ஒரு வரலாற்று உண்மை
ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படத்தை அநேகமாக இந்தியாவில் அனைவரும் பார்த்திருப்பார்கள்.
அதில் வரும் ஒரு முக்கியக் காட்சி.
வைஸ்ராய் லார்ட்பவுண்ட்பேட்டன் மாளிகையில் இந்தியப் பிரிவினைக் குறித்துக் இறுதிக் கட்டக் கூட்டம் நடைபெறுகின்றது.
முஸ்லீம் லீக் தலைவர் மொகம்மது அலி ஜின்னா, காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, பட்டேல், காந்கிரஸ் கட்சித் தலைவர் மௌலான ஆஸாத் முதலியோர் வைஸ்ராய் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இறுக்கமான மௌனம் நிலவுகிறது.
காரணம், காந்தியடிகள் நாட்டுப் பிரிவினை கூடாது, இந்துக்களும், முஸ்லீம்களும் சகோதர்ர்கள் என்று மன்றாடுகிறார்..
ஜின்னா பாகிஸ்தான்தான் தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறார்.
நேரு, பட்டேல் ஆகியோர், பிரிவினைக்கு இணங்கி விட்டார்கள்.
அப்பொழுது அறைக்கதவை லேசாகத் தட்டும் ஒலி கேட்கிறது.
வைஸ்ராய் மாளிகை சிப்பந்தி தேநீர்த் தட்டை ஏந்தி வருகிறார்.
காந்தியடிகள் உடனே எழுந்து அறை வாசலுக்குச் சென்று அவரிடமிருந்து அத்தட்டை வாங்குகிறார். அவர் முகத்தில் திகைப்பு, கலவரம்!
அங்கு உட்கார்ந்திருந்த அனைவர் முகங்களிலும் வியப்புக் குறி. ஜின்னா முகத்தில் மட்டும் ஆச்சர்யம் அவ்வளவாக இல்லை. இதை அவர் எதிர்பார்த்திருக்கலாம். காந்தியடிகளை அவர் நன்கு அறிந்தவர்.இருவருமே குஜராத்திகள்!
காந்தியடிகள் சிப்பந்தியைச் சைகை மூலம் போகச் சொல்லுகிறார். சிப்பந்தி வைஸ்ராய் முகத்தைப் பார்க்கிறார். அம்முகத்தில் சலனம் ஏதுமில்லை.
சிப்பந்தி கதவைச் சாத்திக் கொண்டு போகிறார்.
அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் தேநீர் கோப்பையைக் கொடுத்துக் கொண்டே, காந்தியடிகள் ஜின்னாவைப் ஏறிட்டு நோக்காமல் மிக இயல்பாக்க் கேட்கிறார்;
‘ மிஸ்டர் ஜின்னா, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நீங்கள் இருக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு மனதாக விரும்பினால் நீங்கள் சம்மதிப்பீர்களா?’
அனைவரும் திடுக்கிடுகின்றனர்!
ஜின்னா அங்கிருந்த நேரு, பட்டேல் ஆகியோர் முகங்களை கூர்ந்து கவனிக்கிறார்.
ஜின்னாவும் காந்தியடிகளும் இதைப் பற்றி ஏற்கனவே பேசி இருக்க்க் கூடுமென்ற குறிப்பு. ஜின்னா சொல்லியிருக் க் கூடும்: ‘ நிச்சியமாக உங்கள் கட்சித் தலைவர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்’’
‘பாபுஜி, இதென்ன, பேச்சு வார்த்தைகள் இக்கட்டத்துக்கு வந்து விட்ட பிறகு. நோ.’ என்கிறார் நேரு.
அவரைப் பட்டேலும் ஆமோதிக்கிறார்.
ஜின்னா காந்தியடிகளைச் சற்றுப் பரிதாபத்துடன் பார்க்கிறார்.
காந்தியடிகள் செயலற்ற முக பாவத்துடன் தம் இருக்கையில் வந்து அமர்கிறார்.
காந்தியடிகளைச் சித்திரிக்க இந்த அற்புதமான காட்சி போதும்!
1947 நள்ளிரவு சுதந்திர விழாவில் காந்தியடிகள் பங்கேற்கவில்லை.
Indira Parthasarathy's Blog
- Indira Parthasarathy's profile
- 74 followers

