Mathavaraj's Blog

October 13, 2026

ஹபீபி


பார்வையாளர்களும் அந்த வீட்டின், தெருவின்,சமூகத்தின்மனிதர்களாகி அவர்களின் சந்தோஷத்தை, வலியை, துக்கத்தை, காதலை, பயணத்தை, மரணத்தை அறியவும் உணரவும் வைத்த படம் ஹபீபி. ஒரு பெரும்வாழ்வின் அனுபவத்தைத் தந்திருக்கிறது. மிக இயல்பாக உள்வாங்கிக் கொள்ளமுடிந்திருக்கிறது.  

எண்பதுகளிலிருந்து இன்று வரையிலான கதைவெளியின்நிலப்பரப்பில் நிகழும் மாற்றங்களை மேலிருந்தும், மனிதர்களிடம் நிகழும்மாற்றங்களை கீழிருந்தும் நல்ல கதையோடு சுவாரசியமாகவும், அழுத்தமாகவும்காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

ரேடியோவில் பாடலைக் கேட்டுக்கொண்டே காதல் கொண்டகண்களோடு புதிதாக கல்யாணமான ஷேக்கும் அவனது மனைவியும் தறி நெய்யும் காட்சி அவ்வளவுஅழகானது. அப்படி நெய்யப்பட்ட இழைகளுக்கு இடையே நெருக்கமில்லாமல் போக, அந்தத் துணிசந்தையில் மதிப்பில்லாமல் போவது எவ்வளவு அவலமானது. உயிர்த்துடிப்பு மிக்க இந்தஇழைகளால் அந்த மக்களின் வாழ்வை எல்லோருக்கும் நெருக்கமானதாக நெய்திருக்கிறார்இயக்குனர் மீரா கதிரவன்.  

தறியின் சத்தத்தோடு அந்த வீட்டில் பிறந்துவளர்ந்த யூசுப், தறிச்சத்தம் நின்று போன வீட்டில் பிறகொருநாள். இறந்துபோகிறார். வீட்டில் அந்தத் தறியின் குழியை மூடும் தருணத்தை தாங்க முடியவில்லை.யூசிப்பின் ஆகிருதியை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கஸ்தூரி ராஜா.  

சொல்வதற்கும் பகிர்வதற்கும் நிறைய இருக்கின்றன.முக்கியமாக மூன்று பெண்கள் கேட்கும் கேள்விகளைச் சொல்ல வேண்டும். அவைகளிலிருந்துகாட்சிகளும், உரையாடல்களும் கோர்வையாகவோ, துண்டு துண்டாகவோ மீண்டும்மீண்டும் நினைவில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.  

“எனக்காக நீ பேசினாயா?’ என்று பர்வீன் கேட்கிறாள்.வளர்ந்து பெரியவனான அபுதாஹிர், தன்னை மணக்க சம்மதித்த, முற்போக்கு சிந்தனைகொண்டவளான, பர்வீன் முன் அப்போது தலைகுனிந்து நிற்கிறான். அதேஅபுதாஹிர்தான் இளம் வயதில், தான் நேசித்த நிலோபருக்காக யோசித்துப் பேசி, திருடனாகிஅவமானப்பட்டவன். காலம் எளிய மனிதர்களை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது, மனதின்நுட்பங்களை இழக்கச் செய்கிறது என்பதை காட்டிச் செல்லும் இடம் அது.  

தனது நகைகளை எல்லாம் அபுதாஹிர் முன் கொட்டிஅவனது சித்தி, “இதுதான் எனது சந்தோஷம் என நீ நினைக்கிறாயா?” என கேட்கிறாள்.சம்பாத்தியத்துக்காக வெளிநாடு சென்றவர்களின் வாழ்க்கைத் துணைகளின் இழப்புகளைப்பேசும் இடம் அது. முன்பு வெளிநாட்டிலிருந்து வந்த தன் கணவன் ஷேக் கொண்டு வந்தசெண்ட்டில் அவனது மணத்தை தேடியவள் அவள்.  

“உன் குரல் எவ்வளவு அழகாய் இருக்கிறது? “ என அபுதாஹிர்சிலிர்த்துப் போய் நிற்கும்போது, “நான்கு சுவர்கள் இருந்தால் வீடாகி விடுமா?” என்று நிலோபர்அவனிடம் கேட்கிறாள். அபுதாஹிர் வெறித்திருக்கிறான். நிலோபரின் குழந்தைகள் மிகஇயல்பாக வெளியே விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். படம் அங்கே முடிவடைகிறது. மொத்தப்படத்தையும் இயல்பாக வந்து தோளில் தாங்கிக் கொள்கிற இடம் அது.  

சிரிக்க, ரசிக்க, நெகிழ, பகிர என படம்முழுக்க எவ்வளவோ காட்சிகளும், உரையாடல்களும், இசையும் காணக் கிடக்கின்றன.  

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, பெரும்பாலும்முஸ்லீம் மக்களை, பிரித்து, எதிரே நிறுத்தி, மற்றவர்களாக சித்தரித்து வந்த சினிமாவில்,எல்லோரோடும்நிறுத்தி, எல்லோரையும் போல அவர்களையும் சித்தரித்திருக்கிறார்கள்.முக்கியமான படம்.

இயக்குனர் மீரா கதிரவனுக்கும், படக்குழுவினருக்கும்பாராட்டுகளும், நன்றிகளும்.  

தமிழ் சமூகத்தில் ஹபீபி போன்று முழுக்க இஸ்லாமியமக்களின் வாழ்வியலை பேசுவதற்கு, தமிழ் சினிமாவுக்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகள்தேவைப்பட்டிருக்கிறது. அந்த உண்மையையும் தோண்டியெடுத்து, சமூகத்தை குற்ற உணர்க்குள்ளாக்கிறது ஹபீபி.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2026 06:05

October 11, 2026

நூறு சாமி


பொதுவெளியில் பேசுவதற்கு தயங்கும் ஆண் பெண் உறவு குறித்த ஒரு விஷயத்தை போகிறபோக்கில் நாகரீகமாகவும், அழகாகவும், ஜனரஞ்சகமாகவும் காட்சிப்படுத்தி உரையாடிஇருக்கிறார் இயக்குனர் சசி. அப்படியொரு ஆச்சரியம்தான் இந்த படம்.  

