வாழ்வில் இல்லாததும் எழுத்தில் உள்ளதும்
எழுத்தில் நகைச்சுவை கூடுவதென்பது வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தது. எதையும் விலகி நின்று பார்க்கப் பழகிவிட்டால் நகைச்சுவை தன்னியல்பாக வந்துவிடும். அதாவது, எழுதுபவன் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிவசப்படவே கூடாது. சிலருக்கு இது இயல்பாக அமையும். பழக்கத்தின் மூலமும் கொண்டு வரலாம். தரபேதம் இருக்கும் ஆனாலும் முழுப் பழுதாகாது.
நகைச்சுவையை முதல் முதலில் Non Fiction இல்தான் முயற்சி செய்தேன். டாலர் தேசத்தில் அது சரியாகக் கூடி வந்தது. உக்கிரமும் தீவிரமும் கூடிய பல இடங்களில் தம்மை மறந்து சிரித்துவிட்டதாகப் பல வாசகர்கள் சொன்னார்கள். அங்கே அவர்கள் சிரிக்காவிட்டால் அடுத்தப் பக்கத்துக்கு நகர மாட்டார்கள் என்று கணித்துச் செய்யப்பட்டது அது. பிறகு ஓம் ஷின்ரிக்கியோ எழுதியபோது எனது முயற்சிக்கு அவசியமே இல்லாமல் அந்த சப்ஜெக்டே உரிய நகைச்சுவையை அள்ளிக் கொடுத்ததைக் கண்டேன்.
நாவல்களைப் பொறுத்தவரை நகைச்சுவை உள்பட எதையும் நான் திட்டமிடுவதில்லை. ஒரு வரியில் ஒரு யோசனை தோன்றும். அதை முகர்ந்துகொண்டு அது போகும் இடமெல்லாம் பின்னால் போவேன். என்ன வருகிறதோ அதுதான். இருநூறு பக்க அலகிலா விளையாட்டாயினும் சரி, எண்ணூறு பக்க சலம் ஆனாலும் சரி. அது அப்படித்தான். வாசகர்கள் அடிக்கடி இதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். என்னுடைய புனைவல்லாத எழுத்தில் இருக்கும் நகைச்சுவை உணர்ச்சி ஏன் நாவல்களில் இருப்பதில்லை? இதற்கு நேர்மையான ஒரே பதில், எனக்குத் தெரியாது என்பதுதான்.
இதோடு இன்னொன்றைச் சொல்லிவிட வேண்டும். மிருதுவை ஒரு காதல் கதையாக எண்ணித்தான் ஆரம்பித்தேன். அது ஒரு நகைச்சுவை நாவலாக உருமாற்றம் கண்டதற்கும் உண்மையில் நான் பொறுப்பில்லை.
மிருதுவின் முதல் வரைவை சேனலில் எழுதினேன். அதாவது எழுத்துப்பிழைகள் உள்பட எந்தத் திருத்தமும் பார்க்காமல் வெந்த தோசையை எடுத்துத் தட்டில் போடுவது போல எழுதி முடித்ததும் சேனலில் போட்டேன். நாவல் நிறைவடைந்து மூன்று மாதங்கள் அதை மறந்துவிட்டுப் பிறகு எடுத்து வைத்துக்கொண்டு வரி வரியாக எடிட் செய்யத் தொடங்கியபோதுதான் அதன் கட்டமைப்பிலேயே நகைச்சுவை உள்ளோடி இருந்ததைக் கண்டேன். இரண்டாம் வரைவை முடிக்கும்போது தெளிவாகவே தெரிந்துவிட்டது. அது ஒரு நகைச்சுவைப் புனைவுதான்.
இதனை எழுதும்போது எனக்கு இருந்த ஒரு வசதி, கதாபாத்திரங்களுக்கோ, சம்பவங்களுக்கோ நான் காத்திருக்க அவசியமே ஏற்படவில்லை. எல்லோருமே இருந்தவர்கள். எல்லாமே நடந்தவை. ஒருவருக்கு நடந்ததை இன்னொருவருக்கு நடந்ததாகவும் ஒருவரது அடையாளத்தை வேறொருவரின் அடையாளமாகவும் மாற்றி அமைக்கும் வேலை மட்டுமே எனக்கு இருந்தது. தனித்த ஒரு நகைச்சுவை வசனம்கூட இல்லாமல் மொத்த நாவலும் ஒரு மென்முறுவலைப் பூசிக்கொண்டு வந்து உட்கார்ந்துவிட்டது. முன்பொரு கதை (கால் கிலோ காதல்) இப்படி அமைந்திருக்கிறது. ஆனால் அது நாவலாக வரவில்லை. சற்று நீண்ட கதையாக மட்டும் இருந்தது. மிருது தன்னளவில் ஒரு பிரதேசத்தின், ஒரு தலைமுறையின், ஒரு வாழ்வின், ஒரு காலக்கட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தெளிவாகக் காட்டிவிடுகிறது.
நான் ஒரே ஒரு நல்ல காதல் கதையையாவது எழுத வேண்டும் என்று இருபத்தெட்டு ஆண்டுகளாக என் மனைவி சொல்லிக்கொண்டிருக்கிறாள். மிருதுவில் அதைச் செய்துவிட வேண்டும் என்ற முடிவுடன்தான் ஆரம்பித்தேன். ஆனால் இது ஒரு நல்ல நகைச்சுவை நாவலாக அமைந்துவிட்டது.
வாழ்வில் வந்து போகாத ஒன்று எழுத்தில் மட்டும் எப்படி வரும்?
—
மிருது முன்பதிவுக்கு (30% சிறப்புச் சலுகை விலையில்) இங்கே செல்க.
புத்தகம் அக்டோபர் 13, திங்களன்று வெளியாகும். முன்பதிவு செய்வோர் அனைவருக்கும் கையெழுத்திட்டு அனுப்பி வைப்பேன்.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .