குளிர் தருவின் நிழல்

                                                          குளிர் தருவின் நிழல்

என்னுடைய கணினிக்கோப்புகளை அண்மையில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். முன்பு எழுதிய சில கட்டுரைகளும்கவிதைகளும் அங்கங்காகச் சிதறி ஒளிந்திருந்தன. அவற்றை வரிசைப்படுத்தவும் விலக்கவும்ஒருமுறை வாசித்துப் பார்ப்பது நல்லது என்று வாசிப்பில் ஈடுபட்டேன். சில கட்டுரைகள்வாசிப்புக்குச் சேதாரம் விளைவிக்காதவையாக இருந்தன. அவற்றில் ஒன்று என்னுடைய கல்லூரித்தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். கமலேசுவரனைப் பற்றி எழுதிய கட்டுரை. பேராசிரியரின் எண்பத்தைந்தாம்வயது நிறைவையொட்டி அவரது நண்பர்களும் நலம் விரும்பிகளும் மாணவர்களும் பங்கேற்ற  மலருக்காகக் கட்டுரையை எழுதினேன். மலர் வெளிவந்திருந்தும்காணக் கிடைக்கவில்லை. வெளிவந்திருந்தாலும் பரவலாக வசிக்கப்படும் வாய்ப்பில்லை. எனவேகட்டுரையைப் பத்திரப்படுத்தி வைக்கும் நோக்கிலும் பேராசிரியரின் மாணவர்கள் எவராது அவரை நினைவுகூரலாம் என்ற ஆசையிலும்  எவருக்காவது சின்ன அளவிலாவது பயன்படலாம்என்ற எதிர்பார்ப்பிலும் இங்கே பகிர்கிறேன்.





                            டாக்டர்  கே எஸ் கமலேசுவரன் துணைவியாருடனும் மாணவர்  பெருமாள் முருகனுடனும்  


 

ன்னிடம் பயின்ற மாணவர்களைக் குறிப்பாகநினைவில் வைத்துக் கொள்வது ஓர் ஆசிரியருக்கு இயலாத செயல். ஆனால் தங்கள் மீது நல்லாதிக்கம்செலுத்திய ஆசிரியரை மாணவர்கள் எப்போதும் நினைவுகூர்வது இயல்பு. எனக்குக் கற்பித்த ஆசிரியர்களில்நினைவில் அகலாது நிற்கும் தகுதியுடையவர்களில் பேராசிரியர் டாக்டர். கே. எஸ். கமலேசுவரனும்ஒருவர். அவரிடம் பயின்றவன், அவரது ஆளுமையால் பாதிப்படைந்தவன் என்ற நிலைகளில் அவர் எனக்குமறத்தற்கு அரியவர்.

 

எனது கல்லூரிப்படிப்பைக் கோவை,  பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில்மேற்கொண்டேன். புகுமுக வகுப்பு, பட்ட வகுப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் தமிழ்ப் பாடத்தைக்கற்றுக் கொடுத்தவர்களில் கமலேசுவரனும் ஒருவர். செய்யுட் பகுதிகளைக் பேராசிரியர். பாஸ்கரதாசும்உரைநடை, துணைப்பாடப் பகுதிகளைக் கமலேசுவரனும் கற்பித்தார்கள். அவர்களிடம் கற்ற தமிழ்தான்இன்று ஓர் எழுத்தாளனாகவும் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஆர்வம் கொள்பவனாகவும்வைத்திருக்கும் காரணிகளில் முக்கியமானது. சரியாக அரை நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்னரும்அந்த நினைவுகள் பசுமை மங்காமல் மிளிர்கின்றன. அந்தப் பாடங்கள் காலாவதியாகாமல் தொடர்கின்றன.

