அருங்கணங்கள் நீள்க!
அகம் கேட்கும் தனிமையென ஒன்றுள்ளது. அதனை வழங்காது தவிர்க்கவே கூடாது. நம்மில் பலருக்கும் தனிமை என்றவுடன் எதிர்மறை எண்ணத்தின் பொருண்மையாகவே அர்த்தம் திரள்கிறது. ஆனால் தனிமை அப்படியானதொரு தன்மை கொண்டதில்லை. தனிமைக்கு இயல்பிலேயே இருக்கக் கூடியது சிருஷ்டிக்கும் ஆற்றல். உள்வாங்கும் தெளிவு. காற்றோடும் மரங்களோடும், வெளியோடும் பிணைந்திருக்க கூடிய பிரபஞ்ச இணைப்பு. எல்லாவற்றுக்கும் மேலான ஒன்றாகக் கைகூடுவது தனது சுயத்தையே மெல்லத் தடவிக் கொடுக்கும் ஆதூரமான கரங்கள் தன்னிடமே இருக்கிறதென வியந்து வியந்து ஆனந்தப் பெருக்கில் கண்ணீரை உகுத்தல். காட்டுத் தேனின் அடையை அப்படியே கவ்விக்கொண்டால் பெருகும் இனிமை உளத்திலே பெருகும்.
தன்னைத் தனிமைக்கு ஒப்புக்கொடுத்தல் ஒருவிதமான கலை. ஆனாலொன்று தனிமையில் அமைந்திருக்கையில் உங்களிடமிருந்து மலர்வது என்னவென்பது முக்கியம். மாபெரும் பூந்தோட்டத்தின் உள்ளே அந்தரத்தில் பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சி நிறைவில் வந்தமரும் பூவில் தனிமைதான் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமைந்து எழுந்த பூவின் மகரந்தத்தை ஏந்தி வந்து இப்போது அமரும் பூவிடம் கையளிக்கிறது. நான் கூறும் தனிமை இந்த வண்ணத்துப்பூச்சியினுடையதைப் போல ஆக்கத்தை நோக்கியும், செயலை நோக்கியும், படைப்பை நோக்கியும் மகரந்திக்க வேண்டும்.
ஆற்றங்கரையை ஒட்டி காலை நடைக்குச் செல்கிறேன். மரங்கள் அடர்ந்திருக்கின்றன. பறவைகள் கிளைகளில் பூத்திருந்து ஓசை எழுப்புகின்றன. நகரத்தில் காணவே கிடைக்காத குருவிகள் கெந்திக் கெந்திப் பறப்பதைப் பார்க்கவே தியானத்தில் கிடைக்கும் தரிசனம் போலாகிவிடுகிறது. கூவும் பூங்குயில்கள் திருப்பள்ளியெழுச்சியின் வரிகளை நினைவுபடுத்துகின்றன. இருள் போய் அகல கருணையின் சூரியன் எழுகிறது. இயற்கையின் திருவடியில் எத்தனை ஆடிகள் ஆசைகின்றன. ஒவ்வொரு அசைவுக்கும் ரூபங்கள் புதிது புதிதாய் மிளிர்கின்றன.
நடைக்கு வருபவர்களில் சிலர் வினோதமான பழக்கமுடையவர்கள். வயதானவர்கள் நிமிர்ந்த நடை நடக்க முண்டியடிக்கிறார்கள். இளவட்டங்கள் கையில் போனை வைத்தபடி ரீல்ஸ்சை இயக்கியபடி ஜாக்கிங் செல்கிறார்கள். இன்னும் சிலர் வியர்வையை வெளியேற்றவே நடைக்கு வருகிறவர்கள். அவர்களிடம் அப்படியொரு மூர்க்கம். ஓட்டமும் நடையுமாக ஒருவகை மேல்தட்டு உடல்மொழியை வைத்திருக்கிறார்கள். சிலர் மட்டுமே ஆசுவாசமாக நடைக்குப் பணிகிறார்கள்.
கிளைகளுக்குள் மறைந்திருந்து கூவியழைக்கும் குயிலை நின்று தேடுகிறார்கள். கெந்தியோடும் புலுனிக்குஞ்சுக்கு வழிவிட்டு தாவி நிற்கிறார்கள். கெளதாரிகள் குறுக்கறுக்கும் போது நின்று பார்க்கிறார்கள். பழுத்து விழுந்த தேக்கு இலையை எடுத்து, விசிறிக்கொண்டு கொஞ்சத் தூரம் செல்கிறார்கள். ஆற்றில் தூண்டில் வீசி இரைக்காக காத்திருக்கிறார் ஒரு புலம்பெயர் தொழிலாளி.
