காசி - 1 - துவக்கம்.

உண்மையில் சினிமா எனக்குள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ, அதே அளவிற்கு பயணங்களும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கார், பைக், பேருந்து, இரயில், மாட்டுவண்டி, நடைபயணமாக இருந்தாலும் யாதொரு இடத்திலும் எவரொருவரின் அன்பிலும் தேங்கி நின்றுவிடாமல் பயணத்துக்கொண்டே இருத்தல் பெருமளவில் நம்மை நமக்கு உணர்த்தும். புதுப்புது மனிதர்கள், புதுப்புது ஊர்கள், சாலைகள், தெருக்கள், கட்டிடங்கள், வாழ்க்கை முறைகள், உடைகள், கலாச்சாரங்கள், உணவுகள் என அத்தனையும் மாறுபட்ட கோணத்தில் நான் உணர இந்த பிரபஞ்சம் சிவப்பு கம்பளம் விரித்து வைத்திருக்கும்.

மீண்டும் ஒருமுறை இதை சொல்லி இந்த பதிவை ஆரம்பிக்கிறேன். இதை சொல்லியே ஆக வேண்டுமா எனக்கேட்டால், இதை ஒரு சடங்கு, நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கை என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், நான் சமூக வலைதளங்களில் இருந்து இடைவெளி எடுத்ததற்கும், இந்த பயணத்திற்கும், இதில் எனக்கு கிடைத்திருக்கும் அனுபவத்திற்கும், இந்த பதிவில் நான் பதியப்போகும் ஒரு பெரும் உரையாடலுக்கும், அந்த உரையாடலுக்கு மூலக்காரணியாக இருந்த பல மொழி வல்லுநரான சிவனடியார் அல்லது அஹோரியுடனான சந்திப்பிற்கும் அத்தனைக்கும் ஓர் ஆகச்சிறந்த ஆரம்பப்புள்ளி எனச் சொல்ல வேண்டுமெனில் நிச்சயமாக அது என்னுடைய காதல் தோல்விதான்.

"என்ன பெரிய காதல்? காதலையும் பெண்களையும்தான் நீ பெரியதாக மதிக்கமாட்டாயே?" "நீயா இது? இப்படி சுக்கல் சுக்கலாக உடைந்து போய்விட்டாய்?" "யானைக்கும் அடி சறுக்கத்தானே செய்யும்?" "சாத்தான்களின் கடவுள் இப்படி ஒரு பெண்ணிற்காக மாறிப்போவதா?" என்பது போன்ற இலட்சம் எண்ணங்கள் உங்களுக்குள் தோன்றி மறையலாம். நல்ல விஷயம்தான். சிந்திப்பதில் தவறொன்றும் இல்லையே! ஆனால் இங்கே என்னை, அதாவது நான் என்ற அகந்தையை உடைத்தெறிந்த ஒருத்தியிடம் தோற்றுப்போன ஒருவனாக இருப்பதில் எனக்கு எவ்விதத்திலும் வலியோ, கோபமோ, குற்ற உணர்ச்சியோ இல்லை. மாறாக, நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். என்னை, எனக்கு புரிய வைக்க, எனக்கு நேரம் தந்தமைக்கு. எனக்கு யோசனையை தந்தமைக்கு. கடந்துவிடுவோம்.

இப்படியாக உங்களிடம் இருந்து விடை பெற்றுவிட்டு சினிமா பாதையில் பயணித்தேன். குயின்டின் டேரண்டினோவின் பத்து படங்களையும் பார்ப்பதற்கு எனக்கு ஒன்றரை நாட்கள்தான் தேவைப்பட்டது. ஜாம்பியைப் போல கைப்பேசியின் திரையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தேன். உண்ணவில்லை, உறங்கவில்லை. சிகரெட் மட்டும் பாக்கெட் பாக்கெட்டாக தீர்ந்து கொண்டிருந்தது. என்னால் இந்த வீட்டிற்குள், இந்த ஊருக்குள் இருக்க முடியவில்லை என்பதை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்தேன். எங்கும் அவள் நினைவுகள். இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 25/08/2025 அன்று அதிகாலை 3 மணிக்கு வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

எங்கே செல்கிறேன்? தெரியாது.

