ஊழல் எழுதும் ‘குற்றமும் தண்டனையும்…’
முன்னொருகாலத்தில்
இங்கு நதிகள் சுழித்தோடின
பறவைகள் கிக்கிக்கென்றிடும் ஓசையுடன்
காடுகள் மலர்ந்திருந்தன
வயல் வரம்பின் மீது அமர்ந்து
கதிர்களின் மினுக்கத்தைப் பார்த்திருந்த
காலங்கள் போயின என் மகளே…!
நதிகளின் மேலிருந்து
புகைவிடுகின்றன தொழிற்சாலைகள்
காடுகளிலிருந்து விரட்டப்பட்ட
நம் சனங்களின் இதயம்
உனது ஆடைபோலவே
கந்தலாகி விட்டது.
அழாதே அன்பே!
முன்னொரு காலத்திலே
எங்களுக்கொரு நிலம் இருந்தது
வானில் நிலவும்
மேலதிகமான
ரொட்டித் துண்டுகளும் இருந்தன.
மனித உரிமைப் போராளி மேதா பட்கர் ‘சிவில் சொசைட்டி’என்ற சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் ‘அரசியல் ஊழல்’என்ற ஒரு வார்த்தையைப் பிரயோகித்திருந்தார். இந்தியாவின் இன்றைய நிலைமையை அந்தச் சொல்லாடல் முற்றிலுமாகப் பிரதிபலித்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான (வெளிச்சத்துக்கு வந்த) ஊழல்களின் சூத்திரதாரிகள் கார்ப்பரேட் பணமுதலைகளும் அவர்களுக்கு பின்பலமும் பக்கபலமும் கொடுத்துத் தாங்கி நிற்கும் அரசியல்வாதிகளுமாக இருக்கக் காண்கிறோம்.
ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல், ஸ்பெக்ட்ரம் இரண்டாவது அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் தொடர்மாடி ஒதுக்கீடு விவகாரம், ஜார்கன்ட் மாநிலத்தின் மது கோடா ஊழல், காமன்வெல்த் போட்டி-2010 ஊழல் என்று பட்டியலிட அயர்ச்சியளித்து நீண்டுசெல்லும் ஊழல்களில் மேற்கண்டவர்களின் முகமூடிகள் தொடர்ந்து கிழிந்து செல்கின்றன. ஆகையினால், அவர்கள் மக்கள் சந்நிதானத்தில் தலைகுனிந்து நிற்கிறார்கள் என்றெல்லாம் கதைவிடப் போவதில்லை.
அரசியல்வாதிகளும்-கார்ப்பரேட் முதலாளிகளும்-தாதாக்களும்-சார்புநிலை ஊடகங்களும்-காவற்துறையும்-அரச அதிகாரிகளும் இணைந்து சாமான்ய மக்களின் மீது நிழல் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே குறிக்கோள் - பணம். பணத்திற்காக அதிகாரம் - அதிகாரத்திலிருந்து பணம் என்ற சுழற்சி முறையில் மேற்கண்டவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தேர்தல் காலங்களில் மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி அவர்தம் கால்களைப் பிடிப்பதெல்லாம் ‘மக்கள் சேவை… மகேசன் சேவை’என்ற நல்லெண்ணத்தினாலன்று. இந்தியா என்ற தேசத்தைக் கொள்ளையடித்து, தமது ‘மக்களுக்கு’ நல்வாழ்வு வழங்குவதற்காகவே. அத்தகையோரின் பேராசை சிலசமயங்களில் சறுக்கி பத்துக்குப் பதினைந்தடி திஹார் சிறையறையினுள் முடிந்துவிடுவதும் உண்டு.
“ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்?”என்ற டால்ஸ்டாயின் நெடுங்கதையை உங்களில் பலர் வாசித்திருக்கக்கூடும்.
“இதோ கண்முன் பரந்து கிடக்கிறதே இந்த நிலம் முழுவதும் எங்களுக்குச் சொந்தமானதுதான்… எவ்வளவு தூரம் நீ நடந்துபோய் வருகிறாயோ அவ்வளவு நிலமும் உனக்கே சொந்தம். சூரியன் சாய்வதற்குள் வந்துவிடவேண்டும்.”என்றார்கள் அவர்கள்.
