கண்டும் காணாதவை

நேத்திரங்களைத் துணியால் மறைத்து

வீதியில் மூன்றுமுறை சுற்றிவிடப் படுகிறாள் ஒரு இளம்பெண்

ஒவ்வொன்றையும் இனி அவளே தான் கண்டுபிடிக்க வேண்டும்.

குறுக்கே வரும் அந்த காந்தாரியையும் இடித்துவிடாமல்

தயங்கித் தயங்கிச் செல்கிறாள் எந்த பிடியுமின்றி.

முதலில் தடுக்கியது எதிர்வீட்டின் பாதுகைகள்

அந்த பித்து வாசனை அவளுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இரண்டாம்முறை தடுக்கியது டியூசன் படிக்கட்டுகளில்

இதற்குமுன் யாரும் அவளிடம் இவ்வளவு இனிமையாக பேசியதில்லை.

பிறகு மாதக்கணக்கில் வீதியில் பின்தொடர்ந்துகொண்டிருந்தது

ஒரு வாட்டமான நிழல்.

ஒவ்வொருமுறையும் அவளின் தெரிவுகள் யாவும்

இக்கட்டான நேரத்தில்

அவளைத் தெரியாததுபோலவே நடந்துகொண்டன.

கடைசியாகத் தனது கல்லூரிப் பேராசிரியரால் வலிந்து அளிக்கப்பட்ட

ஒரு ரகசிய அத்தியாயத்தை

வரிக்கு வரி அடித்துக்கொண்டிருக்கும் அந்த சதுரங்க ராணி

எந்தப் பக்கம் நகர்ந்தாலும் வெட்டுப்பட வாய்ப்பிருந்தது.

இருப்பினும் தனது நிழற்குடையை விட்டு அகலவில்லை

கண்கட்டையும் முழுதாக அவிழ்த்திருக்கவில்லை

அவள் இன்னமும் நம்புகிறாள்

தண்ணீரில் பெய்யும் மழைத்துளிகள்

வந்த வானத்தையும் சேர்த்து நனைக்குமென்று.

நன்றி : ஆனந்த விகடன்- (தீபாவளி மலர்-2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2025 20:29
No comments have been added yet.


பெரு. விஷ்ணுகுமார்'s Blog

பெரு. விஷ்ணுகுமார்
பெரு. விஷ்ணுகுமார் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow பெரு. விஷ்ணுகுமார்'s blog with rss.