கண் மலர்தல்
என் முடிவில் நான் பிடிவாதமாக இருந்தேன். அப்பா என் பிடிவாதத்துக்கு எப்போதுமே மசிந்துவிடுவார். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்து என்னை திருச்சியிலிருந்து அழைத்து செல்ல அப்பாவும் அம்மாவும் வந்திருந்தார்கள். தம்பி பாட்டியுடன் ஊரில் இருந்தான். விடுதியறையை காலிசெய்து பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக் கொண்டு ஊர் செல்லவேண்டும். ரெண்டுநாள் தங்கி சுற்றிப்பார்த்து விட்டு செல்லலாம் என முடிவு செய்தோம். அதற்கு வாகாக கௌரி பெரியம்மாவின் அண்ணன் அருணகிரி மாமா திருச்சி மெயின்கார்ட் கேட்டை ஒட்டிய பகுதியில் குடியிருந்தார். அவர் வீட்டில் தங்கி சுற்றிப் பார்க்கலாம் என முடிவுசெய்தோம்.
எல்லாம் ஏற்கனவே பார்த்த முக்கொம்பு, கல்லணை, ரயில்வே மியூசியம், ஒரு பெரிய சர்ச், உச்சிப் பிள்ளையார் கோவில் என்று பட்டியலிட்டார் என் அப்பா.

’’போங்கப்பா, திரும்பத் திரும்ப பாத்ததையே பாத்தா போரடிக்கும். என்ன ஸ்ரீரங்கம் கூட்டிட்டு போங்க. அந்தக் கோயில் நான் பாக்கணும்’’என்றேன்.
’’அதுக்கு தனியா பஸ் புடிச்சி போகணும் பாப்பா, அது எல்லா கோயில் மாரிதான். வேற விசேஷம் ஒண்ணும் இல்ல. நம்ம மன்னார்குடி, திருவாரூர் கோயில் மாதிரிதான் அதுவும்’’.
’’இல்ல. எனக்கு அதக் கண்டிப்பா பாக்கணும்பா. கோவில் கோபுரமும், பிரகாரமும் ரொம்ப அழகாயிருக்கும். போற ரூட்டும் ரொம்ப அழகாயிருக்கும்னு எங்க ஃபிசிக்ஸ் பேபி டீச்சர் சொன்னாங்க. நான் பாத்தே ஆகணும்…ம்ம்ம்.’’ என்று சிணுங்கினேன்.
”அதுதான் அடம் புடிக்குதுல்ல, போயிட்டுதான் வருவோமே”’ என்றாள் என் அம்மா. அம்மாவுக்கும் ஆசையிருந்தது. என்னை சாக்கு வைத்தாள்.
’’சரி, போலாம்’’ ஒத்துக்கொண்டார் அப்பா.
இரவு கிருஷ்ணவேணி மாமி பூரி சுட்டுக்கொண்டே ”அருணா, விடியக்காலைல சீக்கிரம் எந்திரிச்சு கெளம்புவியா? நாளைக்கு ஒரு விசேஷம். திருப்பள்ளி எழுச்சி, அதிகாலை பூஜை இருக்கு. காலைல அஞ்சு மணிக்கு நட வாசல் தெறப்பாங்க. போலாமா?’’ என்றார்.
நள்ளிரவு என்று சொன்னால் கூட நான் ’சரி’ என்றிருப்பேன். ஆவல் தூண்டியது. ’’போலாம் மாமி. சீக்கிரம் எழுப்புங்க’’. படுத்துக் கொண்டோம்.
அதிகாலை சத்திரம் பஸ் ஸ்டாண்டில் போய் முதல் வண்டியில் கிளம்பினோம். பேருந்தில் கூட்டமில்லை. வெளியே எங்கும் கும்மிருட்டு. வந்து தழுவிய காற்றில் மிதமான குளிர். காவிரி சோகையான நிலவொளியில் வெள்ளியாக மின்னியது. மனம் இலேசாக எண்ணங்களற்று மிதந்தது.