இத்தனைக்கு நடுவில் நானும் நடக்கிறேன். எனக்கு மரங்களின் அசைவிலிருந்து பிறக்கும் சப்தம் ஒத்தடமாய் இருக்கும். பூமி புலருவதற்கு முன்பாக தனிமையில் இருப்பதாக மனிதர்கள் எண்ணுகிறார்கள். எனக்கு அப்படித் தோன்றியதில்லை. அது எப்போதும் படைப்பாற்றல் பெருகும் தனிமையோடு தனது பலகோடி கரங்களால் சிருஸ்டித்துக் கொண்டே இருக்கிறது.
“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே” மணிவாசகர் சிவனை இப்படியும் விளித்திருக்கிறார். தனிமையும் பழம்பொருள் தான். என்னுடைய அனுபவத்தில் தனிமை அழகானதும் படைப்பூக்கமும் கொண்டது. இயற்கையோடு நிழல் விரித்து அமர்ந்திருக்கும் போதெல்லாம் நான் தனிமையாகிவிடுகிறேன். அப்போதெல்லாம் எனது கண்கள் தேடுவது விதையை – மண்ணிற்குள் இருந்து முளைத்தெழும்பும் நம்பிக்கையை. அசையும் மேகத்தை அண்ணாந்து பார்த்தபடி அமர்ந்திருப்பதே ஒருவகையான தனிமை அனுபவம்தான்.
ஆனால் அது மிகமிக எளிமையான தொடக்க நிலை. இன்றைக்கு ஒரு மரங்கொத்தியைக் கண்டேன். எத்தனை அழகான பறவையது. அதனுடைய அலகின் கூர்மையொலியை கேட்டுக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். பனை மரங்களில் அது துளைபோடுகையில் காற்றள்ளி வருகிற அந்த லயம் – நினைக்கவே மண்ணள்ளித் தருகிறது.
ஒருநாள் மதியத்தில் மழை தூறி விட்டிருந்தது. அம்மம்மாவின் வீட்டு வளவில் நின்ற வடக்குமூலை பனையில் மரங்கொத்தி லயம் எழுப்பியது. நான் பனைமரத்தின் கீழே அமர்ந்திருந்து பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கு மேலாக அது தொடர்ந்தது. பிறகு அது பறந்துவிட்டது. ஆனாலும் என்னுடைய அகத்தில் மரங்கொத்தியின் லயம் கேட்டுக்கொண்டே இருந்தது. கண்கள் உறைந்து அப்படியே அண்ணாந்து பார்த்தபடி அமர்ந்திருந்த சம்பவம்தான் “இவனுக்கு விசர் முத்திப் போட்டுது” என்று அம்மம்மாவைப் பகிடியாகச் சொல்ல வைத்தது. தனித்திருத்தலும் தனிமையும் ஒன்றல்ல. அதுபோலவே தனிமையும் தனிமையுணர்வு ஒன்றல்ல.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலரும் தனிமையில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவர்கள் தனிமையால் அல்ல தனிமையுணர்வால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அது ஒரு விஷக்கொடியைப் போல அவர்களிடம் திரண்டு வளர்கிறது. இந்தச் சிறு பிராயத்திலேயே தனிமையுணர்வை நோயாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மன அழுத்தமும், கசப்பும், விலக்கமும் நேரும் போது அவர்கள் அதனிடம் சரணடைகிறார்கள்.
தோல்வியையோ, இழப்பையோ, அதிர்ச்சியையோ, கசப்பையோ, துரோகத்தையோ எதிர்கொள்ளும் திராணியற்று அதனிடம் மடிகிறார்கள். அவர்கள் இருட்டைப் போர்த்திக்கொண்டு மிரள்கிறார்கள். அவர்கள் முதலில் முடங்கிக்கிடக்கும் அறையின் ஜன்னல் கதவைத் திறக்க வேண்டும். ஒளி காணும் கண்கள் வாழ விரும்பும். காற்றை உணரும் தேகம் நம்பிக்கை கொள்ளும். நினைத்துப் பாருங்கள் இந்தப் பேரண்டம் தனிமையுணர்வு கொண்டால், இங்கு வாழும் உயிரினங்களின் கதி என்னவாகும்.