கணவனை இழந்த - வளர்ந்த  இரண்டு ஆண்களின் தாயாக இருக்கும் – ஒரு பெண் தனக்கென்று ஒருஆண் இணை தேவை என்பதை உணர்கிறாள். உள்ளுக்குள் புதைத்துக் கொள்ளாமல், அவளே வெளிப்படுத்தவும் செய்கிறாள்.  

வளரிளம் பருவத்து மூத்த மகன் அதனை நினைத்துப் பார்க்கக் கூட முடியாமல் வெறுத்துஒதுங்குகிறான். கல்லூரி முடித்து, சொந்தமாய் வேலை தொடங்கும் தருணத்தில்அம்மாவின் நியாயத்தைப் புரிந்து கொள்கிறான். தன் அம்மாவிடம் அதுகுறித்து மீண்டும் பேசுகிற காலத்தில் அவளோ எல்லாவற்றையும்உள்ளுக்குள் புதைத்துக் கொண்டவளாய் இருக்கிறாள்.  

திருமண வயதில் இருக்கும் இரண்டு ஆண்களின் 43 வயது தாய்க்கு இன்னொருதிருமணம் என்பதை தாங்கிக் கொள்ள முடியாத சொந்தங்களையும், சுற்றங்களையும் கொண்ட ஊர் அது. அம்மாவை சம்மதிக்க வைப்பது, அவளுக்கு ஒரு இணையைத் தேடுவது, ஊரை எதிர்த்து திருமணத்தை நடத்துவது எனதுணிகிறார்கள் அவளது இரு மகன்களும். இதுதான் கதை.  

இவையெல்லாவற்றையும் கொஞ்சம் கூட நெருடல் இல்லாமல் நிகழ்த்தியிருப்பதுதான் படத்தின்சுவாரசியமும், சிறப்பும். அவ்வளவு குறிப்புகளையும், புரிதல்களையும் உள்வைத்து வெளிப்படும்உரையாடல்கள்தாம் இந்த படத்தின்  ஆதாரம்.  

“மண்ணுக்குப் போற உடம்பு மனுஷங்கிட்ட வந்தா என்ன” இரவில் அவள் வீட்டைச் சுற்றிகேட்கும் குரல்களாகட்டும், “கண்னாடியில் உன் முகத்தை பார்”என்று தாயிடம் மூத்தவன் வெடிப்பதாகட்டும், பிறகு “பாத்துக்கலாம்”என்னும் ஒற்றை வரியில் சம்மதத்தைக் காட்டும் அழகாகட்டும், “ஐஸ்கிரிம் கீழே விழுந்தா என்ன, உங்க கூட பேசிட்டு நடக்குறதே சந்தோஷந்தான்”என்ற வெள்ளந்தியான வார்த்தையில் வெளிப்படும் நாற்பதுகளுக்கு பிறகான காதலாகட்டும், அர்த்தத்தோடு கதையை நகர்த்துகின்றன.  

அந்த ஊரில் இருக்கும் மனிதர்களின் மனநிலைக்கு நேர் எதிராய் தியேட்டரில்இருக்கும் மனிதர்களுக்கு மனநிலையை ‘நூறு சாமி’ உருவாக்கி விடுவதுதான் படத்தின்வெற்றி. ரசித்து, ஆரவாரித்து, மௌனித்து, நெகிழ்ந்து தியேட்டரிலிருந்து ஒரு நிறைவான மனநிலையில் வெளியே வருகிறார்கள். 

இயக்குனர் சசியை மனமாரக் கொண்டாடலாம். அசாதாரணத்தை மிக சாதாரணமாகநிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமா மீண்டும் அவரை ஆரத் தழுவிக் கொள்ளும். படத்தைதயாரித்த விஜய் அண்டனிக்கு பாராட்டுகள்.  

‘லப்பர் பந்து’வில் கொஞ்சமே வந்தாலும் கவனிக்க வைத்த சுவாசிகா இந்தப் படத்தில் மேலும் உயரங்களுக்குச் சென்றிருக்கிறார். அற்புதமான திரைக் கலைஞராய்திகழ்வார். அனைவரும் சிறப்பாக தங்களை பங்களிப்பைச் செய்து இருக்கிறார்கள்.  

தமிழில் ஒரு நல்ல சினிமா. மகிழ்ச்சி.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2026 07:10

October 10, 2026

அஞ்சி நடுங்கும் மோடியின் அரசு!


50க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுஇருக்கின்றன. டெல்லி காவல்துறையினரோடு ஏறத்தாழ 30,000 துணை ராணுவத்தினரும்இறக்கப்பட்டு இருக்கின்றனர். இணைய சேவை முடக்கப்பட்டிருக்கிறது. வழிகள் எல்லாம் சோதிக்கப்படுகின்றன.ஜந்தர் மந்தருக்கான சாலைகள் அடைக்கபப்ட்டு விட்டன.  

பினராயி விஜயன், மாணிக் சர்க்கார், அரவிந்த கெஜ்ரிவால், மம்தா பானர்ஜிஆகிய நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். சி.பி.எம் பொதுச்செயலார்எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.காரோச் ஜனதா கட்சியின்தலைவர் அபிஜித் தீப்கே விமானத்திலேயே கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இருக்குமிடம்தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தின் மாண்புமிக்க வழக்கறிஞர்கள் கைது செய்யபப்ட்டு இருக்கின்றனர்.பத்திரிகையாளர்கள் விரட்டப்பட்டிருக்கின்றனர். இடதுசாரி மாணவ அமைப்புகளின் தலைவர்கள்அடாவடித்தனமாக கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஊர்வலமாய் வந்தவர்கள் மீது இரக்கமற்றுதாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. 