பேராசை பிடித்த பாஹொம் போனான்… போனான்… போனான். அவ்வளவு தூரம் போனான். திரும்பிச் செல்ல முடியாது போய்விடுமோ என்ற பயத்தில் மூச்சு இரைக்கத் தொடங்கியது. ஆடைகள் வியர்வையில் நனைந்து ஒட்டிக்கொண்டன. வாய் உலர்ந்து விட்டது. இதயம் வேகமாகத் துடித்தது. கால்கள் அவனுக்குச் சொந்தமில்லாதன போல தொய்ந்து தொங்கின.
அவன் கீழே விழுந்தான். கைகள் நீண்டு அடையாளமாக வைத்துவிட்டுப் போன தொப்பியைத் தொட்டன. வேலைக்காரன் வேகமாக ஓடிவந்து அவனை எழுப்ப முயன்றான். பாஹொமின் வாயிலிருந்து இரத்தம் ஒழுகியது. அவன் இறந்துவிட்டான்!
“வேலைக்காரன் மண்வெட்டியை எடுத்து பாஹொமிற்கு (எசமானனது பெயர்) அளவான ஒரு குழியைத் தோண்டி அதனுள் அவனைப் புதைத்தான். தலையிலிருந்து கால்வரை அவனுக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஆறடி நிலம் மட்டுமே.”
‘ஸ்பெக்ட்ரம்’விவகாரத்தில் சிக்கி சிறைக்குள் இருக்கும் கனிமொழி டால்ஸ்டாயை வாசித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இது ஒருவரின் வீழ்ச்சியில் எக்களிக்கும் துர்க்குணமன்று. நண்பர்கள் அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளிமையானவராகவும், வாசிப்பையும் எழுத்தையும் நேசிப்பவராகவும், தந்தையின் அரசியல் வெளிச்சத்தில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல்- தனக்கென சுய ஆளுமைகளை வளர்த்துக்கொண்டவருமாகிய கனிமொழியை அதலபாதாளத்தில் தள்ளியிருப்பது பணத்தின் பாலான ஈர்ப்பு எனும் சாத்தானே.
ஒரு சில வழக்குகளிலன்றி ஏனையவற்றில் ‘சந்தேக நபர்கள்’, ‘தூய அரசியல்வாதிகள்’ நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள். எந்தத் தரப்பு ஆட்சியில் இருக்கிறது, அதன் எதிர்காலக் கணக்கீடுகள், இலாபநட்டங்களைப் பொறுத்து அமைவனவே குற்றமும் தண்டனையும்.
ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கையூட்டுப் பெறவில்லை (ஏமாற்றியது, அரசுக்கு இழப்பீடு நேரக் காரணமாக இருந்தது என்ற திசைமாறியிருக்கிறது) என்று பெப்ரவரி, 2004இல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி இவ்வாண்டு மார்ச் மாதம் ‘தகுந்த ஆதாரங்கள்’இல்லாத காரணத்தால் அந்த வழக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டிருப்பதும் இந்தியாவில் ‘குற்றமும் தண்டனையும்’ இயங்கும் முறைக்கு எடுத்துக்காட்டாகும். குவாத்ரோச்சி 64 கோடி ரூபாய்களை இலஞ்சமாகப் பெறவில்லை என்பதைக் கண்டுபிடிக்க இந்தியப் புலனாய்வுத் துறை 21 ஆண்டுகளையும் 250 கோடி ரூபாய்களையும் செலவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வராகிய செல்வி ஜெயலலிதா மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு, அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இன்மையால் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் கார்ப்பரேட் பணமுதலைகளின் தயவில் இயங்குகிறதென்றால், அதை வட்டியோடு திருப்பிக் கொடுக்கவேண்டிய கடப்பாடு உடையதாகிறது அரசாங்கம். இந்த அதிகார-முதலாளித்துவ கொடுக்கல் வாங்கலின்போது, அரசின் சட்டங்களும் ஷரத்துகளும்கூட தளர்த்தப்படுகின்றன. சட்டமீறல்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. அதற்குப் பிரதியுபகாரமாக அரசியல்வாதிகளின் மாளிகைப் பின்கதவு வழியாக உள்ளே பிரவேசிக்கிறார் குபேரன்.
