S. Ramakrishnan's Blog
November 19, 2025
இனிக்கும் இருள்
எழுத்தாளர் கோ.புண்ணியவான், மலேசியா

கல் மனங்களிலும் கனிவு பிறக்கும் என்பது இக்குறும்படத்தின் கதைப் பொருள். அதனை கலைநயம் குன்றாமல் கொண்டு செல்கிறார் ஹரி பிரசாத். நிலத்தை எப்படியாவது பார்வையற்ற தம்பதியினரின் தலையில் கட்டிவிடவேண்டும் என்று கண்ணையா புரோக்கரும் அவர் சகாவும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் பார்வைக்குறைவானவர்கள் என்று முதற் சந்திப்பிலேயே தெரிந்துகொள்ளும் கண்ணையா ஓரு கரிசனமான மன அசைவை அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.
வீட்டு மனையின் நிலப்பட்டாவை வாங்க பணம் தேவையென்று சொன்னதும் வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளும்படி சொல்கிறார்கள் தம்பதிகள். அந்த இடம் குறும்படத்தின் உயிரோட்டமான மைய இடம். கண்ணையாவைச் சாப்பிட்டுவிட்டு போகச் சொல்கிறார்கள். அங்கிருந்தே கண்ணையாவின் ஏமாற்றும் தந்திர மனம் ஆட்டம் காண்கிறது.
இனிப்பைப் பரிமாறும்போதும், அதுவும் ஒரு பார்வையற்றவர் தன்னை உபசரிக்கிறாரே என்று எண்ணும்போதும் கண்ணையாவின் உள்மனம் தத்தளிக்கத் துவங்குகிறது. இனிப்பு சாப்பிடும்போதும் உப்பிட்டவரை ஒருபோதும் ஏமாற்றக்கூடாது என்று அவரின் மனசாட்சி அவரை அறைந்துகொண்டே இருக்கிறது. அவரால் இனிப்பை சரிவர உண்ணமுடியாமல் போகும்போதே மனிதன் இயல்பிலேயே நல்லவன், சூழ்நிலை அவனின் நற்குணத்தின் திசையை மாற்றிவிடுகிறது என்று காட்டவே கண்ணையாவால் உணவை முடிக்க முடிக்கமுடியாமல் திணறும் காட்சி வைக்கப்படுகிறது.
அவர்களைப் பொய் சொல்லி ஏமாற்றிப் பணம் பறிக்கவேண்டும் என்று சதித்திட்டம் போட்ட கண்ணையா , ஒரு கட்டத்தில் மனமாறி அவர்கள் ஏமாற்றப்படவேண்டியவர்கள் அல்ல என்று இன்னொரு பொய்யை நல்லதுக்காகச் சொல்லி தன்னால் அவர்கள் ஏமாற்றப்படுவதிலிருந்து காப்பாற்றிவிடுகிறார். இக்குறும்படத்தின் ஜீவனை கண்ணையாவின் நடிப்பு இறுகப் பிடித்துவைத்துக்கொண்டே இருக்கிறது. கண்ணையாவுக்குப் பணத் தேவை நெருக்குகிறது என்பதை அவரின் மகள் பள்ளிப்பணம் கேட்கும்போது தெரியவரும் இடமும் இருள் இனிது குறும்படத்தின் திருப்பமான காட்சி.
எல்லாருடைய வாழ்விலும் இருள் சூழத்தான் செய்யும். ஆனால் அவ்விருளை இனிமையாக்குவது மனசாட்சி உள்ள மனிதனால் மட்டுமே முடியும். மனசாட்சி இல்லாத மனிதர்கள் உண்டா? இருள் சூழாத மனிதர்கள்தான் உண்டா? இருள் வந்தடைக்கும்போது மனசாட்சி திறந்துகொள்கிறது என்பதை இருள் இனிது குறும்படம் பிசிறில்லாமல் காட்டிவிடுகிறது.
கண்ணையா தன் பாத்திரத்தில் ஒன்றி மிக யதார்த்தமாக நடித்துக் காட்டுகிறார். நம்மையும் நெகிழச்செய்து விடுகிறார். பார்வையற்ற தம்பதிகளின் நடிப்பும் மிகையற்று இயல்பாக இருக்கிறது. படத்தை இயக்கிய ஹரி பிரசாத்துக்கு காட்சி ஊடகத் துறையில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. துணை தொழில்நுட்பக் கலைஞர்களும் வாழ்த்துகள்.
Thanks
கோ.புண்ணியவான், மலேசியா
ஆங்கில இதழில்
எனது கர்னலின் நாற்காலி குறுங்கதைகளின் தொகுப்பினை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.
இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறுங்கதை ஒன்று https://borderlessjournal.com இதழில் வெளியாகியுள்ளது.

