காசி - 2 - பயணம்.
தொடர்ச்சி..
என் வாழ்வில் நிகழ்ந்தவையாக நான் இதற்கு முந்தைய பாகத்தில் எழுதி இருப்பவை அத்தனையும் நிமிட நேரத்தில் எனக்குள் தோன்றி மறைந்திட, இந்த அஹோரி என்னைவிட்டு நகர்வதாக இல்லை.
"என்ன யோசிக்கற" என்றார்.
"யோசிக்கறேன். அவ்வளவுதான்" என்றேன்.
"என்கூடவே கூட்டிட்டு போயிடுவேன்னு யோசிக்கிறியா? இல்ல கொலை பண்ணிடுவேன்னு யோசிக்கிறியா? இல்ல வழிப்பறி பண்ணிடுவேன்னு யோசிக்கறியா?" என்றார்.
"இதெல்லாம் நான் யோசிச்சு இருப்பேன்னு நீங்க நினைக்கறீங்களா?" என்றேன்.
"எனக்கென்னப்பா தெரியும்? எனக்கு இப்போதைக்கு தெரிஞ்சது ஒன்னுதான். உன் மனசுல பெரிய பாரம் இருக்கு. காசி எல்லாத்தையும் தொலைக்கற இடம். அங்க ஏன் அஸ்தி கரையனும், ஒடம்பு எரியனும்னு பலர் நினைக்கறாங்க தெரியுமா? பாவ புண்ணியம் சொர்க்க நரகம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அதோட கணக்கு, சிவன் கணக்கு. அங்க போனா நாம நம்மள தொலைச்சுடுவோம். இந்த வாழ்க்கைய, வாழ்க்கை மேல இருக்க புடிமானத்த, இன்னும் சரியா சொல்லனும்னா இதுதான் வாழ்க்கை அப்டின்னு எல்லாரும் சொல்ற ஒரு விசயத்த தொலைப்போம். உண்மையில நாம தொலைக்க வேண்டியது அதுதான். எப்டி வேணாலும் வாழலாம் அப்டின்றதும் வாழ்க்கைதான், இப்டித்தான் வாழனும்றதும் வாழ்க்கைதான். ஆனா என்ன நடந்தாலும் சரியோ தப்போ, நல்லதோ கெட்டதோ எல்லாத்தயும் சிவன் நடத்தறான், அவனே ஆதி அவனே அந்தம், கெட்டது நடந்தா அவன் சோதிக்கறான், நல்லது நடந்தா அவன் சோதனைக்கு மருந்து கொடுக்கறான்னு ஏத்துகனும். இந்த வாழ்க்கைல இன்ப துன்பம்னு நாம நெனச்சுக்கறது எல்லாமே மாயைதான். எதுவுமே இன்பமும் இல்ல, எதுவுமே துன்பமும் இல்ல. உனக்கு இன்பமா தெரியற ஒரு விசயம் இன்னொருத்தனுக்கு துன்பமா இருக்கும், உனக்கு துன்பமா இருக்க ஒரு விசயம் இன்னொருத்தனுக்கு இன்பமாவும் இருக்கலாம் துன்பமாவும் இருக்கலாம். எதுவும் நம்ம கையில இல்ல. இங்க இன்பம்னு சந்தோசப்படுறவனும், துன்பம்னு துவண்டு போறவனும் ரெண்டு பேருமே முட்டாள்தான். நம்ம கையில எதுவும் இல்லைன்னு வாழுறவன்தான் உண்மையிலேயே வாழ்க்கைய வாழுறான்." என்றார்.
"உங்கள மாதிரியா?" என்றேன்.
"என்னைமாதிரின்னா? எனக்கு வாழ்க்கைமேல பற்று இல்லைன்னு சொல்றியா? இல்ல பிச்சக்காரன்னு சொல்றியா? இல்ல ஏதோ ஒரு கிறுக்கன் உடம்பு முழுக்க சாம்பல பூசிட்டு வந்து உளறிக்கிட்டு இருக்கான்னு சொல்றியா?" என்றார்.
