைகிறது. துரியோதனனின் மரணம் மற்றும் பாண்டவ மைந்தர்கள் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனால் தீயிட்டுக் கொல்லப்படுவதில் முடிகிறது.

வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்
வெண்முரசு – 23 – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் by Jeyamohan

பாண்டவர்கள் இறந்துபோன கௌரவர்களுக்கும் தங்கள் மைந்தர்களுக்கும் நீர்க்கடன் செய்வது வரையிலான நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.

வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை by Jeyamohan

பாரதப்போரை வென்ற பிறகு அஸ்தினபுரி மெல்ல நிலைமீள்வதையும் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய நாடாக உருவெடுப்பதையும் இந்த நாவல் சித்தரிக்கிறது.

வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை
வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை by Jeyamohan

கிருஷ்ணனின் மைந்தர்கள் தங்களுக்குள்ளாக போரிட்டுக்கொண்டு அழிவதையும் துவாரகையின் வீழ்ச்சியையும் சொல்கிறது. கிருஷ்ணனின் மரணத்துடன் நாவல் முடிகிறது.

வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண்
வெண்முரசு – 26 – நூல் இருபத்தியாறு – முதலாவிண் by Jeyamohan

வெண்முரசின் இறுதி நாவல் முதலாவிண். பாண்டவர்களின் வானப்பிரஸ்தத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது.


message 8: by Prem (new)

Prem | 230 comments Mod
வெண்முரசு நாவல் தொடர் வாசிப்பைத் தக்க வைக்க அந்நாவல் தொடர்பான பதிவுகள் வாசிப்பதுண்டு. அப்படிப்பட்ட பதிவுகளில் எனக்கு முக்கியம் என்று தோன்றுபவற்றை இங்கே குறித்துக் கொள்கிறேன்!

வெண்முரசு: வினாக்கள்-1 (https://www.jeyamohan.in/138417/)

* வெண்முரசு நாவல் நடக்கும் காலம் ஒரு பழமையான காலம். உண்மையில் நடந்ததா இல்லை, வழி வழியாக வந்த கதையா என்பதும் தெரியாது. அப்படி இருக்கும் ஒரு கதையில் உவமைகள் எப்படி கையாளப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு எழுத்தாளர் ஜெமோ அளிக்கும் விடை இந்தப் பதிவில் உள்ளது.

வெண்முரசு நவீனத்துவத்திற்கு முந்தைய செவ்வியல்மரபின் அழகியலை நவீனத்துவத்திற்கு பிந்தைய மீளுருவாக்க முறைப்படி படைப்பாக ஆக்கியிருக்கிறது. அதில் எவரும் காணமுடியாத புறவுலகுகள் வருகின்றன. அதீத அகநிலைகள் வெளிப்படுகின்றன. அவற்றை படிமங்கள் வழியாகவே சொல்லமுடியும். படிமங்களை புனைவுப்பரப்பில் நிறுத்துவதற்கு உகந்த வழி என்பது உவமையாக அவற்றை முன்வைப்பதுதான்.

* வெண்முரசில் எந்த வகையான தத்துவம் இடம்பெறுகிறது என்பது பற்றி கேள்விக்கு பின்வரும் பதில் தருகிறார்:

மகாபாரத காலத்தில் என்ன இருந்தது என நமக்குத்தெரியாது. தெரிந்தாலும் அதை அப்படியே திரும்ப உருவாக்க இன்று ஒரு நவீனநாவலை எழுதவேண்டியதில்லை. இன்று ஒரு நவீனநாவல் எழுதப்படுவதென்பது இன்றைய அழகியலைக்கொண்டுதான். இன்றைய தத்துவ, அற, சமூகக் கேள்விகளை ஆராய்வதற்காகத்தான்.

ஆனால் இன்றைய நோக்கில் நேற்றின்மேல் விமர்சனம் வைப்பது அல்ல நான் உத்தேசிப்பது. இன்றைய தேடல்களுக்கு மரபிலிருந்து ஆழ்படிமங்களை எடுத்துக் கையாள்வதும் மறுஆக்கம் செய்வதும்தான். வெண்முரசு பேசுவது அன்றையவாழ்க்கையை அல்ல, இன்றுள்ள வாழ்க்கையை. அன்றைய சூழலில் இன்றைய வாழ்க்கையை எழுதும்போது என்றுமுள்ள உணர்வுகளும் சிந்தனைகளும் மட்டுமே பேசப்படும் வாய்ப்பு அமைகிறது.



message 9: by Prem (new)

Prem | 230 comments Mod
வெண்முரசு: வினாக்கள்-2 (https://www.jeyamohan.in/138421/)

* மகாபாரதம் குறித்த உங்கள் ஒட்டு மொத்த ஞானத்தையும் வெண்முரசு மூலமாக பகிர்ந்து முடித்து விட்டதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு எழுத்தாளர் ஜெமோவின் விடை சிந்திக்க வைக்கக் கூடியது. எல்லா கதைகளும் எழுதியது போக சிந்தனையைத் தூண்டவேண்டும். அப்படி தூண்டவில்லை எனில் அப்படைப்பின் தரத்தை எப்படி அளவிடுவது?

