படுகளம் நாவல் வாசிப்பனுபவம்
[படுகளம் நாவல் குறித்து எழுதிய கடிதம்]
அன்பு ஜெ,வணக்கம்.நலம் விழைகிறேன்.
படுகளம் நாவல் வாசித்தேன்.
ஒரு கலைஞனை வியாபார சூழல் தூண்டும் போது அவனுளிருக்கும் வியாபாரி விழித்துக் கொள்கிறான். பொதுவாக சாதாரணனிலிருந்து கலைஞன் விழித்துக்கொள்வது நடக்கும். ஆனால் இங்கு கலைஞனிலிருந்து வியாபாரி. ஏனோ தானோ என்றில்லை. அவன் கலைஞனில் இருந்து முழுமையான வியாபாரியாகும் தருணம் வரை. ஒரு விஸ்வரூபம். அந்த விளம்பரத் தட்டி எழுந்து நிற்பது போல அந்தக்கடைத்தெருவில் அவனும் எழுந்து நிற்கிறான். இந்த நாவலில் அவனுடைய மனவேகம் தான் கலையனுபவமாகிறது. ஆதர்சனமாக உணர்பவர்களின் பாதிப்பால் உருவாகும் வேகம். துரத்தப்படுகையிலும் ஓடும்போதும் உள்ளே சுரக்கும் உயிர்திரவத்தால் நிறைந்தது தான் காடு...பசி தோற்று உயிரிச்சை வெல்லும் தருணம் நாவலாகியிருக்கிறது.
'இரும்பு ராடு ஒன்று சீட்டின் அடியில் வைத்திருந்தேன். அதை என்ன செய்வது என்று தெரியவில்லை' என்ற வரியில் சட்டென்று கண்கலங்கியது. ' அதை தூக்கிப்போட்ரு' என்று தான் வாசிக்கும் போது முதலில் மனம் சொல்லியது. அது இல்லாமலிருந்தால் அவன் அழிந்து போயிருப்பான். ஒட்டுமொத்த நாவலே அது தான். தன்னுள் உள்ள இரும்பு ராடை அவன் உணர்ந்து ,வெளியே எடுத்து, பயன்படுத்தி ஓரமாக வைத்துவிட்டு வாழ்க்கைக்குள் நுழைகிறான். அது அங்கே ஓரமாக இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும் என்று தோன்றியது. கழுவி பூசையில் வைத்த பொருள் போல.
முதன்முதலாக அவன் கடைவீதியில் வந்து அமர்ந்ததும் எனக்கு அபிமன்யூ நினைவில் வந்து கொண்டிருந்தான். நாவலின் முடிவில் அபிமன்யூ வெல்வதை பார்த்த குதூகலம் இருந்தது. நிரந்தரமாக இங்கிருக்கும் வியாபார பத்மவீயூகத்திற்குள்ளேயே வாழக் கற்றுக்கொண்ட அபிமன்யூ. அவன் முதல் கொலை முயற்சிக்கு தப்பி ஓடும்போது அந்தத்தெருவே பத்மமாக தோன்றியது. வாழும் வரை வெளியேற முடியாத பத்மம். அங்கேயே ஒவ்வொருவராக எதிர்கொண்டு வென்று உயிர்த்து சிறிது சிறிதாக உயிர்குறைந்து அங்கேயே மடிய வேண்டிய ஒன்று. அது பெறும் முதல் உச்சத்தை மட்டும் தொடும் நாவல். நாவலை முடித்தப்பின் அந்த படுகளபத்மத்தின் ஒவ்வொரு இதழாக விரிகிறது.
நாவலை மனதில் விரியச்செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது நாவலின் களம். பின்பு தருணங்களின் தவிர்க்க முடியாத தன்மை. எதிர்கொண்டே ஆக வேண்டிய தருணங்கள். தலைப்பில் நீங்களே சொல்வது போல படுகளத்தின் இயல்பே இந்த நாவலை நல்ல அனுபவமாக்குகிறது. இன்னொரு தளத்தில் அனைத்து செயல்களங்களும் அவ்வாறு தானே என்று தோன்றியது.குடும்பத்திலிருந்து நாடுகள் வரை.... அந்த இரும்பு ராடு வெவ்வேறாக உருமாறுகிறது.
கற்பனை உலகிலிருந்து வாழ்வின் எதார்த்ததனதில் நுழையும் ஒவ்வொருவரிடமும் அந்த ராடு வந்து சேரும் தருணத்தை அனைவரும் உணர்ந்திருப்போம். புதிதாக திருமணமாகி வரும் பெண்ணிலிருந்து நாட்டு எல்லை வரை. சாந்தமாக வருகிற பெண்கள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பிடிவாதத்தை அவ்வபோது கையிலெடுப்பார்கள். அவர்கள் அந்த காலகட்டத்தை இறுதி வரை சொல்லிக்கொண்டிப்பதை பார்க்கலாம். அவர்களுக்கு மிக முக்கியமான தருணம் அது.
அழகானது மெல்லியது தீங்கு என்பதே அறியாதது உலகிலேயே அழகானது புழு. கூட்டின் அழுத்தத்தால், தான் வளருவதால் அது பட்டாம்பூச்சியாக மாறுவது ஒரு தருணம். இது வரை அந்த சிறகு வண்ணமயமானது அழகானததாக இருந்தது. இந்த நாவலில் அது காற்றை கிழிக்கும் கத்தியாக மாறியிருக்கிறது. அந்த கலைத்தருணத்திற்காக அன்பு.
அந்த காற்றே தான் அதன் உந்துவிசை...அது பறக்கும் வெளியும் கூட. அந்த கத்தி கலைஞனுடைய கையிலிருப்பதால் தன் பதையில் உள்ள காற்றை மட்டுமே கிழித்து சென்று அது சிறகாகவே எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்கும்.
அந்த காட்டின் வேட்டையில் தப்பித்து அந்த காட்டை தன் சிறகுகளால் அனுதினமும் அளக்கும் வண்ணத்துப்பூச்சி அந்த கலைஞன். உண்மையில் நடைமுறை அன்றாட வாழ்விலும் கூட கலைஞர்கள் அப்படியாகவே இருக்கிறார்கள். அண்மையில் ஒரு இசைக்கலைஞரை அப்படி உணர்ந்தேன்.
அன்புடன்,கமலதேவி
Published on August 06, 2024 17:19
No comments have been added yet.
கமலதேவி's Blog
- கமலதேவி's profile
- 1 follower
கமலதேவி isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