எதற்கு செல்கிறேன்? தெரியாது.

எப்போது வருவேன்? தெரியாது.

ஏன் வர வேண்டும்? தெரியாது.

நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர்களை கடந்தபின் சிந்தித்தேன். ஏதாவது மலைகளுக்கு சென்றுவிடலாமா? அல்லது காடுகளில் தொலைந்துவிடலாமா? Into the Wild (2007) சினிமாவை மீண்டும் உருவாக்கிவிடலாமா? அப்படியிருப்பினும் காடுகளை பற்றிய ஞானம் எனக்கு இல்லை. காடுகள் மலைகள் மேல் காதல் இருக்கிறது. ஆனால், அவைகளை புரிந்து நடந்துகொள்ளும் பக்குவமும், ஞானமும், பொறுமையும் என்னிடம் இல்லை. சரி எங்காவது மலைகளுக்கு செல்ல வேண்டும் ஆனால் அங்கே மனித நடமாட்டமும் இருக்க வேண்டும் என்பது கடைசி முடிவாக இருந்தது. பத்ரிநாத் அல்லது கேதார்நாத் இரண்டில் எதுவாகவும் இருக்கலாம். எரிபொருளை நிரப்பிக்கொண்டு கிளம்பிவிட்டேன். தமிழ்நாட்டை தாண்டியவுடன் திருப்பதிக்கு அருகே காலஹஸ்தி என்ற ஒரு ஊர். சிவன் கோவில் உள்ள ஒரு ஊர். அங்கே கண்ணப்பர் என ஒருவர் இருந்ததாகவும், அவர் சிவனுக்கு பன்றிக்கறி படைத்ததாகவும், அதை சிவன் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு கதை இருக்கிறது. அங்கே இரவு தங்கினேன். (நிற்க)


இந்து, கிறித்துவம், இஸ்லாமியம், சீக்கியம், பௌத்தம் என இருக்கும் அத்தனை மதங்களின் மீதும் எனக்கு எப்பொழுதும் ஒரு இனம்புரியாத கோபம் இருக்கும். அதன் வழிபாட்டு முறைகள், அதற்கு இருக்கும் சடங்கு, சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் என பலப்பல இருக்கின்றன. இன்னதுதான் என்ற எந்த வரையறைக்குள்ளும், இவ்வளவுதான் என்ற எந்த கோட்பாட்டுக்குள்ளும் அடங்காத ஒரு பெருங்கோபம் என்னுள். ஆனால், இதில் சிவன் மட்டும் விதிவிலக்கு. "நீ ஒரு கஞ்சாகுடிக்கி. அதனால் சிவனை வெறுக்க மாட்டாய்" என நீங்கள் நினைப்பது என் செவிகளில் கேட்கிறது. ஆனால் அது அப்படி இல்லை.

