‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ (நுால் அறிமுகம்)



‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’
(நூல் அறிமுகம்)
ஆசிரியர்: சசி வாரியர்
தமிழாக்கம்: இரா.முருகவேள்

இந்த வாழ்வின் அருமை எப்போது தெரிகிறதெனில், சாவுக்கு நாள் குறிக்கப்படும்போதுதான். எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, முதுகு முள்ளந்தண்டினுள்ளிருக்கும் தண்டுவடத்தில் கட்டி என்று வைத்தியர் சொன்ன கணத்தில், என்னால் இழக்கப்படவிருந்த உலகம் சட்டென அழகாகிப்போனதைப் பார்த்தேன். நோயாகட்டும் மரணதண்டனையாகட்டும் ‘இதோ முடிந்துவிடப்போகிறது’எனும்போதே வாழ்வின்மீதான காதல் பெருக்கெடுக்கிறது; குறைகள், குற்றப்பட்டியல்கள் சிறுத்துப்போகின்றன. அதிலும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தின் எரிதழலில் தினம்தினம் கருகும்போது வாழ்வின் காலடியில் கிடந்து உயிர் மருகி மருகி மன்றாடத் தொடங்கிவிடுகிறது. பகத்சிங் போல தூக்குமரத்தை நோக்கி நெஞ்சுரத்தோடு நடந்துசென்றோர் அரிது.

என்னதான் குற்றம் இழைத்திருந்தாலும், மரணதண்டனை எனப்படும் கொலைத்தண்டனையை மனம் ஒப்பமறுக்கிறது. ‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ஐ படித்தபிற்பாடு இத்தண்டனை முறை இல்லாதொழியவேண்டும் என்ற எண்ணம் முன்னரிலும் வலுப்பட்டிருக்கிறது. சிறையறையின் நீண்ட தடுப்புக்காவலில் துளித்துளியாக சிந்தியதுபோக எஞ்சிய உயிரின் கழுத்தை எங்ஙனம் முறித்துக் கொன்று ‘திருத்து’கிறது அரசும் சட்டமும் என்பதை அறிய இந்நூலை வாசித்தே ஆகவேண்டும்.

திருவிதாங்கூர் மன்னராட்சியிலும் பின்னர் சுதந்திர இந்தியாவிலுமாக முப்பதாண்டு காலம் தூக்கிலிடுபவராகப் பணியாற்றிய ஜனார்த்தனன் பிள்ளை எழுதிக் கொடுத்த குறிப்புகளையும் வாய்மொழியாகச் சொன்னவற்றையும் தொகுத்து சசி வாரியர் (HANGMAN'S JOURNAL) என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார். இரா.முருகவேள் அதைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜனார்த்தனன் பிள்ளையால் தமிழில் எழுதப்பட்ட குறிப்புகளை சசி வாரியர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டபின், அது மீண்டும் இரா.முருகவேளால் மூலமொழியாகிய தமிழுக்குத் திரும்பிவந்திருப்பதாகும்.

கடைசித் தூக்குப் பணியை நிறைவேற்றி (117 தூக்குகள்) கால் நூற்றாண்டு கழித்து, எழுத்தாளர் ஒருவரால் (சசி வாரியர்) தூண்டப்படும் ஜனார்த்தனன் பிள்ளை, அந்தப் பழைய இருண்ட நாட்களின் நினைவுகளுள் மீண்டும் விழுந்து குற்றவுணர்வில் தவிப்பதையும் அவரது உள்ளார்ந்த தனிமையையும் சித்தரிக்கிறது இந்நூல். ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’என்பதற்கொப்ப சில அனுபவங்கள் சாதாரண மனிதர்களின் அறிதலுக்குச் சாத்தியப்படாதவை. கற்பனையைக் காட்டிலும் விசித்திரங்கள் நிறைந்தவை. அத்தகைய ஒரு உலகை இந்நூல் அறியத்தருகிறது.
எழுத்தாளரைச் சந்திக்கும்வரை, கரிய நினைவாக, சீழ் அகற்றப்படாத காயமாக குற்றவுணர்வானது தூக்கிலிடுபவருள் இருந்துவந்திருக்கிறது. அந்நினைவுகளைத் தூண்டிய பிறகு அவரால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை. நண்பர்களுடன் உரையாட இயலவில்லை. மனைவியுடனான பேச்சும் நின்றுபோய்விட்டது.  மழையோ வெயிலோ அவருக்கு உறைப்பதேயில்லை. குடியும் அவரைக் கைவிட்டுவிட்டது. கயிறு இறுகி இறுகித் தடம் பதிந்துபோன தூக்குமரத்தினருகில், ஒரு மனிதனை முற்றிலுமாக இந்த வாழ்விலிருந்து மறையச் செய்யும் ஆளியினருகில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மனிதன் நின்றுகொண்டிருக்கும் பொறிக்கதவினருகில், அது படாரெனத் திறந்து கழுத்தில் கயிறு இறுக அந்தப் பலியுயிர் மறைந்துபோகும் இருண்ட நிலவறைக்குள் அவர் மீண்டும் நினைவுகளால் வாழவேண்டியிருக்கிறது. துர்க்கனவுகளால் அவரால் உறங்கமுடியாது போகிறது.