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General) அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதாவது, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமானது, கிருஷ்ணா-கோதாவரியை அண்மித்த இயற்கை எரிவாயு விவகாரத்தில், அரசுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதற்கு பெட்ரோலியத் துறை அமைச்சு அனுமதித்துள்ளது அல்லது கண்டுகொள்ளாமலிருந்திருக்கிறது என்பதே அந்த எரிச்சல் அல்லது கடுப்பு மிகுந்த குற்றச்சாட்டாகும். அவ்வாறு ‘சிறப்புச் சலுகை’செய்ததன் வழியாக தேசத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். பெட்ரோலியத் துறை அமைச்சராக முர்ளி தியோராவை நியமிக்க காங்கிரசிடம் பரிந்துரைத்தவர் முகேஷ் அம்பானியே என்பதை, ஊடகத்தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலின் ஒரு பகுதி உறுதிப்படுத்தியிருக்கிறது. பெட்ரோலியத் துறை அமைச்சர் முர்ளி தியோராவும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதோடல்லாமல், திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களாகவும் இருக்கும் காரணத்தால், தேசத்தின்-மக்களின் பணத்திற்கு நாமம் போட்டுவிடலாம் என்று நினைத்திருந்தால், அது அத்தனை எளிதானதில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி உணர்த்தியிருக்கிறார். ஆனால், ஒரு சில நியாயமுள்ள அதிகாரிகளின் விசனங்களை அரச தரப்பு பொருட்படுத்தாமல் முன்னகர்ந்து செல்லும் என்பதை கடந்தகாலம் கற்பித்திருக்கிறது.
குடும்பத்திற்குள் நடக்கும் அதிகாரசார்பு-முதலாளித்துவ பரிவர்த்தனைகளுக்கு உலகின் மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்கள் இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோ குடும்பத்தினராவார். அவர்களையடுத்து யார் இடம்பெறுவர் என்பதை வரலாறு குறித்துக்கொண்டிருக்கிறது. இனிவருங் காலங்களில் அந்தப் பட்டியலில் நமக்குப் பரிச்சயமான பெயர்கள் இடம்பெறலாம்.
1967-1998 வரையிலான 31 ஆண்டு காலம் இந்தோனேசியாவை ஆண்ட சுகார்த்தோவும் அவரது பிள்ளைகளும் அந்நாட்டை எப்படிச் சுரண்டிக் கொழுத்தனர் என்பதை வாசிப்பவர்கள் மலைத்துப்போவார்கள். அதிகாரத் துஷ்பிரயோகம் என்பதை அவர்களிடமே கற்றுக்கொள்ளவேண்டும். மூத்த மகளான ரகுமானாவிற்கு சுங்கவரிச் சாலைகளை நிர்மாணிக்கும் அனுமதியை வழங்கினார் சுகார்த்தோ. அந்தச் சாலைகளில் பயணிக்கும் இராணுவ வண்டிகளிடமிருந்துகூட சுங்கக் கட்டணத்தை வசூலித்தார் ரகுமானா. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில், ரகுமானாவின் சுங்கச்சாலைகள் நாளொன்றுக்கு 210,000 டாலர்களை (86 இலட்சம் ரூபாய்கள்) வருமானமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சுகார்த்தோவின் ஆறு பிள்ளைகளும் இந்தோனேசியாவைக் கொள்ளையடித்துக் குட்டிச்சுவராக்கினர். மாவு ஆலைகள், சீமெந்து உற்பத்தித் தொழில், விமான நிறுவனங்கள், கட்டுமானத் தொழில், தொலைத்தொடர்பு, எண்ணெய் மற்றும் மரக் கூட்டுத்தாபனங்கள், வனவளத் தொழில் இவை போதாதென்று வங்கிகளிலும் அவர்களுக்குப் பங்குகள் இருந்தன. மேலும், கடன் கொடுக்க மறுக்கும் அல்லது கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் வங்கி அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவைக்கவும் அவர்கள் தங்களது தந்தை வழியாக ‘அதிகாரம்’ பெற்றிருந்தனர்.
மொஹமட் ஹசன் என்ற பெரும் பணக்காரர் சுகார்த்தோக்களின் தொழில் பங்காளியாக இருந்தார். அவரது கட்டுப்பாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் இருந்தன. வாரத்தில் இரண்டு நாட்கள் கோல்ப் விளையாடியதுபோக, மீதமுள்ள நாட்களில் முக்கியமான பணியாக அவர் வைத்திருந்தது தனது தொழில் பங்காளியான சுகார்த்தோவின் புகழை தனது ஊடகங்களில் விதந்தோதுவது ஆகும். முரசொலி, தினத்தந்தி (ஆட்சியில் இருப்பவர் பக்கம் சாயும் நிலைப்பாடு இதற்கு உண்டு.), தினகரன், சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி இன்னபிற உங்கள் நினைவுக்கு வரலாம்.