 

புகுமுக வகுப்பில்முதல் தமிழ்ப் பாடவேளையிலேயே டாக்டர். கமலேசுவரன் அறிமுகமானார். நான் பயின்றது உயிரியல்பிரிவில். அந்தப் பிரிவின் தலைவரான தாவரவியல் பேராசிரியர் ராஜாராம் முதலில் அறிமுகமானார்.இரண்டாவது அறிமுகமானவர் தமிழ்ப் பேராசிரியரான கமலேசுவரன் அவர்கள்.  கறுத்த குள்ளமான உருவம். அரைக் கை சட்டையும் கால்சராயும் அணிந்த தோற்றம். வகிடெடுத்து ஒழுங்குபடுத்தினாலும் ஒதுங்காமல் நெற்றியில் விழும்கோரை முடி, அதை அடிக்கடி ஒதுக்கி விட உயரும் கைகள். தடித்த கண்ணாடி. இந்தக் கோலத்தில்அவரைப் பார்த்த முதல் நொடி இன்னும் நினைவில் இருக்கிறது. மற்ற மாணவர்களுக்கு அவரைப்பற்றிய எண்ணம் என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. ஆனால் மாணவர்களைத்தோழமையுடன் ‘குஞ்சுகளா’ என்று அழைத்த பாங்கு என்னை அவர்பால் ஈர்த்தது. அவருடைய மாணவனாகஇருந்த நாள்கள் அனைத்திலும்  அந்த அழைப்பைக்கேட்கும்  வாய்ப்பு அமைந்தது.

 

அன்று புகுமுகவகுப்புப் பாடத்திட்டத்தில் புதுமைப் பித்தன், அகிலன், ஜெயகாந்தன், ஜெகசிற்பியன், அறிஞர்அண்ணா ஆகியோர் உள்ளிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இடம் பெற்றிருந்தது.தொகுப்பின் முதல் கதை புதுமைப் பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’. கமலேசுவரன் முதல் வகுப்பில்பேசியதும் அதைப் பற்றித்தான். மாணவர்களுடனான அறிமுகத்துக்கும் ஆசிரியரின் தன்னறிமுகத்துக்கும்பிறகு கதையைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார். கதையை முன்னிருத்தியதற்குக் காரணம் அறிமுக வகுப்பிலேயே மாணவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்க வேண்டும். ஆனால் அது எல்லா மாணவர்களுக்கும் உகந்ததாகஇல்லை. அந்தப் பேச்சு  நான் ஏற்கனவே அறிந்தஉலகத்துக்கு என்னை மீண்டும் அழைத்து செல்லும் வாசலாக இருந்தது. ‘புதுமைப் பித்தன் பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்ற அவருடைய கேள்விக்குத் தயக்கத்துடன் எழுந்து உற்சாகத்துடன்புதுமைப்பித்தன் தொடர்பாகச் சில வார்த்தைகளைச் சொன்னேன். அப்போது அந்தத் தடித்த கண்ணாடிக்குப்பின்னால் அவருடைய விழிகள் விரிந்து சிரித்ததைக் காண முடிந்தது. பிந்தைய ஆண்டுகளில்அந்த விழிநகையைப் பல முறை பார்க்க முடிந்தது.

 

அன்றைய பாடவேளைமுடிந்ததும் தமிழ்த் துறைக்கு வந்து பார்க்கும்படிச் சொன்னார். போனேன். என்னைப் பற்றிவிசாரித்தார். என்னுடைய இலக்கிய ஆர்வத்தைக் குறித்துக் கேட்டார். ‘புதுமைப்பித்தன்யார்னு கேட்டா எம்ஜியார் படத்தைப் பற்றித்தான் சொல்றாங்க. என்ன பண்றது? நீ சொன்னதுஆச்சரியமா இருந்ததுப்பா’ என்று பாராட்டினார். ஓர் இளம் இலக்கிய ஆர்வலனுக்கு அது பெரும்ஊக்கம். பின்னர் அவ்வாறு பல முறை ஊக்கமூட்டியிருக்கிறார்.

