பின்னிரவில் திறந்திருக்கும் ஜன்னல்கள்.
இரண்டு மூன்று இரவுகள் மிகவும் பிந்தித்தான் படுக்கைக்குச் செல்கிறேன். அறையின் ஜன்னல் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
இந்தப் பகுதிக்கான இரவுக் காவல்காரரின் இரண்டாவது சைக்கிள் சுற்றின் அழுத்தமான ஊதல் சத்தத்தில் அனேகமாகச் சிதம்பரம் நகர் மரங்களின் அனைத்து இலைகளும் அதிர்ந்து அடங்கியும் விடுகின்றன. சமீபத்தில் அவர் வர்ணித்த நெடும் பாம்பு எப்படி அவருடைய அந்தப் பிருபிருவென்ற கடுமையான சத்தத்திலும் சுருண்டு தெருவிளக்குக்கும் எங்கள் வீட்டு வாசலுக்கும் நடுவில் கிடந்தது என்று தெரியவில்லை. சைக்கிளின் பின்னால் செருகியிருந்த லாட்டியை - அவர் அப்படித்தான் சொன்னார் - உருவுவதற்குள் அது போய்விட்டதாகக் காட்டிய செடிகளின் திசையில், அவர் சொல்லி முடித்த இரண்டு நாட்களுக்குப் பின்னும், எனக்கு ஒரு அவசரமாக மறையும் வால் நுனி தெரியத்தான் செய்தது.
நான் நிசி தாண்டிய பிறகு, பின் வீட்டு மாமரக் கிளையில் இடம் பெயரும் ஒரு பறவைக்காகக் காத்திருப்பதுண்டு. வேனல் காலங்களின் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு சாமத்தின் பொழுதில் ஒரு குளிர்ந்த காற்றுப் பரவ ஆரம்பிக்கும். எனக்கு அந்த நேரம் முக்கியம். அப்போதுதான் பெருமாள் புரம் காவல் நிலையத்திற்கு எதிரே இருக்கும்/இருந்த இரண்டு மரங்களின் உச்சியில் ஒரு ஆரஞ்சுத் தகடு வேய்ந்தது போல பூத்திருக்கும் வாதமடக்கி மலர்களின் வாசம் இந்த ஜன்னல் வரை வந்து என்னை அடையும். அதற்கு எவ்வளவு தூரம் வரையும் வந்துவிடத் தெரிந்திருந்தது.
வாதமடக்கிப் பூ வாசனை வந்துவிட்டால் வேனல் காலம் வந்துவிட்டதாகவே அர்த்தம். செவ்வாய் வெள்ளிகளில் சின்ன வயதில் அம்மாச்சிகள் சொன்ன கதைகளில் வரும் சிறு தெய்வங்கள் நடமாட்டம் போலத்தான் அந்த வாசனை. எங்கிருந்து எங்கே வேண்டுமானாலும் அடிக்கும். முன்னதன் தலைப்பாகை கட்டிச் சுருட்டுப் பிடிக்கும் நடமாட்டம் தெரியாவிட்டாலும் சற்றுப் புளிப்பான, அந்த ஆரஞ்சு நிற வாதமடக்கிப் பூ வாசனை உலவித் திரிவதை என்னால் உணர முடிந்தவனாய் இருக்கிறேன்.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. எங்கள் சுடலைமாடன் கோவில் தெரு வீட்டு மாட்டுத் தொழுவுக்கும் வென்னீர் அறைக்கும் அடுத்து ஒரு பெரிய வாதமடக்கி மரம் இருந்தது. மிக மூத்த மரம். தன் வாழ்வின் அத்தனை வெயிலையும் மழையையும் பார்த்துவிட்ட நிறைவில், இனிப் பார்க்க எதுவும் இல்லை என்ற பூரணத்தில் கொல்லம் ஓடு வேய்ந்த புறவாசல் பகுதி ஒன்றின் மேல் சாய்ந்து கிடப்பது.
என்னுடைய ஏழு முதல் பதினோரு வயதின் பக்கங்கள் எல்லாம் அந்தக் கொல்லம் ஓடுகள் மேலும் வாதமடக்கிக் கிளைகளிலும் தான் எழுதப் பட்டிருந்தன. நான் அந்த ஓடுகளில் ஒன்றிரண்டை நொறுக்கியபடி, அந்த வாதமடக்கிப் பூக்களின் வாசத்தை நுரையீரலில் நிரப்பியவனாக அதனுடைய நிழல் என் மேல் அசையும் படி கிடப்பேன். நான் சாப்பிட இறங்கி வந்து தட்டின் முன்னால் உட்கார்ந்திருக்கும் போது கூட, வெயிலும் நிழலுமாக என் மேல் அந்த இலைகள் அசைவது போல இருக்கும். அந்த அசையும் நிழலையே முதல் கவளமாக நான் உண்டிருக்கிறேன்.
