அகம் என்னும் காடு

 எனக்கு தமிழ் புத்தாண்டு மனதிற்கு நெருக்கமானது. நிலத்தின் வசந்தம். 

அதிகாலையில் தினமும் வாசலில் கோலமிடும் போது கிருஷ்ணர் பாதங்களை படிகளுக்கு கீழே மனிதகால்கள்படாத இடத்தில் வரையும் போது கிருஷ்ணா ரா என்று மனதிற்குள் சொல்வது வழக்கம். பதிமூன்று வயதிலிருந்து சடங்கிற்காக சொல்லத்தொடங்கி, வழக்கமாகி, கவனமில்லாமல் அனிச்சை செயலாகி, இப்போது அனிச்சையான கவனமாகி உள்ளது. கிருஷ்ணா ரா என்று எதை அழைக்கிறேன்? சிறுவயதில் அப்படி அழைக்கும் போது அது வெறும் வார்த்தை. பின்னால் தவழும் கண்ணனின் சிலை மனதில் இருந்தது.  பின் வளர்ந்து உரலை இழுக்கும் தாமோதரன். கதைகளுக்குள் பித்தாக இருந்த நாட்களில் உலகுண்ட பெருவாயன். அதன் பின்னால் தொலைகாட்சிகளில் பார்த்த ராதாகிருஷ்ணர்கள். கல்லூரி நாட்களில் முதன்முதலாக திருப்பாவை படித்த நாட்களில் ஆண்டாளின் மோகனன். பின் வெண்முரசின் கிருஷ்ணன்..குறிப்பாக  நீலம் நாவலின் கிருஷ்ணன்.

 நீலம் வாசிக்கும் போது ஓவியர் சண்முகவேலின் கிருஷ்ணர்கள். தினமும் ஒரு கிருஷ்ணன். அழகான அதிகாலைகள் அவை. சற்று பெரிய மென்நீல பூவின் மீது பூக்கள் உதிர சிவந்த குட்டிப்பாதங்கள். நான் அன்றாடம் வாசலில் வரையும் பாதத்தின் உச்ச வடிவங்களில் ஒன்று. உடைந்த வெண்ணெய் பானையில் இருந்து  வெண்ணையுடன் காற்றில் பறக்கும் நீலன். ராதையின் இடையில் மடியில் அமர்ந்தவன். பூதகியின் மார்பில் ஔிரும் நீலன். பூதகியிடம் இருப்பவன் மிக அழகான கண்ணன். அவளுடைய நஞ்சு முழுக்க இவனில் நிறைய ஔிரும் நீலன் என்று தினமும் ஒரு கண்ணன்.

இத்தனை கிருஷ்ணர்களில் மனதில் தங்கியிருக்கும் ஓவியம் சொல்வளர் காடு நாவலில் வரும் கிருஷ்ணர். வெண்முரசு வாசிக்கும் போது மனதில் தங்கிவிட்ட கிருஷ்ணர். பாண்டவர்கள் பணையமாக அனைத்தையும் இழந்து வனம் புகுந்த பின்னர் கிருஷ்ணர் அவர்களை காண வருகிறார். அவருக்கும் துவாரகையில் அரசியல் குழப்பங்கள். பெருங் கோபத்தின் இன்னொரு முகமாக அலட்சியமாக இருக்கும் திரௌபதியை கடிந்து கொள்கிறார். பின் தருமரிடம் உரையாடிவிட்டு விடைபெறுகிறார். தருமரின் பார்வையில் இருந்து வரையப்பட்ட ஓவியம். கிருஷ்ணர் தனியாக காட்டை பார்த்து நடந்து செல்கிறார். இந்த ஓவியத்தை பலமுறை தேடி எடுத்து பார்த்திருக்கிறேன். ஒரு வாரத்திற்கு முன்பு கூட. 


                    ஓவியம் : ]சண்முகவேல் வெண்முரசு நாவலில்]

நம் மனதில் நம்மை அறியாமலேயே சில விதைகள் விழுந்து விடுகின்றன. காலம் செல்ல செல்ல முளைத்து மரங்களாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன. அகம் ஒரு காடு. அறியாத வயதில் விழுந்த  விதைகள் வளர்ந்த காடு.  பல ரூபங்களும், நிகழ்வுகளும், சொற்களும், உணர்வுகளும், கனவுகளும், உள்ளுக்குள் புதைந்து கிடக்கின்றன. அதில் இந்த 'கிருஷ்ணா ரா' வை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

தினமும் கிருஷ்ணா ரா... வென்று எதை அழைக்கிறேன். கண்டிப்பாக அது தூல வடிவமான ஒன்று இல்லை. அந்த வானின் அதிகாலை நிறங்களை,பட்சிகளை,தென்னம்கீற்றின் தலைகுலுக்கலை,வேம்பின் உழைவை,வீட்டின் எதிரில் உள்ள கிணற்று சுவரில் எததனை முறை அழித்தாலும் விடாப்பிடியாக தளிர்க்கும் அரசங்கன்றின் அடர் இளம் சிவப்பான தளிரில்,அதன் அருகில் பூத்துக்குலுங்கும் வாடாமல்லிநிற நித்யமல்லி மலர்களில்,வரையும் கோலத்தில், ஈரமான துளசி செடியின் இலைகளில், வாசிக்கும் புத்தகங்களில் சொல்லாக மொழியாக...

 அன்றாடம் என்னை எழவைக்கும் ஒன்றையே தினமும் அழைக்கிறேன் என்று நினைக்கிறேன்.

இரவு வெப்பத்தின் விளைவாக அதிகாலையில் எழுந்ததும் சின்ன சூரைக்காற்றுடன் மழை. சொல்லில் வைக்க முடியாத ஒரு தண்மை. மிக மென்மையான தண்மை. காற்றாக மழையாக...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும் அன்பும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கேட்ட  பாசுரம் இது. இந்தப்பாடலை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். இந்தப்பாடகியின் குரலில் இந்த இசையில் அமுதமாய்...

https://youtu.be/aAunpj7yHJQ?si=w8tlGTqS-vm_sagg


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2025 17:57
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.