மொத்தமுள்ள 90 கோடி வாக்காளர்களில், 13 கோடி பேரின் வாக்குகளைத் திருடிய தலைமைத் தேர்தல் அதிகாரிஞானேஷ்குமாரைக் காப்பாற்றுவதற்காக மோடியின் பாஜக அரசு இத்தனை நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது.அமைதியான முறையில் ஜந்தர் மந்தரில் கூடி குரல் எழுப்புவதைத் தடுக்கத்தான் இத்தனை அராஜகத்தையும்அரங்கேற்றியிருக்கிறது. 

சர்வ வல்லமை பொருந்திய மோடியும், சகல அதிகாரம் கொண்ட அரசும் அச்சத்தில் ஆடிப் போயிருப்பது தெரிகிறது.ஏனென்றால் போராடுகிறவர்கள் - அவர்களை நோக்கி விரல் சுட்டுகிறவர்கள் – யாரென்றால் இந்ததேசத்தின் இளைஞர்கள். அரசின் அத்தனை தடைகளையும், மிரட்டல்களையும், நடவடிக்கைகளையும் மீறி டெல்லியின் பல பகுதிகளில் இளைஞர்கள்அணி அணியாய் கூடிக்கொண்டு இருக்கிறனர். அவர்கள் கூடும் இடமெல்லாம் ஜந்தர் மந்தர்களாகின்றன. 

இளம் தலைமுறை விழித்துக் கொண்டதுதான்இப்போது ஆட்சியாளர்களை நடுக்கமுறச் செய்திருக்கிறது. 

அந்தத் தலைமுறைக்கு இந்த விழிப்புணர்வும், போர்க்குணமும் வந்து விடக் கூடாது என்றுதான் விஜய் போன்றவர்களுக்குஆளும் வர்க்கம் ‘கியூட்டாக’ பிம்பம் கட்டி விடுகின்றன. இதையும் சேர்த்துத்தான் இந்த தருணத்தில் யோசிக்கவேண்டி இருக்கிறது. 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2026 08:33

October 9, 2026

குருவிச் சத்தம்


கார் ஷெட்டிற்கு மேலே தாழ்வான மரக்கிளை ஒன்றில்அந்தக் குருவியை வீட்டு மனிதர்கள் அடிக்கடி பார்த்தார்கள்.  

சின்னச் சின்னத் துரும்புகளைக் கொண்டு வருவதும்,விர்ரெனபறப்பதுமாய் இருந்தது. குருவிச்சத்தம் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.  

கிளையொன்றின் கக்கத்தை தோதான இடமாகப் பார்த்துகூட்டை கட்டிய பிறகு அதன் வருகையும், இருப்பும், பறத்தலும் அவ்வளவாய்சத்தமில்லாமல் இருந்தது. விட்டு விட்டு கேட்டது.  

சில நாட்கள் கழித்து வீட்டு மனிதர்களின்நடமாட்டங்களைப் பார்த்து வால் துடிக்க அந்தக் கிளையில் அங்குமிங்கும் சடசடத்துகுருவி கத்த ஆரம்பித்தது.  

குருவிகளின் சத்தம் வீட்டின் பாடலாகியது.  

ஒருநாள் காலையில் வீட்டில் இருந்து மனிதன்வெளியே வரவும் கார் ஷெட் மேலிருந்து சின்னதாய் குருவிக்குஞ்சு அருகே விழுந்தது.காம்பவுண்டுச் சுவரிலிருந்து தாய்க்குருவி மனிதனைப் பார்த்து துடித்துசத்தமிட்டது.  

பூப்போல எடுத்து கார் ஷெட்டின் மீது விட்டுவிடலாம் என சின்னச் சிறகை அசைத்துக் கொண்டிருந்த அந்த உயிரை நோக்கி மனிதன்குனிந்தான்.  

காருக்கு அடியிலிருந்து சாம்பல் நிறப் பூனைஒன்று சட்டென பாய்ந்து அந்த குருவிக் குஞ்சை கவ்வி, வெளி கேட்டைத் தாவித்தாண்டி கண் இமைப்பதற்குள் மறைந்தது.  

செய்வதறியாமல் திகைத்து நின்றான் மனிதன்.எடுக்கப் போன கைகள் நடுங்கின.  

குருவி அங்குமிங்கும் மாய்ந்து மாய்ந்து கதறிக்கொண்டிருந்தது.  

பெரும் துயரத்தின் ஓலமாகிப் போனது வீடு.  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2026 07:07

October 8, 2026

தமிழ் திரட்டி - அழைப்பும், சில தகவல்களும்!


தமிழ் திரட்டியில் தங்கள் வலைப்பதிவுகளை இணைக்க விரும்பும் நண்பர்கள், தோழர்கள் அதுகுறித்த விளக்கங்களைக் கேட்டு வருகின்றனர். திரட்டப்பட்ட பதிவுகளை எப்படி அறிவது, படிப்பது என்றும் சிலர் கேட்கின்றனர். எனவே, அதுகுறித்த மிகச் சுருக்கமான தகவல்களைச் சொல்ல வேண்டியது இருக்கிறது.

தமிழ் திரட்டி ஒரு இணையச் செயலி ( Web App ).

ஒருவரது வலைத்தளத்தை இந்த திரட்டியில் இணைக்க வேண்டுமென்றால் அவர் தனது பெயர்,இமெயில் முகவரி, வலைத்தளத்தின் பெயர், வலைத்தளத்தின்முகவரி ( url )  வலைத்தளத்தின்Address ஆகியவற்றை தீராத பக்கங்களில் உள்ள படிவத்தில் நிரப்பி சமர்பிக்கலாம்.அல்லது jothi.mraj@gmail.com என்னும்இமெயிலில் தெரிவிக்கலாம். 


அவரது வலைத்தளம் இணைக்கப்பட்டதகவல் இமெயில் மூலம் அவருக்குத் தெரிவிக்கப்படும்.  