மெல்ல எனக்குள் பாடிக்கொண்டேன். ’’திருபாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக. இனி தனிமையில்லை, பகல் இரவுமில்லை, நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக”.
கோவிலை நெருங்கினோம். ராஜ கோபுரத்தின் உச்சி விளக்கொளியில் எல்லா கோபுரங்களும் தனிமையில், ஒவ்வொரு மனநிலையில் தவம் செய்வதாக எனக்குத் தோன்றியது. இல்லை, அந்த அமைதி அப்படி தோன்றவைத்தது. கருநீல வானில் எக்கணமும் சாம்பல் ஒளி ஊடுருவும் போல் தோன்றியது.
மாமி கூறியிருந்தாள். வடக்கு, தெற்கு இரு வாசல்களும் எந்நேரத்தில் வேண்டுமானாலும் திறக்கும். திறந்ததும் ஓட வேண்டும். போய் டிக்கெட் எடுக்கவேண்டும். முதல் நூறு பேரை மட்டுமே அனுமதிப்பார்கள். அப்பா ’நான் வரவில்லை. வெளியில் நின்றுகொள்கிறேன் ’என்றார்.
திறந்தவுடன் நான் ஆவலில் கண்மண் தெரியாமல் ஓடினேன். பட்டுப் பாவாடை தடுக்கி விழத் தெரிந்தேன். மூன்றுபேரும் டிக்கெட் எடுத்துப் போய் அமர்ந்தோம். கல்தரையின் குளிர்ச்சி, துளசி நீரின் மணம் இரண்டும் புத்துணர்ச்சியைத் தந்தன. பூஜைப் பொருட்கள், மலர்கள் எல்லாம் மிகப் புதியதாக அழகுடன் வைக்கப்பட்டிருந்தன.
அப்பூஜையின் அர்த்தம் முதல் நாளே மாமி என்னிடம் சொல்லியிருந்தாள். விஷ்ணுவை அதிகாலைத் துயில் எழுப்புவதுதான் அச்சடங்கு. எழுந்ததும் அவர் மங்கலம் நிரம்பிய பொருட்களைப் பார்ப்பார். பின் மங்கலம் நிரம்பிய உயிர்களைப் பார்ப்பார்.
திரை மெதுவாக விலக பாகவதர் ஒருவர் இலேசாக கனைத்தபடி மிக மெல்லிய குரலில் மென்மையாக தமிழ் பதிகம் எதையோ பாடினார். அந்த இனிமை ஆனந்தக் கண்ணீரை வரவைத்து என் மனம் பொங்கியது. இத்தனை மென்மையாக விஷ்ணுவை எழுப்புவார்களா? ஏதோ குழந்தையின் காதில் நாம் செல்லம் கொஞ்சி எழுப்புவதுபோல் இருக்கிறது. விஷ்ணு ’போங்க’ என்று புரண்டு படுக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

பிறகு மிக அழகாக அலங்கரிக்கப் பட்ட காராம் பசுவைப் போன்ற ஒரு நாட்டுப் பசு வந்து மெல்ல நின்றது. பழுப்பு நிறத்தில் உடம்பு, நெத்திச்சுட்டி மட்டும் வெள்ளை. அதனை தொட்டாற் போன்று அழகிய கபில நிறக் குதிரை ஒன்று, அதைத் தொடர்ந்து ஒரு யானை. ரொம்பக் குட்டியும் இல்லை, பெரிதும் இல்லை .சர்வ அலங்காரத்துடன் வந்தது.
யானையை நான் கொஞ்சம் சாய்ந்து கையை நீட்டினால் தொட்டுவிடலாம். அவ்வளவு பக்கத்தில் நின்றது. ஏதோ வரைந்த கோட்டின் மேல் நடப்பது போல் நடந்துவந்து அமரிக்கையாக சாதுபோல் நின்று கொண்டிருந்தது. தும்பிக்கையை உயர்த்தி சமர்த்தாக மூன்றுமுறை ’பாய்ங், பாய்ங்’ என்று பிளிறியது. விஷ்ணுவின் திருபள்ளியெழுச்சி முடிந்தது. மூன்றும் திரும்பி போய்விட்டன. நான் என்னை மறந்து இக்காட்சிகளை பார்த்தபடியிருந்தேன்.
