அரிதாரம்

 ஊரில் ஒரு மாதமாக பொன்னர் சங்கர் கூத்து நடக்கிறது. சாயுங்காலமானால் ஒலிப்பெருக்கியின் ஆதிக்கம் துவங்கிவிடும். இன்னொரு பக்கம் பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள். நான் எங்கள் ஊர் பள்ளியில் தற்காலிக ஆசியராக பணி செய்த போது பணியில் சேர்ந்த ஆண்டின் ஆண்டுவிழாவி்ன் போது விழித்துக்கொண்டு நின்றேன். அது வரையான தன்னம்பிக்கை மிக்க ஆசிரியர் தலைகுனியும் நேரம்.

நடனமாட தெரியாது..ஒப்பனை செய்யதெரியாது . 'புது டீச்சருக்கு லிப்ஸ்டிக் கூட போட்டுவிட தெரியல," என்று வாயில் கை வைத்து பிள்ளைகள் என்று சிரித்தன. உண்மையிலேயே பெண்ணாய் கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது.

" ஏம்மா...இந்த புடவைங்களையாவது பிள்ளைகளுக்கு கட்டி விடேன்..." என்று சகஆசிரியைகள் சலித்துக்கொண்டார்கள்.

கல்வியியல் கல்லூரி படிக்கும் போது இருபத்துநான்கு வயதில் முதன்முதலாக சேலை கட்டிப்பழகினேன். இன்று வரை எனக்கு புடவை வசதியான உடை இல்லை. நான் தவிர்க்கும் உடையாகவே இருக்கிறது. 'புடவை ஒரு கன்வீனியன்ட்டான டிரஸ் இல்லை' என்பது என் கருத்து. கவுன், மிடி, பாண்ட் டீசர்ட் ,தாவணி,சுடிதார் என்று கடந்து வந்ததில் இன்றுள்ள அனார்கலிகுர்தா தான் எனக்கு மிகவும் பிடித்த உடை என்று சொல்வேன். அடுத்ததாக தாவணியும் சேர்க்கலாம். அதற்கு பெயரே சிற்றாடை. பதின் வயதில் வசதியான ஆடை. ஆடிகுதிப்பது என்றாலும் அமைதியாக 'சிவனே' என்று இருப்பதற்கும் ஒத்துபோகும் தாவணிபாவாடை. அனார்கலி குர்தா நம்மை சிறுமியாக்குவது. சிறு வயதில் பாடவையை சுற்றி பூப்போலாக்கும் தருணத்தை பல ஆண்டுகள் கழித்து அனிர்க்கலி குர்தா மீண்டும் தருகிறது . இந்த ஆடையில்ஆடை பற்றிய எந்த கவனமும் தேவை இல்லாமல் நம் இயல்பில் நாம் இருக்கலாம்...பையன்கள் இருப்பது போல. 

கல்லூரி விடுதியில் சேலை கட்டி பழகுவது என்பது ஒரு வித்தை மாதிரி தான். கல்வியியல் கல்லூரி விடுதி வித்தியாசமானது. இருபது பேர் கொண்ட அறையில் இடப்பாற்றாகுறை காரணமாக அவரவர் படுக்கை மீது ஏறி நின்று தான் புடவை கட்டமுடியும். உண்மையில் கல்வியியல் கல்லூரிகளின் விதிமுறைகள் நாங்கள் படிக்கும் போது மிகவும் கெடுபிடியானது. உடுத்துவதில், நேரம் கடைபிடிப்பதில், பேசுவதில் என்று அனைத்திலும் மிடுக்காக, கட்டுப்பாடாக மாறிவிடும் காலம் அது. பெரும்பாலும்  கிராமத்து நடுத்தர குடும்பத்து இளம்பெண்கள் நிமிர்ந்து பார்த்து நடக்கதொடங்கியதே ஆசிரியப்பயிற்சிக்கு சென்ற போதுதான். அது ஒரு பொன்னான காலம் என்று சித்திகள் அம்மாக்கள் காலத்து மூத்தவர்கள் சொல்வதுண்டு.

முந்தானையை செருகி கையில் புத்தகத்தை எடுத்தாலே மிலிட்ரி தோரணை வந்துவிடும் என்ற கிண்டல் செய்வார்கள்.  அவசரமான காலைகளில் நாசுக்காக புடவை உடுத்துவது என்பதற்கு ஜகஜால கில்லாடித்தனம் வேண்டும். அதற்கு நாம் வழக்கமாக புடவை உடுத்தும் விதம் ஒத்து வராது. ஒரு சாகசவீரனின் லாவகத்துடன் சட்டென்று உடுத்தும் பழக்கம் எங்களில் சிலருக்கு இருந்தது. அது பெரியார் மணியம்மை கல்லூரி 'மரபில்' உருவான முறை. என் தங்கை மணியம்மையில் பயின்றவள் என்பதால் எனக்கு அந்த முறையை சொல்லிக்கொடுத்திருந்தாள்.  