நான் மகாபாரதத்தை ஒரு ஆழ்படிமத் தொகை என்றே பார்க்கிறேன். நம் இன்றைய பண்பாட்டை விழிப்புநிலை மனம் என்றால் மகாபாரதம் ஆழ்நிலையில் இருக்கும் கனவுமனம்.

அந்த ஆழ்படிமங்களைக்கொண்டு நான் ஓர் உலகை உருவாக்கினேன். அதில் என் வினாக்களை உசாவிக்கொண்டு பயணம் செய்தேன். அந்த படிமங்கள் இன்னொருவருக்கு இன்னொருவகையில் பொருள்படலாம். எனக்கே மீண்டும் புத்தம்புதியவடிவில் பொருள் அளிக்கலாம்.

எவரும் ஆழ்மனதை, கனவுலகைச் சொல்லி முடிக்கமுடியாது.


* வெண்முரசில் மற்றும் மகாபாரதத்தில் தென்னிந்தியாவின் பங்கு பற்றிய கேள்விக்கு

மகாபாரதம் சென்ற இரண்டாயிரமாண்டுகளில் தென்னகத்தில் பேருருவம் கொண்டிருக்கிறது. தென்னக மொழிகளில் எல்லாமே மகாபாரத மறுஆக்கங்களும், மகாபாரதத்தை ஒட்டிய காவியங்களும், மகாபாரதத்தை நிகழ்த்தும் கலைகளும் செழித்துள்ளன.

சொல்லப்போனால் மகாபாரதம் வாழ்வதே தெற்கேதான். அதன் முழுமையான சுவடிகள் கிடைத்ததே தெற்கில்தான் கேரளத்தில் குறிப்பாக. தென்னகத்தின் ஐந்து ஆசாரியார்களும் அதை மூலநூல் என்கிறார்கள்.சங்கர,ராமானுஜர், மத்வர்,நிம்பார்க்கர், வல்லபர். அவர்கள்தான் மகாபாரதத்தை ஐந்தாம்வேதநிலைக்கு கொண்டுசென்று வைத்தவர்கள். அதை ஒரு பொதுமக்களியக்கமாக ஆக்கியவர்கள்.

ஆகவே தெற்கு மகாபாரதத்திற்கு உரியது. அதைத்தவிர்த்து இன்று எழுதமுடியாது,கூடாது.தென்னகத்தில் மகாபாரதம் தமிழ்செய்தவர்கள் எல்லாமே தென்னகநிலத்தை உள்ளே கொண்டுசென்றிருக்கிறார்கள். தென்னகத்தின் நாட்டார் தொன்மங்கள் மகாபாரதத்தில் நுழைந்துள்ளன. அவர்களின் வழியே என்னுடையதும்.


* மகாபாரதத்தில் உள்ள அறம் , வெண்முரசில் உள்ள அறம் என்ற கேள்வி. இது ஒரு பத்தியில் அடங்குவதல்ல எனினும் மேலோட்டமாக ஜெவின் இப்பதிலை பார்க்கலாம்.

வெண்முரசு குலக்குழு அறத்தையும், பழங்குடி அறத்தையும் சென்றகாலத்தையதாகவே காண்கிறது.ஆகவே அதை அப்படியே முன்வைக்கிறது. இன்றைய சமூகவியல்- அறவியல் நோக்கில் அதெல்லாம் இயல்பான வரலாற்றுநிகழ்வுகளே என உணர்கிறது

மகாபாரதம் பாரதவர்ஷத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறது. அறம், தத்துவம்எல்லாமே பாரதவர்ஷத்தினரைக் கருத்தில்கொண்டே பேசப்படுகிறது. வெண்முரசு தத்துவ- ஆன்மிக நோக்கிலேயே அறத்தை அணுகுகிறது. என்றுமுள அறம் என்ன, அதன் மானுடப்பொதுவான கூறுகள் என்ன என்று அது பார்க்கிறது. இது இன்று உருவாகி வந்துள்ள உலகளாவிய நோக்கின் விளைவு என்று சொல்லலாம்



back to top