ஆக மொத்தத்தில், சுகார்த்தோ ‘கோடு’போட்டால், அவரது பிள்ளைகள் அதில் ‘ரோடு’போட்டார்கள்.
உறவினர்களின் அதிகார பலத்தைப் பின்புலமாகவும் பலமாகவும் கொண்ட முதலாளிகள், எப்படி ஒரு மாநிலத்தில் ஏகபோக உரிமைகளையும் சலுகைகளையும் கொண்டிருக்க முடியும் என்பதற்கு, மாறன் சகோதரர்களைக் காட்டிலும் தகுந்த உதாரண புருசர்கள் இருக்கமுடியாது. Crony capitalism என்ற சொல்லாடல் அவர்களுக்கே முற்றிலும் பொருந்தும். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏழை எளிய மக்கள் உழைத்த நேரம் போக எஞ்சிய நேரத்தில் இன்புற்றிருக்கட்டுமே என்று இலவசத் தொலைக்காட்சிகளை வழங்கினார். அந்தத் தொலைக்காட்சிகளுக்கு ‘கேபிள்’வசதியை வழங்கியதன் வழியாக வீட்டுக்குள் சொர்க்கத்தைக் கொண்டு வந்தது ‘சுமங்கலி’; இலவசமாக அல்ல. மேலும், அவர்கள் குடும்பத்தினரே தயாரித்து, அவர்களே இயக்கி, அவர்களே நடித்து, அவர்களே விளம்பரம் செய்து, அவர்களே வரிவிலக்கு அளித்து, அவர்களே வெளியிட்டு (ஏனைய படங்களை வெளியிட விடாமல் முடக்கி) அவர்களே பணத்தை அள்ளிக்கொள்வதற்குப் பெயர்தான் தனியுடமை அல்லது கலப்பிலா சர்வாதீனம் என்பது.
ஒருநாள் விடிகாலையில் எழுந்து பார்க்கும்போது உங்களது வீட்டுத் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும்; நீங்கள் தொடர்ந்து சில மாதங்களாகக் கட்டணத்தைச் செலுத்தவில்லையானால். ஆனால், “தனது போட் கிளப் வீட்டுக்கும் சன் தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் இடையில் 323 தொலைபேசி இணைப்புகளைக் கொண்ட தனியான தொலைபேசி இணைப்பகத்தை நிறுவி, சட்டவிரோத பாவனையில் ஈடுபட்டதனூடாக பி.எஸ்.என்.எல்.க்கு 440 கோடி ரூபாய் இழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறார் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரும், இந்நாள் ஜவுளித்துறை அமைச்சருமாகிய தயாநிதி மாறன்”என்று ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’என்ற நாளிதழ் செய்தி அண்மையில் வெளியிட்டிருக்கிறது. தவறான செய்தியை வெளியிட்டதன் மூலம் தன்னை அப்பத்திரிகை அவதூறு செய்துவிட்டது என்று கொதித்து, மானநஷ்ட இழப்பீடாக பத்துக் கோடி ரூபாய் கேட்டிருக்கிறார் தயாநிதி மாறன்(கோடீஸ்வரர்கள் நட்ட ஈட்டையும் கோடிகளில்தான் கேட்பார்கள்). தவிர, ‘ஏர்செல்’லை சிவசங்கரன் என்பவரிடமிருந்து பிடுங்கி ‘மேக்சிஸ் கம்யூனிக்கேசன்ஸ்’உரிமையாளர் அனந்தகிருஷ்ணனுக்குக் கொடுத்தார்@ அதற்குப் பிரதியுபகாரமாக ‘மேக்ஸிஸ்’ தயாநிதி மாறனைக் கவனித்துக்கொண்டது”என்று தெஹல்கா வார இதழ் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது. அதற்கும் தயாநிதி மாறன் அவதூறு ‘வக்கீல் நோட்டிஸ்’ அனுப்பியிருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
ஊழலுக்கு முன்னாள்-இந்நாள் என்ற பேதங்கள் எல்லாம் இல்லை. கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கு ஒரு காலம் என்றால், இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினருக்கு வேறொரு காலம். ஆட்சியில் இருப்பவர்களது ஊழல்கள் என்பவை புதைகுழிகள் போல. மண்ணுக்கடியில் புழுத்துக்கொண்டிருக்கும். ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டதும் கிண்டப்படும். இப்போது கலைஞரது குடும்ப உறுப்பினர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்துக் கொண்டிருப்பதைப் போல.