நன்றி
டாக்டர் சந்திரமௌலி.
November 18, 2025
திணைகள் விருது விழா
திணைகள் கவிதை விருது விழா நவம்பர் 23 ஞாயிறு சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது.
கவிஞர் பூவிதழ் உமேஷ் விருது பெறுகிறார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விருது வழங்கி உரையாற்றுகிறேன்.
November 16, 2025
விருதுநகர் புத்தகத் திருவிழாவில்
விருதுநகர் புத்தகத் திருவிழாவில் நாளை மாலை உரையாற்றுகிறேன்
November 15, 2025
இருள் இனிது குறும்படம்
ஆர். ஹரி பிரசாத் இயக்கியுள்ள இருள் இனிது குறும்படம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது
குறும்பட விழா
நேற்று ஹரிபிரசாத் இயக்கிய இருள் இனிது குறும்படத்தின் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் ஞானவேல், இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்குநர் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குறும்படம் குறித்த பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.



எனது எல்லாச் செயல்பாடுகளுக்கும் துணை நிற்கும் அன்பு வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

எனது அழைப்பை ஏற்று வருகை தந்த அன்பு நண்பர் அம்பாள் முத்துமணி, மற்றும் தனுஷ்கோடி அண்ணாச்சி அவர்களுக்கு நன்றி. நிகழ்வில் ஹரியை கௌரவித்த ஆடிட்டர் சந்திரசேகர், டாக்டர் பவானிக்கு அன்பும் நன்றியும்.

பிரபாகர், ஏர்போர்ட் மணிமாறன். அகரமுதல்வன். ஆர்தர் வில்சன். நூல்வனம் மணிகண்டன், கபிலா காமராஜ் குடும்பத்தினர். ராமலிங்கம், ஸ்நேகா, ஸ்ருதி டிவி கபிலன், ஜென் ராம் குடும்பத்தினர், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

நிகழ்வில் குறும்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நான் ஆற்றிய உரையை ஸ்ருதி டிவி இணைப்பில் காணலாம்.
November 13, 2025
பெத்ரோவின் உலகம்.
மெக்சிகோவின் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற சிறார்களையும் அவர்களின் குற்றச் செயல்களையும் சித்தரிக்கிறது Los Olvidados. லூயி புனுவல் இயக்கிய இந்தத் திரைப்படமே பின்னாளில் உலகின் கவனத்தைப் பெற்ற City of God போன்ற படங்களுக்கான அடிப்படை. பதின் வயதுப் பையன்களின் உலகை மிகவும் அசலாகப் படமாக்கியிருக்கிறார் புனுவல்.
ஒளிரும் நகரவாழ்க்கையின் மறுபக்கமாக இது போன்ற இருண்ட உலகம் இயங்கிக் கொண்டிருப்பதைப் புனுவல் தான் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
ஏழ்மையும் வறுமையும் கொண்ட வாழ்க்கையில் அவர்கள் குற்றத்தை ஒரு விளையாட்டைப் போலவே நிகழ்த்துகிறார்கள். அவர்களை இயக்குவது கண்ணுக்குத் தெரியாத வேட்கை.

உலகம் அவர்கள் விரும்பும்படியாக இல்லை. தங்களை மதிக்காத, புரிந்து கொள்ளாத, விரும்பியதை தர மறுக்கிற உலகுடன் அவர்கள் சண்டையிடுகிறார்கள். குற்றம் புரிகிறார்கள்.
குற்றவுலகின் இரண்டு பக்கங்களையும் இந்தப் படத்தில் புனுவல் விவரிக்கிறார். குறிப்பாக இவர்களின் குடும்பம் எப்படியானது. அவர்கள் ஏன் வீட்டில் உறங்குவதில்லை. சகவாசம் எப்படி ஒருவனை மாற்றுகிறது என்பதைத் துல்லியமாகச் சித்தரித்துள்ளார். கதை நடக்கும் களத்திலே உண்மையாகப் படப்பிடிப்புச் செய்திருக்கிறார் புனுவல். தொழில்முறை சாராத நடிகர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஜூலியன் என்ற பையனை தெருச்சண்டையில் அடித்துக் கொன்றுவிட்டுப் போலீஸில் அகப்படாமல் ஒளிந்து வாழும் எல் ஜிபோ, பெத்ரோ என்ற இரண்டு பதின்பருவத்தினரின் கதையிது. அவர்கள் ஜூலியன் வைத்திருந்த பணத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். தலைமறைவாக ஒளிந்து வாழும் போது சந்திக்கும் நெருக்கடிகள், போலீஸ் அவர்களின் மறைவிடத்தைக் கண்டறிவது. பெத்ரோவின் தாயுடன் எல் ஜிபோவிற்கு ஏற்படும் ரகசிய உறவு. பெத்ரோ கொல்லனிடம் வேலைக்குச் சேருவது. கத்தி திருடியதாகச் சந்தேகப்பட்டுத் துரத்தப்படுவது என நிகழ்வுகள் ஒன்றையொன்று பின்னி அழகாக முன்நகர்கின்றன.

