பூனையின் கனவு


எங்கிருந்து இதைத் தொடங்குவது என்று தெரியவில்லை.தொடங்கினால் வளரவும் தன்னைத்தான் முடித்துக்கொள்ளவும் அதற்குத் தெரியும்.நாற்காலியில் நம்மைக் கொண்டுவந்து இருத்துவதுதான் பாடு.பல நாட்களாக வலைப்பூவில் ஒன்றுமே எழுதவில்லை."கீற்று.காம்"இன் யானை நீண்டநாட்களாக அமர்ந்திருக்கிறது.எழுந்திருக்க முடியாத ஆகிருதிபோலும்.கருத்தளவே ஆகும் கனம்.சம்பங்கி,உமா ஷக்தி, ஈரோடு கதிர், கே.பி.சுரேஷ்,செல்வகுமார்(மைசூர்)இன்னுஞ் சிலர் (மின்னஞ்சலில் தேடிப் படம்காட்டப் பஞ்சியாக இருக்கிறது)வலைப்பூவை ஏன் காற்றாட விட்டிருக்கிறீர்கள் என்று கடிந்தும் கனிந்தும் சொன்னார்கள்.ஒவ்வொருதடவையும் பாஞ்சாலி சபதம் நடக்கும்.பாண்டவர்கள் வென்றதுமில்லை.கூந்தலை முடிந்ததுமில்லை.

கனடாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. புதுவிளக்குமாறு அற்புதமாகக் கூட்டியது. நல்லவேளையாக இலையுதிர்காலத்தின் அழகு முற்றிலும் உதிர்ந்துவிடமுன்னதாக வந்து சேர்ந்தேன்.சிவப்பும் மஞ்சளும் பச்சையும் கபிலநிறமுமாக...இலையுதிர்காலத்தைக் காணாத கண்ணென்ன கண்?இசை செவிகளை நனைக்க நடப்பதாகச் சில நாட்கள் பேர்பண்ண முடிந்தது.நடக்கப்போகும் வழியில் வெளியில் கட்டிப்போட்டிருந்த பனிநாயின் கண்களைப் பார்த்து இரங்காமலிருக்க முடியவில்லை.ஏனைய நாய்களைவிட அதற்குக் குளிர் அதிகமாகத் தேவைப்படும்போல... என்று நினைத்தாலும் மனது சமாதானம் ஆகவில்லை.மனதிலிருந்து அந்த நாயை இறக்கிவிட முடியவில்லை.

அவ்வளவு சுத்தமான, அகலமான, அதியழகான நடைபாதையில் தனித்து நடந்துசென்றது சிலநாட்கள் விசித்திரமானதொரு உணர்வைத் தந்துகொண்டிருந்தது.ஒருவேளை மனிதசமுத்திரம் ததும்பிவழியும் சென்னைமாநகரத்திலிருந்து நேரடியாக வந்து இறங்கியது காரணமாக இருக்கலாம்.மெல்லிய குளிர் தோலுக்கு இதம்.நடந்த வழிகளில் நின்றிருந்த பெருமரங்களிலிருந்து இலைகளும் பூக்களும் காற்றில் ஒய்யாரமாக மிதந்து இறங்கி தரையில் சென்று படியும் நளினத்திற்கு ஏதும் ஈடில்லை.

வெளியில் குளிர் அச்சுறுத்தத் தொடங்கிவிட்டது.தேன்நிலவு முடிந்து எல்லோரும் அவரவர் வேலைக்குத் திரும்பிவிட்டார்கள்.மிகப்பெரிய சீனியாஸ்(இங்கு வேறு ஏதோ பெயர்)பூக்களைத் தாங்கிக்கொண்டிருந்த செடிகள் இரண்டும் தரையோடு படுத்துவிட்டன.மலர்கள் இருந்த இடத்தில் அடையாளத்திற்குக் குச்சிகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன.சன்னல் சட்டகத்தினுாடாக அழகான ஓவியமெனத் தெரிந்துகொண்டிருந்த பெருமரம் தன் மஞ்சள் இலைகளை உதிர்த்துவிட்டு அதீத மௌனத்தோடு நின்றுகொண்டிருக்கிறது.நினையாப் பிரகாரம் புசுக்கென்று இலை துளிர்க்கும் காலத்திற்காக அது காத்துக்கொண்டிருக்கிறது.நீலத்தில் வெள்ளைத் தீற்றல்கள் கொண்டிருந்த வானம் துயரமுகம் கொண்டதாகிவிட்டது.