இந்தியா என்ற நாட்டில் கோடீஸ்வரர்களுக்கு ஒரு நீதியும் கோவணாண்டிகளுக்கு வேறொரு நீதியும் என்பதற்கு நீதிப் பானையிலிருந்து ஒரு சோற்றை எடுத்துக் காட்டலாம். சில வாரங்களுக்கு முன்னால் டெல்லி நீதிமன்றம் ஒன்றில் திருட்டு வழக்கொன்றுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தவர்கள் நான்கு இளைஞர்கள். இருவருக்கு ஏழாண்டுகளும் (கடூழியம்) மற்ற இருவருக்கும் நான்காண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் நான்கு பேருமாக 740 ரூபாய்களைத் திருடியிருந்தார்கள். 740ரூபாவை நான்கால் வகுத்தால் தலைக்கு 185 ரூபாய் திருடியிருந்தார்கள். ஒரு சாதாரண, அரசியல் செல்வாக்கற்ற மனிதனுக்கு 185 ரூபாயைத் திருட எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்?
‘இந்தியா ஏற்றத்தாழ்வுகளின் உதாரண தேசம்’ என்று சொன்னால், அதன் தேசாபிமானிகள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வரலாம். ஆனால், மனிதாபிமானிகளும் பொருளியலாளரும் அறிவியலாளரும் அதை ஒத்துக்கொள்வர். இந்த ஏற்றத்தாழ்வு ஒருநாள் பூகம்பத்தில் நிகழ்ந்ததன்று. அரசாங்கம் முதலாளித்துவ பெருமுதலைகளுக்குச் சார்பாகச் செயற்பட்டதே பொருளாதாரச் சமமின்மைக்குக் காரணம். ஊழலின் பிரமாண்டத்தின் முன் ‘சமமின்மை’ என்ற சொல் நலிந்து பிச்சைக்காரக் கோலத்தில் நிற்கிறது. இது முரண்களின் தேசம். சாக்கடையின் துர்நாற்றத்தைச் சகித்தபடி பன்றிகளோடு பன்றிகளாக சேற்றில் கிடந்துழலும் மனிதர்கள் வாழும் மும்பை நகரத்தில்தான் உலகத்திலேயே பெறுமதிவாய்ந்த, (பணப்பெறுமதி-2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீடு இருக்கிறது. 27 தளங்களைக் கொண்ட அந்த வீட்டையும், ஆறு பேரைக் கொண்ட முகேஷ் அம்பானியின் குடும்பத்தையும் பராமரிக்க 600 வேலைக்காரர்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1,76,000 கோடி ரூபாய்கள் இழப்பீடு ஏற்பட்டதாகக் கணிப்பிடப்பட்டது. 41.6 வீதமான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே, அதாவது நாளொன்றுக்கு இருபது இந்திய ரூபாய்களுக்குக் குறைவாக வருமானம் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் 1,76,000 கோடிகளில் எத்தனை சமூக நலத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்பதைப் பொருளியலாளர்கள் கவனத்திலும், கணக்கிலும் கொண்டிருக்கிறார்கள். இந்திய சனத்தொகையில் 75.6 வீதமானவர்களின் வருமானம் எண்பது ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதனிடையில் ஒருநாளைக்கு இருபது ரூபாவிற்குக் கீழ் வருமானம் பெறுபவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாகக் கருதப்படுவர் என்றும், அவர்களுக்கே அரச மானியம் வழங்கப்படும் என்றும் திட்டமிடல் இலாகா அண்மையில் அறிவித்திருக்கிறது. அதிலும், நகரங்களில் வசிப்பவர்களுக்கே அந்தச் சலுகை! கிராமங்களில் வசிப்பவர்களில் பதினைந்து ரூபாய்க்குக் குறைவாக வருமானம் பெறுபவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழே வருகிறார்களாம்! குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வுகளுக்காக கிராமங்கள்தோறும் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்படுவதுபோன்று, கிராமங்களிலும் நகரங்களிலும் முறையே பதினைந்து, இருபது ரூபாய்களில் ஒரு நாளைக் கழிப்பது எப்படி என்ற விழிப்புணர்வைப் பரப்புவதற்கு அரசு ஆவன செய்தல் வேண்டும். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சகாப்தம் முடிந்துவிட்டது. ‘சாப்பிடக் கூடிய’ஒரு கிலோ அரிசியின் விலை 25 ரூபாய். பருப்பின் விலை 140ரூபாய் என்ற விலை விபரங்களெல்லாம் திட்டக் கமிசனின் மேலாளராக இருக்கும் உயர்திரு. மன்மோகன் சிங்கிற்கோ துணை மேலாளர் மாண்டேக் சிங் அலுவாலியாவிற்கோ தெரிந்திருக்க நியாயமில்லை.
