சாதி

                                      சாதி

எத்தனை பெயர்களடா, அதில் எத்தனை சாதியடா?
அத்தனையும் சொல்வது நம் கலாச்சார பெருமையவா ?
இல்லை நம் வாழ்வியல் பெருமையவா? அல்லது 
அவை மானுடத்தை ஒன்றிணைக்கும் உன்னத சக்தியோ?
எத்தனை பெயர்களடா, அதில் எத்தனை எத்தனை சாதியடா?
ஆயிரம் பெயர்கள்- அதன் ஒரே வடிவம் அடிமைத்தனம்!
ஆயிரம் பெயர்கள் - அதன் ஒரே விளைவு பாகுபாடு! இந்த
சமூக கட்டமைப்பும், அதன் கேடான வெளிப்பாடும் சரிதானா?
கறை படிந்த நிலைதான் இதுவெனில்,
இந்நிலையை மாற்ற நாம் போராட வேண்டாமா ?
தொன்மைபெற்றது, பழமையானது, இடையில்வந்தது -
என எதுவாக இருப்பினும், சாதி ஓர் கேடு!
முற்போக்கு சமுதாயத்தின் கேடு!
போலியான இந்த பழம்பெருமையை வேரோடு அறுப்போம்!
மனிதனை மனிதனாய் பார்க்கும் மானிட கோட்பாட்டை விதைப்போம்.
நாயர், ஐயர், பாண்டே, யாதவ், ஷா, தேவர், உடையார்
கௌண்டர், அகர்வால், ரெட்டி , நாடார் , சோனி -
குடும்பபெயர் அல்ல இவை. சாதி பெயர் இவை!
இது தான் நம் நேரம், சாதி பேயை விரட்டியடிக்க !
இது தான் நம் நேரம் சமத்துவத்தை உயிர்த்தெழுப்ப!
பெருமை பிறப்பில் இல்லை; பெருமை பழம்பெருமையில் இல்லை.
பெருமை நீ வாழும் வாழ்க்கையில்; பெருமை நீ செய்யும் நற்ச்செயலில்!
ஒற்றை பூமி, ஒற்றை வாழ்கை
- இதில் இத்தனை வேறுபாடு தேவைதானா?
ஒன்றாய் இணைந்து, உலகம் வியக்க மேலோங்கி நிற்கவேண்டாமா ?
காக்கையும், குருவியும் நம் சாதியல்லவா?
கழுகும், களிறும் நம் இனம் அல்லவா? எத்தனை
உயிர்களடா, அதில் எத்தனை வாழ்வியல் அர்த்தங்களடா!
இத்தனையும் அனுபவிக்க வந்த மானிடன் நம்மிடையே
இத்தனை பாகுபாடு இனியும் தேவையில்லையடா
உன் பாட்டானும், அப்பனும் கேக்காமல் போகட்டும்.
உன் பையனும், பேரனும் உண்மையை அறிந்து கேட்பான்.
சாதி பெயர்களை களைந்து எறி!
சாதியை சான்றிதழை கிழித்து எறி!
ஒற்றை உலகம், ஒன்றே மானிடம் எனும் தத்துவம் வளரட்டும் 
.
இனியும் பூமியில் சாதியை தூக்கிப்பிடிக்கும் ஒரே நாடக
இந்தியா இருக்க முடியுமா?
இனியும் சாதி பெயர்கள் கொண்ட பெயர்களாக
இந்தியா பெயர்கள் மட்டும் இருக்க முடியுமா ?
ஒன்று இணையுங்கள், மாற்றம் உங்களை அழைக்கிறது!
அவனும் அவளும் காதல் செய்து,
அவனும் அவளும் மணந்து கொள்ளட்டும்.
அவனையும், அவளையும் தடுக்கும் - சாதி எனும்
தடைக்கல் தகற்றட்டும்.
சாதி அகன்று காதல் மேலோங்கட்டும்.
தமிழனாய் ஓர் படி மேலே தான் நிற்கின்றோம் நாம்.
பெரும்மான்மை இங்கு சாதிப்பெயரை அகற்றியது!
சாதியை பெயரிலிருந்து மட்டும் அல்ல
மனதில் இருந்தும் அகற்றும் காலம் இது.
ஊரும். சேரியும் ஒன்றாய் சேரும் நேரம் இது.
முற்போக்கான இந்தியா வளர்ச்சியை நிர்ணயம் செய்யட்டும்.
முற்போக்கான தமிழகம் வளர்ச்சியை நிர்ணயம் செய்யட்டும்.
முற்போக்கு ஏவுகணையிலும், செயற்கைகோள்களிலும் இல்லை.
முற்போக்கு சிந்தனையில், செயலில் துவங்கி
சமத்துவம் பாராட்டும் சமூகத்தில் இருக்கின்றது.
சமநிலை சமூகத்திற்காக நீ போராடவில்லை என்றால்
இத்தனையும் நீ படித்து என்ன பயன்?
நீ செய்ய விரும்புவதை கூட செய்ய இயலவில்லை என்றால்
இத்தனை போராட்டம் செய்து பெற்ற சுதந்திரத்தின் பயன் என்ன?
பேதமை கொண்ட அடிமையாக இனியும் இருப்பது சரியோ?
-------- TheCritics
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2017 10:41
No comments have been added yet.