“நான் இந்த வேலையை மறுத்திருக்கவேண்டுமோ? எனது பிள்ளைகளுக்கு உணவளிக்கவே அதைச் செய்தேன்”என்று அவரது மனம் பதகளிக்கிறது. கடவுளின் பெயரால்தான் நான் என் பணியைச் செய்தேன். நான் கடவுளின் ஒரு கருவிதான்”மீண்டும் மீண்டும் தற்சமாதானம் செய்துகொள்கிறார்.

உண்மையில் அவர் ஒரு கருவி. அரசனதும் அரசாங்கத்தினதும் கட்டளையை நிறைவேற்றவேண்டிய பணியாள். அவர் இல்லையெனில் இன்னொருவர் அதைச் செய்தே இருப்பார். எனினும், இந்தச் சமூகம் அவரை எந்தக் கண்களால் பார்க்கிறது? அவர்கள் ஜனார்த்தனன் பிள்ளையைக் கண்டதும் விலகிச் செல்கிறார்கள். உரையாடிக் கொண்டிருந்தவர்கள் சட்டென மௌனமாகிறார்கள். ‘நீயே கொலைகாரன்’என்று அந்த மௌனம் அவரைச் சாடுகிறது. இந்நூலின் முன்னுரையில் தியாகு அவர்களால் சொல்லப்படுவதைப்போல ‘கொலைச் சங்கிலியின் கடைசிக் கண்ணி’யே அவர். வெட்கப்படவேண்டியவர்களும் குற்றவுணர்வுகொள்ளவேண்டியவர்களும் குற்றவாளிகளை உருவாக்கும் அதிகாரங்களே. சட்டத்தின் பாரபட்சமான (விதிவிலக்குகளும் உண்டு) விரல்களால் குற்றஞ் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று எங்ஙனம் தீர்மானமாக அழைக்கமுடியும்? மேலும்,குற்றம் என்பதன் கனமும் பொருளும் ஆளுக்காள் மாறுபடுவதல்லவா? பசியில் உணவுப்பொட்டலத்தைத் திருடுபவன் தண்டிக்கப்படுவதும், மக்களின் வாழ்வாதாரங்களைத் திருடும் தொந்தி பெருத்த கார்ப்பரேட் கொள்ளைக்காரர்கள் கௌரவிக்கப்படுவதுந்தானே இன்றைய நீதி?

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மனவுணர்வுகளைப் பற்றி இந்நூலில் அதிகமில்லை. எனினும், எழுதப்படாத மறுபக்கம் வலியின் வரிகளால் நிரவப்படக்கூடியதும் இரக்கந்தருவதுமாகும். ஆளி இழுக்கப்பட்ட கணத்தில் உள்நோக்கிப் படாரெனத் திறந்துகொள்ளும் பொறிக்கதவின்மீது நிற்கும் மனிதனின் கண்களைப் பற்றி ஜனார்த்தனம் பிள்ளை அடிக்கடி குறிப்பிடுகிறார். முகமூடி மாட்டப்படுவதற்கு முந்தைய கணத்தில் அந்தக் கண்களைத் தவிர்க்கப்பார்த்தும் அவர் எவ்விதமோ சந்தித்துவிடுகிறார். அந்தக் கண்கள் பெரும்பாலும் உள்ளாழத்தை நோக்கிக்கொண்டிருந்ததாக அவர் சொல்கிறார்.