சிவனுக்கு என எந்த கோட்பாடும், குறிக்கோள்களும் இல்லை. சிவனை இப்படித்தான் கும்பிட வேண்டும் என்ற எவ்வித கட்டுப்பாடும் இல்லை. மொட்டையடிப்பது, அலகு குத்துவது, அக்னிசட்டி ஏந்துவது, பூக்குழி இறங்குவது, பலி கொடுப்பது என துவங்கி இன்னபிற எத்தனை இருந்தாலும் எந்த வழிமுறையிலும் சிவன் அடங்கமாட்டார். சிவனை கும்பிடுவது உலகிலேயே மிக எளிமையான வழி. மனதார நினைத்து கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தால் போதுமானது. பூஜை புணஸ்காரங்கள், மணிக்கணக்கில் ஆலய வழிபாடு என எதுவும் தேவையில்லை. சிவன் மனிதனாக வாழ்ந்து சென்றவர் என்ற ஒரு வதந்தியும் இருக்கிறது. அதற்கு ஆதாரங்கள் இல்லை எனினும், அத்தனை இதிகாசங்களிலும் அதாவது சைவ வைணவ என்ற பிரிவுகளிலும் எடுத்து பார்த்தீர்கள் எனில் அங்கே சிவனை வழிபட ஒருவர் இருந்திருப்பார். உதாரணமாக, இராமாயணத்தில் இராவணன், மகாபாரதத்தில் அர்ஜூனன் என சொல்லிக்கொண்டே போகலாம். ஆதிக்கடவுள் என்பதாலோ என்னமோ மனிதனை மனிதனாகவே இருந்துவிட அனுமதிக்கிறது சிவ வழிபாட்டு முறைகள். அதற்காக சைவ முறையில் மூடத்தனங்களே இல்லையா எனக்கேட்டால் நான் மொத்த சைவ முறைக்கு வரவில்லை. இதில் சிவனை மட்டுமே சொல்கிறேன். அவ்வளவுதான். (தொடர்ச்சி)


காலை எழுந்து கிளம்பிவிட்டேன். நான் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியே வந்து வாகனத்தை எடுக்கும்பொழுது, வாகனத்தின் பின்னால் ஒருவர் வந்து நின்று கொண்டிருந்தார்.

"நானும் வர்ரேன், கூட்டிட்டு போ" அவர்.

நான் எங்கே செல்கிறேன் என்பது எனக்கே அதுவரை தெரியாது எனும்பொழுது நான் அவரை சந்தேகப்பட எதுவும் இல்லை. கிட்டத்தட்ட 65-70 வயது இருக்கும் முதியவர் அவர். கழுத்து முழுவதும் ருத்திராட்சைகளும், கபால மாலையும், நெற்றி மற்றும் உடல் முழுவதும் திருநீறுமாய் இருந்தார். நான் ஒரு கபால மாலை அணிந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இல்லை எனில், என்னுடைய இன்ஸ்ட்டாகிராம் ப்ராட்காஸ்ட்டில் இருக்கும் என்னுடைய புகைப்படத்தில் அதை காணலாம். அந்த கபாலமாலை எனக்கு இதேபோல ஒருவர் பரிசாக கொடுத்தது. இவரை மறுக்க முடியவில்லை. ஆனால் ஒரு சந்தேகம். நான் இருப்பது திருப்பதிக்கு அருகில். இவர் எப்படி தமிழில் பேசுகிறார்? நான் தமிழ் என்பது இவருக்கு எப்படி தெரியும்? நான் தங்கி இருந்த விடுதி வரவேற்பறையில், அறை பதியும்பொழுதுகூட நான் ஆங்கிலத்தில்தான் பேசினேன். அறையில் தங்கி இருந்தபொழுது யாரிடமும் ஃபோன்கூட பேசவில்லை. அப்படியிருக்க எப்படி?

"தும் கோன் ஹோ? இஸ்ஸே பெஹனே தோ." என்றேன். அதாவது யார் நீ? வழியை விடு என இந்தியில் சொன்னேன்.

அதற்கு அவர் சிரித்துக்கொண்டே,"என்ட்ட இந்தில பேசாத, நீ தமிழ்ன்னு தெரியும். நீ எங்க போறன்னு தெரியும். ஆனா நீ அங்க போக வேண்டாம். காசிக்கு போலாம் வா" என்றார்.

இரண்டு மூன்று நிமிடங்கள் எதுவும் பேசாமல் அவரை முறைத்துக் கொண்டிருந்தேன். மீண்டும் என்னைப்பார்த்த அவர்,"தம்பி, நீ காசிக்கு வரனும்னு விதிச்சு இருக்கு. நீ எங்க போகனும்னு நெனச்சாலும் காசிக்குதான் வந்தாகனும். நானும் காசிக்குதான் போறேன். என்கூட வா" என்றார். மீண்டும் அமைதியாக இருந்தேன்.

