பொய்த்தேவு [வாசிப்பனுபவம்]

               [ 2020 தில் பதாகை இணைய   இதழில் வெளியான வாசிப்பனுபவம்]


 என்னதான் வேண்டும்!

நாவல்:பொய்த்தேவு      

ஆசிரியர்:க.நா.சுப்ரமணியம்

பணத்தை தேடி சேர்த்தால் வாழ்வில் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்று மிகசிறுவயதில் மனதில் பதிந்து கொள்ளும் ஏழை சிறுவன் சோமுப்பயலின் முழுவாழ்வும் நாவலின் பேசுபொருள்.          



கும்பகோணத்தின் அருகில் காவிரிக்கரையின் சாத்தனூர் கிராமத்தின் கதை.ஊரின் மையத்தில் மேட்டுநிலத்தில் சிவன் கோயில்.காவிரியை ஒட்டிய மேட்டுத்தெருவும்,சர்வமாணிய அக்ரஹாரமும் நாவலின் முக்கியமான கதைக்களம்.குறியீடும் கூட என்று எனக்குத்தோன்றுகிறது.மேட்டுத்தெரு× சர்வமாணியஅக்ரஹாரம்.

தன்போக்கில் வளரும் ஒரு காட்டுச்செடியாக சோமு வளர்கிறான்.திருடன் அடாவடிக்காரனின் மகன் என்ற அடையாளத்துடன் சிறுவயதிலிருந்து சமூகத்தால் பார்க்கப்படும் சோமு சிறுவயதிலேயே தந்தையை இழந்தாலும் அடையாளம் அப்படியே இருக்கிறது.ஊரின் ஒவ்வொரு இடமாக ஓரமாக தள்ளிநின்று சமூகத்தை வேடிக்கைப் பார்க்கிறான்.அதன் மூலம் அவன் பணம் பிரதானம் அதுவே கடவுள் என்ற முடிவுக்கு வருகிறான்.

நாவலில் சாத்தனூரின் காவிரி வருகிறது.எந்த வயதிலும் பெண்கள் அழகு என்று அக்கா சொல்வாள்.அதுபோலதான் காவிரியும் எங்கிருந்தாலும் ,எந்தக்கதையில், எந்தஊரில் வந்தாலும் அழகு.

பணக்கார ராயர் வீட்டில் வேலைக்கு சேர்கிறான் சோமு. ராயர் பணத்தை கணக்கில்லாமல் தானதர்மங்களுக்கு செலவிடும் மனிதராக இருக்கிறார்.பணம் சுமை என அதை கரைத்துவிட்டு சாம்பமூர்த்திராயர் விட்டலனை நோக்கி செல்கிறார்.ஏன் இப்படி என்று சோமுமுதலிக்கு வியப்பாக இருக்கிறது.

ராயரின் உதவியால் சோமுவின் ஏழ்மை வாழ்வு முடிவுக்கு வருகிறது.மளிகைமெர்சண்ட்,இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட்,பஸ்ஓனர் என பலஅவதாரங்கள் எடுத்து பணத்தை குவிக்கிறார்.

சிலவிஷயங்களில் சோமு கடைசி வரை மேட்டுத்தெரு வாசியாகவே இருந்தான் என நாவலின் ஆசிரியர் எழுதுகிறார்.பெண்கள் மற்றும் குடி.ஆனால் தீவிரமாக பணத்தை தேடும் முப்பதுஆண்டுகளில் அவர் மிககண்ணியமானவராக இந்தவிஷயங்களில் இருக்கிறார்.

பணம் சம்பாதிக்கும் வரையில் அதை நோக்கியே தீவிரமாக சென்றுகொண்டிருப்பவர் அதை செலவு செய்ய முடிவெடுத்து கும்பகோணத்தில் வீடுகட்டி ஆடம்பரவாழ்வில் நுழையும் போது மீண்டும் பழைய சகவாசங்கள் அவரை திசைதிருப்புகின்றன.முரணான பழக்கங்கள் என சமூகம் சிலவற்றை கோடிட்டு வைத்திருப்பதன் காரணம் அவை மனிதனை  சோர்வுகொள்ள செய்து செயலூக்கத்தை மனத்திண்மையை கலைப்பதால் தான். அவர் சம்பாதித்த பணத்தால் அவரின் மகன் கேளிக்கை வாழ்வை மேற்கொள்வதை அவரால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. 

கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்த சோமு பொருளாதாரத்தில் எட்டும் உயரம் மனிதசாத்தியத்தின் ஒருபுள்ளி.அது நாவலின் நேர்மறையான இழை.கோவில்மணியின் நாதம் சோமசுந்தரத்தை உலகியல் தளைகளில் இருந்து விடுவிக்கும் இடம் நாவலின் முக்கியமானது.

