ஜெயமோகனின் உலோகத்தில் ணிங்கென்று ஒலிக்கும் தேசபக்தி!

அண்மையில் கனடாவுக்குப் போயிருந்தபோது எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தைச் சந்தித்தேன். ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் தொய்வின்றித் தொடர்ந்த உரையாடல் அது. அந்த உரையாடலில் சொற்கள் தீர்ந்துபோனதாக உணர்ந்த தருணத்தில் இருவரும் எழுந்துவிட்டோம். அ.முத்துலிங்கம், ஜெயமோகனின் எழுத்தைப் பற்றிச் சொன்ன ஒரு வாசகத்தை வழியெங்கும் நினைத்தபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். (இந்த வாசகத்தை எங்கோ வாசித்திருக்கிறேனே…)

"தமிழில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறத் தகுதி வாய்ந்தவராக ஜெயமோகனை வாசிக்கும்போது உணர்கிறேன். அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டாலே அது சாத்தியம். தகுதியானவர்கள் முன்வந்து அதைச் செய்யவேண்டும்"என்றார்.

'காடு'வாசித்திருக்கும் ஒருவர் அந்தக் கூற்றை ஆமோதித்தே ஆகவேண்டும். புனைவுகளில் ஜெயமோகனால் கையாளப்படும் உக்கிரமான மொழிப்பிரவாகத்தில் அமிழ்ந்து போனது பலருக்கும் நிகழ்ந்திருக்கலாம். ஒருவிதமான மன ஆழத்துக்குள் அழைத்துக்கொண்டு செல்கிற மொழி. பித்தின் களிப்பேருவகையும் பதட்டமும் ஒருசேர அளிக்கிற எழுத்து. அதை அவரது கட்டுரைகளில் கண்டதில்லை.

உலோகத்தை புத்தகக் கண்காட்சியில் பார்த்ததும் வாங்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டதற்கு மேற்குறிப்பிட்ட ஈர்ப்பு மட்டும் காரணமாக இருக்கமுடியாது. மேலும், உலோகம் கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடு. 'மேலான எல்லாவற்றையும் மேலோட்டமாக எழுதி விற்றுவிடுகிறார்கள்'என்றொரு எண்ணம் எனக்குள் இருந்துவருகிறது. ஆனால், உலோகத்தின் முன்னட்டையில் ஜெயமோகனின் பெயர் பெரிய எழுத்துக்களில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்க, கீழே இருந்த வாசகம் என்னை ஈர்த்தது. "ஈழப்போர் பின்னணியில் ஒரு திகைப்பூட்டும் திரில்லர்!"

திகிலை அல்லது மரணபயத்தை எப்படித் திரில்லாக்க முடிந்தது என்பதை அறியும் ஒரு சாதாரண ஆவலால் உந்தப்பட்டே அந்தப் புத்தகத்தை வாங்கினேன். 'ஆவல் அறத்தைச் சாய்த்துவிட்டதா?'என்ற கேள்விக்கு, குற்றம் இழைத்துவிட்டதான ஒரு புன்னகையோடு 'ஆம்'என்பதில் நான் ஒன்றும் குறைந்துபோய்விடப் போவதில்லை.

'ஆட்டைக் குளிப்பாட்டி சந்தனம் பூசுவது வெட்டுவதற்குத்தான்' என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உண்மையில் எந்த முன்முடிவும் இல்லாமல் உலோகத்தை வாசிக்கவேண்டும் என்று நினைத்தேன். அண்மைக்காலத்தில் கையில் எடுத்து கீழே வைக்காமல் (இந்த ஒரே மூச்சில் என்று சொல்வார்களே..) வாசித்து முடித்த நாவல் அல்லது திரில்லர் என்றால் உலோகந்தான். அவ்வளவு விறுவிறுப்பாகப் 'பின்னப்பட்ட' கதை. அல்லது உலோகத்தில் பல இடங்களில் ஜெயமோகனால் சாடப்படும் 'கண்மூடித்தனமான' வரலாறு.

கதை இதுதான்: ஈழத்திலிருந்து இயக்கத்தால் அனுப்பப்படும் ஒரு மனித ஆயுதம், (அது இலக்கிய ரசனையுடையது) இந்திய உளவுத்துறையால் பாதுகாத்துப் பராமரிக்கப்படும், முன்னாள் போராளியும் இந்நாளில் துரோகி என்று இயக்கத்தால் சொல்லப்படுபவருமான ஒருவரை எப்படிக் கொன்றது என்பதுதான் கதை. மேலதிகமாகஇ ஈழச்சிக்கலில் இந்திய உளவுத்துறையின் வகிபாகமும் பேசப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த 'வகிபாகம்'என்ற சொல்லை தாம் உட்காரும் இடத்தின் கீழ் வைத்து சிலர் தேய்த்துவிட்ட காரணத்தால் நான் அதை வெறுக்கிறேன்.