"உனக்கு என்ன தெரியனும்" அவர்.

"எதுவும் தெரிய வேண்டாம். நான் எங்கயும் போகல. திருப்பதி வந்தேன். அப்டியே காலஹஸ்தி பாத்தாச்சு. கிளம்பிட்டேன். வீட்டுக்கு போக போறேன்." என்றேன்.

"நீ மேல் திருப்பதியும் போகல, கீழ் திருப்பதியும் போகல, காலஹஸ்தியும் போகல. நீ மொத திருப்பதிக்கே வரல. இப்ப நீ வீட்டுக்கும் போகப்போறது இல்ல. நீ போக நினைச்ச இடமே வேற. நீ ஒரு வழிப்போக்கன்." என்றார்.

உண்மையில், அவரை நம்புவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனிலும், நான் இருக்கும் மனநிலைக்கு என்னை கொஞ்சமாக மண்டையை கழுவினால் நிச்சயமாக சித்தராகிவிடுவேன். அதற்கான இடத்தை கொடுத்துவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய மொத்த சிந்தனையும். அது ஏன் அப்படி என்பதை சொல்கிறேன். ஒரு குட்டிக் கதை. (நிற்க)


கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன் க்ளப்ஹவுஸ் என்ற ஓர் சமூக வலைதளம் இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது ஆனால் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. லாக்டவுன் நேரமாதலால் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக உரையாட, வாக்குவாதங்கள் செய்ய, புதுப்புது விசயங்களை பகிர்ந்துகொள்ள அந்த இடம் பெருமளவில் உதவியாக இருந்தது. க்ளப்ஹவுஸில் எனக்கு இருந்து நட்பு வட்டாரத்தில், ஒரு நண்பர் கிட்டத்தட்ட தொழிலதிபராக இருந்தார். (ஊர் மற்றும் அவரது பெயரை என்னால் பகிர இயலாது) அவருக்கென ஒரு தொழில், அவருக்கு கீழே வேலை பார்க்க ஏறக்குறைய 40 பேர். எப்பொழுதும் பிஸியாகவே இருப்பார். க்ளப்ஹவுஸில் இருக்கும்பொழுதும் எதையாவது புதியதாக முயன்று கொண்டும், எதாவது ஒரு வழியில் பணம் ஈட்டிக் கொண்டும், ஆன்லைன் செமினார்கள் மூலமாக அறிவுப்பகிர்வு செய்து கொண்டும் இருந்தார். திடீரென, ஒரு வருடமாக அவரை காணவில்லை. அவரது குடும்பத்தாருக்கும், அந்த அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும், அவருடைய காதலிக்கும்கூட அவர் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை. சரியாக 18 மாதங்கள் கழித்து வீட்டிற்கு சென்றிருக்கிறார். வெள்ளை உடை அணிந்து தலை நிறைய முடியும், முகம் நிறைய தாடியும் சாமியாராக சென்றிருக்கிறார். வீட்டிற்கு சென்று ஒரு வாரம் தங்கிவிட்டு அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், அவர்களுக்கு வேண்டுமெனில் இந்த இடத்தில் வந்து பார்க்குமாறும் சொல்லிவிட்டு, அவரது தொழிலை அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடமே ஒப்படைத்துவிட்டு, அவரது மொபைலை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். இது நடந்து ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து, அவரது பெற்றோர், அவரது நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். இன்னார் கிடைத்துவிட்டதாகவும், அவரை சென்று பார்த்துவிட்டு, கூட்டிக்கொண்டு வந்துவிடலாம் என்ற அழைப்பு அது.