 நாவலில் ராயர்குடும்பத்தோடு சோமுமுதலியாரின் உள்ளார்ந்த நட்பும் அன்பும் வெளிப்படுகிறது.அனைத்திலும் பணசிந்தனை உடைய சோமு, ராயர் குடும்பவிஷயங்களில் மனிதத்தன்மையோடு கடைசி வரை இருக்கிறார்.

இறுதியில் அதிக செல்வம் கொண்டுவிடும் பாதாள இருளை தன்மகனாலேயே சந்திக்கிறார்.அந்த இருளில் அவருக்கு சாத்தனூரின் சிவன் கோயில் மணி வழிக்காட்டும் அழைப்பாக கேட்கிறது.

 சாம்பமூர்த்திராயர் பணத்தை, சுமைகளை  உதறுவதை வாழ்நாள் முழுக்க வியப்பாக பார்க்கிறார் சோமுமுதலி.இறுதியில் அவருக்கும் பணம் சுமையாகிறது.பணம் தெய்வம் என்று துவங்கிய வாழ்வு பணம் ஒருமாயை என்று உணர்வதுடன்  முடிகிறது.விசையோடு செல்லும் அம்பு  தைக்கும் இடம் இது.

நாவலில் சோமுமுதலி பொருள் தேடும் முப்பதுஆண்டுகளில் அவரின் செயலூக்கம் வியக்கவைக்கிறது.கருமமே கண்ணாயிருந்து பணம்தேடும் சோமுமுதலி முதலில் விலக்கத்தை ஏற்படுத்தினாலும் அவரின் செயலூக்கம் நம்மை ஆட்கொள்வதை மறுக்கமுடியாது.காவிரி பாயும் நிலத்தில், நிலத்தை விருப்பாத தூயவியாபாரி.

வியாபாரவிஷயங்களில் அவர் காட்டும் நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் ராயர்குடும்பநட்பு ஆகியவை சோமுமுதலி என்ற நிறபேத ஓவியத்தின் முக்கியவண்ணங்கள்.

நாவல் எளிய கிராமத்தின், எளியமனிதனில் தொடங்கி வெறுமையை கண்டடைதல் புள்ளியை தொடுகிறது.அப்பொழுது வாசிக்கும் நமக்கு மனிதர்களாகிய நமக்கு மனிதர்களாகிய நமக்கு என்னதான் வேண்டும்? என்ற கேள்வியை தவிர்க்க முடியாது. 

சோமுமுதலியைப் போன்ற நபர்களை அனேகமாக தினமும் சந்திக்கிறோம்.பணம் சம்பாதிப்பது லட்சியவாதத்தாடு சேர்ந்ததா? வறுமை காலத்தில் அப்படியாக இருந்திருக்கலாம்.அடிப்படை வசதிகள் நிறைவேறியப்பின்னும் அது லட்சியமாக இருந்தால் அது கொண்டு சேர்க்கும் இடம் சோமுமுதலி உணரும் வெறுமையாக இருக்கலாம்.

நாவலை முடிக்கும் போது சோமுமுதலியுடன் முழுவாழ்க்கையை வாழ்ந்து பார்த்த உணர்வு வருவதால் இந்தநாவல் எனக்கு முக்கியமானது.சமூகம் பணத்தை நோக்கி தன் அத்தனை விரல்களையும் நீட்டி என்னை பார்க்க சொல்லும் போது,பணத்தால் பதட்டத்தை ஏற்படுத்தும் போது இந்தநாவல் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வண்டிசக்கரத்திற்கான சேவைகளை செய். அது நீ செல்ல வேண்டிய இடத்திற்கான வாகனமன்றி... நீ அடைய வேண்டிய இடம் அது அல்ல என்று சொல்வதால் இந்தநாவல் எனக்கு நெருக்கமானது.

நாவலின் முன்னுரையில் மனிதர் மேற்கொள்ளும் அனைத்து லட்சியங்களுமே பொசுக்கென்று உதறப்படுவது தான் என்று திருவாசகம் சொல்கிறது என்று ஆசிரியர் சொல்கிறார்.

மனிதர் எதிலும் போய் அமைவதில்லை.அதற்கும் மேலே மேலே செல்ல மனம் உந்துகிறது.பணத்தால் ஒருஅளவிற்கு மேல் தன்னிறைவை அளிக்கமுடிவதில்லை. பொருள் அடையவேண்டியதன்றி…அது எய்துதல் அல்ல என்று சொல்கிறது பொய்த்தேவு.இந்த கூச்சல்களுக்கு நடுவில் பணத்தின் எல்லையை சொல்லும் ஒருகுரல் எனக்கு தேவையாக இருக்கிறது.இதை எழுதும் பொழுது தன்கனத்த கண்ணாடியின் பின்னிருந்து தீவிரமான பார்வையோடு பார்க்கும் க.நா.சு கண்முன்னே வருகிறார். 



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2025 18:20
No comments have been added yet.


கமலதேவி's Blog

கமலதேவி
கமலதேவி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow கமலதேவி's blog with rss.