ஒரு நாளிரவு அவர்கள் பார்வையற்ற இசைக்கலைஞரை வழிமறித்துத் தாக்கி அவரது பணத்தை அபகரித்துக் கொள்கிறார்கள். அவரது இசைக்கருவியை அழிக்கிறார்கள். அதில் தான் அவர்களின் கோபம் முழுமையாக வெளிப்படுகிறது.
பெட்ரோவின் தாய் தனது மகனின் குற்றச்செயல்களை வெறுக்கிறாள். அவனைக் கோவித்துக் கொள்கிறாள். வருத்தமடைந்த பெத்ரோ இனி ஒழுக்கமாக நடந்து கொள்வதாக அம்மாவிடம் வாக்குறுதி அளிக்கிறான். எல் ஜிபோ செய்த குற்றத்திற்கு அவன் சிறைக்குச் செல்கிறான். சிறை அதிகாரி பெத்ரோ மீது பரிவு கொள்கிறார். சிறையில் கோழிகளைப் பராமரிக்கும் வேலையில் பெத்ரோ ஈடுபடுகிறான்.

சிறையில் ஒரு நாள் தப்பிச் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாகிறது. அதனைச் சிறை அதிகாரியே ஏற்படுத்தித் தருகிறார். பெத்ரோ என்ன செய்கிறான். குற்றத்தின் சுழிக்காற்று அவர்களை எவ்வாறு இழுத்துக் கொள்கிறது என்பதே படத்தின் இறுதிக்காட்சிகள்.
பெட்ரோ தனது வயதை விடப் பெரியவனாகவே எப்போதும் நடந்து கொள்கிறான். வீட்டில் அவன் சாப்பிடும் காட்சி. அம்மா சொல்லும் வேலைகளை அலட்சியமாகப் புறக்கணிக்கும் விதம், தன்னை விட மூத்த எல் ஜிபோவை சமவயதுக்காரனை போல நடத்தும் விதம் என இயல்பை மீறியே நடந்து கொள்கிறான். சிறை அதிகாரியால் நேசிக்கபடும் போது மட்டுமே அவன் குற்றவுணர்வு கொள்கிறான்
எல் ஜிபோவின் மறுபாதியைப் போலவே பெத்ரோ நடந்து கொள்கிறான். பார்வையற்ற இசைக்கலைஞரின் வாழ்க்கையும் அவர் பழி தீர்க்கும் விதமும் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.
எல் ஜிபோவிடம் குற்றவுணர்வே கிடையாது. அவன் எந்தக் குற்றத்தையும் துணிந்து செய்கிறான். விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை. துரோகமும் வெறியும் மோதலும் கொண்டதாக அவனது வாழ்க்கை உள்ளது.
கேப்ரியல் ஃபிகுரோவாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு. பெத்ரோவாக நடித்துள்ள அல்போன்சோ மெஜியாவின் சிறப்பான நடிப்பு பாராட்டிற்குரியது. புனுவேலின் படைப்புகளில் லாஸ் ஒல்விடாடோஸ் மிகவும் தனித்துவமான படமாகும்
••
November 11, 2025
விருதுநகர் புத்தகத் திருவிழா உரை
விருதுநகர் புத்தகத் திருவிழாவில் நவம்பர் 17 திங்கள்கிழமை மாலை கதையில் வாழ்கிறார்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.
November 9, 2025
பி.எம். மூர்த்தி : வல்லினம் விருது.
எனது நேசத்திற்குரிய நண்பரும் மலேசியாவின் மிகச்சிறந்த கல்வியாளருமான பி.எம். மூர்த்தி இந்த ஆண்டிற்கான வல்லினம் விருது பெறுகிறார். டிசம்பர் 21 அன்று மலேசியாவில் வல்லினம் விருதளிப்பு நடைபெறுகிறது.