பேரண்டம் கருணை மிக்கது. நாளும் புத்தொளி தந்து நம்மைக் காக்கிறது. அளிக்கப்பட்டிருக்கும் வாழ்வில் ஒளியை நோக்கி மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும். நமக்கு ஒளி படையலிடப்பட்டிருக்கிறது. ஆகவே இருளுக்கு நாம் பலியாக முடியாது.
தனிமையுணர்வால் சிதைக்கப்பட்ட நண்பரொருவர் இப்போது மீண்டு வந்திருக்கிறார். மாத்திரைகளுக்கும் மருத்துவர்களுக்கும் தன்னை ஒப்புக்கொடுத்தளவில் மிகச் சிறு அளவிலேனும் தன்னை தனக்கே ஒப்புக்கொடுத்திருக்கலாம். மருத்துவர்களும் அதனைத் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். மீள்வதற்கான வெளிச்சத்தை கண்டடைய அவர்கள் வழிகாட்டுகிறார்கள். இந்த நண்பர் நீண்ட வருடங்களாக சிகிச்சையில் இருந்தவர். இப்போது மாத்திரைகளை குறைத்துக் கொண்டு தனிமையுணர்விலிருந்து தப்பித்து வந்துவிட்டார். அவரது மந்தகாச புன்னகை பேரழகு.
“இந்தப் பாலைவனத்தின் அற்புதமே, எங்கோவொரு மூலையில் நீரூற்றை ஒளித்துவைத்திருப்பது தான்” – குட்டி இளவரசன் நாவலில் வருகிற இந்த வரிகளைத் தான் அவரைப் பார்க்கும்போது நினைவில் வரும். இன்றைக்கு அவர் முழுக்கு முழுக்க மதுரம் பெருகும் நீரூற்று. பாலை அவரிடமிருந்து புயலெனப் புறப்பட்டுவிட்டது. தனிமையுணர்வு காலங்களில் என்னுடன் உரையாடியிருக்கிறார். சில கடிதங்களை எழுதவும் செய்திருக்கிறார். எப்போதும் அவரிடம் சொல்லுவதுண்டு “ இங்கே செயலாற்றவே வந்திருக்கிறோம். என்றுமே அணையாத பெருஞ்சுடர் ஒவ்வொரு மனிதர் கையிலும் உள்ளது. அதனைப் பக்குவமாக பொறுப்புடன் இனி வரும் தலைமுறைக்கு கைமாற்றப் பணிக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே இதுபோன்ற இருளில் நமக்கு வேலையில்லை. எழுந்து வருக” என்பேன். அவர் பெருஞ்சுடரை அணைய விடாமல் மீண்டிருக்கிறார்.
நீண்ட நாள் கழித்து இன்றைக்கு என் அகம் தனிமையைக் கேட்டது. ஒருவகையான கொந்தளிப்பும், கோபமும் மேலறி பின் இறங்கித் தணிந்தது. திடீர் அலைச்சீற்றம் போல எப்போதாவது உளத்தில் நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனாலும் தனிமையை வழங்க வேண்டியிருந்தது. நடைக்குச் செல்லும் பாதையில் மேற்குத் திசை பார்த்தபடி அமர்ந்திருந்து இருவர் தியானம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் முதுகில் கதிர்களை ஏவி சூரியன் எழுகிறான். ஆனாலும் அவர்கள் புறமுதுகு காட்டியபடி அமர்ந்திருந்து கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுகிறார்கள். அவர்களைக் கடந்து போனேன்.
இலைகள் உதிர்ந்த காட்டுத்தேக்கில் செம்பழுப்பு நிறத்தில் ஒரேயொரு இலைமட்டும் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அதனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
எத்தனை அபிநயம்! எத்தனை அசைவுகள்! – தனிமை தருகிற ஆக்கம் பேராற்றல் கொண்டது. பிறகுதான் அந்த இலையின் கீழே பார்த்தேன். பெயர் தெரியாத பூச்சியொன்று வாழ்ந்து கொண்டிருந்தது.
அந்த தேக்கிலை பூச்சிக்கு நிலம்.
என் தனிமைக்கு அருங்கணம் .
பூச்சியே வாழ்க! அருங்கணங்கள் நீள்க!
The post அருங்கணங்கள் நீள்க! first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

