காசி - 3 - முடிவு.
தொடர்ச்சி..
அன்று விநாயகருக்கு பிறந்தநாளாம். மறுநாள் கங்கையில் போட்டு கரைக்கப் போகிறார்கள் என்பது தெரியாமல் அவர் குதூகலமாக இருந்தார். பிறந்த மறுநாளில் இறுதிச்சடங்கு. இரண்டு நாட்கள் வாரணாசி தெருக்களில் நானும் அந்த சிவனடியாரும் வலம் வந்தோம்.
இறுதிச்சடங்கு செய்யும் இடங்கள், அகோரிகளின் இருப்பிடங்கள், பாங்குப்பால், கணக்கிலடங்கா சிவன் கோவில்கள், கங்காராதனா, சிவபானம் என புதனும் வியாழனும் சென்றது.
நான் எதிர்பார்த்த அளவிற்கு காசி ஒன்றும் மோசமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். போலவே அந்த சிவனடியாரும். அவரின்மீது எனக்கிருந்த அத்தனை பிம்பமும் கட்டமைப்பும் சிறிது சிறிதாக உடைவதை உணர்ந்தேன். உண்மையில் முதலில் வாகனத்தை நிறுத்திய தேநீர் விடுதியில் எதற்கும் இருக்கட்டும் என ஒரு கத்தி வாங்கி வைத்துக் கொண்டேன். கடைசிவரை அந்த கத்திக்கு வேலை வரவே இல்லை என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.
நான் இப்படித்தான். பொதுவாக வெகுதூரம் பயணம் செய்வதாக முடிவு செய்துவிட்டால் முடிந்த அளவிற்கு என்னுடைய கையில் அல்லது பையில் ஏதேனும் ஒரு ஆயுதத்தை வைத்திருப்பேன். ஒரு காலத்தில் அதாவது நாலைந்து வருடங்களுக்கு முன்பு கீ செயின்கள் அப்டேட் ஆகிக் கொண்டிருந்தது. அப்பொழுது ஹாரி பாட்டரின் மந்திரக்கோலை வாங்கி கீ செயினாக மாட்டி வைத்திருந்தேன். பார்ப்பவர்களுக்கு அது வெறும் சினிமா மீது இருக்கும் ஒரு பைத்தியக்காரத்தனத்தின் வெளிப்பாடாக இருக்கும். ஆனால், அது அவசர காலத்தில் ஆத்மார்த்தமாக உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதே என்னுடைய கருத்து. ஒருமுறை காவல் நிலையம் சென்றபொழுது திமிர்த்தனமாக அந்த கீ செயினை உதவி ஆய்வாளரின் மேசையில் வைத்துவிட்டேன். பறிபோய்விட்டது. அதற்குப்பின் அதை என்னால் வாங்க முடியவில்லை.
இது இப்படி இருக்க முன்பின் தெரியாத ஒருவருடன் பயணிக்கும்பொழுது ஆயுதம் இல்லாமல் எப்படி? அவர் சிவனடியாராக இருந்தாலும் என் பார்வையில் மனிதர்தானே? போலவே அவரை நான் தமிழ்நாட்டில் என்னுடைய வாகனத்தில் ஏற்றவில்லை. தமிழ் பேசுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நம்பிவிட முடியாதல்லவா? போலவே தமிழ் பேசும் அனைவரும் நல்லவர்களா? இல்லை.
ஆனால் அதை அவர் மாற்றினார். அதாவது அவரது விசயத்தில் மட்டும். அதற்காக வேறு யாராவது என்னுடன் வருவேன் எனச்சொன்னால் நிச்சயமாக என் வாகனத்தில் ஏற்றிக்கொள்ளமாட்டேன். போலவே பின்னால் இருக்கும் இருக்கையை அகற்றிவிடலாம் எனவும் முடிவு செய்திருக்கிறேன். இனி அதில் அமர்பவர் எவரும் இலர்.
இந்த நேரத்தில் எனக்கு மற்றோர் மனிதனின் துணை தேவைப்படும் என்பதை நான் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனினும், பிரபஞ்சம் ஒன்றை செய்யும்பொழுது அதை தடுக்க நான் யார்? இருப்பினும் அவருடன் நான் கழித்த மூன்று நாட்கள் உன்னதமானவை. உலகைப் பற்றி, ஆன்மீகத்தைப் பற்றி, அஞ்ஞானம் மெய்ஞானம் பற்றி, உறவுகளைப் பற்றி, உடலுறவைப் பற்றி என நாங்கள் அந்த இரண்டு நாட்களில் உரையாடாத தலைப்புகளே இல்லை எனலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த மனிதர் ஓர் முதிர்ந்த பழம். நாம் இப்பொழுதுதான் தவழ்ந்துகொண்டிருக்கிறோம் எனும்பொழுது முன்னோர்களின் பேச்சை கடைபிடிக்காவிடிலும், கேட்பது சிறந்தது. ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு கதைகள் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு கோணம் இருக்கிறது.
புதன்கிழமை இரவில், பாங்குப்பால் கிறக்கத்தில் காதலைப்பற்றி உரையாட ஆரம்பித்தோம். ஆஹா! என்னே ஒரு அற்புதமான தெளிவு அம்மனிதரிடம்.