அதன் பின், வலைத்தளத்தின் பதிவுகளின்லேபிள்களில் ஒன்று தமிழ் திரட்டி என்று இருக்குமாறுபார்த்துக் கொள்ள வேண்டும்.  ( உதாரணமாக, நீங்கள் இலக்கியம், அரசியல், தமிழ் திரட்டி என மூன்றுலேபிள்கள் ஒரு பதிவுக்கு கொடுக்கிறீர்கள் என்றால் கீழ்கண்டவாறு ஒவ்வொரு லேபிளுக்கும்இடையே கமா மட்டும் போட்டு இடைவெளியின்றி இலக்கியம்,அரசியல்,தமிழ் திரட்டிஎன கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.உங்கள் பதிவுகளைத் திரட்டி சேகரித்துக் காட்டத் துவங்கி விடும். 

ஒருவரது சமீபத்திய பதிவு (Latest post)  மட்டுமே தெரியும். 

இதுபோன்று பலரது வலைப்பதிவுகளையும்திரட்டி, தமிழ் திரட்டி காட்டும். யார் யார் என்னென்னஎழுதுகிறார்கள் என்பதை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வலைத்தளத்துக்கும் சென்று பார்க்கவேண்டிய அவசியமில்லை. திரட்டியில் ( https://www.mathavaraj.com/p/thiratti.html )பார்த்துக் கொண்டாலே போதும்.எழுதுகிறவர்களும், வாசிப்பவர்களும்அறிந்துகொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு வெளி.

திரட்டியில் தெரியும் பதிவுகளைக்ளிக் செய்தால் அது அந்தந்த வலைத்தளங்களுக்குக் கொண்டு சென்று அந்த பதிவை முழுசாய்காட்டும்.

திரட்டியில் இணையும் வலைப்பதிவர்கள்கீழ்கண்ட Code-ஐ Copy செய்து, தங்கள் வலைத்தளங்களில் உள்ளHTML/JAVASCRIPT widget களில் paste செய்து, தங்கள் வலைத்தளத்தில் தமிழ்திரட்டியின் படத்தை இணைத்துக் கொள்ளலாம். அந்தபடத்தை கிளிக் செய்தால் தமிழ் திரட்டிக்கு அவர்களைக் கொண்டு செல்லும். 

<a href="https://www.mathavaraj.com/p/thiratti..." imageanchor="1" style="margin-left: 1em; margin-right: ஒரு 1em;" target="_blank"><img border="0" data-original-height="516" data-original-width="100%" height="100%" src="https://blogger.googleusercontent.com..." width="248" /></a><br /><div style="text-align: center;"><br /></div>

மெல்ல மெல்ல, வலைப்பதிவுகள் திரட்டியில்இணைக்கப்பட்டு, இதுஒரு வழக்கமாக, முறையாகஉருவாகும்போது, வலைப்பதிவுகள்குறித்து கவனமும், பகிர்வுகளும்அதிகரிக்கும். வலைப்பதிவுகளுக்கான ஒரு வெளியும் அமையும்.  

அதை நோக்கி பயணிப்போம்! 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2026 09:23

October 6, 2026

ஆயிரம் வாழ்த்துகள்!

 

காலை வேளையில் முதல் அழைப்பாக "தோழர்..." என்ற அன்பு கலந்தஅழைப்போடு சில நாட்கள் துவங்கும். மறுமுனையில் பிரியத்துடன் நலன் விசாரிக்கும்குரல் தோழர் மாதவராஜின் குரலாகத்தான் இருக்கும். ஏராளமான விஷயங்களை பரிமாறிக்கொண்டுள்ளோம். ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், வங்கியின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள்,  தற்காலிக ஊழியர்களின் நிலை, இன்னும் இன்னும். பிரச்சனைகளை காலத்தே தீர்த்து வைக்காத நிர்வாகத்தின் மீதுஅவருக்கு தார்மீக கோபம் இருக்கும். ஆனால் எதுவுமே அவரின் இயல்பான இன்முக அணுகுமுறையை பாதிக்காது.  

தமிழகத்தில் உள்ள மாதவராஜின் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவரின்எழுத்தும், பேச்சும் படிப்பவர்களை, கேட்பவர்களை அப்படியே கட்டிப்போட்டு விடும். இந்த வருடம் ஜனவரி மாதம் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் அவர்"சிலந்தியையும், ஈயையும்" உதாரணமாக வைத்து தொழிலாளர்கள்சுரண்டப்படுவதை சித்தரித்த விதம் இன்னும் என் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. சாலைப் பணியாளர்களைப் பற்றிய அவரின் "இரவுகள் உடையும்"குறும்படம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் வலியை உலகுக்கு உணர்த்தியது.  

முன்னாள் பாண்டியன் கிராம வங்கியின், இந்நாள் தமிழ்நாடு கிராம வங்கியின் ஊழியர்களைஅணி திரட்டுவதில், சங்கமயப்படுத்துவதில், உரிமைகளுக்காக போராடக் கற்றுக் கொடுப்பதில், புரிய கடமையை வைப்பதில் ஒரு தன்னிகரற்றபாத்திரத்தை அவர் வகித்துள்ளார்.

சங்கத்தை ஜனநாயகத் தன்மையோடு நடத்துவதில், சளைக்காமல் ஊழியர்களை சந்திப்பதில், தொடர்ந்து தொழிலாளர் களிடமிருந்து கற்றுக் கொள்வதில், கற்றுக்கொடுப்பதில் பங்குமிகச் சிறப்பானது. அவருடைய பங்கு மிகச் சிறப்பானது.  

பாண்டியன் கிராம வங்கியின் பணியில் சேர்ந்த இளம் வயதிலேயே தோழர் மாதவராஜிக்குதொழிற்சங்கத்தின் பால் ஈர்ப்பு உண்டாயிற்று. பிறருக்கு உதவும் குணம், தன்னலமற்ற உழைப்பு, அநியாயத்தை தட்டிக் கேட்கும் மாண்புஆகியவையெல்லாம் அவரிடம் இயல்பாகவே குடிகொண்டிருந்ததால் தொழிற்சங்கம், கூட்டுழைப்பு இவையெல்லாம் அவரின் இயற்கையான தேர்வாக அமைந்தன.