"இந்த நாவலில் அரசியல் சார்ந்த ஏதும் இல்லை"என்று, நாவலின் முன்குறிப்பில் ஜெயமோகன் தற்காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், ஒருவருடைய புனைவுலகம் என்பதற்கும் அவருடைய அரசியல் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தம் இருக்கும் என்பதில் நமக்கெல்லாம் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது. ஷோபா சக்தி 'குண்டு டயானா' போன்ற ஒரு கதையை எழுதுவதில் எவரும் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஈழப்பிரச்சனையை முன்னிறுத்தி எழுதப்பட்டது சாருவின் 'உன்னத சங்கீதம்'. அதிலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அந்தச் சிறுகதையில் இந்திய அமைதி (?) காக்கும் படை சிங்களப் பெண்ணொருத்தியை பாலியல் வல்லுறவுக்காளாக்கியிருக்குமாம். 'சனதருமபோதினி'யில் அந்த வரலாற்றுப் புரட்டு வெளியாகியதாகவும் சொல்லப்படுகிறது.

ஈழவிடுதலைப் போராட்டம் வீழ்ச்சியடைந்த பிற்பாடு ஜெயமோகனது கட்டுரைகளில் மொழியப்பட்ட கருத்துக்களை வாசித்தவர்கள் உலோகம் எந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வார்கள். சாருகூட ஈழவிடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியின் பிறகு 'வன்முறையின் தோல்வி'என்றொரு அதியற்புதமான கட்டுரையை எழுதியிருந்தார். அதில், அஹிம்சையால் பேரினவாதம் வெல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற போதனை இருக்கும். ராஜபக்ஷேயிடம் கொஞ்சம்போல அஹிம்சையைக் கேட்டு வாங்கத்தான் ஈழத்தமிழர்கள் நினைத்தார்கள். அதற்குள் இந்தியா என்ற வல்லாதிக்கம் தலையிட்டு கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் மண்ணில் சிதறடித்துவிட்டது. இந்த 'வன்முறையின் தோல்வி'யைச் சிலாகித்து ஜெயமோகன் 'சாருவுக்கு ஒரு கடிதம்' எழுதினார். அதாகப்பட்டது, 'நானும் இதைத்தாங்க சொல்றேன்… புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்க… நல்லாச் சொன்னீங்க'என்று பாராட்டியிருப்பார். மேற்கூறப்பட்ட இரு கட்டுரைகளும் வெளியான பிற்பாடு, 'எந்த நேரத்தில் என்ன கதை பேசுகிறீர்கள்?'என்ற எரிச்சல் மேலோங்கியிருக்கும் கட்டுரை ஒன்றை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார். அதில், நடைமுறையைப் புரிந்துகொள்ளாத அதிமேதாவித்தனத்தை 'அறிவு வேசைத்தனம்'என்று சாடியிருந்தார்.

இந்தியா என்ற தேசத்தின் இறையாண்மையில், அதன் ஜனநாயகப் பண்புகளில், ஒருமைப்பாட்டில், அது குறித்த விழிகசியும் பெருமிதத்தில் மிகுந்த பற்றுறுதி மிக்கவராயிருக்கிறார் ஜெயமோகன். அது அவரது நிலைப்பாடு. ஒருவர் தேசபக்தி மிகுந்தவராயிருக்கிறார் என்பதைக் குறைசொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. ஹிட்லரைப் பின்தொடர்ந்த ஜேர்மானிய மக்களைச் சாட இலாயக்கற்றவர்கள் போல, நாமும் இருந்துவிடுவதே நியாயம்.

ஆனால், வரலாற்றைப் புனைவாக கட்டவிழ்க்கும்போது அல்லது கொஞ்சம் கவித்துவமாகச் சொல்வதானால் மொட்டவிழ்க்கும்போது, அந்த வரலாற்றோடு தொடர்புடையவர்கள் அரங்கிற்கு வந்தாகவேண்டியிருக்கிறது. 'ஆசிரியன் செத்துவிட்டான்'என்று இதற்குச் சப்பைக்கட்டுக் கட்ட வேண்டியதில்லை. ஈழம் என்ற சொல் அரசியல்வாதிகள் உட்பட எத்தனையோ பேருக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கிறது என்பதன் அடிப்படையில், நாகர்கோவிலில் இருக்கிற, நாடறிந்த ஒரு எழுத்தாளருக்கு கதைக்கான கருவைக் கொடுத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சிதான். வானக் கூரையின் கீழ் இருக்கும் அனைத்தைக் குறித்தும் (தமிழ்சார்ந்த, தமிழல்லாத) எழுதிவிடவேண்டும் என்ற அவரது ஆர்வத்தை மதிக்கிறேன். ஆயினும், கீழ்க்காணும் கருத்துக்களைத் தனது கட்டுரையில் விதைத்திருக்கும் ஒருவரால் 'உலோகம்'எழுதப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிட்டு அந்தத் திரில்லரை வாசிக்க முடியவில்லை.

அண்மையில், மிக அண்மையிலிருந்து ஆரம்பிக்கலாம். 'மீனவர்கள் படுகொலைகள்'என்ற இடுகையில், 'மீனவர்கள் கொல்லப்படுவதை இந்தியா கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறதே…'என்ற ஆதங்கத்திற்குப் பதிலளிக்கையில் இந்தியாவை அவர் இப்படித் தாங்கிக்கொள்கிறார்.