அரசுகள் தமது கொலைபாதகங்களுக்குப் பொறுப்பேற்பதில்லை. போர் என்ற பெயரிலும் தேசியபாதுகாப்பு என்ற பெயரிலும் வலுவற்ற நாடுகளுள்ளோஃ பிரதேசங்களுள்ளோ புகுந்து வளங்களைக் கொள்ளையடித்து அப்பகுதி மக்களைக் கொல்லும், சிறைப்பிடிக்கும் எந்த அதிகாரமும் பழிபாவங்களுக்கு அஞ்சுவதில்லை. எனினும், அஞ்சுவதுபோன்ற நாடகங்கள் அரங்கேறத்தான் செய்கின்றன. இந்நூலிலும் அப்படியொரு நாடகம்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதை அறிவித்து திருவிதாங்கூர் மன்னருக்கு நீதிமன்றத்திலிருந்து செய்தி அனுப்பப்படும். ஆனால், அந்தச் செய்தியை மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நாள் மதியந்தான் பெற்றுக்கொண்டதாக அரண்மனை அலுவலர்கள் உறுதிப்படுத்துவார்கள். மன்னர், மரணதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்துவிடுவார். ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்ட அறிவித்தலை எடுத்துக்கொண்டு அரண்மனையின் தூதுவர் சிறைச்சாலையை நோக்கி விரைந்து போவார். விரைந்து போவார் என்றால்…. அதுவொரு பாவனைதான்! மரணதண்டனை பெரும்பாலும் விடிகாலையில் நிறைவேற்றப்பட்டிருக்கும். அது முடிந்தபிற்பாடுதான் ‘விரைந்துபோய்’ அந்த அறிவித்தலை, தண்டனைக்குப் பொறுப்பான சிறையதிகாரியிடம் கையளிப்பார். அரிதாக, தூதுவர் போகும்வேளை மரணதண்டனை நிறைவேற்றப்படாதிருந்தாலும், நிறைவேற்றப்படுவதற்காக அவர் காத்திருப்பார். பிறகு ஒரு நாடகம் அரங்கேறும். அதை,‘நகைச்சுவை நாடகம்’என்கிறார் சசி வாரியர்.

“ஐயோ கடவுளே!” என்று அந்தத் தூதுவர் அலறுவார். நீங்கள் அந்தக் கைதியைக் கொன்றுவிட்டீர்கள்.”

“ஆமாம். அவர் இறந்துவிட்டார்.”சிறைத் தலைமைக் காவலர் பதிலளிப்பார். “பார்! என்னிடம் தீர்ப்பு இருக்கிறது. என்னிடம் என்ன செய்யும்படி கூறப்பட்டதோ நான் அதைத்தான் செய்திருக்கிறேன்.”

“ஆனால் நான் அவருக்கான தண்டனை குறைப்பாணையை வைத்திருக்கிறேன். அரசர் நேற்று மாலை இதில் கையெழுத்திட்டார். நீங்கள் அறிந்திருப்பீர்கள் நாங்கள் சூரியன் மறைந்த பிறகும் சூரிய உதயத்திற்கு முன்பும் வேலைசெய்வதில்லை. அதனால்தான் தாமதம்…”

“அய்யோ! என்ன ஒரு பரிதாபம். இவருக்கு இது எவ்வளவு தாமதமாக வந்திருக்கிறது.”

இது ஒத்திகை பார்க்கப்படாத கச்சிதமான நாடகம்! அதிகாரமானது எளிய மக்களிடத்தில் எப்போதும் ‘கருணை’யோடே இயங்குந்தன்மையது என்பதை விளக்க இதைவிட வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டியதில்லை.

இந்நூலில் தூக்கிலிடுவது குறித்து மட்டும் பேசப்பட்டிருக்கவில்லை. ஜனார்த்தனன் பிள்ளைக்கும் அவரது முன்னாள் பள்ளி ஆசிரியரான பிரபாகரன் மாஷ்க்கும் இடையிலான உரையாடல்கள் சாரமும் சுவாரசியமும் மிக்கவை.

“நீ உண்மையிலேயே தனியாகத்தான் இருக்கவேண்டும். ஆனால், அது ஒன்றும் உலகத்தில் நடக்கவே நடக்காத ஒன்றல்ல…”

“எனக்குப் புரியவில்லை”

“இப்படிக் கொஞ்சம் நினைத்துப்பார், இன்னொரு மனிதனின் இதயத்தைப் பற்றி உனக்கு என்ன தெரிந்திருக்க முடியும்? அவன் மனதில் உண்மையில் என்னதான் இருக்கிறது? உன் மனைவியைப் பற்றியோ, நெருங்கிய நண்பர்களைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ உனக்கு எந்தளவுக்குத் தெரியும்? எனவே எல்லோர் நிலையும் இதேதான். அடிப்படையில் யாரும் தங்கள் உள்ளத்தின் அடியாழத்திலிருக்கும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை. ஜனார்த்தனன் நான் உன்னிடம் சொல்ல விரும்புவது இதுதான். நீ மட்டும் தனியன் அல்ல. எல்லோரும் அப்படித்தான்.”