ஆரம்ப வருடங்களில் வங்கிப்பணி நேரம் போக மற்ற நேரமெல்லாம், பல நாட்கள் இரவு முழுவதும் கூட,அயராது தொழிற்சங்கப்பணி ஆற்றியவர் அவர். கிராமவங்கி ஊழியர்களை வணிக வங்கி ஊழியர்களோடு ஒப்பிட்டு, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் போக்கு, அதற்கு பிரதான காரணமாக இருந்த “கிராம வங்கி ஊழியர்களின்குறைந்த சம்பளம், மோசமான பணி நிலைமைகள்" ஆகியவற்றைஎதிர்த்து நடந்த அகில இந்திய போராட்ட இயக்கத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்தோழர் மாதவராஜ்.  

எடுத்த விஷயத்தை முடிப்பதில்,தொய்வில்லாமல் அதை அடுத்தடுத்த நிலைக்குஎடுத்துச் செல்வதில் முன்னுதாரணமாக மற்றவர்களுக்கு திகழ்பவர். அவரின் போராட்டகுணம் அவரை இடதுசாரிகளின் கவர்ந்திருந்தது. பக்கம் மார்க்சிய சிந்தனை, செயல்பாடு என்பது அவரின் உணர்வில் ஒன்றிப் போனது. அவரின் இடைவிடாத வாசிப்புஉயிர்ப்புடனும், அவரை எப்போதும் உற்சாகத்துடனும்வைத்திருக்கும். பல பிரச்சனைகளுக்கு அவரின் சித்தாந்தரீதியான அணுகு முறைவித்தியாசமாகவும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியும் அமையும்.  

அவரால் இயற்கையாகவே இளைஞர்களுடன் மிக சுலபமாக சங்கமிக்க முடிந்தது. இளைஞர்களைகுறிப்பாக இளம் பெண் தோழர்களை தொழிற்சங்க இயக்கத்தின் பால் ஈர்த்ததில் அவருக்குதனிப்பட்ட பங்குண்டு. சக தோழர்களின் குடும்ப உறுப்பினர்களுடனும் அவருக்குநெருங்கிய பழக்கமிருந்ததால் பலரும் அவரைத் தம் குடும்ப உறுப்பினராகவேபார்ப்பார்கள். பல முக்கிய குடும்ப பிரச்சனைகளுக்குக்கூட தோழர் மாதவராஜின்ஆலோசனையைப் பெற்றே முடிவெடுப்பார்கள். இளம் தோழர்களுக்கு சங்கமாக பல பயிற்சிவகுப்புகள் எடுத்து தலைமைக்கு தயார் செய்ததில் அவரின் பங்கு மிகவும்குறிப்பிடத்தக்கது.  

மாதவராஜ் எப்போதுமே குடும்பத்தை நேசிப்பவர். அம்முவை காதலித்த கதையைசுவாரசியமாக பல முறை சொல்லி மகிழ்வார். அவரின் மனைவி அம்மு என்கிற காதம்பரியும்சங்கத்தின் எல்லா பொதுநிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். மாதவராஜின் பல படைப்புகளுக்குமுதல் விமர்சகர் அவரின் மனைவி தான். தோழர் அஸ்வத் - குளோரி திருமணத்தை ஒட்டிஎங்கள் இரு குடும்பமும் சேர்ந்து சில இடங்களுக்கு பயணிக்கும் போது தோழர் காதம்பரிஅவர்களின் இனிமையாக பழகும் தன்மை இயல்பாக வெளிப்பட்டது. அவரின் உற்சாகமேமாதவராஜின் பொதுப்பணிக்கு அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு கிராமவங்கியின் தலைமையகம் சேலத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து தோழர் மாதவராஜ் விருதுநகரிலிருந்துகுடும்பத்தை விட்டு சேலத்திற்கு மாற்றல் கேட்டு வந்து விட்டார். குடும்பத்தின்முழுபொறுப்பையும் அவரின் மனைவி மனமுவந்து ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே இது சாத்தியமானது.  

பரந்துபட்ட ஒற்றுமையை கட்டுவதில் முன்னணிப்பாத்திரம் வகிப்பவர் தோழர்மாதவராஜ். 25 ஆண்டுகளாக பிளவுபட்டிருந்த ஊழியர்கள் AIRRBEA மற்றும் BEFI-யின் குடையின் கீழ் ஒன்றிணைய வித்திட்டதில்அவருக்கு ஒரு முக்கிய பங்குண்டு. ஒரு பிரச்சனை எழுந்தது."எம்ப்ளாயீஸ்யூனியன்" என்ற பெயருக்கு பதில் அந்த சங்கத்தின் பெயரான"ஒர்க்கர் ஸ்யூனியன்" என்ற பெயரை ஏற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.இதை ஒட்டி பல்வேறு கருத்துக்கள் வெளிப்பட்டன. ஆனால் தோழர் மாதவராஜ் புரட்சிகரமானஅமைப்பின் கீழ் தோழர்கள் ஒன்றிணைய நாம் நமது பெயரை விட்டுக் கொடுத்து"ஒர்க்கர்ஸ்யூனியன்" என்ற பெயரை ஏற்பது தான் சரி என்று தெளிவாக கருத்துரைத்தார்.அதுவே செயற்குழுவின் ஆகப்பெரும்பான்மையான கருத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்தஒற்றுமைதான் பின்னர் அதிகாரிகள் ஒற்றுமைக்கும், முகவர்களை, தற்காலிக ஊழியர்களை,நகை மதிப்பீட்டாளர்களை, ஓய்வு பெற்றவர்களை ஒருங்கிணைப்பதற்கும் மிகவும் உதவிகரமாக அமைந்தது. இன்று ஆகப்பெரும்பாலானஊழியர்கள் ஒரு குடையின் கீழ் அணி திரள்வதற்கு அந்த முடிவே அடித்தளமாக அமைந்தது.  

