அக்காக் குருவி.
ஒரு கட்டத்தில் நம்முடைய காதுகள் அன்றாடங்களில் இருந்து விலகிய ஒரு குரலுக்கு, ஒரு ஒலிக்குக் காத்திருக்கின்றன. மற்றெல்லா இரைச்சலுக்கான வாசல்களையெல்லாம் அடைத்துவிட்டு, ஏதோ ஒரு அது விரும்பும், அது தவிக்கும் ஒரு ஒலி இழைக்கு, ஒலியின் கீற்றுக்கு மட்டும் காதுகள் தன்னைத் திறந்து வைத்திருகின்றன. குருத்தெலும்புகளால் ஒரு மடல் போல் புறத்தே மடிந்து விரிந்திருக்கும் அவையூடே ஒரு காத்திருப்பின் வெயில் ஊடுருவிச் சிவந்து அப்பால் போவதைப் பார்க்க முடியும். வனத்தில் எங்கோ வரும் பெரு மிருகத்தின் காலடி அதிர்வை மண்ணில் உணரும் புழுப்போல், எங்கோ சருகடியில் ஊரும் ஒரு புழுவின் அசைவை நுண்ணுணரும் ஒரு பெரு மிருகமாகக் காதுகள் காத்திருக்கின்றன.
கோபாலுடைய காதுகள், என்னுடைய காதுகள் எல்லாம், பிப்ரவரி முடிந்து மார்ச் ஆரம்பிக்கும் போதே ‘அக்காக் குருவி’யின் குரலுக்கு ஏங்க ஆரம்பித்து விடும். முதல் அக்காக் குருவியின் குரலைக் கேட்பதற்காக, அவனும் நானும் எங்கள் வாழ்வின் அனைத்து ஓசைகளையும் அதன் சிதறிக்கிடத்தலில் இருந்து ‘ ஒதுங்க வைக்க’ ஆரம்பித்துவிடுகிறோம்.
இன்றைக்கு ஒரு யூ ட்யூபைப் பார்க்கிறேன். எல். சுப்ரமணியன் என்ற பெயரைப் பார்த்தாலே கேட்க ஆரம்பித்துவிடும் கிறுக்கு இருக்கும் எனக்கு, அவரும் அவருடைய மகன் அம்பி சுப்ரமணியனும் பஹுதாரி ராகத்தில் வாசிக்கும் ப்ரோவ பாரமா ஓடுவதைத் தாண்டமுடியவில்லை. இத்தனைக்கும் எனக்கு பஹுதாரி ராகம், ப்ரோவ பாரமா இரண்டின் திசையே தெரியாது. அவற்றுக்கும் அப்பால் அந்த இருவரின் வயலின் வில் மற்றும் நரம்புகளில் இருந்து பெருகும் ஏதோ, வழியும் ஏதோ ஒன்று என்னைத் தொடுகிறது. நான் அதைத் தொட முயல்கிறேன். தழுவிக்கொள்ள முடியாதைத் தொட விரும்பும் தொடல் அது.
அக்காக் குருவிக் குரலிலும் அப்படி ஒரு மாயம் இருக்கிறது. எவ்வி எவ்வி, எக்கி எக்கி உயர்த்தும் அந்தக் குரலில் இருக்கிற ஒரு தாபம், ஒரு ஏக்கம் எனக்கு கோபாலுக்கு எல்லாம் வேண்டியது இருக்கிறது. அக்காக் குருவியின் முதல் கூவல் கேட்டவுடன் எங்கள் வேனில் துவங்கிவிடுகிறது. எங்கள் வசந்தம் வந்து விடுகிறது. எங்கள் தெரு வேப்பம் பூக்கள் பூத்துவிடுகின்றன.
இன்று அதிகாலை எங்கள் வீட்டுச் சன்னல் கம்பிகள் வழியாக அந்த வேனில் வந்தது. இந்த வெள்ளிக்கிழமையின் முதல் குரலை அந்த அக்காக் குருவி தந்தது. சென்ற கோடையின் அதனுடைய கடைசிக் கூவலில் இருந்து அதன் நீட்சியாகத் துவங்கி இந்தக் கூவலில் அது சிதம்பரம் நகர் தெருவுக்கு ஒரு புதிய கோடையை விநியோகிக்கத்தொடங்கியிருந்தது.
அந்த அக்காக் குருவித் தொன்மக் கதையில் அக்காக்காரியை வெள்ளத்தோடு அடித்துக்கொண்டு போன ஆறு எனக்குள் ஓடத் துவங்கியிருந்தது. ‘அக்கோவ், அக்கோவ்’ என்ற இந்தச் சத்தம் என்னை ஒரு தங்கச்சியாக ஜோஸ் சார் வீட்டு மாமரக் கிளையில் உட்கார்த்திவைக்கிறது. இன்னொரு வகையில் சுழியும் கசமுமாக நுரைத்தோடும் இந்த வாழ்வில் அடித்துச் செல்லப்படும் அக்காக் குருவியாக என்னைப் பதறச் செய்கிறது.
நான் அடித்துச் செல்லப்படுகிறேன். ’அக்கோவ், அக்கோவ்’ என்கிற குரலைப் பார்த்தால் கோபாலுடையது போலவே இருக்கிறது.
அப்படித்தானே அந்தக் குரல் இருக்கவும் முடியும்.
Published on March 12, 2020 23:16
No comments have been added yet.
Vannadasan's Blog
- Vannadasan's profile
- 85 followers
Vannadasan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