"அப்டி இல்ல. நீங்க எதுக்கும் கவலப்படுறமாதிரி தெரியலயே.. அதனால கேட்டேன். இப்ப, நீங்க யாருன்னு எனக்கு தெரியாது, நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது, சர்வ சாதாரணமா வா காசிக்கு போலாம்னு சொல்றீங்க. நான் உங்களுக்கு பயப்படுறேன், உங்கள சந்தேகப்படுறேன் அப்டின்றத ஒரு ஓரத்துல வைங்க. நான் ஒரு கடத்தல்காரனா இருந்தா? ஒடம்புல இருக்க உறுப்புக்கள திருடி விக்கற கூட்டமா இருந்தா? கண்ணுக்கே தெரியாத கடவுள் உங்களுக்கு கட்டள போட்டாருன்னு சொல்லி என்கூட வந்து சாக தயாரா இருக்கீங்களா?" எனக்கேட்டேன்.
சத்தமாக சிரித்தார். இரண்டொரு நிமிடம் சிரித்துக்கொண்டே இருந்தார். அங்கே வாகனத்தை நிறுத்த வந்தவர்கள் எங்களை, ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு செல்லுமளவிற்கு சிரித்துக்கொண்டே இருந்தார். பின் பேச ஆரம்பித்தார்.
"நீ சொன்னதெல்லாம் பண்றதுனால உனக்கு என்ன கிடைச்சுடும்? அதிகபட்சமா பணம் கிடைக்குமா? ஆனா நீ எனக்கு என்ன கொடுக்க போற தெரியுமா? சுதந்திரம். இந்த உலகத்தில வாழுற இந்த பாவப்பட்ட வாழ்க்கைல இருந்து பரிபூரண சுதந்திரம். என்னை கொன்னுக்கோ, வேணுங்கறத எடுத்துக்கோ, நான் கிட்டத்தட்ட 10 வருசத்துக்கு மேல குடிக்கல. என் ரெண்டு கிட்னியும் நல்லா இருக்கு. ரெண்டு கண்ணும் நல்லா தெரியுது. கண் மருந்துகூட ஊத்தினது இல்ல. உனக்கு வேற என்ன வேணுமோ எடுத்துக்கோ. என்னோட ரத்தம் ஓ பாசிட்டிவ். இல்ல மொத்தமா என்னை விக்கனுமா? வித்துக்கோ. இந்த மனுச ஒடம்போட மொத்த விலை எவ்ளோ இருக்கும்னு தெரியுமா? நாலரை கோடி. என் வயசுக்கு ஒரு ரெண்டு மூனு கோடிக்கு வெல போக மாட்டேனா?" என்றார்.
ஆடிப்போய் விட்டேன். அவரிடம் பேசி ஜெயிக்க வேண்டிய கட்டாயம் எனக்கில்லை. ஆனால் பேசுவதற்கே என்னிடம் எவ்வித பதிலோ கேள்வியோ இல்லாத இடத்தில் என்னை நிறுத்திவிட்டார். நான் காசிக்கு சென்றாக வேண்டும் என்பது சிவன் முடிவு செய்தாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் நான் முடிவு செய்துவிட்டேன். இதேபோல திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்கும் ஒருவர் சொன்னார் என நான் என்னுடைய திருச்செந்தூர் விவகாரம் ப்ளாக் பதிவில் பதிவிட்டு இருப்பேன். அதேபோலத்தான் இதுவும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். உண்மையில், கடவுள் நம்பிக்கை இல்லாத என்னிடம் கடவுள்கள் தத்தம் இருப்பை தெரிவிக்க இதுபோல மனிதர்களை அவ்வப்போது அனுப்ப வைக்கின்றனரா எனத்தோன்றும். ஒருவேளை அது உண்மையாக இல்லாவிடிலும் -அதாவது கடவுள்- மனிதர்களிடம் நான் என்னுடைய பேச்சுத்திறமையை காட்டி, பெற்றுவிட பரிசில் எதுவும் இல்லை என்பதில் தெளிவாக இருப்பேன். போலவே, நான் சந்திக்கும் மனிதர்கள் அதி அற்புதமானவர்கள்.
நாங்கள் இருந்த வழியில் இருந்து விஜயவாடா வழியாக அப்படியே சென்றிருக்கலாம். ஆனால் அவர் இந்த பக்கம் வேண்டாம். இது சுற்றி செல்வதாக இருக்கும் நான் சொல்லும் வழியில் செல் என்றார். கடப்பா வழியாக நந்தியாலா, கர்னூல் சென்றுவிட்டால் ஒரே ரோடுதான். கூகுள் மேப்பில் அதை உறுதி செய்துகொண்டேன். போலவே இந்த வழியில் செல்ல நான் ஒப்புக்கொண்டதற்கு மற்றொரு காரணம் மிர்சாப்பூர். மிர்சாப்பூர் வெப் சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த ஊருக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது எனில் அதை இழப்பானேன்? சென்றேன். கடப்பா தாண்டும்வரை நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவரும் அமைதியாகவே வந்தார். அதற்குப்பின் பேச ஆரம்பித்தார்.