இப்படி தலைகீழாக உடுத்தி பழகிய முறையில் புடவையை மற்றவர்களுக்கு உடுத்திவிடுவது சிரமம். அதனால் ஆண்டுவிழாவிலா ஒப்பனையில் நேரத்தில் தேமே என்று நின்றேன். பின் போட்டுவிடுவது,பூ வைப்பதற்கு பின்களை எடுத்துக்கொடுப்பது,காலடிகளில் அமர்ந்து சேலை மடிப்புகளை சரி செய்வது போன்ற 'அடியாள்' வேலை எனக்கு.

இந்த சூழலில் என்னை காத்து ரட்சித்த வாராது வந்த மாமணி எழுத்து தான். பிள்ளைகள் நடனமாடும் பாடல்களுக்கு முன் குறிப்பு எழுதும் வேலை. சின்ன சின்ன நீதி நாடகங்கள் மீது எனக்கு ஈடுபாடு இருந்தது. அதை மற்ற ஆசிரியர்கள் பெரிதாக அங்கரிக்கவில்லை. பிள்ளைகளுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்வதை விட நடனமாடுவது பிடித்தது.



பிள்ளைகள் நடனமாடும் முன் அவர்கள் ஆடும் நடனம் பற்றியும் பாடல்கள் குறித்தும் மேடையில் சில வரிகள் பேச வேண்டும். அதை எழுதுவது என் வேலை.  எழுத்துக்கென்ற மாரியாதை கிடைக்கும். ஓரமாக ஒரு மேசை,சில தாள்கள்,ஒரு பேனா. ஆண்டுவிழா என்பது திருமணம் போல ஒரு கூட்டு முயற்சி. ஆளாளுக்கு பரபரத்துக் கொண்டிருப்பார்கள். ஆண்டு விழா நாளில் பெரும்பாலும் என் கைளில் மட்டும் தான் பேனா இருக்கும். ' பேனா குடும்மா...ஏய் பசங்களா டீச்சர்க்கிட்டருந்து அந்த பேனாவ வாங்கு' என்று ஆசிரியர்கள் கேட்ட நாட்களை புன்னகையுடன் நினைத்துக்கொள்கிறேன். ஆண்டுவிழா நாட்களில் 'எதாச்சும் மேக்கப் போட கத்துக்கலாமில்லம்மா..பிள்ளைங்க உனக்கு ஒன்னும் தெரியலன்னு நினைப்பாங்க..' என்று என் ஆசிரியர் கவலைப்படுவார். [எனக்கு ஆசிரியராக இருந்தவர்] . நான் பாடல்களுக்கான வசனங்களை எழுதித்தருவதை கவனமாக வாசித்துக்காட்டி 'சரியாம்மா..' என்று கேட்டப்பின் மேடையில் வாசிப்பார். அவருக்கு புதுபாடல்கள் பற்றி எதுவும் தெரியாது. 'வரியே காதுல விழல' என்பார். 

 மூன்று நாட்களுக்கு முன்பு பக்கத்துஊர் பள்ளியிலிருந்து ஆண்டுவிழாவிற்கு வசனம் எழுதித்தரும்படி வெள்ளி கிழமை சாயுங்காலம் ஒரு தற்காலிக பள்ளிஆசிரியை வந்து கேட்டார். மிகவும் இளம் பெண். இந்த ஆண்டுதான் கல்வியியல் கல்லூரி முடித்ததாக சொன்னார். அன்று இருந்த என்னை பார்த்தது போல இருந்தது. இரண்டுநாட்களாக மேசைமீது அவள் கொடுத்த தாள்கள் இருந்தன. எழுத முடியுமா என்று சந்தேகம். பத்து பாடல்கள். காலையில் எழுந்ததும் கடகட வென்று மருந்து குடிப்பது போல எழுதி வைத்து விட்டேன். 

நாம் ஆதியில் உடை அணிந்ததற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம்.  நம்மில் வெளிப்படும் விலங்கை மறைப்பது அதில் ஒரு காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆடை அத்தியாவசியம் என்ற நிலை மேலும் மாறி அழகிற்காக அலங்காரத்திற்காக என்று ஆகி மனிதன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் கருவியாகும் போது அரிதாரமாகிறது. புறத்தை அழகுபடுத்துதல் என்பது உன்னதமாகும் இடம் அரிதாரம். அங்கே அது கலையாகிறது.


                 [ நடிகர் கமல்ஹாசன்]

உத்தமவில்லன் திரைப்படத்தில் கமல்ஹாசன் தன் முகஒப்பனையை அழிக்கும் இடம் ஒன்று உண்டு. அதில் கருப்பு மஞ்சள் வண்ணங்கள் குலைந்து குழம்பி அழியும். அந்த இடம் என்னை பொருத்த அளவில் தமிழ்சினிமாவில் ஒரு உன்னதமான இடம். கண்ணீரில் துயரில் நிலையின்மையில் காலத்தின் முன்பும் அன்பின்முன்பும் அழிந்து குலையும் மனித அகம் ஒன்று அங்கே முகம் காட்டும். அந்த காட்சி அந்த திரைப்படத்தின் சூழலுக்குள் காட்டும் அர்த்தத்தை விட அந்த எல்லையை தாண்டி பலமடங்கு விரியக்கூடியது.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2025 22:57
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.