இணையத்தில் பெண்கள்
கடந்த வாரத்தில் இன்ஸ்ட்டாகிராமில் பெண்களிடம் மீம் பக்கங்கள் அவர்களுடைய உடல் பாகங்களை புகைப்படமாக அனுப்ப சொல்லுதல் போலவே தவறான முறையில் பேசுதல் மற்றுமின்றி பணம் வாங்குதல் போன்றவற்றை செய்திருக்கிறார்கள் என்ற குற்றசாட்டுகளில் பலர் சிக்கி இருக்கிறார்கள். மாட்டிக்கொண்டதால் பலர் அக்கவுன்டை டீஆக்டிவேட் செய்துவிட்டனர். நீ எப்பொழுது மாட்டுவாய்? நீ எப்பொழுது டீஆக்டிவேட் செய்வாய்? என நீங்கள் நினைப்பது புரிகிறது. வருகிறேன்.
அவர்களை என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற இடத்திற்கு நான் வரவில்லை. நான் ஆணாக இருப்பதாலும், போலவே முகத்தை மறைத்து பதிவுகள் இடுவதாலும் இது எப்படி நடக்கிறது என்பது எனக்கு குத்துமதிப்பாக தெரியும். அதை உங்களிடம் பகிர நினைக்கிறேன். என்னையும் நானே அசிங்கப்படுத்திக்கொள்ள வேண்டி வரும். பரவாயில்லை. பல பெண்கள் சம்மந்தப்பட்ட விசயம் எனும்பொழுது, ஊர் பேர் தெரியாத நான் என்னை தாழ்த்திக்கொள்வதில், தாழ்ந்துபோய் விட மாட்டேன்.
முதலில், ஃபாலோவர்கள் அதிகம் இருப்பதனால் அது ஒரு க்ரேஸை தருகிறது. இது ஆண் பெண் இருவருக்கும் உள்ள விசயம். அதனால் இவர்கள் சுலபமாக யாரிடம் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடிகிறது. ஆனால் இவர்கள் ஆண்களின் பக்கம் செல்வதில்லை. பெண்களின் பக்கம்தான் செல்கிறார்கள். போலவே பெண்களும் ஃபாலோவர்கள் இருப்பதாலும், இவர்கள் பகிரும் பதிவுகள் அவர்களுக்கு பிடித்திருப்பதனாலும் பேசுகிறார்கள். எந்த ஒரு பெண்ணும் பேசும் அனைவரிடமும் படுக்க நினைப்பதில்லை. ஆனால் ஒரு பெண் பேசிவிட்டால் அது அதற்கான அழைப்பு என ஆணின் புத்தியில் உதிக்காமலும் இருப்பதில்லை. இது பலருக்கு புரிவதில்லை. பேச துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை சம்பாதித்து அதற்குபின் இவர்கள் வேலையை காண்பிக்கின்றனர்.
இது ஏன் இப்படி? எனக்கேட்டால், ஃபாலோவர்கள் வந்துவிட்டால், தன்னுடைய பதிவுகளுக்கு லைக்குகள் வந்துவிட்டால் தான் ஒரு பெரும் பிரபலம் என்ற நினைப்பு வந்துவிடுவது மனித இயல்பு. தான் என்ற அகந்தையில் செய்யும் தவறுகள்தான் இவை. இதை நியாயப்படுத்தவில்லை. இதை பலரால் கையாள முடிவதில்லை.
என்னை எடுத்துக்கொள்ளுங்கள். என்னிடம் பல பெண்கள் பேசி இருக்கிறார்கள். ஆனால் அதற்காக நான் அனைவரிடமும் அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்களை கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் என்னிடம் எதற்காக பேச நினைக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள நினைப்பேன். அதிகபட்ச காரணமாக இருப்பது அவர்களின் சோகத்தை புலம்பிட, அதை கேட்க ஒருவர் வேண்டும் என்பதுதான். அதற்காக அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த அத்தனையையும் நம்மிடம் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக நான் அட்வான்டேஜ் எடுக்கலாம் என்ற எந்த கட்டாயமும் இல்லை. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் அவர்கள் சாவு கடின விசிறியாக இருந்தாலும் என்னுடைய எழுத்துக்களுக்குதானே ஒழிய எனக்கு இல்லை என்ற ஒரு சுவர் எப்பொழுதும் என்னிடம் இருக்கும். அது பலரிடம் இல்லை. இதைத்தான் நான் கண்ணியம் என ப்ராட்காஸ்ட் பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.
நீ யோக்கியமா? ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்தாயே? என நீங்கள் கேட்பீர்கள். நான் நிச்சயமாக யோக்கியம்தான். நான் செய்தது தவறு என்பதை புரிந்து அதை பொதுவெளியில் ஒப்புக்கொண்டு உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்திய வகையில் நான் யோக்கியம்தான். போலவே அந்த இரண்டு பேரிடமும் என்னுடைய புகைப்படமும், தொலைபேசி எண்ணும் இருந்தது. என்மேல் நீங்க வழக்கு தொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்ற இடத்தில் நான் இருந்தேன். போலவே இந்த இரண்டு பேரைத்தவிர வேறு யாரிடமும் நான் பேசியதாக கூட நினைவில் இல்லை. கடைசியாக நான் காதலித்தபொழுது என்னுடை மெசேஜ் செக்சன் எம்டியாக இருந்தது. நான் யாரிடமும் பேசவில்லை, என்னிடம் பேசியவர்களுக்கு நான் பதிலளிக்கவும் இல்லை. இந்த வகையில் நான் யோக்கியம்தான்.