"அப்பறம்.. எந்த ஊர்ல இருந்து வர்ர" அவர்.
"சிவன் உங்ககிட்ட இந்த டீட்டியல்லாம் குடுக்கலயா? வெறுமனே இவன கூட்டிட்டு வான்னு மட்டும்தான் சொன்னாரா? ஆதார் பேன் கார்டு நம்பர்லாம் சொல்லி இருப்பார்னு நெனச்சேன்." நான்.
"காலைல காலஹஸ்தில தியானம் பண்ணிட்டு உக்காந்து இருந்தேன். அப்ப ஒரு முகம், ஒரு லாட்ஜ், காசி என் தியானத்துல தெரிஞ்சுச்சு. அந்த முகம் நீ." அவர்.
"சிவன் இதெல்லாம் பண்ணுவாருன்னு எனக்கு தெரியாது." நான்.
"சிவன் வேற என்ன பண்ணுவாருன்னு உனக்கு தெரியும்?" அவர்.
"எனக்கு எதுவும் தெரியாது. நம்மளால எதையும் தெரிஞ்சுக்க முடியாதுன்னு உங்களமாதிரி ஒரு சித்தர் சொல்லி இருக்காரு. நானும் ரொம்ப நாளா அவர் சும்மா சொல்லி இருக்காருன்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப ரீசன்ட்டா அத புரிஞ்சுகிட்டேன். நம்மளால எதயும் தெரிஞ்சுக்க முடியாது. புரிஞ்சுக்கவும் முடியாது. புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பறம் எதயும் சரி பண்ணவும் முடியாது." நான்.
"நீ சித்தர்கள பாத்து இருக்கியா? எப்ப பாத்த? எப்டி பாத்த? அவங்களோட உன்னோட பழக்கவழக்கம் என்ன?" அவர்.
"எந்த பழக்க வழக்கமும் இல்ல. ஒரு தடவ ஒரு மலைக்கு மலையேற போனேன். அங்க அப்டி ஒரு இடம் இருக்குன்னே தெரியாம, அந்த இடத்துக்கு போயி ஒரு சித்தர பாத்தேன். அதுக்கப்பறம் என் ஃப்ரண்ட் ஒருத்தன் இருக்கான் அவன் ஒரு சித்தருக்கு சிஷ்யனாகிட்டான். அப்ப அவர பாத்தேன். அவ்ளோதான்." நான்.
"ரெண்டு தடவ உயிரோட இருக்க சித்தர்கள பாத்து இருக்க. அத பத்தின உன்னோட கருத்து என்ன?" அவர்.
"கருத்துன்னெல்லாம் ஒன்னும் இல்ல. கொஞ்ச நாள்ல அவங்க அரெஸ்ட் ஆனாலும் ஆச்சர்ய படுறதுக்கில்ல." நான்.
"அவங்க உன்கிட்ட பணம் ஏதாவது கேட்டாங்களா?" அவர்.
"இல்ல" நான்.
"உன்னோட பொருள் எதாவது?" அவர்.
"இல்ல" நான்.
"உன்னோட நேரம்?" அவர்.
"இல்ல" நான்.
"வேற?" அவர்.
"இப்ப இருக்க யாருமே உண்மையா இருக்கறது இல்ல. ஆன்மீகம் அப்டின்றது பணம் சம்பாதிக்கற வழி மட்டும்தான். நேரத்த இன்வெஸ்ட் பண்றோம். நெறய புக்ஸ் படிக்கறோம். ஞானம்னு ஒரு விசயத்த ஒருத்தன கொடுக்கறதா சொல்றோம். காசு கெடைக்கும். அவ்ளோதான். என்னை பொறுத்தவரைக்கும் என்னோட பிரச்சனைக்கு என்னால தீர்வு கொடுத்துக்க முடியல அப்டின்னா, அந்த தீர்வ இன்னொருத்தர்னால கொடுக்க முடியும்னா, அவர் அந்த பிரச்சனைய வெறும் பிரச்சனையா -எங்கையோ ஒரு மூலைல வச்சு- பாக்கறார். நான் அய்யய்யோ பிரச்சனைன்னு நினைக்கறேன். நான் முட்டாளா இருக்கறதுக்கு யார் என்ன செய்ய முடியும்? அப்ப அவங்க சம்பாதிக்கதான் நெனைப்பாங்க. இத மாத்த முடியாதுல்ல?" நான்.