"காதல். இப்பிரபஞ்சத்தின் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது காதல். இன்னும் சொல்லப்போனால் ஒரே ஒரு உண்மையான உணர்வு என்றால் அது காதல்தான். ஆனால் அந்த காதல் உனக்கு மட்டுமே சொந்தமானதல்ல. அதாவது ஒரு பெண் உன்னை காதலிக்கிறாள் என வைத்துக்கொள்வோம். அவள் வேறொருவனிடம் பேசுவதும், அதற்கு அவள் முக்கியத்துவம் கொடுப்பதும்கூட உனக்கு பொறாமையை ஏற்படுத்தும். நீ கையாலாகாதவன் என்ற எண்ணத்தை கொடுக்கும். அவளுக்கு நீ, உனக்கு அவள் என்ற குறுகிய வட்டத்திற்குள் நீந்த விட்டுவிடும். ஆனால் அது அப்படிப்பட்டதல்ல. உதாரணமாக அவள் மனிதர்களுடன் நேரம் செலவழிக்கிறாள் என வைத்துக்கொள். நீ வேலைக்காக நேரம் செலவழிப்பாய். உன்னிடம் இருக்கும் காரணம் நியாயமானதாக இருக்கலாமே ஒழிய, நீ செய்வது சரி என ஆகிவிடாது. பேரண்டத்தின் பெருங்காதலை வெறும் 24 மணி நேரத்திற்குள் அடக்கி வைத்துவிட எவராலும் முடியாது. அப்படி அடக்க முற்பட்டால் உனக்கும் அவளுக்கும் இடைவெளி இல்லா முடிச்சுக்களை நீ உருவாக்க வேண்டும். நீ அவளை காதலிக்க வேண்டும், போலவே அவள் உன்னை. உங்கள் இருவருக்கும் நடுவில் யாதொருவரும், யாதொரு விசயமும் குறுக்கே வந்துவிடக்கூடாது. வேலை, சினிமா, கேளிக்கைகள் என எதுவும். அப்படிக் காதலித்துவிட முடிந்திடுமா என்ன? அப்படியே காதலிக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நாளடைவில் ஒருவர் முகம் மற்றொருவருக்கு சலிப்பைத் தராது என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது? அப்படி சலிக்காமல் காதலித்துவிட முடியுமா என்ன? இப்படித்தான் என்ற கோட்பாடுகளுக்குள் நீ ஒருவரை நிறுத்த நினைத்தால் அதே கோட்பாடுகளுக்குள் நீயும் நிற்க வேண்டும். உன்னால் முடியாது எனில் அது எவராலும் முடியாது. ஆனால் இதற்கு மாற்று இருக்கிறது. நீ உன்னை காதலி. உலகத்தின் ஒட்டுமொத்த அன்பையும் உனக்கு நீ கொடு. உன்னுடைய அன்பில் நீ திகட்டிப்போய் விடுவாய். அதற்கு மேலே வேறு ஒருவரால் அன்பு செலுத்திவிட முடியாது. ஒருவேளை அப்படி ஒருவரை நீ பார்த்துவிட்டால், அவரிடம் ஆயிரம் குறைகள், ஆயிரம் குற்றங்கள் இருந்தாலும் இந்த காதல் அத்தனையையும் ஏற்றுக்கொள்ள வைக்கும். உன்னைவிட அதிகமாக உன்னை காதலிக்கும் ஒருவரின் அன்பிற்கு முன் கொலைக்குற்றமும் பெரியதாக தெரியாது. அதற்கு முதலில் நீ உன்னையும், உன் மனதையும் உன்னை காதலிக்க ஏற்றவாறு தயார்படுத்த வேண்டும்" இதுதான் அவர் கூறியவை.
குடித்த பாங்கு பாலும், இழுத்த சில்லமும் உடலின் எந்த நரம்பில் இருக்கிறது என என்னையே தேடிப்பார்க்க வைத்த தருணமது. நான் காதலை, இதுதான் காதல் என ஒருவிதமாக புரிந்து வைத்திருந்தேன். என்னுடைய காதலி வந்து அது தவறு உன்னையும் என்னையும் புரிந்து வைத்துக்கொள் அதுதான் காதல் என புரிய வைத்தாள். இவர் எங்கிருந்து வந்தாரோ தெரியவில்லை. உன்னை நீ காதலிப்பதுதான் காதல் என அவர் அணியாத செருப்பால் அடித்துப் புரிய வைத்துவிட்டார்.