 

அப்போது கல்லூரியில்‘மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும்  மாணவர்’ இதழ் ஒன்று வெளியிடப்பட்டது. பெயர் ‘புதுவெள்ளம்’. மாணவர் இதழ் எனினும் பொறுப்பாளராகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் முத்துராமலிங்கம்இருந்தார். அதன் முதல் இதழிலேயே என்னுடைய கதை ஒன்று வெளிவந்தது. இரண்டாம் இதழில் கவிதையும்கதையும் வெளியாயின.  அவற்றை ஒட்டித் தமிழ்த்துறைக்குஅடிக்கடி செல்லும் தேவையும் வாய்ப்பும் ஏற்பட்டன. அந்தத் தருணங்களில் அதிகமும் சந்தித்ததுடாக்டர். கமலேசுவரனைத்தான் என்பது தற்செயல் அல்ல. துறையின் பிற பேராசிரியர்களுடன் உரையாடுவதை விட அவருடன் உரையாடுவதன் மூலம்புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது என்பதே காரணம். அந்தப் போக்குவரத்தில் நவீனச்சிற்றிதழ்களையும் புதிய புத்தகங்களையும் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ்த்துறைநூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துச் சென்று வாசிக்கும் சலுகையையும்  அளித்திருந்தார்.

 

புகுமுக வகுப்புக்குப்பிறகு எனது படிப்பில் ஓர் ஆண்டு இடைவெளி விழுந்தது. வெறும் பட்டப்படிப்புக்குப் பதிலாகவேறு படிப்பை விரும்பினேன். குடும்பப் பொருளாதாரச் சூழலால்  அந்தக் கனவு நிறைவேறாமல் போனது. ஓர் ஆண்டுக்குப்பிறகு மீண்டும் அதே கல்லூரியின் இளம் அறிவியல்- வேதியியல் பட்ட வகுப்பில் சேர்ந்தேன்.அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் பார்த்து வியந்த அற்புதமான கல்லூரி நூலகத்துக்குச்செல்லவும் என் தமிழைச் செம்மைப்படுத்த உதவும் தமிழாசிரியர்களைச் சந்திக்கவும் மீண்டும் கிடைத்த வாய்ப்பு அந்த மகிழ்ச்சியின்பின்னணி.

 

இடைவெளி ஏற்பட்டிருந்தஓராண்டில் நிறைய வாசிக்கவும் கவனத்துடன் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தேன். அதை எனக்குஉணர்த்தியவரும் டாக்டர். கமலேசுவரன் அவர்கள்தான். பட்ட வகுப்பின் முதலாம் ஆண்டைப் பெரும்பாலும்கல்லூரி நூலகத்திலேயே செலவழித்தேன். பாடத்துக்குத் துணையாகும் புத்தகங்களை வாசித்ததைவிட இலக்கிய நூல்களை வாசித்ததே அதிகம். அப்படி ஒரு நாள் நூலகத்தில் நான் வாசித்துக்கொண்டிருந்தேன். வாசித்துக் கொண்டிருந்தது ஓர் ஆங்கில நூல். பிரெஞ்சு எழுத்தாளரும்தத்துவவாதியுமான சார்த்தரின் ‘ எக்சிஸ்டென்ஷியலிசம் ( Exisitentialism ? ) என்ற நூல்.வாசிப்பில் மூழ்கியிருந்தபோது புத்தகத்தின் மீது நிழல் விழுவதை உணர்ந்தேன். என் முதுகுப்பக்கமாக இருந்து நான் வாசித்துக் கொண்டிருந்த நூலின் பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்பேராசிரியர். வகுப்பு நடக்கும் நேரத்தில் ஒருவன் அத்துமீறலாக நூலகத்தில் இருக்கிறான்என்பதைக் கண்டுபிடித்து விட்டார் என்ற அச்சத்தில் எழுந்து நின்றேன். அவர் புத்தகத்தைஎடுத்து முகப்பைப் பார்த்து விட்டு மேசைமீதே வைத்தார். ‘அடே குஞ்சு நீ இதையெல்லாம்படிக்கிறியா என்ன? ‘ என்று கேட்டு விட்டு நகர்ந்தார். அச்சம் நீங்கிப் பெருமூச்சு விட்டேன்.அந்த நாளின் சுப விளைவு மறுநாள் தெரிந்தது.