போலவே, காதலிப்பது ஒன்றும் தவறு இல்லையே. நான் காதலிக்கிறேன் என சொல்லி அவர்களை ஏமாற்றிவிடவில்லை. பணமோ பொருளோ அவர்களிடம் இருந்து பறித்துக்கொள்ளவில்லை. மட்டுமின்றி நான் யார் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தி நேரிலோ வீடியோ காலிலோ அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அதற்குப்பின்தான் காதல் என்ற இடத்திற்கு சென்றேன். திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தேன். அது நடக்காமல் போனதில் எனக்கும் வருத்தம்தான். அதையும் இதையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஒப்பிட்டு பார்ப்பீர்கள் எனில், அது உங்கள் தவறு.
நான் மேலே குறிப்பிட்டவைகள் நான் செய்பவைகள். நான் கடைபிடிப்பவைகள். ஆண் என்பது வெறும் திமிரும் அகந்தையும் எதையும் செய்யலாம் என்ற தறுதலைத்தனமும் இல்லை. கண்ணியமாக இருக்க வேண்டும். நான் இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறேன். நான் நானாக சென்று மெசேஜ் அனுப்பாததற்கு பலர் என்னிடம் கோவித்துக் கொண்டிருக்கிறார்கள். பேசாமல் சென்றிருக்கிறார்கள். பல டோலிகளை இழந்திருக்கிறேன். ஆனால் நான் போய் மெசேஜ் அனுப்பாததற்கு காரணம், அவர்களை ஹராஸ் செய்வதாகவோ அல்லது என்னிடம் நீ பேசி ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தும் விதமாகவோ அல்லது இவ்வளவு ஃபாலோவர்கள் வைத்திருப்பவன் நம்மிடம் பேசுகிறான் நாம் எப்படி பேசாமல் இருப்பது? என்ற இடத்திற்கோ அவர்களை கொண்டு வந்துவிடக்கூடாது என்ற எண்ணம்தான். அதுவும் தவறுதான். விருப்பம் இருந்தால் பேச போகிறார்கள் அல்லது பேசாமல் செல்ல போகிறார்கள். அவர்கள் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் என்ன இருக்கிறது? போலவே என்னிடம் அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லிவிடுவதோடு அவர்களுக்கு என்னிடம் பேசுவதற்கான தேவை முடிந்து போய் இருக்கலாம் அல்லவா? இதை இந்த கோணத்தில் சிந்திக்காதவர்கள்தான் சென்ற வாரம் மிதி வாங்கிக் கொண்டிருந்தனர். நீ எப்போது மாட்டுவாய்? நீ எப்போது டீஆக்டிவேட் செய்வாய் என்ற கேள்விக்கு இதுதான் பதில். நான் எப்பொழுதும் மாட்ட மாட்டேன். தவறுகள் செய்தவன்தானே மாட்டுவான்?
பெண்களிடம் வருகிறேன். இதை எழுத கை கூசுகிறது. இருப்பினும், வேறு வழி இல்லை. இந்த இணையத்தில் ஒருவன் உங்களிடம் வந்து பேசிகிறான் பழகுகிறான் என்றால் அதற்கு இருக்கும் ஒரே காரணம் உங்கள் உடல் மட்டும்தான் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதை உடனே கேட்கிறான் அல்லது கொஞ்ச நாள் கழித்து கேட்கிறான் என்பதெல்லாம் வேறு கதை. ஆனால் அவனுடைய ஒட்டுமொத்த இலக்கும் உங்கள் உடல் மட்டும்தான். இதை நான் ஒரு ரீலாகவே பதிந்து இருந்தேன். இணையத்தில் அண்ணனோ தம்பியோ நண்பனோ எவனும் கிடையாது. ஆரம்பத்தில் என்னவாக வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் அவன் இலக்கு ஒன்றுதான். அதற்காக இணையத்திற்கே வராதீர்கள், சமலறையிலேயே இருங்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். முடியாது என சொல்லி பழகுங்கள். என்னுடைய கதையில், என்னுடைய கடைசி காதலில், எவ்வளவு உருகி உருகி காதலித்த பொழுதும் என்னுடைய காதலி அவளுடைய புகைப்படத்தை அனுப்பவே அத்தனை முறை யோசிப்பாள். அந்தரங்க புகைப்படங்கள் இல்லை. வெறும் செல்ஃபீ! யாரையும் நம்பாதீர்கள். எதற்கும் தலையசைக்காதீர்கள்.
நிச்சயமாக உங்களுக்கு தெரியும் ஒரு ஆணின் பேசுவதன் நோக்கம் என்ன என்று. புரிந்தபின்னும் கேளிக்கைக்காக அவன் இருக்கட்டும் என வைத்திருக்காதீர்கள். அந்தரங்க புகைப்படங்களை அனுப்பித்தான் அந்த நட்பையோ காதலையோ இன்னும் 1008 உறவுமுறைகளையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் உங்களுக்கு அப்படி ஒரு உறவு இணையத்தில் தேவை இல்லை என்பதில் தெளிவாக இருங்கள்.
இவர்களின் வலைகளில் பல பள்ளி/கல்லூரி மாணவிகள் சிக்குவதாக கேள்விப்படுகிறேன். நீங்கள் மனிதர்களைப்பற்றி தெரியும்வரை இன்ஸ்டா மட்டுமில்லை எந்த சமூக வலைதளங்களுக்கும் வராமல் இருப்பது நல்லது. ஒருவேளை வந்தாலும் யாரையும் நம்பாதீர்கள். பெண்கள் பாம்புகள் என பலர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆம் இது உண்மைதான். ஆனால் ஆண்கள் சிலந்திகள். காதலில் விழ வைக்க, உங்களின் உடலை அடைய எந்த மாதிரி வலையையும் பின்னுவான். ஜாக்கிரதை.
- எழுத்தாளுமை இக்ரிஸ் (31/08/2025)