"இந்திய ஊடகத்துறையிலும், அறிவுத்துறையிலும் சீன ஆதரவு மனநிலை ஓங்கி ஒலிக்கிறது. இந்தியாவை ஒரு மாபெரும் அடக்குமுறை தேசமாக, ஜனநாயகமற்ற தேசமாக, எதிர்மறைச் சக்தியாக இந்திய மக்களிடையே சித்தரிக்கும் குரல்களே நம் ஊடகங்களில் நிறைந்துள்ளன. அவர்களுக்கு சீனாவின் ஆதிக்கப்போக்கு, சர்வாதிகாரம், தங்கள் மக்கள் மேல் அந்நாடு செலுத்தும் அடக்குமுறை எல்லாமே முற்போக்காகத் தெரிகின்றன."

இது எனக்கு எதை ஞாபகப்படுத்துகிறதென்றால், நான் எனது அண்ணாவைப் பற்றிக் குறை சொன்னால், எனது அம்மா தனது மருமகளைப் பற்றிக் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவதை நினைவுபடுத்துகிறது. 'அண்ணா பொறுப்பில்லாவர்'என்றால், 'அவனுக்கு வந்த மனுசி சரியில்லை'என்ற தொனியில் அம்மா ஆரம்பிப்பார். 'அவனை மொதல்ல நிறுத்தச் சொல்லு… நான் நிறுத்துறேன்'என்ற 'நாயகன்' குரலும் உங்களுக்கு நினைவில் வரலாம்.

இந்தியா ஒரு அடக்குமுறை தேசம் இல்லை. ஜனநாயகத்தைக் கண்ணேபோல் போற்றிப் பாதுகாக்கும் நாடு… இன்னபிறவற்றை காஷ்மீரும், ஈழமும், மணிப்பூரும், நாகாலாந்து, அஸ்ஸாமும் கிழிந்து தொங்குவதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளமுடியும்.

ஒடுக்கப்படும் மக்களுக்காக தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் குரல்கொடுத்துவரும் அருந்ததிராயை, 'அடிப்படையான வரலாற்று உணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததிராய் போன்ற குருவிமண்டைகள்'என்று இகழ்ந்த, தன்னையும் மீறித் தனது காழ்ப்புணர்வை வெளிக்கொட்டிவிட்ட ஜெயமோகன்தான் உலோகத்தை எழுதியிருக்கிறார் என்பதைக்கூட ஒரு வசதிக்காக நாம் மறந்துவிடலாம். 'ஐஸ்வர்யா ராயும் அருந்ததி ராயும்'என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.

"அருந்ததிராயின் நிலைப்பாடுகளில் எப்போதும் மாறாமல் இருக்கும் இரு அம்சங்கள் உண்டு. இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவரது ஆதரவு உண்டு."

சரி… அருந்ததிராய் மேலைத்தேய ஊடகங்களால் விளம்பரப் பவுடர் பால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு ஆரோக்கியமற்ற அரசியல் குழந்தை என்று (ஒரு பேச்சுக்காக) ஜெயமோகனை கொஞ்சம்போல ஏற்றுக்கொண்டு முன்னகரலாம்.

'விடுதலைப் புலிகளை அழிக்கிறேன் பேர்வழி'என்று யுத்தசன்னதம் கொண்டு புறப்பட்ட ராஜபக்ஷவுக்கு முன்பலம், பின்பலம், பக்கபலமாக நின்று முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்று போட்ட இந்தியாவைப் பற்றி 'எனது இந்தியா'என்ற கட்டுரையில் ஜெயமோகன் எப்படிச் சிலாகிக்கிறார் என்றால்….

"இந்த நாடு இன்னமும் ஜனநாயகத்தில் வேரூன்றியதாகவே உள்ளது என்றே நான் நினைக்கிறேன். இங்கே இன்னமும் கருத்துக்களின் குரல்வளை நெரிக்கப்படவில்லை. இங்கே இன்னமும் சிந்தனைக்கு உரிமை இருக்கிறது. இது இன்னமும் அடிப்படையான நீதியில் வேரூன்றியதாகவே உள்ளது. அந்த நீதி இந்நாட்டு எளிய மக்களின் நீதியுணர்வின்மீது நிலைநாட்டப்பட்டுள்ளது.

இந்த நாடு மானுட சமத்துவத்துக்கான வாய்ப்புகளை இன்னமும் முன்வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதற்காக எல்லாப் போராட்டங்களுக்கும் இங்கே இடமிருக்கிறது. ஒடுக்குமுறைக்கும் சமத்துவத்திற்கும் ஊழலுக்கும் சுரண்டலுக்கும் எதிராக இங்கே இன்னமும் ஒன்றுதிரண்டு சமராட வாய்ப்பிருக்கிறது. இந்தத் தேசத்தில் தன் உரிமைக்காகக் கிளர்ந்தெழும் ஒரு குரல்கூட முற்றிலும் உதாசீனம் செய்யப்படுவதில்லை. இங்கே ஒருங்கிணைந்து எழுந்த உரிமைக் கோரிக்கைகள் அனைத்தும் சற்றுப் பிந்தியேனும் எவ்விதத்திலேனும் என்பதை ஐம்பதாண்டுகால இந்திய வாழ்க்கையை கூர்ந்து கவனிப்போர் அறியலாம். இப்போது அரவாணிகள் பெற்றுவரும் சட்ட அங்கீகாரத்தை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு, வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே…'வெல்க பாரதம்'"