35 ஆண்டுகளுக்கும் மேல் பழுத்த தொழிற்சங்க அனுபவம் உள்ள தோழர் மாதவராஜ் அவர்களின்பணி ஓய்வுக்குப் பிறகும் அவரின் வழிகாட்டுதல் தொடரும். தொழிற்சங்க பளுவின் காரணமாகசற்று ஓய்வெடுத்து இருந்த எழுத்துப்பணியும், குறும்படப்பணியும் மேலும் சிறக்கும். அவர் தொடர்ந்துசமூகப்பணியில் ஈடுபட எல்லோரையும் போல் நானும் விழைகிறேன்.  

அன்புத் தோழருக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்!

 

( அருமைத் தோழரும் BEFI-யின் முக்கிய தலைவர்களில் ஒருவருமானதோழர் சி.பி,கிருஷ்ணன் அவர்கள் 2021-ல் நான் பணி ஓய்வு பெற்ற போது வெளியிட்ட மலரில் வாழ்த்திஎழுதிய பதிவு இது.  வங்கித்துறையில் அதிகாரவர்க்கத்தின் ஒவ்வொரு அசைவையும் நுட்பமாக அறிந்து அம்பலப்படுத்தும் செயற்பாட்டாளரானஅவரின் இந்த வார்த்தைகள் மதிப்பு மிக்கவை.) 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 06, 2026 08:52

October 3, 2026

தமிழ் திரட்டி - புதிய வலை திரட்டி

 
அது பிளாகர்கள் காலம். 2009ம் ஆண்டு. ‘தீராத பக்கங்கள்’ என்னும் இந்த வலைப்பக்கம் ஆரம்பித்துஎழுத ஆரம்பித்தேன். யாராவது வருகிறார்களா, படிக்கிறார்களா என்று எதுவும் தெரியாது.‘யாராவது இங்க இருக்கீங்களா?’ என்று கத்தாததுதான் குறைச்சல்.   பிறகு நண்பர்கள் மூலம்தான் தெரிந்தது.‘தமிழ்மணம்’, ‘தமிழிஸ்’ போன்ற திரட்டிகள் இருக்கின்றன. அதில்‘தீராத பக்கங்கள்’ வலைப்பக்கத்தை இணைத்துக் கொள்ளுங்கள், உங்கள் பதிவுகளை அந்த திரட்டியில் காணமுடியும்’ என்றார்கள். இப்படியொரு பிளாக் இருப்பதும், நீங்கள் எழுதுவதும் அப்போதுதான் வெளியேதெரியும் என்று வழி காட்டினார்கள். ‘தமிழ்மணம்’ திரட்டியில் இணைத்துக் கொண்ட பின்னர்தான், வலையுலகம் என்றால் என்ன என்பதே புரிந்தது.வலைப்பதிவர் மதுமிதா அவர்களை மட்டுமே ஆரம்பத்தில் அறிந்திருந்த நான், இரண்டு வருடத்திற்குள் ஒரு பெரும் வெளியில், நெருக்கமான எவ்வளவோ நண்பர்களோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். தினமும் எழுதுவது, வாசிப்பது என பொங்கிக் கிடந்தநாட்கள் அவை. எல்லாம் அதிசயம் போல் இருந்தது. அதுவரை அறிந்திராத புதியவர்களின் எழுத்துக்கள்வசியம் செய்தன. ஸ்மார்ட் போன் அறிமுகமாகி, ஃபேஸ்புக் புழக்கத்திற்கு வந்த பிறகுபிளாக் எனப்படும் வலைப்பதிவர்களின் காலம் களையிழந்து போக ஆரம்பித்தது. தொடர்ந்து வாட்ஸ்அப், இன்ஸ்டா என படையெடுக்கவும் , பிளாகர்கள் குறைந்து போனார்கள். தமிழ்மணம்போன்ற திரட்டிகள் நின்று போயின. பிளாகர்களின் காலம் மங்கிப் போனது. பழங்கதையாய் ஆனது. இப்போதும் சிலர் விடாமல் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றனர்.ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்றவை பெரும்பாலும், நுனிப்புல் மேய்வதைப் போல இருக்கின்றனஎன்று,  ஆழ்ந்த வாசிப்புக்கும், எழுத்துக்கும் வலைப்பக்கங்களேசரியானவை என பிளாகில்அவர்கள் முனைப்போடு எழுதுகின்றனர். பெரும்பாலும் அவை டைரி எழுதுவதுபோலாகி விடுகிறது. முன்னைப் போல் அவரவர்க்கென்ற வாசகர்கள் இருக்கிறார்களா, எழுதும் பதிவுகள் அவர்களுக்குச் சென்றடைகிறதாஎன்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இவையெல்லாவற்றையும் கவனத்தில் கொண்டுதான், ‘ தமிழ் திரட்டி ’ ஆரம்பிக்கப்பட்டுகிறது. முன்னைப்போல்பிளாகர் காலத்தை மீட்டு எடுத்து விடலாம் என்றெல்லாம் எந்தக் கனவுமில்லை, கருதவுமில்லை. வலைப்பக்கங்களில் எழுதிக்கொண்டு இருப்பவர்கள்மீதும், அந்த வலைப்பக்கங்கள் மீதும் ஒரு குறைந்தபட்சகவனத்தையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் விருப்பம். யார் யாரெல்லாம் எழுதிக்கொண்டுஇருக்கிறார்கள், என்ன எழுதுகிறார்கள் என்பதை ‘ தமிழ் திரட்டி ’ மூலம் சட்டென்று தெரிந்து கொள்ள முடியும்.வாசிக்க முடியும். தொடர முடியும். அந்தப் பெரும் வெளியில் மனிதர்களின் நடமாட்டத்தைக்கொஞ்சமாவது உறுதி செய்ய முடியும் எனத் தோன்றுகிறது. பார்ப்போம். வலைத்தளப் பதிவர்களையும், வாசகர்களையும் இணைக்கும் ஒரு முயற்சி.  தமிழ் திரட்டி என்பது ஒரு இணையச் செயலி(web app). தீராத பக்கங்கள் வலைத்தளத்தில் இந்தத் திரட்டி இயங்கும்.வலைப்பக்கம் மற்றும் வலைத்தளம் எழுதும் நண்பர்கள் இந்த தமிழ் திரட்டியில் தங்களை இணைத்துக்கொள்ள முடியும். முதலில் தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்கவேண்டுகிறோம். தங்கள் வலைப்பக்கத்தின் பெயர் (Name of the blog / website) , வலைத்தள முகவரி (Blog / website address) விபரங்களை jothi.mraj@gmail என்னும் இமெயிலுக்கு தெரியப்படுத்துங்கள். இனி எழுதும் பதிவுகளுக்கு அவசியம் ‘ தமிழ் திரட்டி ’ என்னும் லேபிளையும் சேருங்கள். அவ்வளவுதான்.தமிழ் திரட்டி தங்களின் பதிவுகளைக் காட்ட ஆரம்பிக்கும். இப்போதைக்கு 100 வலைப்பக்கங்களை தமிழ்திரட்டியில் இணைத்துக் கொள்ள முடியும். ஒரு பதிவரின் சமீபத்திய ஒரு பதிவை மட்டுமே ‘தமிழ் திரட்டி’ காட்டும். அவர் புதிய பதிவு வெளியிட்டதும்அதுவரை இருந்த அவரது பதிவு தெரியாது. புதிய பதிவு மட்டுமே தெரியும். ‘ தமிழ் திரட்டி ’யின் லேபிள்கள் – இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், அனுபவம், புத்தகம், நிகழ்வுகள் என அமைக்கபட்டு இருக்கின்றன.பதிவுகளுக்கு அந்த லேபிள்கள் இருந்தால், தமிழ் திரட்டியில் அந்த லேபிள்களிலும் பதிவுகளைக் காட்டும். திரட்டியின் வசதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகமேம்படுத்தவும் உத்தேசித்திருக்கிறோம். உங்கள் யோசனைகளும், ஆதரவும் இந்தக் காரியத்தைத்தொடர வைக்கும். அன்பும், நன்றியும். 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2026 05:30