மதுரையில் பூ விற்கும் எழுபது வயதான மூதாட்டி மீனாட்சி சொல்கிறார்.
“வீட்டிலிருந்து பூக்கடைக்குச் செல்வதற்கு ஒரு நாளைக்கு இருபது ரூபாய்கள் பயணச் செலவாகிறது”
மஹாராஷ்டிராவிலுள்ள ஜசுபேன் என்ற பெண்மணி (கந்தை ஆடைகள், காகிதங்களைப் பொறுக்கி விற்பவர்) சொல்கிறார்.
“இருபது ரூபாயில் ஒருநாளைக்குத் தேவையான பழுதடைந்த காய்கறிகளுட் சிலவற்றை மட்டுமே வாங்கமுடியும். என்னுடையது வறுமை இல்லையென்றால், எதுதான் வறுமை என்று எனக்குத் தெரியவில்லை.” (தெஹல்கா – நிஷா சுசானின் சுற்றாய்விலிருந்து)
மானியங்கள் மூலமாக அரசாங்கத்தின் கஜானாவைக் காலி செய்பவர்களாக ஏழைகள் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, பதினைந்து ரூபாயில் ஒருநாளைக் கழிக்கலாம் என்று வறுமைக் கோட்டைக் கீழிறக்கும் இதே அரசுதான் கோடி கோடியாகப் பணத்தை ‘காமன்வெல்த்’விளையாட்டுப் போட்டிகளில் கொட்டியது. அரச விழாக்களை ஆடம்பரமாக நடத்துகிறது. ஊடகத் தரகர்களான நீரா ராடியாக்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் செல்வத்தில் மிதக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்தாசை செய்கிறது.
‘பணக்கார இந்தியா’வின் பெரும்பாலான குடிமக்கள் பூச்சியத்திற்கு இணையானவர்கள். கோடிகளைப் பின்தொடரும் பூச்சியம் அன்று. அவர்கள் பதினைந்து ரூபாய் வருமானத்தில் வாழப் பணிக்கப்பட்ட பெறுமதியற்ற சுழியங்கள்.
“இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது”என்றார் காந்தி. இரண்டு இலட்சம் விவசாயிகள் வறுமை தாளாமல், கடன்தொல்லை பொறுக்கமுடியாமல், முதலாளித்துவப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கமாட்டாமல் தற்கொலை செய்துகொண்டார்கள்.
“அபிவிருத்தி என்ற பெயரில் ஏழைகளின் நிலங்கள் போன்ற சொத்துக்கள் பணக்காரர்களின் கைகளுக்கு மாற்றப்படுவது கூட சட்டபூர்வமான ஊழலே” என்று மனிதவுரிமைப் போராளி மேதா பட்கர் கூறியிருப்பது இங்கு நினைவிற்கொள்ளற்பாலது.
அண்மையில், ஒரிஸ்ஸாவிலுள்ள கொபின்பூர் என்ற கிராமத்து மக்களது வாழ்நிலங்களை அபகரித்து, ‘பொஸ்கோ திட்டம்’என்ற மேலுமொரு முதலாளித்துவப் பண்ணைக்கு வழங்குவதற்கு அதிகாரத் தரப்பு வெட்கமின்றித் துணைபோயிருக்கிறது. அந்த மாவட்டத்தின் செயலாளர், காவற்துறை உயரதிகாரி இருபது ‘பிளாட்டூன்’கள் காவற்துறையினரோடு அந்தக் கிராமத்து மக்களை அச்சுறுத்தி வெளியேற்றச் சென்றிருந்தனர். பாடசாலை மாணவர்களும், பெண்களும், வயோதிபர்களும்கூட நிலத்தில் படுத்துக் கிடந்து வழிமறித்து ‘நிலக்கொள்ளையர்களை அனுமதியோம்’ என முழக்கமிட்டார்கள். அதிகாரத் தரப்பு வேறு வழியின்றித் திரும்பிச் சென்றது. ஆனால், அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆக மொத்தத்தில், சனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியா போன்றதொரு நாட்டில், காவற்துறையும் அரசதிகாரமும் முதலாளித்துவத்தின் சேவகன் போலவே செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம்.