"இப்ப நான் உன்ன காசிக்கு கூட்டிட்டு போறேன். உன்கிட்ட எதாவது காசு கேட்டனா? இல்ல உன் பிரச்சனைய தீக்கறேன்னு சொன்னேனா? என்ன பண்ணுனேன்?" அவர்.
"நான் காசிக்கு போகவே நினைக்கலைல்ல? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டேங்க ஃபில் பண்ணுனேன் பாத்தீங்களா? 2000 ரூபா. 20 லிட்டர். நம்ம காசி போறதுக்கு இன்னும் 1000 கிலோமீட்டர் ஆகும். அதுக்கு இன்னும் 4000 ரூபாய்க்கு நான் பெட்ரோல் அடிக்கனும். அங்க உங்கள நான் எந்த செலவும் இல்லாமதானே கூட்டிட்டு போறேன்? உங்களுக்கு அந்த பணம் மிச்சம், எனக்கு அந்த பணம் செலவு." நான்.
"அதனால உன்னோட பிரச்சனைய தீக்கறேன்னு சொல்லி, உன்ன செலவு பண்ண வச்சு, நான் உன்ன காசிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்றியா? ம்ஹ்ஹும்.. பைத்தியக்காரா. நீ இன்னும் லட்ச லட்சமா செலவு பண்ணுனாலும் கிடைக்காத வாழ்க்கைய உனக்கு புரிய வைக்க உன்ன கூட்டிட்டு போயிட்டு இருக்கேன்." அவர்.
"நான் கேக்கலைல்ல? எனக்கு இது இந்த நேரத்துல தேவைப்படுதுன்னோ இல்ல இத இந்த நேரத்துல இவனுக்கு கொடுக்கனும்னோ எனக்கோ இல்ல உங்களுக்கு சொன்னது யாரு? சிவன்னு சொல்லாதீங்க. ஏன்னா இங்க இருக்க இத்தன கோடி மக்கள்ல சிவன் என்னைய மட்டும் தேர்ந்தெடுத்து வாழ்க்கைய கத்து கொடுக்கனும்னு சிவனுக்கே எந்த அவசியமும் இல்ல." நான்.
சிறிது நேரம் பேரமைதி நிலவியது. வெறும் புல்லிட்டின் டுப் டுப் சப்தம் மற்றும் எதிர்காற்றின் ஷ்ஷ்ஷ்ஷ்ஷுஷு சப்தம் மட்டும்தான். அவரிடம் கோபமாக பேசிவிட்டேனோ என்ற கேள்வி எனக்குள் இருந்தது. அதற்கு நான் காரணமா எனக்கேட்டால் அந்த குறிப்பிட்ட சூழ்நிலைதான் காரணம் என்று ஒப்புக்கு ஒன்றை சொல்லிவிடலாம். எங்கே செல்ல வேண்டும் என்ற முடிவில் இல்லாத நான், யாரென்றே தெரியாத ஒருவர், மொழி தெரியாத ஊர் இதெல்லாம் ஒருபுறம் இருக்க, வாகனத்தை ஓட்டும்பொழுது இருக்கும் பெரும் பிரச்சனை என்னவெனில் சாலையை கவனிப்பதால் நாம் பேச நினைப்பதை, இதுதான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் வைத்து பேச முடியாது. மனது அப்படியே வெளிப்பட்டுவிடும். மற்றுமொரு காரணம் அட்ரினலின் ரஷ். அவரிடம் கடுமையாக பேசிவிட்டேன் என்பது மட்டும் புரிந்தது. சரி இன்னும் 1500 கிலோமீட்டர்கள் இவருடன்தான் பயணப்பட வேண்டும், போலவே காசியில் எனக்கு எந்த இடமும் தெரியாது, யாரையும் தெரியாது. இவர்தான் எனக்கிருக்கும் ஒரே துருப்புச்சீட்டு. ஆனால் முன்பின் தெரியாத ஒருவரை சமாதானப்படுத்துவது எப்படி என்பதும் எனக்கு தெரியவில்லை.