September 29, 2026

பழம்படு பனை - நூறு எழுத்தாளர்கள்


 

வைக்கோல் கட்டு அடர்ந்திருக்கும் ஆச்சி வீட்டின் பின்பக்கத்தில் நிற்கும் மாடுகளிடம் கறக்கும் பாலை வாங்கச் செல்லும் காலைகளில் “யப்பு, இந்த பனங்கொட்டைகளுக்குத் தண்ணீர் ஊத்திட்டுப் போ” என ஆச்சி சொன்னார்கள். சில நாட்களில் தோண்டியெடுக்கப் போகும் பனங்கிழங்கின், தவுணின் ருசி ஊற, தொட்டியில் இருந்து எடுத்து தண்ணீர் ஊற்றினேன். தருவைக் காட்டைத் தாண்டி, புதுக்குளத்தில் குளிக்கச் செல்லும் வழியில், தூரத்தில் தெரியும் வயல் வெளியும், அவைகளைச் சுற்றி அடர்ந்திருக்கும் பனை மரக் கூட்டமும் எப்போதும் அழகாகவே இருந்தன. பேயன்விளையில் பள்ளிக்குச் செல்லும் வழியிலும் வலது பக்கம் விரிந்த மணல் காட்டில் பனைமரங்கள் நின்றிருந்தன. பனம் பழங்களின் காலத்தில் ஊரே பிசுபிசுவென அந்த வாசனையில் ஊறிக் கிடந்தது. பனைத் தண்டுகளில் கட்டிய வடத்தில், தெருவில் தாவணி கட்டிய அக்காக்களின் சிரிப்புச் சத்தங்களோடு ஆடினேன். சந்தடியும் அரவமும் இல்லாத அடைக்கலாபுரம் ரோட்டில், வெளிச்சம் மயங்க ஆரம்பிக்கும் நேரத்தில், காலேஜிலிருந்து எதிர்க்காற்றில் சைக்கிளை அழுத்திக் கொண்டு திரும்பும்போது, சடசடக்கும் பனைமரங்களின் இரைச்சல் மிரட்டும். முதன்முதலாய் புகை பிடித்தது பனைமரத்து வேரில்தான். போதை கொண்டதும் பனங்கள்ளில்தான்.
பால்யமும், இளமைப்பருவமும் பனைகளின் ஊடேதான் கடந்து சென்றது. எழுதியதில் பனைமரங்கள் வந்த எனது சிறுகதை கேட்டபோது, ‘இன்னும் கிளிகள்’ கதையைக் கொடுத்தேன். இன்னும் எவ்வளவு கதைகள் எழுதாமல் இருக்கின்றன என்பது எதிரே வந்து மறிக்கிறது.இப்படி தமிழில் பனை மரங்களின் வாழ்வை எழுதிய 100 எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்திருக்கிறார்கள். மிகச் சிறந்த வாசிப்பு அனுபவமாய் இருக்கும் என படிக்க ஆவலாய் இருக்கிறது. நீங்களும் முன்பதிவு செய்யலாம்.




 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2026 08:20

September 24, 2026

மாறாத புன்னகை!