இப்போது இந்தியாவைப் பற்றிப் பேச்சு எழும்போது, அதிகமும் மேற்கோள் காட்டப்படும் வாக்கியம் ஒன்று உண்டென்றால், “ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு இந்தியா”என்பதாகும். உலகத்தின் பணக்காரர்கள் வரிசையில் நான்காவது (லட்சுமி மிட்டல்), ஐந்தாவது (முகேஷ் அம்பானி), ஆறாவது (அனில் அம்பானி), ஒன்பதாவது (குசல் பல் சிங்) இடங்களில் இந்தியர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மேலும், உலகிலேயே அதிகளவு கறுப்புப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் வவைத்திருக்கும் நாடுகளில் இந்தியா முதன்மை பெற்றுப் பெருமையடைந்திருக்கிறது. 7,280,000 கோடி ரூபாய் கறுப்புப் பணம் ஸ்விஸ் வங்கியிலும், பெயரைத் தமிழ்ப்படுத்த முடியாத ஜேர்மன் வங்கியொன்றிலும் (Liechtenstein Bank) வேறும் சில நாடுகளிலும் உறங்கிக்கொண்டிருக்கிறது. முடக்கப்பட்டிருக்கும் அந்தத் தொகையானது இந்தியாவின் தலையை அழுத்திக்கொண்டிருக்கும் கடனை பதின்மூன்றால் பெருக்க வருவது. அதாவது இந்தியாவின் கடன்தொகையில் பதின்மூன்று மடங்கு பணம் ஊழல் பெருச்சாளிகளால் அங்கு வைப்பிலிடப்பட்டிருக்கிறது.
ஆக, பளபள கார்களில், பப்பள பள முகங்களோடு விரைந்து செல்லும் கோடீஸ்வரர்களை வீதியோரங்களில் அமர்ந்து ஏக்கம் வழியும் கண்களால் பார்க்கவே விதிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்த நாட்டின் பெரும்பான்மைக் குடிமக்கள். உழைத்துப் பிழைப்பவர்களின் வயிற்றில் பசி அக்கினி கொழுந்துவிட்டெரியும்போது, ‘அக்கினி’ இன்னோரன்ன ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி எக்களித்துக் கொண்டிருக்கிறது இந்திய வல்லரசு. ‘உலக அழகி’களின் தேசம் இந்தியா என்கிறார்கள். வறுமை வரைந்த கேலிச் சித்திரங்களைப் போலத் தோற்றமளிக்கும் மனிதர்களும் இங்குதான் வாழ்கிறார்கள்.‘ஸ்கோர் என்ன?’என்று தெரிந்துகொள்ளாவிட்டால், தலையே வெடித்துவிடும்போல பதறியடிக்கும் மனிதர்கள் வாழும் தேசத்தில்தான் இலட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் போசாக்கின்மையால் இறந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தியா என்பது கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், அவர்களால் பயன்பெறும் கார்ப்பரேட் முதலாளிகள், ஏழை மக்களிடமிருந்து அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களைப் பிடுங்கத் துணை செய்யும் நிழல் வீரர்களான தாதாக்கள், மேற்சொன்னவர்கள் மீது சட்டம் பாய்ந்துவிடாது பாதுகாப்பளிக்கும் காவற்துறை, அரசியல்வாதிகளின் கட்டளைக்கும் கற்பனைக்கும் இயைபுற இயங்கும் ஊடகவியலாளர்கள் என்ற ஒரு வலைப்பின்னலால் சூழப்பட்டிருக்கிறது.