பிறகு விஷ்ணுவின் கரிய திருமேனியை பள்ளிகொண்ட கோலத்தில் பார்த்தேன். கண்ணை நிறைக்கும் கருமை. ஆசைதீர அக்கருமையை பருகினேன். ஒரு கையை தலைக்கு அணையாகத் தாங்கி ஆதிசேஷன் குடைபிடிக்க ஒருக்களித்து துயில்வதுபோல் தோன்றியது. சரிந்து மூடிய இமைகள். பிறகு அவருக்கு அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்தனர். மலர்கள், தூபங்கள் காட்டப்பட்டு பூஜை நடந்தேறியது. எங்களுக்கு துளசி நீரும், பிரசாதமும் வழங்கப்பட்டது.
மூலவர் சன்னதியிலிருந்து பிரகாரத்துக்கு வந்தபோது நன்கு விடிந்திருந்தது. மனம் அந்த ரூபத்தையே வரித்துக் கொண்டிருந்தது. கோபுரங்களை பார்வையிட்டோம்.
நான் அம்மாவிடம் ’’ ஏம்மா, விஷ்ணு பசுமாடு, குதிரை, யானை இதத்தான் மொதல்ல பாக்குறார். நம்மள பாக்க மாட்டார் போல, லேட்டாதான் பாக்குறார்.’’ என்றேன்.
’’ஆமா, அவர் பாக்குற நேரம் நீ கொட்டாவி விட்டேன்னுவை, திரும்ப அவருக்கு தூக்கம் வந்துரும்ல’’ என்று சிரித்துக்கொண்டே அம்மா சொன்னாள்.
’போம்மா’, என்று சிணுங்கியபடி அணைத்துக் கொண்டேன்.
வெளியில் வந்து அப்பாவிடம் ’போலாம்பா’ என்றேன். அப்பா ’காஃபி குடிப்போம்’ என்று சொன்னார். அதே வீதியில் இருந்த ஒரு ’பிராமணாள் கஃபே’ யில் நுழைந்தோம். மிகச் சுத்தமான ஹோட்டல். கல்லாவில் பழுத்த பக்தர் போன்ற ஒரு பிராமணர். அங்கும் ஊதுபத்தி, பூஜைப் பொருட்களின் வாசனை. அந்த ஹோட்டலில் டேப் ரெகார்டரில் ஒலித்த பாடல் என்னை சிலிர்க்கச் செய்தது. அந்த அமைதியில், என் மனம் விரும்பிய லயத்தோடு ஒலித்தது ஒரு கம்பீரக்குரல்.
பச்சைமாமலை போல் மேனி,
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே,
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே!
அப்பாவிடம் கேட்டேன். ’’இது யார் எழுதினதுப்பா?’’
’’ஆழ்வார்கள்ள ஒருத்தர். தொண்டரடிப் பொடியாழ்வார்.’’
அந்தத் தொகையறா என்னை வசமிழக்கச் செய்தது. என்னைக் கேட்டாலும் நான் இப்படித்தான் சொல்வேன். என் பெருமாளே! இந்திர லோகம் வேண்டுமா என்றாலும் வேண்டாம் என்றுதான் சொல்லுவேன். என் மனம் நெகிழ்ந்து நெக்குருகியது. நீர் நிரம்பி உழுதிட்ட வயல் போல் மனம் இளகி நிற்கிறது. உன் கரிய திருவுருவம் என் கண்ணையும் மனதையும் நிறைத்து நிற்கிறது.
பாடல் தொடர்கிறது.