இன்று இந்திய குடியரசு தினம். இப்பேர்ப்பட்ட ஒரு பொன்னாளில், மேற்கண்ட சொற்களைத் தட்டச்சவேண்டி நேர்ந்த உடனிகழ்வினையிட்டு உள்ளுக்குள் வியந்தபடி, மனம் நெகிழ்ந்தபடி எழுதிக்கொண்டிருக்கிறேன். கதராடையுடன் எளிமையான தோற்றத்தில் மேடையில் நின்றபடி தனக்கு முன்னால் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்த்து 'வெல்க பாரதம்'என்று கையை உயர்த்தும் ஒரு தன்னலமற்ற தலைவனை (ஜெயமோகனின் சாயல்கொண்ட) மனக்கண்ணில் காண்கிறேன். அந்த தேசபக்தி என்ற பெருவெள்ளம் நான் அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இந்த மேசையின் விளிம்பை நனைத்தபடி மேலேறிக்கொண்டிருக்கிறது.

ஆனால்…

எளிய மக்களுக்கு இரங்கிப் பணியாற்றியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மருத்துவப் போராளி பினாயக் சென் மேற்கண்ட வாசகங்களை வாசிக்க நேர்ந்தால், தனது வேதனைகளையும் மறந்து தொண்டை கிழியும்படியாகச் சிரிக்கக்கூடும். தண்டகாரண்யாவில் உள்ளவர்கள் இதை வாசிக்க நேர்ந்தால் ஒருவருக்கொருவர் பொருள்பொதிந்த கசந்த புன்னகையுடன் கூடிய பார்வையைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளக்கூடும். மக்கள் தொகையில் ஐந்திற்கு ஒன்று என்ற விகிதாசாரப்படி இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரிகளுக்கு மேற்கண்ட வாசகங்களை வாசித்துக் காட்டினால், 'அடப் பாவிகளா'என்று அலமலந்துபோவது உறுதி. இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களால் பலிகொள்ளப்பட்ட பிள்ளைகளது நினைவை நெஞ்சில் சுமந்தபடி வன்னியில் நிராதரவாக அழுதுகொண்டிருக்கும் ஒரு தாயிடம் மேற்குறித்த வாசகங்களைப் பகிர்ந்துகொண்டால்…. மண்ணை அள்ளித் திட்டி கைநீட்டிப் பொரிந்து தள்ளும் சாபங்கள் நிச்சயம்.

'ஒரு குரல்கூட முற்றிலும் உதாசீனப்படுத்தப்படாத நாடென'ப் ஜெயமோகன் புளகாங்கிதப்பட்டுக்கொள்ளும் சனநாயக நாடொன்றின் மாநிலமாகிய தமிழகத்தில்தான், உயிரோடு இருந்து சொல்லமுடியாத, அரசெதிர்ப்புக் குமுறல்களை எழுதிவைத்துவிட்டுத் தன்னையே கொழுத்திக்கொண்டு செத்துப்போனான் முத்துக்குமார் என்ற இளைஞன்.

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மாமியார் வீட்டுக்குப் போகிற மருமகனைப் போல 'நாம் தமிழர்'இயக்கத் தலைவர் சீமான் அடிக்கடி சிறைச்சாலைக்குப் போய் வந்துகொண்டிருப்பதற்குக் காரணம் என்னவென்கிறீர்கள்? கருத்துரிமைச் சுதந்திரந்தான்!

பெரியார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், கவிஞர் தாமரை, அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தடியடி பட்ட ம.க.இ.க.வினர், நீதிமன்ற வளாகத்தில் தமது குருதியால் நீதியை எழுதிய வழக்கறிஞர்கள், 'இனவழிப்புக்கான ஆயுதங்களை இலங்கைக்கு அனுப்பாதே'என்று கோவையில் போராடிச் சிறைசென்ற பெரியார் திராவிடக் கழக உறுப்பினர்கள்… இவர்களிடமெல்லாம் கேட்டால் சொல்வார்கள் 'கருத்துரிமை'யின் முழுமையான கருத்தாக்கத்தை.

புனைவுகளின் அழகியல், நயம், தரத்திற்காக ஒருவரைக் கொண்டாட முடிகிற மனதால், புனைவுகளின் பின்னாலுள்ள அரசியலைக் கொண்டாட முடிவதில்லை. 'உலோகம்'அத்தகைய அரசியலைத்தான் பேசுகிறது. இனிப்புக்குள் நஞ்சு பொதிந்திருப்பதைப்போல.

போராளிகள் மூளைச்சலவை செய்யப்பட்ட, கொலைவெறியேற்றப்பட்ட மனித ஆயுதங்களன்றி வேறில்லை. கண்ணுக்குத் தெரியாத இடங்களிலிருந்து வந்துசேரும் கட்டளைச் சொற்களால் செலுத்தப்படுபவர்கள் என்பதற்குமேல் அவர்கள் யாருமில்லை என்ற நஞ்சு பொதியப்பட்டிருக்கிறது.

'இலக்கியவாதி-அரசியல்வாதி-அறிவுஜீவி'என்ற கட்டுரையில் (உயிரோசை இணைய இதழில் வெளிவந்தது) யமுனா ராஜேந்திரன் சொல்லியிருப்பதை பொருத்தப்பாடு கருதி இங்கு எடுத்துக் காட்டுகிறேன்.