 

அடுத்த நாள்உயிர் வேதியியம் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அறை வாசலில் பேராசிரியர் கமலேசுவரன்வந்து நின்றார். வகுப்பை நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் சுதாகரிடம் அனுமதி கோரிஎன்னை வெளியே அழைத்தார். போனேன். கையிலிருந்த கனமான புத்தகத்தை என்னிடம் கொடுத்தார்.‘நீதான் எக்சிஸ்டென்ஷியலிசம் படிக்கிறியே, இதையும் படி’ என்று அவர் கொடுத்த புத்தகம்சார்த்தரின் ‘இருப்பும் இன்மையும்’ ( Being and Nothingness ). அவர் கொடுத்தது என்பதனாலேயேஅந்தப் புத்தகத்தை விழுந்து விழுந்து படித்தேன். அவரிடம் திரும்பக் கொடுத்தபோது ‘படிச்சேன்சார், ஆனா ஒண்ணும் புரியல’ என்றேன். ‘சரி , புரியவரைக்கும் படி. அதை நீயே வெச்சுக்கோ’என்றார். மிக நீண்ட காலம் அந்தப் புத்தகம் என் புத்தகச் சேகரிப்பில் இருந்தது. பேராசிரியரைநினைவுபடுத்திக் கொண்டிருந்தது. இருப்பிடம், ஊர் மாற்றங்களில் அந்த நூல் காணாமற் போனது.ஆனால் அந்த இன்மை பேராசிரியரின் இருப்பைப் பற்றிய உணர்வைப் போக்கி விடவில்லை.

 

பேராசிரியர்கமலேசுவரனின் வகுப்புகள் ஆர்வமுள்ள மாணவருக்கு சுவாரசியம் அளிப்பவை. பாடப் பொருளைச்சார்ந்து தீவிரமாக அமைந்தவை. மையப் பொருளை விட்டு விலகாத பயிற்று முறை அவருடையது .மையப் பொருளை ஒட்டிய வெளி விவரங்கள், சம காலத் தகவல்கள் இடம் பெறும் . இவையெல்லாம்பாட வேளையின் ஒரு மணி நேரத்தின் முக்காற் பங்கில் நிறைவேறும், எஞ்சிய கால் மணி நேரம்ஏறத்தாழ அரட்டைப் பொழுதுதான். ஆனால் அந்த அரட்டையிலும் பயனுள்ள தகவல்களும் புதிய பார்வைகளும்நிச்சய்ம் இருக்கும். சமயங்களில் நகைச்சுவையும் ததும்பும். அந்த நகைச்சுவை காலமெல்லாம்நினைத்துச் சிரிக்கவைப்பதாகவும் . இலக்கியத்தில் இடம் பெறும் வருணனைகளப் பற்றி ஒருமுறைசொல்லிக் கொண்டிருந்தார். ‘புலவர் சொல்கிற வர்ணணைகளை ஆராய்ந்து பார்த்தால் வில்லங்கமாகஇருக்கும் . அன்ன நடைன்னு சொல்றாங்க இல்லையா, அதைப் பார்த்திருக்கீங்களா? சகிக்காது.பொச்ச ஆட்டீட்டு நடக்கறதப் பார்த்தா நல்லாருக்குமா?’ என்று கேட்டதும் வகுப்பே அதிர்ந்துசிரித்தது. இன்றும் அந்த கூட்டுச் சிரிப்பு ஞாபகத்தில் முழங்குகிறது.