என்னுடைய பிரார்த்தனையெல்லாம் இந்தப் புத்தகத்தை தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமான எவரும் படித்துவிடக்கூடாதே என்பதுதான். கழுத்தில், வலதுபக்கக் காதுக்குக் கீழே சரியாக குறிப்பிட்ட அந்தப் புள்ளியில் முடிச்சினை இடவில்லையெனில், தூக்கிலிடப்படுபவரின் உயரத்துக்கும் பருமனுக்கும் ஏற்ப கயிற்றைச் சரியான நீளத்தில் இடவில்லையெனில், ‘வீழ்ச்சி’துல்லியமாகக் கணிப்பிடப்படவில்லையெனில் இறுதிக்கணங்கள் மிகக் கொடூரமான வலியைத் தருவதாக அமைந்துவிடும் என்கிறார். சரியாக நிறைவேற்றப்படாத ஒரு தூக்கைப் பற்றி ஜனார்த்தனன் பிள்ளை இவ்விதமாக விபரிக்கிறார்:


“லிவரை அழுத்துகிறேன். பொறிக்கதவு படாரென்று கீழே திறந்து இருபுறம் உள்ள தூண்களில் மோதிக்கொள்ளும் ஓசை. அந்த மனிதர் குழிக்குள் மறைகிறார்… எல்லா முகங்களும் அந்த விநாடியில் மாறிப்போய்விட்டன. அவர்கள் எதைக் கவனிக்கிறார்கள் என்று நான் பார்க்கிறேன். அது உதறுகிறது. உதறுகிறது. உதறிக்கொண்டேயிருக்கிறது. கடவுளே… ஏன் இப்படி உதறுகிறது? கீழிருந்து அந்த மனிதர் தனக்குள் இருக்கும் அனைத்தையும் வெளியேற்றும் சத்தங்கள் வருகின்றன. முதலில் சிறுநீர்ப்பை பின்பு குடல்கள் அந்த மெல்லிய சத்தங்களாலும், திறந்திருந்த பொறிக்கதவு வழியாக மிதந்து வந்த மெல்லிய நாற்றத்தாலும் நான் குறுகிப் போகிறேன்… நீண்ட… நீண்ட நேரத்திற்குப் பின்பு இறுதியாக கயிறு உதறுவது நிற்கிறது. அவர் இறந்துவிட்டார்.”

தூக்கிலும் அதுவொரு மோசமான தூக்கு! அவர் தன் ‘பணி’யைச் சரிவரச் செய்யத் தவறிவிட்டார். குறைந்த வலியுடனான சாவை அந்தப் பரிதாபத்திற்குரியவனுக்குத் தர இயலாதுபோயிற்று.

“வாழ்வு என்பதே ஒருவகையில் சாவு நோக்கிய பயணந்தான்”என்கிறார் தியாகு முன்னுரையில். அந்தப் பயணத்தின் வழியில்தான் பறவைகளும் வயல்களும் நீர்நிலைகளும் மலர்களும் குழந்தைகளும் இருக்கின்றன-இருக்கிறார்கள். இருபத்திரண்டு ஆண்டுகளாக இருட்டறைகளில் பேரறிவாளனும் முருகனும் சாந்தனும் இழந்த இளமையை, பைசாசமென தூக்குக்கயிறு தலைக்குமேல் ஆடிக்கொண்டேயிருந்தபோது அவர்கள் அனுபவித்த துயரத்தை, துர்க்கனவுகளால் விழித்திருந்த இரவுகளை எந்தத் தீர்ப்பால் மீளப்பெற்றுத்தர இயலும்?அவர்கள் விடுதலையானாலும்கூட சிறையிருந்த இருண்ட காலத்தின் ஞாபகங்களன்றி எஞ்சிய நாட்கள் கழியாது என்பது திண்ணம்.


வெளியீடு: டிசம்பர் 2013, பதிப்பகம்: எதிர் வெளியீடு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2014 18:30
No comments have been added yet.


தமிழ்நதி's Blog

தமிழ்நதி
தமிழ்நதி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow தமிழ்நதி's blog with rss.