"தமிழகத் தேர்தலை முன்வைத்து அவர் (ஜெயமோகன்) எழுதிய கட்டுரையில், பேரினவாதத்தால் ஈழத்தமிழர்கள் மீதாக சுமத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் வன்முறைகளை, இந்திய தமிழக ஆட்சியாளர்களின் கொள்கைகளால் விளைந்த தமிழகத் தமிழர்களின் வறுமையுடனும் பட்டினி வாழ்வுடனும் ஒப்பிட்டு எழுதுவது ஜெமோவின் நியாயமற்ற செயல்.

ஷோபா சக்தியின் 'கொரில்லா'நாவல் குறித்த பதிவுகள், வலைத்தள விமர்சனம், ஈழத்தின் விடுதலைப் போராட்டம், அதனது ஆயுதப் போராட்டம் குறித்து முன்கூட்டியே ஜெயமோகனின் மனப்போக்கை முன்வைத்த ஆவணங்களாகும். மனிதனின் இயல்பான மிருகத்தனத்திற்கும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறைக்கும் பூடகமாக முடிச்சுப் போடப்பட்ட ஒரு விமர்சன மொழியை கொரில்லா நாவல் விமர்சனத்தில் ஜெமோ பாவித்திருப்பதை எம்மால் உணரமுடியும்."-யமுனா ராஜேந்திரன்.

ஜெயமோகன் 'தேர்தல் முடிவுகள்'கட்டுரையில் செய்ததையே வேறொரு விதத்தில் ஆதவன் தீட்சண்யா மதுரையில் நடந்த 'கடவு'கூட்டத்தில் செய்தார். அதாவது, ஈழத்தமிழர்கள் இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழகத் தமிழர்களின் வறுமையை ஜெயமோகன் பிரதியீடு செய்தாரெனில், ஆதவன் தீட்சண்யா சாதிக்கொடுமையைப் பிரதியீடு செய்து நிரவினார். புதைகுழிகளை, 'அறிவுஜீவிகள்' எதையெதையெல்லாம் வைத்து நிரவமுடியுமோ அதையதையெல்லாம் இட்டு நிரவுகிறார்கள்.

'வெறுப்புடன் உரையாடுதல்'என்ற தலைப்பில், மே 26இ 2009 இல் ஜெயமோகனால் எழுதப்பட்ட கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒரு பங்கு இதேபோன்ற உள்நாட்டுப் போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப் போர்களைக் கண்டும் நாம் என்ன செய்தோம் எனப் பேசுவதில்லை. அந்தப் போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டி வளர்க்க முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கு அறியப்படுகிறார்கள்."

ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஜெயமோகன் 'ஆயுதவெறி'என்ற சொப்புக்குள் அடக்கிவிடுகிறார்.

அந்தச் சொப்பிலிருந்து எடுத்த திரில் மற்றும் திகிலை ஊட்டும் சின்னச் சிமிழ்தான் இந்த 'உலோகம்'.

------- ------ ------

இப்போது, மேலேயிருக்கும் கதை நூலேணியை கீழே இறக்கிப் பற்றிக்கொள்வதன் மூலம் சரசரவென மேலேறிச் செல்லலாம்.

கதை இதுதான்: ஈழத்திலிருந்து இயக்கத்தால் அனுப்பப்படும் ஒரு மனித ஆயுதம், (அது இலக்கிய ரசனையுடையது) இந்திய உளவுத்துறையால் பாதுகாத்துப் பராமரிக்கப்படும், முன்னாள் போராளியும் இந்நாளில் துரோகி என்று இயக்கத்தால் சொல்லப்படுபவருமான ஒருவரை எப்படிக் கொன்றது என்பதுதான் கதை.

உலோகத்தை வாசிப்பவர்கள் ஈழ அரசியலில் ஓரளவு பரிச்சயம் உடையவர்களாக இருந்தால் உடனடியாக இந்தப் 'பலியுயிர்', ஊகித்துவிடுவார்கள். இவ்வாறாக இயக்கத்தின் தேடுபொறியில் பலர் இருந்தாலும், சட்டென நினைவுக்கு வருவது வரதராஜப் பெருமாள்தான். இந்திய 'அமைதி'காக்கும் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோது, அவர்களது கைப்பொம்மையாகச் செயற்பட்டார் என்று விடுதலைப் புலிகளாலும் அவர்களது ஆதரவாளர்களாலும் குற்றஞ்சாட்டப்பட்டவரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா பிரிவு) யின் தலைவரும், அமைதி காக்கும் படையினரால் வடக்கு-கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டபோது அதன் முதல்வராக இருந்தவரும், இ.அ.கா.படையினர் திரும்பிச் சென்றபோது அவர்களோடு கூடவே போய் ஒரிஸ்ஸாவில் பல்லாண்டு காலம் தங்கியிருந்தவரும் (அல்லது தங்கவைக்கப்பட்டிருந்தவரும்), 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கம் வல்லாதிக்க சக்திகளாலும் சதிகளாலும் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பிற்பாடுஇ 2010 ஜூலையில், 'தமிழ் மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக' நாடு திரும்பியவருமாகிய வரதராஜப் பெருமாளே உலோகத்தில் 'பொன்னம்பலத்தார்'என்ற பாத்திரமாக வருகிறார் என்று கற்பிதம் செய்துகொண்டு வாசித்தால் 'வரலாறு' தௌ்ளத்தெளிவாகிவிடுகிறது.