 

சில ஆண்டுகளுக்குமுன்பு தமிழுக்குச் செம்மொழித் தகுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனோன்மணீயம் சுந்தரனார்பல்கலைக் கழகம் , அ.ராமசாமியின் முன்னெடுப்பில் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன். நண்பர் பெருமாள்முருகனும் கலந்து கொண்டிருந்தார். அவரது உரை கேட்க அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவனாகநானும் அமர்ந்திருந்தேன். உரை இயல்பாகத் தொடங்கி வகுப்பறைப் பாட வேளையாக மாறியது. மெல்லமெல்லத் தகவல்கள் கோக்கப்பட்டு வளர்ந்து உச்சத்தை எட்டியது. முடியும்போது தீவிரமானவகுப்பறையில் பாடம் கேட்ட உணர்வு எழுந்தது. கூடவே இதே போலப் பாடம் நடத்துவதை முன்பேகேட்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஓடியது. சற்று நேரம் யோசித்த பின்னர் மூலம் பிடிபட்டது.அது பேராசிரியர் கமலேசுவரனின் பயிற்று முறை. முருகனும் அவர் மாணவர் என்பது நினைவுக்குவந்ததும் பேராசிரியரின் பாதிப்புப் புலப்பட்டது.

 

என்னுடைய கல்லூரிநாட்களில் கமலேசுவரனை இளநிலை பட்ட வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்தைக் கற்றுத்தரும்வாத்தியாராக மட்டுமே அறிந்திருந்தோம். ஏனெனில் அன்று முதுநிலைப் பட்ட வகுப்பில் மட்டுமேதமிழ் தனிப்பாடமாக இருந்தது. அவருக்கு அணுக்கமான மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே அவரதுஆளுமையின் இன்னொரு பக்கத்தை அறிந்திருந்தார்கள். மொழியியலாளராக அவரது பங்களிப்பைப்புரிந்து கொண்டிருந்தார்கள். அவரை ஒரு மொழியியல் ஆய்வாளராக நான் அறிந்து கொண்டதும்எதிர்பாராத செயல். அது அவரும் பங்களிப்புச் செய்து வந்த ‘புலமை’ இதழ் மூலம் நிகழ்ந்தது.அவர் எனக்கு வாசிக்கக் கொடுத்த இதழ்களில் புலமையும் இருந்தது. ஆனால் அது என்னுடைய வாசிப்புக்காகக்கொடுக்கப் பட்டதல்ல. எனது இன்னொரு ஆசிரியரான கோவை ஞானியிடம் சேர்ப்பிக்க என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. எல்லா இதழ்களையும்புரட்டிப் பார்ப்பதுபோல அதையும் புரட்டிப் பார்த்ததில் பேராசிரியரின்கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. வாசிப்பில் எழுந்த ஐயங்களை அவரிடம் கேட்டேன். ‘இன்னிக்குசாயங்காலம் வகுப்பு முடிந்ததும் துறைக்கு வா’ என்றார். சென்றேன். ‘ராத்திரி வீட்டுக்குவரலேன்னா தேட மாட்டங்கன்னா என் கூட வா’ என்றார். எங்கள் பகுதியிலிருந்து வந்து படிக்கும்சக மாணவரிடம் வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கச் சொல்லி விட்டு அன்று மாலை அவருடன் அவர்வீட்டுக்குச் சென்றேன். அன்றைக்கு அவர் மட்டுமே இருந்தார். தயாராக இருந்த உணவை அருந்திமுடித்த பின்பு அவரது மொழியியல் வகுப்பு நடைபெற்றது. புதிய திசையின் கதவுகளைத் திறந்துவிட்ட சிறப்பு வகுப்பு அது. அன்று அதன் பயன் தெரியவில்லை. இலக்கியத்தில் மும்முரமாகஈடுபட்ட காலத்தில் புதிய பேசுபொருளாக மொழியியலும் இடம் பெற்றபோது அவர் எடுத்த தனி வகுப்பின்பொருத்தம் விளங்கியது.