பசி தாளமாட்டாமல் உணவகத்தில் திருடியவன் நீதிமன்றத்தில் கைகட்டி நின்றுகொண்டிருக்கும்போது, 50,345 கோடி ரூபாய்களை வருமான வரியாகச் செலுத்தவேண்டியிருப்பதாகச் சொல்லப்பட்டுவரும் ஹசன் அலி கானை 2010ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ‘கண்டுகொள்ளாமல்’ வெளியில் விட்டு வைத்திருந்தது ஏன்? மேலும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 2010 மார்ச் மாதம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில், ஹசன் அலி அரசுக்குச் செலுத்தவேண்டிய வருமான வரியைச் செலுத்திவிட்டதாகத் தெரிவித்திருந்தார். அந்த வருவாய் 2009-2010 இற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் காட்டப்படவில்லை. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஹசன் அலி கானைக் காப்பாற்ற முனைவதன் காரணம் என்ன என்பது 9 பில்லியன் டாலர் பெறுமதியான கேள்வியாகும். ஹசன் அலி உண்மையிலேயே 9 பில்லியன்களுக்கு அதிபதியா? அன்றேல் அந்த பில்லியன்களுக்கு அதிபதியாக இருப்பவர்கள் பவிலியனில் அமர்ந்திருந்தபடி வேடிக்கை பார்க்க, ஊழல் களத்தில் இறக்கிவிடப்பட்ட பலியாடா? என்பது இன்றுவரையில் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
ஃபோபர்ஸ் பீரங்கி ஊழலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் குடும்பத்திற்கு கையூட்டு எதுவும் கிட்டவில்லை; அவர் இந்திய அரசுக்கு பண இழப்பு ஏற்படக் காரணமாக இருந்தார் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இந்திய அளவிலும் காங்கிரஸ் அளவிலும் அவர் உதாரண ‘புருசனாகி’விட்டார். ஆனால், இந்திய எல்லையைத் தாண்டிய ஊடகங்களுக்கு நேரு குடும்பத்தின் தூய்மையைக் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை.
Schweizer Illustrierte என்ற, சுவிர்ட்சலாந்துப் பத்திரிகையில் நவம்பர் 19, 1991 அன்று வெளியிடப்பட்ட செய்தியொன்றில், 2.2 பில்லியன் டாலர்கள் (இன்றைய கணக்கின்படி பத்தாயிரம் கோடி ரூபாய்கள்) சோனியா காந்தி அவர்களது இரகசியக் கணக்கில் இருப்பதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. அது இன்றைக்கு 43,000 கோடியிலிருந்து 84,000 கோடி வரை வளர்ந்திருக்கலாம் என்று ஊகங்களும் கணிப்பீடுகளும் சொல்கின்றன. புலனாய்வு ஊடகவியலாளரும், அரசியல் விஞ்ஞானியுமாகிய வேர்ஜினியா அல்பர்ட்ஸ் (ரஷ்யர்) 1989 இல் The State within a Stake: KGB and Its Hold on Russia என்ற புத்தகத்தை எழுதினார். அதில், குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விடயம் இந்திய ஊடகங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்ய உளவு நிறுவனமான கே.ஜி.பி. மேலாளர் விக்ரர் செப்ரிகோ-1985இல் ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்குப் பணம் கொடுக்கப் பணித்ததாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “ராஜீவ் காந்தி, சோனியா காந்தி,ராகுல் காந்தி மற்றும் பௌலா மைனோ (சோனியா காந்தியின் தாயார்)ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் அந்தப் பணம் கொடுக்கப்பட வேண்டும்” என விக்ரர் செப்ரிகோவ் பரிந்துரைத்துள்ளார்.
நிலைமை இவ்விதமிருக்க, “வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் கறுப்புப் பணம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்”என்ற உரத்த குரலுக்கு, திருமதி சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவிகளை மூடிக்கொண்டிருப்பதில் சித்தஇரகசியம் ஒன்றுமில்லை.
ஊழலுக்கெதிராக ‘லோக் பால்’ சட்டத்தைக் கொண்டு வருவதாலோ, காந்தியவாதி அன்னா ஹசாரேயும், யோகா குரு ராம்தேவும் உண்ணாவிரதம் இருப்பதாலோ, மெழுகுவர்த்திப் பிரார்த்தனைகளாலோ இந்தியாவிலிருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது.
இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு அடித்தட்டு மக்களுக்கானவையாகவும் மாற்றப்படாதவரையில் ஊழல் பெருச்சாளி நாட்டைக் கபளீகரம் செய்வது நிற்காது. ஆட்சிகள் மாறலாம்; ஆட்களும் மாறலாம்; மேற்கண்ட மாற்றம் நிகழாதவரையில், ஊழலே அரியணையில் அமர்ந்து பல்லை இளித்துக் காட்டி மக்களைப் பரிகசித்துக்கொண்டிருக்கும்.
நன்றி அம்ருதா ஜூன் மாத இதழ்
Published on July 11, 2011 07:44
No comments have been added yet.
தமிழ்நதி's Blog
- தமிழ்நதி's profile
- 9 followers
தமிழ்நதி isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