'கொல்'என்ற ஒற்றைச்சொல் கட்டளையுடன் இயக்கத்தால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மனித ஆயுதமான சார்லஸ் முதல் பலியெடுப்பை (சிறீ மாஸ்டரை) வெற்றிகரமாக நிறைவேற்றியபின் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.

"எனக்கென எந்த வஞ்சமும் பகையும் இல்லை. நோக்கமும் இல்லை. எனக்கென எந்த இலக்கும் இல்லை"

சார்லஸ்க்கு நோக்கம் இருக்கிறதோ இல்லையோ ஜெயமோகனுக்கு இருக்கிறது. தன்னால் நிகழ்த்தப்பட்ட கொலையின் அழகை, மு.தளையசிங்கத்தின் 'ரத்தம்'என்ற கதையுடன் பொருத்தி நினைக்கக்கூடிய ஒருவனை, இந்தியா வந்தால் சுந்தரராமசாமியைப் பார்க்கவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஒருவனை வெறும் மனித ஆயுதமாகச் சித்தரிக்க வேண்டிய தேவை எழுத்தாளருக்கு இருந்திருக்கிறது. ஜெயமோகனின் அழகியல் இங்கு இயங்கியிருக்கிறது. உக்கிரமான மொழியழகு.

"மாஸ்டரின் குருதி பெரிய பூ இதழ் விரிவதுபோல விரிந்தது. அதன் விளிம்புகள் தரையின் தூசியைப் பற்றிக்கொண்டு சுருண்டு வளைந்து முன்னால் நகர்ந்தன."

இயக்கத்தால் அனுப்பப்பட்ட ஒருவன், இந்திய உளவுத்துறையின் கையாளாக நடித்து, அவர்களது உத்தரவிற்கிணங்க சிறீ மாஸ்டர் என்பவரைக் கொன்றபின் டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படுகிறான். அங்கு செல்வதன் முன் அவன் ஒரு வேலை செய்கிறான். அதாவது, 'அண்ணை… அண்ணை'என்று தன்னை சகோதரனாகவே பாவித்து கூப்பிட்டபடி பின்னால் திரிந்த இயக்கப் பெடியன் ஒருவனின் மனைவியை டெல்லிக்குப் போவதற்கு முன் புணர்கிறான். இன்னும் கொஞ்சம் புரியும்படியாகச் சொன்னால், டெல்லியில் காத்திருக்கும் பொன்னம்பலத்தாரைப் 'போடுவதற்கு' முன்னால் கர்மசிரத்தையோடு நண்பனின் மனைவியைப் 'போட்டு'விடுகிறான்.

'உலோகம்'கிழக்குப் பதிப்பகத்தில் Paper pack வடிவத்தில் கிடைக்கிறது. மேலும், அது 'ஈழப்போர் பின்னணி'யை அட்டைப்படத்தில் கொண்டிருக்கிறது. மேலும் அதன் விறுவிறுப்புக் காரணமாக புத்தகக் கண்காட்சியிலே நின்ற நிலையிலேயே வாசித்துவிட்டதாக ஜெயமோகனின் வாசகர் ஒருவர் அவருக்குக் கடிதம் போடுகிறார். மேலும், அவர் அதைத் தனது வலைத்தளத்திலே பிரசுரித்திருக்கிறார்.

ஆக, ஈழத்து நிலவரங்கள் அறியாத ஒரு எளிய வாசகனின் மனதில், சாகசங்களை எழுத்தில் தேடும் ஒரு இளைஞனின்- இளம்பெண்ணின் மனதில் ஒரு இயக்கத்தவனின் சித்திரம் எப்படி விழுத்தப்படுகிறது என்பதுதான் இந்த 'அரசியல் சாராத'நாவலின் நுட்பம்.

சார்லஸ் டெல்லிக்குப் போகிறான். அங்கே சகல வசதிகளோடும் இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் தனது இலக்கான பொன்னம்பலத்தாரைச் சந்திக்கிறான். பொன்னம்பலத்தாரிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் சார்லஸ் தனது ஊர் 'அல்லைப்பிட்டி'என்றபோது, எனக்கு சுருக்கென்றது. பொன்னம்பலத்தாருக்குத் தெரியாது சார்லஸ் தன்னைப் 'போட'வந்திருப்பது. அல்லது தனது மகளை 'போட'வந்திருப்பது. அவர் சொல்கிறார். அல்லது அவரது உதடுகள் ஊடாக ஜெயமோகன் சொல்கிறார்.

"அப்ப நான் என்னை ஒரு நெப்போலியன் எண்டு நினைச்சுக்கொண்டு இருந்தனான். இயக்கத்திலே வேறே யாருக்குமே படிப்பு கிடையாது. இங்கிலீஷ் பேசத் தெரியாது. அமெரிக்க வரலாறோ, ஐரோப்பிய வரலாறோ தெரியாது. இந்தியாவிலே இருந்து டிப்ளமேட் வந்தா சந்திச்சுப் பேச அவங்களால முடியாது. சும்மா கள்ளக் கடத்தலுக்குத் தோணி ஓட்டி வளந்த பெடியள். ஆனா எனக்கு எல்லாமே தெரியும். அப்ப நான்தானே தலைவன்? எல்லாரும் என்னைத்தானே ஏத்துக்கிடணும்?"