 

டாக்டர். கமலேசுவரன்மரபான தமிழ்ப் பேராசிரியர் அல்லர் என்பது என் கருத்து. பிற தமிழாசிரியர்களிடம் காணப்பட்டதமிழ் வெறி அவரிடம் காணப் பட்டதில்லை. அவரிடம் கண்டது தமிழ் மீதான பற்றும் அதை அறிவியல்சார்ந்து பார்க்கும் அணுகுமுறையும். அவரது ஒப்பாய்வுகளிலும் மொழி ஆய்வுகளிலும் ஓர்இலக்கியப் பயிற்சியாளனாக எனக்குத் தேவையானதாக எடுத்துக் கொண்டது அந்தப் பார்வையைத்தான்.கல்லூரிப் பருவத்துக்குப் பின்பு அவரை அனேகமாகச் சந்தித்ததில்லை. அது விட்டகுறையாகஇப்போது உறுத்துகிறது. தொடர்பில் இருந்திருந்தால் இன்னும் திட்பமான எல்லைகளை இலக்கியத்திலும்எட்டியிருக்க முடியும். முடியாமற் போனது பேரிழப்புத்தான்.

 

ஏறத்தாழ நாற்பதுஆண்டுகளுக்குப் பிறகு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அவருக்குஎன்னையும் எனக்கு அவரையும் அடையாளம் தெரியவில்லை. நினைவூட்டல் அவருக்குப் பயனளிக்கவில்லைஎன்பது உரையாடலில் விளங்கிற்று. அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் கடந்திருந்தன.உடல் தளர்ந்திருந்தது. நினைவு அந்தி வெளிச்சத்தை அடைந்திருந்தது. இரண்டு விஷயங்கள்அன்று சட்டென்று புலப்பட்டன. ஒன்று; முன்னாள் மாணவனை பன்மையில் அழைத்தார். இரண்டு: குஞ்சு என்ற வாஞ்சையான முகமனை மறந்திருந்தார். அவற்றை அவரும் அவரது துணைவியாரும்உபசரிப்பால் ஈடுகட்டினார்கள். முதிய வயதிலும் இளமை மிளிர அவர்கள் காட்டிய விருந்தோம்பல்என்றும் நினைவில் சுவை குன்றாமலிருக்கும்.

 

இந்தச் சந்திப்புக்குப்பிறகும் ஏனோ அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற முனைப்பு உருவாகவில்லை. அதையும்பேராசிரியரே நிறைவேற்றினார். சென்ற ஆண்டு ( 2023 ) இதய நோய் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானேன்.இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் அது பொருட்படுத்தப்பட வேண்டாதது  என்பதால் அதைப் பற்றி யாருக்கும் தெரிவிக்கவும் விரும்பவில்லை.ஒரு நாள் காலை தொலைபேசி அழைத்தது. ‘’ நான் கமலேசுவரன் பேசுகிறேன். அறுவைச் சிகிச்சைபற்றிக் கேள்விப்பட்டேன். நலமாக இருக்கிறீர்களா?’’ என்று விசாரித்தார். விசாரிப்புக்குச்சட்டென்று பதில் சொல்ல முடியாதபடி குரல் தழுதழுத்தது. கண்கள் நிறைந்தன. அந்தப் பெருந்தன்மைக்குமுன் பேச்சு வரவில்லை.

 

பெருமரங்கள்நிழல் கொடுக்கின்றன. அந்தக் கொடையை மரங்கள் நினைவில் கொள்வதில்லை. ஆனால் நிழலை உணர்ந்தவன்அந்தக் கொடையை மறப்பதில்லை. பேராளுமையான கமலேசுவரனின் நிழலில் இளைப்பாறிய ஆயிரக் கணக்கானமாணவர்களில் நானும் ஒருவன் என்பது கிடைத்த வாய்ப்பு அல்ல; கிட்டிய பேறு.

                                                                                    @

புகைப்படத்துக்கு நன்றி: பெருமாள் முருகன்

 


 


 

 

 

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2025 23:53
No comments have been added yet.


Sukumaran's Blog

Sukumaran
Sukumaran isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Sukumaran's blog with rss.