பி.எம். மூர்த்திக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்.
மலேசிய தேர்வு வாரியத்தின் உதவி இயக்குநராக மூர்த்தி மேற்கொண்ட பணிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. அவரது விருது விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஆனால் டிசம்பர் 25 எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை

ஆசிரியர்களுக்கான பயிலரங்குகள் மற்றும் சிறுகதை, சிறார் இலக்கியம் சார்ந்த பயிலரங்குகளை வெற்றிகரமாக நடத்தியவர் பி.எம். மூர்த்தி. அவருடன் மலேசியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அவருக்கெனத் தனிமரியாதை இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
பி.எம். மூர்த்தி இனிமையாக பழகக்கூடியவர். மலேசியாவின் கல்வி மற்றும் இலக்கியச் சூழல் மேம்பட வேண்டும் என்று முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

மூர்த்தியின் வாழ்க்கை வரலாறு கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை என வெளியாகிறது. விருதுவிழாவில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.
சிறந்த கல்வியாளரைத் தேர்வு செய்து விருது வழங்கிச் சிறப்பிக்கும் வல்லினம் இலக்கிய அமைப்பிற்கு எனது பாராட்டுகள்.
நவீன் மற்றும் வல்லினம் நண்பர்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.
November 8, 2025
கனவு தடவப்பட்ட ரொட்டி
விட்டோரியா டிசிகா சிறந்த நடிகர். சர்வதேச அளவில் அவர் இயக்கிய திரைப்படங்களுக்குக் கிடைத்த கவனம் அவரது நடிப்பிற்குக் கிடைக்கவில்லை. இத்தாலிய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கினார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நாடகவுலகில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் என்பதாலே அவர் இயக்கிய படங்களில் பிற நடிகர்களிடம் சிறப்பான வெளிப்பாட்டினைப் பெற முடிந்திருக்கிறது

விட்டோரியோ டி சிகா சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதில் பெரிய தொகையை இழந்திருக்கிறார். அவர் தயாரித்த திரைப்படங்கள் வசூல் மழையைக் கொட்டின. இரண்டு திருமணங்கள் செய்திருக்கிறார்.
விட்டோரியா டிசிகா நடித்த Bread, Love and Dreams திரைப்படம் 1953ல் வெளியானது. மலைபிரதேச சிறுநகருக்கு வருகை தரும் நாற்பது வயதைக் கடந்த காவல்துறை அதிகாரி மார்ஷல் அன்டோனியோவாக டிசிகா நடித்திருக்கிறார்.

ஊரில் அவரை வரவேற்கும் ஆரம்பக் காட்சிகள் அபாரமானவை. அந்த ஊரில் மூன்று பேர் அடுத்தவர்களைக் கண்காணிப்பதை மட்டுமே வேலையாகச் செய்கிறார்கள். அதில் ஒருவர் கையில் பைனாக்குலர் உள்ளது. தூரத்தில் என்ன நடக்கிறது எனப் பைனாக்குலர் வழியாகப் பார்த்து உடனுக்குடன் வம்பு பரப்புகிறார். மூவரில் ஒரு பெண்ணும் இருக்கிறார். படம் முழுவதும் அவர்கள் தொடர்ந்து வம்பு பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
அவர்கள் அன்டோனியா ஊருக்குள் நுழைந்தவுடன் அவருக்குத் திருமணம் ஆகவில்லை. பெண்பித்தர் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். முதல்காட்சியிலே உள்ளூர் அழகியான பெர்சாக்லீராவைக் கண்டு மார்ஷல் மயங்கி விடுகிறார். அவள் துடுக்கானவள். அழகியான அவளை அடைவதற்கு பலரும் துடிக்கிறார்கள்.