ஆயிற்றா?

பொன்னம்பலத்தார் பரிதாபத்திற்குரியவர்தான்! அவருக்காக உண்மையில் வாசகர்கள் இரங்கத்தான் செய்வர். இயக்கத்தாலோ இராணுவத்தாலோ எவராலுமோ தேடப்பட்டுக்கொண்டே இருப்பதுஇ உயிருக்காகத் தப்பித்து ஓடிக்கொண்டே இருப்பது என்பதைப் போல மனக்கிலேசம் ஊட்டும் வாழ்வு பித்துநிலைக்கு இட்டுச்செல்லக்கூடியது. மூச்சுவிட இயலாத அந்தரம். தேடப்படுவதை விட தற்கொலை செய்துகொள்ளலாம். 'கோவிந்தன்'வாசித்தபோதும்இ கவிஞர் செழியனின் இன்னொரு நாட்குறிப்புப் புத்தகமும் வாசித்தபோதும் உண்மையிலேயே மனம் வேதனைப்பட்டது.

வைஜயந்தி ஓரிடத்தில் சார்லஸிடம் சொல்வாள்.

"அப்பா சாகாம இந்த ஆட்டம் முடியாது. இது ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆகுது அம்மான். ஒரு ஆயுள்தண்டனை எண்டாக்கூட அது இங்க பன்னிரண்டு வருசந்தான். ராஜீவைக் கொலை செய்தவங்களுக்குக் கூட இங்க ஆயுள் தண்டனைதான் குடுத்திருக்கினம். ஒண்டும் செய்யாம நாங்கள் ஏன் ஆயுள்தண்டனை அனுபவிக்கோணும்?"

நியாயமான கேள்விதான்; ஆயுள் தண்டனை மட்டும் கொடுக்கப்பட்டிருந்தால். வழக்கு மற்றும் தண்டனை விபரங்கள் வைஜயந்தி அறியாதவை. அவள் பாவம். ஜெயமோகனால் உருவாக்கப்பட்ட அப்பாவிக் கதாபாத்திரம். சார்லஸ் என்ற மனித ஆயுதம் அந்த அழகான, அப்பாவியையும் பிறகு திட்டமிட்டு படுக்கையில் சாய்த்துவிடுகிறது. இயக்கத்தில் இருப்பவனுடைய ஒரே உன்னத இலட்சியம் பார்க்கிற, பழகுகிற பெண்களை எல்லாம் படுக்கையில் சாய்ப்பதன்றோ…!

உலோகத்தில் பொன்னம்பலத்தாரைப் பார்த்து ஜெயமோகன் ஒரு நீளமான உரையை ஆற்றியிருக்கிறார். மன்னிக்கவும் சார்லஸ் ஆற்றியிருக்கிறான். அது நிறுத்தாமல் நாலரைப் பக்கம் நீண்டுசெல்வது.

"……..அதன்பின் பாபர், அதன்பின் அக்பர், அதன்பின் நெப்போலியன், அதன்பின் ஹிட்லர்… அத்தனை பேரும் 'வரலாறு காத்திருக்கிறது'என்றுதான் கூவியிருப்பார்கள். ஆனால், இந்தப் பெரிய தலைகள்கூட வரலாற்றில் இல்லை. இருப்பது அவர்களின் பெயர் மட்டுமே. அவர்கள் யார் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவர்களின் கனவுகளும் பயங்களும் சஞ்சலங்களும் எதுவுமே வரலாற்றில் இல்லை. அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் அவர்களை எப்படிச் சித்தரித்தார்களோ அப்படி அவர்கள் வரலாற்றில் இடம்பெற்றார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் தாங்கள் மூழ்காமல் மிதக்க விழைந்தார்கள். அதற்கு, மேலும் விட்டில்களை வளர்க்க விரும்பினார்கள். ஆகவே அவர்களுக்கு முன்னுதாரணம் தேவைப்பட்டது. பாபர் வாளைத் தூக்கி ஜெங்கிஸ்கானின் பெயரைச் சொல்லி அறைகூவியிருப்பார். பாபரின் பெயரை அக்பர் சொல்லியிருப்பார். அவ்வளவுதான் அவர்களின் வரலாற்று முகம். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை. வரலாறு என்பது ஒரு மாயை. இன்றைய வரலாற்று நாயகர்கள் இன்று அவர்கள் தப்பிப் பிழைப்பதற்காக நேற்றைய வரலாற்றை உருவாக்குகிறார்கள்."

புரிகிறதா வாசகப் பெருமக்களே…! எனக்கு நன்றாகப் புரிந்தது. வரலாறு என்று ஒன்றுமில்லை. பிரதியை எழுதி முடித்ததும் 'ஆசிரியன் செத்துவிட்டான்'என்றாலும், சஞ்சீவி மருந்தையோ மாயத்தையோ கொண்டுவந்து ஆசிரியரை உயிர்ப்பித்து எழுப்பி நான் சொல்வேன்…"எனக்கு நன்றாகப் புரிகிறது."