1983 டிசம்பர் 1ம் தேதி. இஸ்மாயில் சார் முன்புதான் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு பணிக்குச் சேர்ந்தேன். அவர் BSc Agri முடித்துவிட்டு, பாண்டியன் கிராம வங்கியின் தலைமையலுவலகத்தில் Agri departmentல் சூப்பிரண்டண்ட் ஆக இருந்தார். அதிகம் பேச மாட்டார். மனிதர்களை நேசிக்கிற புன்னகை அவரிடம் இருக்கும்.
எனக்கு Despatch section. வரும் கடிதங்களைப் பிரித்து ஒவ்வொரு செக்‌ஷனுக்கும் கொடுக்க வேண்டும். அதுபோல் ஒவ்வொரு செக்‌ஷனிலிருந்து வரும் கடிதங்களுக்கு முகவரி எழுதி சீல் அடித்து பியூனிடம் கொடுத்து தபாலில் சேர்க்க வேண்டும். நான் கொஞ்சம் பொறுப்பற்றவனாய் இருந்தேன். மேஜையில் கடிதங்களை அப்படியே போட்டு விட்டு வெளியே தம்மடிக்கச் சென்று விடுவேன். ஃபேன் காற்றில் கடிதங்கள் பறந்து அறை முழுக்கக் கீழே கிடக்கும். இஸ்மாயில் சார் அவரது சீட்டில் இருந்து எழுந்து வந்து அவைகளை அடுக்கி, மேஜையில் வைத்து பேப்பர் வெயிட்டை மேலே வைத்து விட்டுச் செல்வார்.
பக்கத்து சீட்டில் இருந்த பாஸ்கர், நடந்ததைச் சொன்னார். எனக்கு சங்கடமாக இருந்தது. அதன் பிறகு கவனம் கொண்டு கடிதங்கள் மீது பேப்பர் வெயிட் வைத்து விட்டுச் செல்ல ஆரம்பித்தேன். இரண்டு மூன்று நாட்களுக்குள் திரும்பவும் தவறினேன். சிகரெட் பிடித்து விட்டுத் திரும்பி வந்தபோது, இஸ்மாயில் சார் குனிந்து கடிதங்களை பொறுக்கிக் கொண்டு இருந்தார். பதற்றத்துடன் ‘சார் நான் எடுக்குறேன்” என அருகில் சென்றேன். அவர் அந்த புன்னகை மாறாமல், “பேப்பர் வெயிட் வைக்க மறந்துட்டிங்களா?” கேட்டுச் சென்றார். அப்படி ஒரு இயல்பு கொண்ட மனிதரை நேரில் முதல் முதலாக நான் தரிசித்தேன். புதிய சொந்தங்களாய் ஊழியர்கள் பலர் கிடைத்தாலும், தங்கியிருந்த மணிசங்கர் லாட்ஜின் அலப்பறைகள் பரவி, அதிகாரிகள் மட்டத்தில் எனக்கு நல்ல பேரை வங்கியில் பெற்றுத் தரவில்லை. அடிஷனல் சூப்பிரண்டண்ட் மெய்யப்பன் எல்லாம் என்னை ‘தேறாத கேஸ்’ லிஸ்ட்டில்தான் வைத்திருந்தார். யூனியன் தர்ணாக்களில், மீட்டிங்குகளில் போய் கலந்து கொண்டேன். வங்கியின் சேர்மன் ஒருநாள் வந்து “பேங்க் ஸ்டாஃபா, பேட்டை ரவுடியா” என முறைத்து விட்டுப் போனார்.
எல்லாம் அறிந்திருந்தாலும் இஸ்மாயில் சாரின் அணுகுமுறை மட்டும் அவரது புன்னகை போல மாறவே இல்லை. வங்கியில் யாரிடம் காட்டாத அடக்கத்தையும், மரியாதையையும் அவரிடம் செலுத்தினேன்.
சில வருடங்களில் தலைமையலுவலகத்திலிருந்து அவர் வங்கிக் கிளைக்கு மாறிச் சென்றார். நான் தொழிற்சங்க பொறுப்புகள் ஏற்று அலைந்து கொண்டிருந்தேன். வாழ்க்கை தடதடவென்று ஓடிக்கொண்டு இருந்தது.
எப்போதாவது இஸ்மாயில் சாரை சந்திக்க முடிந்தது. அதே புன்னகையுடன், அதே சினேகத்துடன், அக்கறையுடன் பேசுவார். அவர் பணி ஓய்வு பெற்று பத்து பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகுதான் நான் பணி ஓய்வு பெற்றேன்.
சென்ற சனிக்கிழமை எங்கள் தமிழ்நாடு கிராம வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான சங்கத்தின் மாநாடு நடந்தது. சிறப்புரையாற்ற அழைத்திருந்தார்கள். சென்றிருந்தேன். முதல் வரிசையில் இஸ்மாயில் சார் உட்கார்ந்து சிரித்தார். வணங்கினேன்.
கிராம வங்கி ஊழியர்களின் கடந்த கால வாழ்க்கையை உணர்வுபூர்வமாகப் பேசினேன் என்று நினைக்கிறேன். பேசி முடிக்கும்போது பலரது கண்கள் ததும்பி நின்றன. இஸ்மாயில் சார் என் அருகில் வரவும், நான் கீழே சென்று அவரை அரவணைத்தேன்.
மேடையில் எனக்கு மரியாதை செய்வதற்காக துண்டு அணிவித்து இருந்தார்கள். “இது தொழுகை நேரம். தொழ வேண்டும். அந்தத் துண்டைத் தாருங்கள்” என்று கேட்டார். நான் கொடுத்தேன். சென்று விட்டார்.
பின்னர் தோழர்களுடன் பேசி, மதிய உணவுக்கான அறைக்குச் சென்றேன். இஸ்மாயில் சார் அங்கு வந்து “இந்தாங்க மாதவராஜ்” எனத் தந்தார். "சார் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றேன். அவர் மறுத்தார். அவரது நினைவாக, நம்மிடம் இருக்கட்டும் என வாங்கிக் கொண்டேன். அதே புன்னகையுடன் விடைபெற்றார்.
அன்றிரவு முத்துநகர் ரெயில் ஏறி சென்னையில் அடுத்தநாள் வீட்டுக்கு வந்து, பையைத் திறந்தேன். அந்தத் துண்டு மேலே இருந்தது. இஸ்மாயில் சார் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2026 22:46

July 31, 2026

குழந்தை மொழி - சித்திரக் கதை

நான் எழுதிய 'குழந்தை மொழி' என்னும் சொற் சித்திரத்தை - AI மூலம் ஒரு சித்திரக்கதையாக்கிப் பார்த்திருக்கிறேன்.


அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

(படத்தை க்ளிக்கி படக் கதையை படிக்கலாம்.)




 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2026 22:25