என்னிடம் இதுவரையில் எதற்கு காதலிக்கிறாய் எனக் கேட்டிருந்தால், எனக்கு பிடித்திருக்கிறது அல்லது என்னுடைய நிஜ முகம் இந்த இணையத்தில் இருப்பதுதான், அதை தெரிந்த அதை பிடித்த ஒருத்தி இருக்கிறாள் அல்லது ப்ராட்காஸ்ட்டில் நான் காதலில் இருக்கிறேன் என பெருமை பீற்றிக்கொள்ள அல்லது எனக்கே எனக்கென ஒருத்தி வேண்டும் என்பதற்காக என எதையாவது ஒரு காரணத்தை சொல்லி இருப்பனே ஒழிய உண்மை என்னவென்று எனக்கே தெரிந்திருக்காது. ஆனால் இப்பொழுது காதலின் மேல் ஒரு பெரும் புரிதலை இந்த வாழ்க்கை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
வாழ்வில் எல்லா நேரங்களிலும் நாம் புத்தகத்தை படித்தோ, சினிமாவில் பார்த்தோ எல்லா விசயங்களையும் உணர்ந்துவிட முடியாது. சினிமாவில் காண்பிக்கப்படும் எல்லா விசயங்களையும் எல்லோராலும் செய்துவிடவும் முடியாது என்பதும் ஒரு காரணம். உதாரணமாக சினிமாவில் கொலை செய்வதைப்போல காண்பிக்கிறார்கள். ஒரு தொடர் சைக்கோ கொலைகாரன் இருக்கிறான். அவன் பெறும் ஆனந்தம் எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்ள எத்தனை பேர் கத்தி எடுத்தோம்? ஆனால் நாம் அனைவரும் காதலித்து இருப்போம். இது வன்முறை இல்லா ஒரு உணர்வு என்பது மட்டுமின்றி இதுதான் உயிர்களின் உணர்வு என்பது புரிய சில பல காதல்களை செய்யலாம் தவறில்லை.
போலவே இன்ஸ்ட்டாகிராமிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சும்மா இருந்த என்னை காதல் சம்பந்தமான ரீல்களை அனுப்பி காதலிக்க வைத்ததற்கு. போலவே எனது காதலிகளுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். முதல் இருவருக்கும் தலா 25% நன்றிகளும் மூன்றாமவருக்கு 50% நன்றிகளும். மூன்றாமவர் ஏன் இவ்வளவு பிரத்யேகமானவர் எனில், எனக்கு சுய உணர்தலை கொடுத்துச் சென்றவர் அவர்தான். அவர் பிரத்யேகமானவர்தான்.
இந்த காதலும், அதன் வலிகளும், விளைவுகளும், அது குறித்த புரிதலுக்கான தேடலும், பயணமும் இனிதின்றி நிறைவுக்கு வந்தது.
இந்த கடைசிக்காதலில் நிகழ்ந்த ஒரு விசயத்தை சொல்ல விரும்புகிறேன். ஒரு சிறிய தவறுக்காக எவ்வித விசாரணையும் மறுபரிசீலனையும் இன்றி தலை துண்டிக்கப்பட்ட ஒரு கைதியாக உங்கள் அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.
"நான் இதையெல்லாம் எழுதி வைக்காமல் எனக்குள்ளே வைத்துக்கொள்ள முடியும். எழுதுவதற்கான காரணம், நான் செய்த தவறை நீங்கள் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். போலவே, தவறே செய்து விடாதீர்கள். இரண்டாம் வாய்ப்பு கிடைக்க காதல் ஒன்றும் மொபைலில் இருக்கும் கேம் அல்ல. செத்துவிட்டால் ரீஸ்ட்டார்ட் செய்துகொள்ள முடியாது. ஒருமுறை உடைந்தால் அந்த கண்ணாடியை ஒட்ட வைத்தாலும் அது அழகாக இருக்காது. உலகின் ஒட்டுமொத்த காதலையும் உங்களுக்கானவருக்கு கொடுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் யாதொரு தவறும் செய்துவிடாதீர்கள்."
மீண்டும் காசி வந்தால் என்னை இங்கே வந்து சந்தி என ஒரு இடத்தை காண்பித்தார். மீண்டும் நான் உடைந்து உட்கார்ந்தால் நான் எங்கிருந்தாலும் தேடி வாருங்கள் என அவரிடம் சொல்லிவிட்டு விடைபெற்றேன். அவரிடம் செல்போன் இல்லை. நான் அவரை மீண்டும் தொடர்பு கொள்ளவே முடியாது. ஆனால் அவரும் என் வாழ்வில் இனிதொரு அங்கமாக மாறிவிட்டார். இந்த காதலைப்பற்றிய உரையாடலை மட்டும் நான் மேற்கோளிட்டு எழுதி இருப்பதற்கான காரணம் இந்த பயணம், அதற்காகத்தான். நாங்கள் நிறைய பேசினோம். தேவைப்படும்பொழுது அவற்றை தேவைக்கேற்ப பயன்படுத்தி எழுதி விடுகிறேன்.
கடைசியாக, அவரின் நியாபகமாக நாங்கள் பயன்படுத்திய சில்லத்தை எனக்கு பரிசளித்தார். அதை நான் பயன்படுத்தப் போவதில்லை என்பதை சொல்லி அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டேன். என்னுடைய நினைவாக வைத்திருங்கள். நான் மீண்டும் வரும்பொழுது பயன்படுத்துவோம் என சொல்லிவிட்டேன்.
அந்த கொடுக்க நினைத்த சில்லம், வெறும் பரிசோ அல்லது சில்லமோ அல்ல, நினைவுகள்.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (03/09/2025)