கிட்டத்தட்ட இருவது இருபத்தி ஐந்து கார்களில் சென்ற அவரது நட்பு வட்டாரத்தில், ஒருவனாக நானும் அங்கே சென்றேன். அந்த இடம் ஒரு சித்தர் மடம். இதுவரை வாழ்ந்த அத்தனை சித்தர்களையும் குருவாக ஏற்றுக்கொண்ட ஒருவர், ஒரு மடத்தை ஆரம்பித்து இருக்கிறார். அங்கே அவரின் குறிப்பிட்ட சிஷ்யர்களுள் ஒருவராக இவரும். ஆடிப்போய் விட்டேன். என்னைவிட மிகப்பெரிய நாத்திகனான இவர் எப்படி இப்படி மாறிப்போனார்? கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அங்கே தங்கி இருந்து, காவல்துறையில் வழக்கு பதிந்து என்னென்னமோ செய்து பார்த்தும் அந்த சித்தரின் பதில் ஒன்றுதான்,"அவன் விருப்பப்பட்டால் அவனை கூட்டிச் செல்லுங்கள்" ஆனால் இவர் வரத் தயாராக இல்லை. எனக்கு அதைப்பற்றி கவலையும் இல்லை. என்னுடைய கேள்வி எல்லாம்,"எப்படி இது சாத்தியமானது?"

மூன்றாம் நாள், அனைவரும் சோர்ந்து, தோற்றுப்போய், தோல்வியை ஒப்புக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர். நான் கிளம்பவில்லை. அன்று முழுவதும் அங்கே இருந்தேன். யாதொரு வார்த்தையும் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. இருந்தேன், அவ்வளவுதான்.

நான்காவது நாள் அந்த சித்தர், அதாவது இவர்களின் குரு என்னை அழைத்தார்.

"ஏன் இங்க இருக்க?" அவர்.

"தெரியல" நான்.

"இவன கூட்டிட்டு போக நீ இங்க இல்ல. இங்கயே தங்கிடவும் நீ இங்க இல்ல. என்னை மிரட்டவோ, இல்ல இங்க இருக்கவங்கள பயமுறுத்தவோ உன்னால முடியாது. சொல்லு நீ ஏன் இங்க இருக்க?" அவர்.

"தெரிஞ்சுக்கனும்" நான்.

"நாம தெரிஞ்சுக்க முடியாததும், தெரிஞ்சுக்க கூடாததும் இந்த பிரபஞ்சத்துல ஏகப்பட்டது இருக்கு. நீ தெரிஞ்சுக்கனும்னு நெனச்சா அது எப்பவும் முடியாது. இல்ல தெரிஞ்சுக்கிட்டே ஆகனும்னா முயற்சி பண்ணிட்டே இருக்கலாம். ஆனா தெரிஞ்சுக்க முடியாது." அவர்.

அமைதியாக அவரை பார்த்தபடி அமர்ந்து இருந்தேன். என்னையே வெறித்துக் கொண்டிருந்தார். மெல்ல எழுந்து அவருடைய சிஷ்யரிடம், அதாவது என்னுடைய நண்பரிடம் ஏதோ முனுமுனுத்துவிட்டு சென்றார். என்னை பார்த்துக் கொண்டே சென்ற என் நண்பர் பத்து நிமிடங்கள் கழித்து ஒரு வெள்ளை வேட்டியும் துண்டும் கொண்டு வந்தார்.

"குரு உன்னை குளிச்சுட்டு வர சொன்னார்" நண்பர்.

"நான் குளிச்சுட்டேன்" நான்.

"உன் உடம்பு நனைஞ்சுடுச்சு. மனசு அப்டியேதான் இருக்கு. குளிச்சுட்டு வா" நண்பர்.

எதுவும் பேசாமல் அமைதியாக குளிக்க சென்றேன். நான் ஏற்கனவே அணிந்திருந்த உடையை அணிய வேண்டாம் என சொல்லி விட்டனர். குளித்துவிட்டு வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு, துண்டை மேலே போர்த்திக்கொண்டு வந்தேன். குருவின் அறைக்கு செல்ல சொன்னார்கள். சென்றேன். குரு அமர சொன்னார்.