"பசிக்குது. சாப்டுவோமா?" என பேச்சை ஆரம்பித்தேன்.
"எனக்கு வேண்டாம். நீ வேணா சாப்டு" என்றார் அவர்.
சரி. சிவனே அழிவுக்கடவுள்தான். கோபத்தின் பிம்பம், ருத்ர ரூபி. அவரின் பக்தர் இவர் கோவமாக இருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
"ஏன்?" நான்.
"மணி என்ன?" அவர்.
"11 ஆகுது. ஏன்?" நான்.
"12 மணி ஆகட்டும் சாப்டுக்கறேன்." அவர்.
"என்னால சும்மா சும்மாலாம் நிறுத்த முடியாது. நானும் உங்க கூடயே சாப்டுக்கறேன்" நான்.
"சரி." அவ்வளவுதான். அப்படியே மீண்டும் அமைதி தொடர்ந்தது. சிறிது தூரத்தில் ஒரு தேநீர் விடுதியை பார்த்தேன். இன்னும் ஒரு மணி நேரம் பசி பொறுக்க முடியாது என்பதனால் காபி குடிக்கலாம் என நிறுத்தினேன். காபி சொல்லிவிட்டு சிகரெட்டை பற்றவைத்துவிட்டு அவரை பார்த்து வேண்டுமா என்றேன். அவர் வாகனத்தின் அருகிலேயே நின்று கொண்டிருந்தார். என்னிடம் வரவில்லை. அங்கிருந்தே வேண்டாம் என கை அசைத்தார். காபி குடித்துவிட்டு வாகனத்தை எடுத்தேன்.
"காபி, டீ எதும் குடிக்க மாட்டீங்களோ" நான்.
"குடிப்பேன். ஆனா இப்ப வேண்டாம்" அவர்.
"பீடி சிகரெட் பழக்கம் இருக்கா?" நான்.
"சிவபானம் மட்டும்தான்." அவர்.
"இருக்கா?" நான்.
"வேணுமா?" அவர்.
"கெடைக்குமா?" நான்.
"வண்டிய அந்த மரத்தடியில நிப்பாட்டு" அவர்.
சில்லம் வைத்திருந்தார். ஆளுக்கு ஒரு சில்லத்தை நிரப்பி இழுத்து தள்ளிவிட்டோம். அந்த சில்லம் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது. சில்லம் வாங்கி வைப்பது பெரிய பிரச்சனை இல்லை. நானோர் சிவபான விரும்பி என்பதை வெளிக்காட்டிக்கொள்ள விருப்பமில்லாமையால் அதை வாங்காமல் இருந்தேன். ஆனால் இவருடன் "இழுத்த" இழுப்பில் வாங்கிவிட வேண்டும் என்ற முடிவுற்கு வந்துவிட்டேன்.
வெயில் மற்றும் காற்றின் தயவால் கண்களுக்கு மட்டுமே போதை ஏறும் சிவபானம், கண்களின் யாதொரு நரம்பிலும் செயல்பட மறுத்துவிட்டது. 12 மணி ஆனது. இருவரும் சாப்பிட்டோம். பயணம் தொடர்ந்தது.
"எத்தன வருசமா இந்த பழக்கம்?" அவர்.
"பழகுனதே இதுலதான்" நான்.
"நான் இப்பதான் கொஞ்ச நாளா" அவர்.
பேச்சுக் கொடுக்க துவங்கி விட்டார். சிவபானம் தன் வேலையை முழு வீச்சில் செய்யத் துவங்கிவிட்டது என்ற மனநிலைக்கு வந்தேன்.
"சரி உங்க கதைய சொல்லுங்க கேப்போம்" என்றேன். சொன்னார். கிட்டத்தட்ட என்னுடைய நண்பனின் கதையைப்போல இருந்தது. அதிக பணம் சேர்ந்தபின் நிம்மதியை தேடிய பயணம். ஆனால் அதற்கு சன்னியாசம் தீர்வல்லவே?
"வாழ்க்கைய பத்தி தெரிஞ்சுக்க கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்களே.. என்ன தெரிய வைக்க போறீங்க? மொத வாழ்க்கைன்னா என்ன?" நான்.