அது கொத்துக் கொத்தாகப் பூக்கிற வகை. (அதன் மொக்கு ஒரு சிறுவனுடைய இளம் குறி போல இருப்பதாகப் பின்னால் தோன்றியிருக்கிறது. ).நான் அந்தப் பூவைப் பறித்து அதன் புளிப்புச் சுவைக்காக அவ்வப்போது தின்றுகொள்வேன். யாரும் இல்லாத நேரத்தில் அந்த வயதிலேயே, தொழுப் பக்கத்தில் நின்று, புறவாசல் பைப் அடியில் இருந்து, லீலாச் சின்னம்மை வீட்டுக்கும் குச்சுவீட்டுக்கும் பக்கத்தில் ஒரு ஆட்டுரல் கிடக்கும், அதிலிருந்து எல்லாம் அந்த வாதமடக்கி மரம் பூத்துக்கிடப்பதைப் பார்ப்பேன். நான் பயிரிட்ட நிலம் விளைந்துகிடப்பதைப் பார்ப்பது போல என்ற உதாரணத்தை இந்த வயதில் சொல்ல வருகிறது. அப்போது அதெல்லாம் தெரியாது. ஆனால் அப்படிப் பார்ப்பது பிடித்திருந்தது.
அதற்கப்புறம் காய்ப்புக் காலம் வரும். பெரிய அவரைக்காய் போல, புடைத்துத் தெரிகிற விதைகளோடு பட்டை பட்டையாய் எல்லாக் கிளைகளிலும் தொங்கும். எங்கிருந்து இவ்வளவு கிளி வருமோ தெரியாது. வாதமடக்கி மரத்தில் கிளி மொய்த்துக்கொண்டு இருக்கும். கன்றுக்குட்டிச் சத்தம் எல்லாம் கூடச் சிறிதாக அடங்கி, ஒரே கிளிச் சத்தமாக இருக்கும். கொல்லம் ஓட்டின் மேல் சாய்ந்து கிடக்கும் கிளைகளில் தலைகீழாக கிளி ஒவ்வொரு காயாகக் கொத்திக் கொண்டே அடுத்த கிளைக்குத் தவ்வும். இரண்டு பறந்து போனால் இரண்டு வந்து உட்காரும். பந்தைக் கைமாற்றிக் கைமாறிக் கூடைப் பந்து ஆடுவது போல ஒரு கிளி பறக்கும் போது எறிந்த கிளிச் சத்தத்தை இன்னொரு கிளி அப்படியே அந்தரத்தில் கவ்வி வாங்கியபடி வாதமடக்கிக் கிளையில் வந்து உட்காரும்.
அப்படி ஒரு கிளிச் சத்தம் கேட்கும் என்றுதான், அப்படி ஒரு வாதமடக்கிப் பூவாசம் அடிக்கும் என்றுதான் ஒருவேளை , என்னை அறியாமலே ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்தபடி இருக்கிறேனோ என்னவோ. எல்லா வீடுகளிலும் எங்களைப் போலவே மகன் மகள்கள் எல்லாம் வெளியூரில் இருக்க, இரண்டே இரண்டு பேர் இப்படி பின்னிரவுகளில் விழித்திருக்கும் ஒருவருடன் இருக்கிறார்கள். ஒன்று மாற்றி ஒரு வீட்டிலாவது ஒரு அறையில் விளக்கு அணைக்கப் படாமல் வெளிச்சம் தெரிகிறது.
ஒரு முதிய பெண் எல்லோர் வீட்டுப் படுக்கையிலும் அயர்ந்து படுத்துக் கிடக்கிறாள். அவர் இதுவரை வாழ்ந்த வாழ்வின் அத்தனை காலத்தின் வெளிச்சமும் ஒரு கை விளக்குப் போல அவர்களின் மேல் விழுந்திருக்கிறது. பச்சைப் பிள்ளையாகிவிட்டது போல, எலும்புகளை அழுத்தாத படுக்கை விரிப்புகளை அவர்களின் பழைய சேலைகளில் இருந்து அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர்களை அந்தத் தோற்றத்தில் கும்பிட மட்டுமே தோன்றும். கும்பிடக் கூட முடியாது. விதை நெல் இருந்த ஒரு தானியக் குதிரின் முன் அமைதியாக நிற்பது போல நிற்கலாம். நான் இப்போது அப்படித்தான் நிற்கிறேன்.
இப்போது கிளிச் சத்தம் எல்லாம் கேட்க வேண்டாம். திறந்து வைத்திருக்கும் ஜன்னல் வழியாக, அந்த வாதமடக்கிப் பூ வாசனை நிரம்பிய குளிர்ந்த காற்றுக் கொஞ்சம் போல வந்தால் போதும். மழைத் தண்ணீர் தரையில் பெருகிக் கொண்டே நகர்ந்து வருவது போல, அந்தக் காற்றுக்குத் வரத் தெரியாமலா போகும் ? வரும். நான் நிற்கிற இடம் வரை வந்து, சத்தம் காட்டாமல் , உறங்கும் அந்த முகத்தின் மேல் பெருகும்.
தொட்டில் குழந்தையின் முகத்தில் வரும் நரிவிரட்டும் அற்புதச் சிரிப்பு, தூக்கத்தில்புரண்டு படுக்கும் ஒரு எழுபது வயது மனுஷியின் முகத்தில் வரும் எனில் அது எவ்வளவு கனிவாக இருக்கும்.!
Published on March 02, 2020 09:12
No comments have been added yet.
Vannadasan's Blog
- Vannadasan's profile
- 85 followers
Vannadasan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