பத்துமணிக்கு எழுந்திருந்தால் கூடத்தில் வெயில் பார்க்கலாம்।யன்னலினுாடாக ஒளிக்கற்றை இறங்கி சோபாவில் படுத்திருக்கும்.துாசிகள் சுழன்றாடும் வெயில்குழல்.அரிதிலும் அரிதான வெயிலைக் கொண்டாடும் கூதிர்காலத்திற்குள் ஏறத்தாழ நுழைந்தாயிற்று.

நாலரை மணிக்கெல்லாம் இருட்டிவிடுகிறது. இரவெல்லாம் இணையத்தினுள் தலையைக் கொடுத்துக்கொண்டிருந்துவிட்டு பின்னிரவில் உறங்கச் செல்பவர்களுக்கு காலை இல்லை. சிலருக்கோவெனில் மதியமும் இல்லை.இரவில் உறங்கப்போய் இரவிலேயே விழித்தெழுவதான காலமயக்கம்.பெரும்பாலான நாட்கள் ஞாபகத்தை உரசிப் பார்த்து இரவா பகலா என்று நிச்சயப்படுத்திக்கொண்டு எழுந்திருக்கவேண்டியதாயிருக்கிறது.

நிசப்தம்...அப்படியொரு நிசப்தம்!பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பேசும் ஒலிகூடக் கேட்பதில்லை."த்தா... செவுட்டில ஒண்ணு வுட்டா மூஞ்சி பெயர்ந்து போகும்"-"வாயை மூடிக்கொண்டிரு... பல்லுக் கில்லெல்லாம் உடைச்சுப் போடுவன்"ம்கூம்...யாரும் சண்டை பிடிப்பதாகத் தெரியவில்லை.தொலைக்காட்சியில் கொலை, தற்கொலை செய்திகளை நாளாந்தம் பார்க்கமுடிகிறது.இரகசியமாக சண்டைபோட்டு, இரகசியமாக அழுது, இரகசியமாகத் தற்கொலை செய்துகொள்வார்களாயிருக்கும்.எல்லோரும் கார்களில் விசுக்கென்று செல்கிறார்கள்.வீதிகளில் ஒரு குருவியையும் காணேன்.செவிகளுக்கு இதமான ஒரு விடயம்... அநாவசியமாக யாரும் "ஹாரன்"எனப்படும் காதுகிழிப்பானை உபயோகிப்பதில்லை.அப்படியொரு கருவி பொருத்தப்பட்டிருப்பதை மறந்துவிட்டாற்போலிருக்கிறார்கள்.

இப்படியொரு வீதி ஒழுங்குள்ள நாட்டில் வாகனச் சாரதிப் பத்திரம் எடுக்கப் பயந்து இருக்கும் என்போன்ற பயந்தாங்கொள்ளிகளுக்கு வெளி மறுக்கப்பட்டிருக்கிறது. கணவரைச் சார்ந்திருக்கும் மனைவியாய் காத்திருப்பு நீள்கிறது. பேருந்தில் திரியலாமென்றாலோ தோல் வலிக்கக் கிள்ளும் குளிர் அச்சுறுத்துகிறது.

சத்தம் இல்லாத தனிமை"வேண்டாம் அஜித்.ஹோ ஹோவென இரைந்தபடி விரையும் சனக்கூட்டத்துள் ஒரு கறுப்பு மனுஷியாய் கலந்துவிட விழைகிறது மனம்.சாக்குப்பைக்குள் கட்டி பனங்கூடலுக்குள் விட்டாலும் பிய்த்துக்கொண்டு ஊரைப் பார்க்க ஓடிவந்துவிடும் பூனைக்குட்டிகள் உதாரணம் பழசுதான்.எனினும், மீண்டும் மீண்டும் காலுரசும் வாஞ்சை அதைப் புதுப்பிக்கிறது.

பூனையொன்று தன் வட்டக் கண்களை உயர்த்தி வானத்தைப் பார்க்கிறது.பஞ்சுப்பொதி மேகங்களை என்னமாய் வகிர்ந்து பறக்கிறது விமானம்.மேகங்களுள் மிதந்து மழைக்காலம் மலர்த்தியிருக்கும் மரக்கூட்டம் நடுவினில் சென்று இறங்கும் கனவோடு அது இன்றைக்கும் உறங்கச் செல்கிறது.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2010 09:42
No comments have been added yet.


தமிழ்நதி's Blog

தமிழ்நதி
தமிழ்நதி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow தமிழ்நதி's blog with rss.