"நீ எதயும் நம்ப மாட்டியே. எதுக்கு இங்க இருக்க?" அவர்.

"நான் நம்பாத, இப்படி நடக்கவே நடக்காதுன்னு நினைச்ச ஒரு விசயம் நடந்திருக்கு. அதுக்கான காரணம் தெரிஞ்சுக்கனும்" நான்.

"நீ நடக்காதுன்னு நினைச்சுட்டா அது நடக்காம போய்டுமா? இல்ல நடக்க வேண்டிய ஒரு விஷயத்த நடக்காம தடுத்து வச்சுட உன்னாலதான் முடியுமா?" அவர்.

"என்னால என்னை தடுக்க முடியும். எல்லாத்தையும் தடுக்க என்னால இல்ல உங்களால கூட முடியாது. நம்ம சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு விசயம் ஒருவேளை இருக்கலாம் இல்லாமலும் போகலாம். அதை நான் கண்ணால பாக்காத வரைக்கும் எதையும் நான் நம்ப மாட்டேன். மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு விசயம், அதாவது மனிதனால புரிஞ்சுக்க முடியாத ஒரு விசயம் நிச்சயமா இருக்க முடியாது. காட் டேஹ்ம் பார்ட்டிக்கல் வரைக்கும் போய் பாத்தாச்சுதானே" நான்.

"ஓ! நீ அறிவியல நம்புறவனா? சரி எது அறிவியல்?" அவர்.

"உங்களுக்கும், உங்களோட சிந்தனைகளுக்கும் எதிரானது. நீங்க மறுக்கறது" நான்.

சத்தமாக சிரித்த அவர்,"நான் எப்போ அறிவியல மறுத்தேன்? வெறுத்தேன்? நான் எப்போ அறிவியலுக்கு எதிரானவன்னு சொன்னேன்?"

"நீங்க பண்றது மூடத்தனம்தானே?" நான்.

"எதப்பா மூடத்தனம்னு சொல்ற? இங்க நான் என்ன பண்றேன்? உன்னைய மொட்டையடிக்க சொன்னனா? அலகு குத்திக்க சொன்னனா? சூடத்த நாக்குல ஏத்திக்க சொன்னனா? என்ன சொன்னேன்?" அவர்.

"ஆரம்பத்துலயே சொல்லிட்டா எப்டி? கொஞ்ச கொஞ்சமாதானே சொல்லுவீங்க. இப்போதானே ஆரம்பிச்சு இருக்கீங்க? ஜக்கி வாசுதேவெல்லாம் பாத்துட்டுதானே இருக்கோம். பாப்போம்" நான்.

சிரித்த அவர்,"இங்க ஒரு 48 நாள் தங்கு. நீ என்ன தெரிஞ்சுக்கனுமோ தெரிஞ்சுக்கோ. என்ன புரியலயோ கேளு. இங்க எங்கயும் கதவுக்கு தாழ்ப்பாள் கெடயாது. உன்னை யாரும் இங்க அடைச்சு வைக்கல. பிடிச்சும் வைக்கல. உனக்கு இருக்கனும் தெரிஞ்சுக்கனும்னு தோணுச்சுன்னா இரு. இல்லைன்னா கேள்விகளோடவே வாழ்ந்துக்க"என சொல்லிவிட்டு யூட்யூபில் ஏதோ வீடியோ பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

48 நாட்கள் தங்க முடிவு செய்தேன். அங்கே நான் தங்கிய அந்த நாட்களில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.