இந்த வரலாற்றிலிருந்து அற்றுப் போகும் விதி, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் எங்கள் மதிப்பிற்கு உரியவராய் இருக்கிற மகாத்மா காந்தி அவர்களுக்கும் பொருந்துமா என்று அறிய விரும்புகிறோம்.

சார்லஸ் ஓரிடத்தில் சொல்கிறான்.

"குண்டடி பட்டபோது நான் நர்ஸிங் கூடத் தெரியாத இயக்கத்துப் பெண்களால்தான் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டேன். இங்கே ஒருவேளை ஒரு நல்ல டாக்டர் முள்ளை எடுப்பதைப் போல அதை எடுத்துவிடக் கூடும்"

அப்படியா?

பொன்னம்பலத்தாரின் மகள் வைஜயந்தி சார்லஸிடம் காதல் வயப்பட்டபின் நெருக்கமாக இருக்கும்போது சொல்வாள்.

"அப்பா சொல்லுவாங்கள். ஒரு நாளைக்கு மொத்த ஈழச் சனத்தையும் அவங்கள் துரோகி எண்டு சொல்லிப் போடுவாங்கள் எண்டு"

அங்கே என்ன 'மியாவ்'என்று ஒரு சத்தம்… அது உங்களுக்குக் கேட்கிறதா? ஆம்… பூனை வெளியில் வந்துவிட்டது. இது 'கொரில்லா'படித்த, இந்திய தேசபக்த, இறையாண்மையைக் கொண்டாடும் பூனை.

அது மேலும் என்ன சொல்கிறதென்று கேளுங்கள்.

இயக்கத்தால் மனித ஆயுதமாக அனுப்பப்பட்டவன்தான் சார்லஸ் என்று இந்திய உளவுத்துறைக்குத் தெரிந்துபோகிறது. அவர்கள் சார்லஸை மிகக் கடுமையாக மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்கிறார்கள். அவன் கேட்கிறான்.

"நான் இயக்கத்திலை இருந்தா டீலுக்கு வருவேன் எண்டு நினைக்கிறியளோ…?"

அதற்கு அவர்கள் சொல்கிறார்கள்.

"அது நீங்க சின்ன ஆளா பெரிய ஆளாங்கிறதைப் பொறுத்தது. சின்ன ஆள் யாருமே டீலுக்கு வர்றதில்லை. பெரிய ஆள்னா டீலுக்குப் பிரச்சனையே இல்லை. உங்களுக்குத் தெரியாதுன்னு நெனைக்கிறேன். இந்த இயக்கத்திலே ஒரே ஒருத்தர் தவிர வேற எல்லாருமே எங்ககிட்ட எப்பவாவது பேரம் பேசினவங்கதான்."

அந்த மட்டில் பிழைத்தோம்!

முப்பதாயிரம் போராளிகள் தங்கள் இளமை வாழ்வை மண்ணுக்காகத் துறந்து புதைந்துபோனார்கள். அந்தப் போராளிகளை 'பேரம் பேசிய பேமானிகள்'என்கிறது இந்தப் புனைவு.

தங்களது அடிப்படை வாழ்வுரிமைகளுக்காகப் போராடும் எளிய மக்களை, உள்நாட்டினுள்ளும் கடல்கடந்தும் ஆயுதக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்குகின்றன அரசாங்கங்கள். அவற்றைத் தட்டிக் கேட்காமல், அதன் தாளத்திற்கு இயைபுறும் தேசபக்த கோசங்களையும் புனைவுப் புண்ணாக்குகளையும் எழுதிப் பெருக்கிக்கொண்டிருக்கிறார் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய ஒரு எழுத்தாளர். இத்தகையோரை வாசிக்கும்போது, பேரினவாத சிங்களச் சமூகத்தில் பிறந்தபோதிலும், ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சகோதரர்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்த காரணத்தால் கொன்று பழிதீர்க்கப்பட்ட லசந்த விக்கிரமதுங்க, காணாமலடிக்கப்பட்ட ஊடகவியலாளரும் கார்ட்டூனிஸ்டுமாகிய பிரகீத் எக்னெலிகொட, இலங்கையிலிருந்து தப்பியோடி மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் நிமல்கா ஃபெர்னாண்டோ மற்றும் 'இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே'என அறுதியிட்டுக் கூறும் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரின் ஞாபகம் வருகிறது. முத்துக்குமாரும் அவனோடு செத்துக் கரிந்த பதினொரு பேரும் நினைவில் வருகிறார்கள்.

சொந்த மக்களைப் பயங்கரவாதிகளாக்கி அந்நியப்படுத்தும் அரசாங்கங்களும், அந்த உண்மை தெரிந்தும் தெரியாதாராக கண்மூடித்தனமாக 'சல்யூட்'அடிக்கும் தேசபக்தர்களும் திருந்தவோ தங்கள் மேல் தெறித்திருக்கும் அப்பாவி சனங்களின் குருதியையிட்டு வருந்தவோ போவதில்லை.

இதைத்தான்'அறிவு வேசைத்தனம்'என்பது. (வார்த்தைக்கு நன்றி: எஸ்.ரா.)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2011 21:20
No comments have been added yet.


தமிழ்நதி's Blog

தமிழ்நதி
தமிழ்நதி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow தமிழ்நதி's blog with rss.