"நீ எத வாழக்கைன்னு நினைக்கறியோ அது வாழ்க்கை இல்ல. நீ பொறந்துட்ட. ஏன் பொறந்த? எதுக்கு பொறந்த? இந்த பிறப்புக்கான காரணம் என்ன? நீ என்ன செய்யனும்? இந்த குறுகிய காலத்துல நீ எத உன்னோட சந்ததிக்கு கொடுத்துட்டு போகனும்? அப்டிங்கறது எல்லாம் வாழ்க்கை இல்ல. வாழ்க்கைங்கறது நம்ம மனசுக்கு புடிச்சத நமக்கு சரின்னு படுறத செய்யனும். முடிஞ்ச அளவுக்கு மத்தவங்க மனசு கஷ்டப்படாத மாதிரி" என்றார்.
"காலகாலமா நான் இப்டித்தான் வாழ்ந்துட்டு இருக்கேன். இப்ப வந்து என்கிட்ட நீ எப்டி வாழ்றியோ அப்டியே வாழுன்னு சொல்றதுக்குதான் திருப்பதில இருந்து காசிக்கு கூட்டிட்டு போறீங்களா?" நான்.
"இப்ப சமீப காலமா நீ அப்டியா வாழ்ந்த? நிச்சயமா இல்ல. உன் வாழ்க்கைல உன்னை புரட்டிப்போட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கும். நீ எப்டி வாழ்ந்தியோ அந்த வாழ்க்கை சரி. ஆனா அத நீ மறந்துட்ட அத நியாபகப்படுத்தத்தான் இந்த பயணம்" என்றார்.
"அப்டிலாம் இல்லயே, நான் இப்பவும் அப்டித்தான் இருக்கேன்" என்றேன்.
"ம்ஹும். இல்ல. நீ அப்டி இருக்கறதுக்கான நியாயமான காரணம் இல்ல. நீ பொய் சொல்ற. என்கிட்ட பொய் சொல்லாத மை சன். மாட்டிக்குவ" என்றார்.
மறைக்க எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மறைப்பதற்காக நியாயமான காரணமும் என்னிடம் இல்லை. என்னுடைய மனக்கிலேசத்திற்கான காரணத்தை சொன்னேன்.
"நான் சொன்னதுதான். எல்லாம் மாயை. எதயும் யோசிக்காத. எல்லாத்தையும் சிவன் பாத்துக்குவான்" என்றார்.
"அவர் பாக்கனும்னோ இல்ல அவர் எனக்கு எதாவது பண்ணனும்னோ நான் இத சொல்லல. நீங்க உங்க கதைய சொன்னீங்க. நானும் என் கதைய சொன்னேன் அவ்வளவுதான்" நான்.
"அய்யா.. வாழ்க்கையில பெண்கள் வரதும் போறதும் இரவு பகல் மாதிரி. வர்ரதயும் தடுக்க முடியாது போறதயும் தடுக்க முடியாது. இது பெண்களுக்கு மட்டும் இல்ல எல்லாத்துக்கும்தான். ரஜினி முத்து படத்துல சொல்வான்ல அந்த மாதிரி" என்றார்.
"நான் எதயும் தடுக்க விரும்பல. நான் அத தடுக்க நினைச்சுருந்தா என்னால தடுத்து இருக்க முடியும். ஆனா நான் நினைக்கல. ஆனா அத என்னால ஏத்துக்கவும் முடியல அப்டின்றதுதான் பிரச்சனை. அவளுக்கு முன்னாடி இருந்த ரெண்டு பேர மறக்கறதுக்கு எனக்கு ஒரு நாள்கூட தேவப்படல. ஆனா இவள மறக்கறதுக்கு என்னென்னமோ பண்றேன் அப்டின்றதுதான் இங்க வேதன" நான்.
"ஒருவேள இந்த காயம் ஆறவே கூடாதுன்னு சிவன் நினைக்கறானோ என்னமோ. வாழ்க்கைல சில நேரங்கள்ல நமக்கு வலி வரும்போதுதான் வழியும் வரும். நீ இழந்துட கூடாதுன்னு நினைச்ச ஒன்ன இழக்கறப்பதான், இங்க எதுவுமே நிரந்தமானதில்ல. எல்லாமே இழப்புக்கு உட்பட்டதுதான் அப்டின்றத புரிஞ்சுக்குவ. அது புரியறதுக்கு இழப்புகள் நிகழலாம் தப்பில்ல" அவர்.
"அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நான் ஒரு விசயத்த இழந்தேன். அது திரும்ப கிடைக்கவே கிடைக்காது. அதுக்கப்பறம் எத இழந்தாலும் நான் வருத்தப்பட்டதே இல்ல. இப்ப வருத்தப்படுறேன்" நான்.
"வருத்தப்படு. வலிமையாகிடுவ." அவர்.
இந்த பதில் என்னை ஆட்டம் காண வைத்தது. என் உடம்பில் உள்ள அத்தனை மயிரையும் கூச்செரிய செய்துவிட்டது. அடித்த சிவபானம், என் நுரையீரலில் இருந்து மீண்டும் அந்த சில்லத்திற்கே சென்றுவிட்டதாக உணர்ந்தேன். உள்ளங்கையும், உள்ளங்காலும் சில்லிட்டுப் போனது. கண்கள் இருட்டுக்குப் பழகிப்போனபின், திடீரென ஆளரவமற்ற பாலைவனத்தில் - உச்சி வெயிலில் - நிற்பதைப்போல பிரகாசமாக, பார்வையே போய்விடுமளவிற்கு ஓர் ஒளியை கண்டேன். மாண்டு போன நான், மீண்டும் எழுந்து நின்று உயரமாய் பறந்து, இந்த உலகத்திற்கும் உலகத்தின் அத்தனை உயிர்களுக்கும் மேலாக உயர்ந்து நின்று, கண்களில் தெரிபவைகளுக்கெல்லாம் கடவுளாக, அத்தனையையும் துச்சமாக எண்ணும் சர்வ வல்லமை கொண்டவனாக சிறிது நேரம் உணர்ந்தேன். மீண்டும் நிதானித்து, சாலையை கவனித்து, வாகனத்தை செலுத்த ஆரம்பித்தேன்.
"சரி அத விடுங்க. நம்ம வேற பேசுவோம். இந்த சொர்க்கம் நரகம்லாம் என்ன கான்செப்ட்டு" நான்.
"அப்டி ஒன்னு கெடயாதுப்பா. அதெல்லாம் சும்மா. நம்ம செத்துட்டா ஒன்னு எரிப்பாங்க இல்லைன்னா பொதைப்பாங்க. அது அங்கயே முடிஞ்சுது அவ்ளோதான். இந்த ஆத்மா திரும்ப பிறப்பெடுக்கும் அப்டின்றதும் கதைதான். அப்டி பாத்தா முதல் மனுசனும் முதல் மனுசியும் தவிர வேற யாரும் பிறப்பெடுத்துருக்க முடியாதே" என்றார்.
இது சற்று குழப்பமாக இருந்தாலும் அதை மீண்டும் கிளற நான் விரும்பவில்லை.
"ஒருவேள சொர்க்கமும் நரகமும் இருந்தா?" நான்.
"சொர்க்கத்துக்கு மனுசனா பொறந்த யாரும் போகவே முடியாது. எல்லாரும் எதோ ஒரு வகையில பாவம் பண்ணி இருப்போம். குறைந்தபட்சமா மனதளவுல அடுத்தவன் சாகனும் அழியனும்னு நினைக்கறதும் பாவம்தான். பாவக்கணக்குன்னு பாத்தா ஏகப்பட்டது இருக்கும். புண்ணியம்னு பாத்தா ஏதோ ஒன்னு ரெண்டு பண்ணி இருப்போம். அதவச்சு எல்லாத்தையும் சரி பண்ணிட முடியுமா என்ன? உனக்கு ஒரு லட்ச ரூவா கடன் இருக்குன்னு வச்சுக்குவோம். உன்கிட்ட பத்தாயிர ரூபா இருக்குன்னா அத வச்சு ஒரு லட்ச ரூபா கடன சரி பண்ணிடுவியா? முடியாதுல்ல? அது மாதிரிதான்" அவர்.
நியாயமாக இருந்தது. இப்படியே பேசிக்கொண்டு, அங்கும் இங்குமாய் காபி குடிக்க, பெட்ரோல் நிரப்ப, உணவருந்த என நிறுத்தி நிறுத்தி 27/08/2025 காலையில் காசி சென்றடைந்தோம்.
தொடரும்..
- எழுத்தாளுமை இக்ரிஸ் (02/09/2025)