ரங்கபுர விஹாரா… ஜெய கோதண்ட ராமா…வதார ரகுவீரா…
முத்துசாமி தீக்ஷிதர் கீர்த்தனை. பாடல் முடிந்தது. காஃபி குடித்துக் கிளம்பினோம். திரும்பும் வழியில் கொள்ளிடமும் காவிரியும் கிளைபிரிந்து ரங்கபுரத்தை அணைத்து உள்ளங்கையில் வைத்துக் கொள்வது போல் தோன்றியது. பேருந்தின் ஓரத்தில் உட்கார்ந்து கண்ணெட்டும் தொலைவு வரை அலையடித்த நெல்வயல்களைப் பார்த்தபோது ” பச்சைமாமலை போல் மேனி’ மட்டும் மனதில் திரும்பத் திரும்ப ஓடியது. ஆம், இதுவும் விஷ்ணுரூபம்தான்.
முப்பது வருடங்கள் கழித்து என் மனதில் அதே புலர்காலையும், கரிய விஷ்ணுவும் பச்சை வயல்வெளிகளும் அதே துல்லியத்துடன் நிகழ்ந்தன. அந்தக் காலையின் குளிரையும் நான் உணருமளவு என் மனதில் அதை மீண்டும் நிகழ்த்தினார் ஹரீஷ் சிவராமகிருஷ்ணன்.’ பச்சை மாமலைபோல் மேனி’ என்று அவர் தொடங்கும் கணங்களில் என் மனதில் நான் பதினேழு வயது அருண்மொழியாக மாறினேன். அதே அளவுகடந்த ஆவலும், அரைவேக்காட்டுத்தனம் நிரம்பிய அந்த வெகுளித்தனமான பிடிவாதமும் கூடிய அருண்மொழியாக.
இசைக்கு நம்மை காலப்பிரயாணத்தில் முன்னும் பின்னுமாக கொண்டுசெல்லும் ஒரு வல்லமை உண்டு. இப்பாடலிலும் ஹரீஷ் ’பச்சைமாமலை போல் மேனி’ என்ற எனக்குப் பிடித்த தொகையறாவில் ஆரம்பிக்கிறார். ’ரங்கபுர விஹாரா’ புதிய கிடார், கீபோர்டின் இன்னிசையுடன் ட்ரம்ஸின் துடிப்புடன் நிகழ்த்தப்படும் போது அது வேறு ஒரு பரிமாணத்தில் என்னை வந்து ஆட்கொள்கிறது. அதே பிருந்தாவன சாரங்கா ராகம்.
ஹரிஷ் ஐந்தாறு வருடங்களாக கேரளத்தின் புதிய இசைமுகம். பித்துப் பிடித்த ரசிகர்கள் அவருக்கு உண்டு. சாஸ்திரீய பாணியில் புதிய மேற்கத்திய இசைக் கருவிகளின் பின்னணியில் அதை நமக்கு தருகிறார். அகம் [AGAM] என்ற ஒரு பேண்ட் வைத்து கேரளம் முழுதும் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். நான் கொடுத்திருக்கும் இணைப்பு அவர் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் திருவனந்தபுரத்தில் ’நிஷாகந்தி’ எனப்படும் திறந்தவெளி அரங்கில் நிகழ்த்தியது.
மிகக்குறைந்த இசைக் கலைஞர்கள். ஒரு பேஸ் கிடார், இரண்டு லீட் கிடார் கலைஞர்கள், இரண்டு ட்ரம்ஸ் , ஒரு கீபோர்ட் கலைஞர். அவ்வளவுதான். கடைசி இரண்டு நிமிடங்கள் கிடார் கிட்டத்தட்ட ’ஹோட்டல் காலிஃபோர்னியா’ வால்ஷ் மற்றும் ஃபெல்டரை நினைவுறுத்துகிறது. ட்ரம்ஸும் அதன் அழகைக் கூட்டுகிறது.
ஒருமுறை மீண்டும் அந்த கார்மேக வண்ணனின் ரூபம் மனதில் எழுகிறது. அரங்கபுரத்தை இல்லமாகக் கொண்டு துயில்பவன். என் மனமெனும் அரங்கினை ஆள்பவன்.
***
பின் இணைப்புகள்:
***
***
அருண்மொழி நங்கை's Blog
- அருண்மொழி நங்கை's profile
- 4 followers