முதலில் அங்கே சோப்பு, சீப்பு, சவரக்கத்தி, கண்ணாடி, டூத் ப்ரஷ் போன்ற எதுவும் கிடையாது. மது, புகையிலை எதுவும் கிடைக்காது. 3 வேளையும் உணவு, 3 வேளையும் ஆராதனை. யார் இருக்கிறார்கள் யார் இல்லை என்ற கவலை அந்த குருவிற்கு எப்பொழுதும் இருந்தது இல்லை. நேரம் வந்தவுடன் பூஜை செய்ய ஆரம்பித்துவிடுவார். விருப்பமிருந்தால் நாம் கலந்துகொள்ளலாம். இது எனக்கு மட்டுமில்லை அனைவருக்கும் அப்படித்தான். உணவில் பெருமளவில் உப்பு பயன்படுத்த மாட்டார்கள். ஒருவேளை பயன்படுத்தினாலும் அது கடல் உப்பாக இருக்காது, கல் உப்புதான். எல்லா உணவிலும் நிச்சயமாக கசப்பு லேசாக கலந்திருக்கும். அதாவது ஒரு துண்டாவது பாகற்காய். அத்தனை சுவைகளும் இருப்பதுதான் உணவு என்பார். அத்தனை உணர்வுகளும் இருப்பதுதான் வாழ்க்கை என்ற கோட்பாடு. ஒரு நாளைக்கு ஒருமுறை குருவுடன் உரையாடல். பெரும்பாலும் பிரபஞ்சம், அறிவியல், அரசியல், மெய்ஞானம், மனித உடல் சார்ந்த அறவியல், மருத்துவம் என இன்றைய தேதியில் மனிதன் அடிப்படையாக என்னென்ன தெரிந்து வைத்திருக்க வேண்டுமோ அத்தனையும் அந்த உரையாடலில் இருக்கும். ஆரம்பத்தில் என்னிடம் சீன் போடுகிறார்கள் என நினைத்தேன். போகப்போக இதுதான் அவர்களின் வழக்கம் என்பது தெரிந்தது. மூன்று வாரங்கள் கடந்தபின் அவர்களுள் ஒன்றாக நானும் ஆக ஆரம்பித்துவிட்டிருந்தேன். அந்த காட்டுவாசி வாழ்க்கைக்கு பழக்கப்பட்டிருந்தேன். பார்வைக்கு காட்டுவாசியாகவும், பேசினால் விஞ்ஞானியாகவும் ஆகத் துவங்கி இருந்தேன். இது சரியா தவறா என்ற எண்ணங்களின் போராட்டங்களுக்கு மத்தியில், நான் ஏன் இங்கே இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்வி என்னுடைய நண்பருக்கு எழாமல் இருந்ததுதான், அவர் அங்கேயே இருந்துவிட்டதற்கான காரணம் என்பதை புரிந்துகொண்டேன். அவர் ஏன் அங்கே இருக்கிறார்? ஏன் இப்படி மாறிப்போனார்? என்ற கேள்விக்கான பதிலுக்காகத்தான் நான் அங்கே இருக்க நினைத்தேன். பதில் கிடைத்தது. ஆனால் கூடவே ஒரு கேள்வியும்,"நான் இங்கிருந்து ஏன் செல்ல வேண்டும்?"

நான் அங்கிருந்து வெளியே வருவதற்கான எந்த காரணமும் எனக்கு இல்லை. ஆனால், இப்படி அங்கே இருந்துவிடக்கூடாது என்ற ஒரே எண்ணம்தான். நான் கிளம்பிவிட்டேன். இப்பொழுதும் அந்த நண்பரிடமும், அந்த குருவிடமும் நேரம் கிடைக்கும்பொழுது தொலைபேசியில் பேசுவதுண்டு. ஆனால் அங்கே செல்ல விரும்பவில்லை இவ்வளவு நாளாக. ஆனால் இப்பொழுது இருக்கும் மன நிலையில் அங்கே சென்றுவிட்டால் என்ன? சித்தராகிவிட்டால் என்ன? என நான் சிந்திக்காமலும் இல்லை. இப்படி இரண்டு மனதாக நான் இருந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் ஒரு சிவபக்தர் என்னிடம் வந்து வா காசிக்கு செல்லலாம் என்கிறார்..

தொடரும்..


- எழுத்தாளுமை இக்ரிஸ் (01/09/2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2025 07:48
No comments have been added yet.