இளம்காவலரான காராபினியர் ஸ்டெல்லூட்டி அவளைக் காதலிக்கிறான். ஆனால் வெளிப்படுத்தத் தயங்குகிறான். மார்ஷல் அவளை ஒரு தலைப்பட்சமாகக் காதலிக்க ஆரம்பிப்பதுடன் வலிந்து உதவிகளும் செய்ய ஆரம்பிக்கிறார்.
இன்னொரு பக்கம் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மகப்பேறு மருத்துவர் அன்னரெல்லாவை காதலிக்கவும் முயற்சிக்கிறார். அவளது கணவன் ரோமில் இருப்பதாகவும் அவனைச் சந்திக்க மாதம் ஒருமுறை பயணம் மேற்கொள்கிறாள் என்பதையும் அறிந்தவுடன் மார்ஷலின் மனம் மாறிவிடுகிறது.
படத்தின் சிறப்பான கதாபாத்திரம் மார்ஷலின் பணிப்பெண் கேரமல்லா. அவருக்குத் தெரியாத ரகசியம் எதுவுமில்லை. அவள் மார்ஷலின் பெண்பித்தை அறிந்து கொண்டு நன்றாகத் தூண்டிவிடுகிறாள்.
உள்ளூர் திருச்சபையின் பாதிரியார் பெர்சாக்லீராவின் பாதுகாவலராக இருக்கிறார். தந்தையைப் போல அவளிடம் அன்பு காட்டுகிறார். தேவாலயத்தில் அவளைக் கண்டிக்கும் விதம். செய்யும் உதவி அவரது கதாபாத்திரத்தை அழகாக விளக்குகிறது.
அவரும் மார்ஷலின் பெண்பித்தை புரிந்து கொண்டு எச்சரிக்கை செய்கிறார். நடமாடும் துணி வணிகரிடம் புத்தாடை வாங்கும் போது பெர்சாக்லீரா ஒரு பெண்ணுடன் சண்டை போடவே இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துப் போய் விசாரிக்கிறார்கள். பெர்சாக்லீராவை சிறையில் அடைக்கிறார் மார்ஷல். நள்ளிரவில் அவரைத் தனியே வரவழைத்து தனது கழுதையைக் கவனித்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாள் பெர்சாக்லீரா. அதனையும் மார்ஷல் மேற்கொள்கிறார்
அன்றிரவு அவளது ஏழ்மையைப் புரிந்து கொண்டு அவளுக்கு உதவி செய்வதற்காக ஐந்தாயிரம் லியர் நோட்டினை அவளது அங்கியில் விட்டுப் போகிறார்
மறுநாள் அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்கும் பெர்சாக்லீராவின் அம்மா அது புனித அந்தோனியாரின் கிருபை என ஊரைக் கூட்டிவிடுகிறாள். கடவுளின் அதிசயத்தைக் காண மக்கள் அவர்கள் வீட்டு வாசலில் திரளுகிறார்கள். அந்தப் பணத்தைத் தொட்டு வணங்குகிறார்கள். காணிக்கை செலுத்துகிறார்கள். முடிவில் உண்மை அறிந்து பெர்சாக்லீரா கோபம் கொள்கிறாள்.

அதன்பிறகு ஸ்டெல்லூட்டியும் பெர்சாக்லீராவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது, அதே நேரத்தில் நகரில் நடக்கும் திருவிழாவில் கலந்து கொள்ளும் மார்ஷல் தனது மனதிலுள்ள காதலை அன்னரெல்லாவிடம் வெளிப்படுத்தி அவளைக் கரம் பிடிக்கிறார். இனிமையான, சிறிய காதல்கதை.
இத்தாலிய சிறுநகர வாழ்வின் இயல்பையும் தேவாலய நடைமுறைகளையும் படத்தில் அழகாகச் சித்தரித்துள்ளார்கள். டிசிகா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். பெர்சாக்லீரா நடித்துள்ள ஜினா லோலோபிரிகிடா இத்தாலியின் புகழ்பெற்ற நடிகை. தனித்துவமான அழகு கொண்டவர். இப்படத்தில் துடுக்குதனமான அவர் செய்யும் செயல்கள். கோபத்தில் நடந்து கொள்ளும் முறை. ஸ்டெல்லூட்டியை காதலிக்கும் போது வெளிப்படுத்தும் காதல் உணர்வுகளும் அற்புதமாக உள்ளன. இத்தாலிய திரைப்படங்களின் இசை எப்போதும் இனிமையானது. இதிலும் திருவிழா காட்சிகளில் அபாரமான இசைக்கோர்வைகள் இடம்பெற்றுள்ளன.
படத்தின் ஒரு காட்சியில் வெறும் ரொட்டியை சாப்பிடும் ஒருவரிடம் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று மார்ஷல் கேட்கிறார்
ரொட்டியில் கனவைத் தடவி சாப்பிடுகிறேன் என அவர் பதில் தருகிறார். இந்தப் படமும் அப்படியான கனவு தடவப்பட்ட ரொட்டி என்றே சொல்வேன்.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers

