என் காதலும் சுய உணர்தலும்.

வெகு நாட்களுக்கு முன், நான் என் பார்வையில் காதல் என எழுதி இருக்கிறேன் இதே ப்ளாகில். இன்று அதை எழுதுவது ஒரு ஓரமாக இருக்கட்டும், அதை படிக்க சொன்னாலே எனக்குள் ஆணாதிக்க திமிருடன் எழுதி இருக்கிறேன் என்ற குற்ற உணர்வு இருக்கத்தான் செய்கிறது. நிச்சயமாக என்னால் அந்த பதிவை மீண்டும் படிக்க இயலாது. சொல்கிறேன்.

என்னை இன்றுவரை ஃபாலோ செய்து கொண்டிருக்கும் நபர்களுக்கு எனக்கு சமீபத்தில் காதல் தோல்வியான விசயம் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு மூன்றாவது முறையாக காதல் தோல்வி ஆகிவிட்டது. இது ஏன் எப்படி நடக்கிறது என்ற கேள்வி இருந்தாலும், என்மேல் என்ன தவறு என்ற கேள்வி எனக்குள் இல்லாமல் இல்லை.

இதற்கு முந்தைய இரண்டு காதலிலும் என்னுடைய தவறு என்பது பெரியதாக இல்லை என்றும் அவர்களின் மேல் தவறு இருப்பதாக, அவர்கள் செய்தது நிச்சயமாக தவறு எனவும் நினைத்துக் கொண்டும் நான் அங்கிருந்து விலக முற்பட்டேன். ஆனால் அவர்கள் தக்க வைக்க முயன்றதன் வெளிப்பாடு, வெடித்துக்கொண்டு நான் வெளியே வந்ததுதான். ஆனால் அது சரியா எனக்கேட்டால், அன்றைய தேதியில் அது சரியாக இருந்ததாக நானே நினைத்துக் கொண்டேன் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

கடந்து வந்த பின், மூன்றாவதாக ஒரு காதல். இந்த காதல் எனக்கு கிடைத்த வாய்ப்பு என்பதை காட்டிலும் என்னை, என்மேல் இருக்கும் தவறுகளை, ஒரு ஆணின் தான் ஒரு ஆண் என்ற எண்ணத்தின் விளைவுகளை எனக்கு புரியவைத்தது. குறைந்தபட்சம் நான் புரிந்துகொள்ள தயாராக இருந்தேன் என்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி.

இந்த காதலில் நடந்த ஒரு சண்டையை, அதாவது பிரிவிற்கு மூலக்காரணமாக இருந்த ஒரு பெரும் காரணியை, என்னுடைய பெரிய தவறைப் பற்றி நான் அரசல் புரசலாக எழுதுவதால் என்னுடைய காதலி என்மேல் ஏற்கனவே இருக்கும் கோபத்தில் இருந்து ஒரு படி மேலே ஏறி உட்கார்ந்து கொள்ளமாட்டாள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

என்னவளுக்கும் எனக்கும் ஒரு சிறிய மனஸ்தாபத்தில் துவங்கியது என்னுடைய சுய உணர்தல் படலம். நான் அவளிடம் கோவப்பட்டேன், சண்டை செய்தேன், விட்டு சென்றுவிடுகிறேன் என சொன்னேன். அத்தனையும் நடந்தது. அவள் அது எதற்கும் எதிர்வினையாற்ற தயாராக இல்லை. சலனமற்ற நதியைப்போல இருந்தாள். அதற்கும் நான் கோவப்பட்டேன். ஏன்? எதற்காக? என்னிடம் சொல்லலாம் அல்லவா? எனக்கு புரிய வைக்கலாம் அல்லவா? நீ பேசாமலே இருப்பதன் அர்த்தம்தான் என்ன? இத்தனை கேள்விகளும் கோபமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. வெறும் கோபமாக மட்டும். ஆனால் அவளிடம் இருந்து எதுவும் பதில் இல்லை. அவள் பதில் சொல்லவோ விளக்கம் கொடுக்கவோ தயாராக இல்லை.

காரணம், அவள் ஏற்கனவே இரண்டு முறை காதலில் இருந்து இருக்கிறாள். அந்த இரண்டு காதலிலும் என்ன பிரச்சனை நடந்ததோ அதே பிரச்சனைதான் நான் செய்ததும். அவளின் சுதந்திரம் பறிபோகிறது என்னும் இடம் அது. ஆனால் நிச்சயமாக எனக்கு தெரியும் நான் அவளின் சுதந்திரத்தை பறிக்கவோ அல்லது அவளை அவதூறு பேசவோ அல்லது அவள்மேல் பழிச்சொல் சொல்லவோ இல்லை. ஆனால் இதெல்லாம் அவள் வாழ்வில் ஏற்கனவே நடந்து இருக்கிறது.

ஏற்கனவே அவள் வாழ்வில் நடந்ததன் விளைவு என்னவாக இருந்தது என்றால், அவள் என்னுடனான காதலில் பெரியதாக மனதளவில் ஈடுபாட்டுடன் இல்லை. சராசரி காதலர்களிடம் இருக்கும் ஊடல் இங்கே இல்லை. சிறு சிறு சண்டைகள் இல்லை. புரிய வைக்கும் இடமோ என்னை புரிந்துகொள் என்ற நிலையோ இங்கு இல்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் எனக்கு நீ இதை செய் அதை செய், இப்படி இரு அப்படி இரு, என்றுகூட அவள் ஒரு வார்த்தை என்னிடம் சொன்னதில்லை. இதெல்லாம் எனக்கு பின்னால்தான் புரிந்தது. உன்னுடைய சுதந்திரத்தில் நான் தலையிட்டால் என்னுடைய சுதந்திரத்தில் நீ தலையிடுவாய். ஆகையினால் நான் அதில் தலையிடவில்லை. நான் உன்னை காதலிக்கிறேன், அவ்வளவுதான் என்ற நிலை அது. அவள் என்னைவிட்டு பிரிந்து சென்றதும் அவ்வளவு சுலபமாக நடந்தேறிவிட்டது. அது அவளால் முடிந்தது. எமோஷினலி கனெக்டெட்டாக இருந்தாலும் அவளுடைய சுதந்திரத்திற்கு அவள் கொடுத்த முக்கியத்துவம் அபரிமிதமானது. மதிக்கிறேன்.

இதெல்லாம் எங்கே ஆரம்பித்தது என பார்ப்போம். ஆணாதிக்க எண்ணம். அவளது வாழ்வில் இருந்த இரண்டு ஆண்கள் செய்த தவறுகளினால் அவள், அவளது வாழ்வில் மனிதர்களின்மேல் பற்று இல்லாமல் மாறிப் போய்விட்டாள். எந்த ஒரு உறவின் மேலும் நம்பிக்கை இல்லாமல் இருக்க துவங்கிவிட்டாள். இது எல்லோராலும் முடியுமா எனக்கேட்டால், நிச்சயமாக இல்லை. அவள் பெண்ணிய போராளி என்றும் இல்லை. குறைந்தபட்சமாக என்னுடைய வாழ்வில் நான் எனக்கு பிடித்த விசயத்தை செய்ய என்னை அனுமதிக்க நீங்களெல்லாம் யார்? என்ற கேள்வி அவளுக்குள் ஆழமாக வேரூன்றியதன் பெரும் விளைவுதான் அது. தலை வணங்குகிறேன்.

இது இப்படி இருக்க, இத்தனை நாட்களாக அதே ஆணாதிக்க மனநிலையில் இருந்த ஒருவனான நான், பாதிக்கப்பட்டவனாக மாறுகிறேன். 

அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது? அவளாக சொல்ல மாட்டாள், நானாக தெரிந்துகொள்ள வேண்டும்.

அவள் என்ன நினைக்கிறாள்? மனதளவில் எது அவளை பாதிக்கிறது? அவள் சொல்ல மாட்டாள், நானாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர்களுடன் நேரம் செலவிடுவாள். அதைப்பற்றி எதாவது சொல்ல முடியுமா? எனக்கேட்டால் சொல்ல மாட்டாள். காரணம் உன் நண்பர்களுடன் நீ செலவு செய்த நேரத்தை என்னுடன் செலவு செய்திருக்கலாமே? என இதற்கு முன் அவள் வாழ்வில் இருந்தவர்கள் செய்து போன பிரச்சனையின் தாக்கம். இங்கே நான் புரிந்துகொள்ள வேண்டியது, அவள் சந்தோஷமாக இருந்தாள். அவ்வளவுதான்.

எங்கே செல்கிறாள்? எப்போது செல்கிறாள்? எப்பொழுது வருவாள்? சொல்ல மாட்டாள். வெளிப்படைத்தன்மை அவளை பாதிக்கும் என்பதால் எதையும் சொல்லிக்கொள்ளவே மாட்டாள்.

கடைசியாக பிரச்சனை வந்த பொழுதும் அவள் அதற்கான எந்த அடியும் எடுத்து வைக்கவில்லை. விலகிச் செல்ல தயாராக இருந்தாள்.

ஆனால் நாங்கள் காதலித்துக் கொண்டிருந்தோம் கடந்த மூன்று மாதங்களாக. இதைக் கேட்கும்பொழுது பாதிக்கப்பட்டவன் நான்தான் எனத்தோன்றலாம். ஒரு வகையில் உண்மை அதுதான் என்றாலும் இதில் பெரிய பாதிப்பு அவளுக்குத்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆண்களால், ஆண்களின் ஆணாதிக்க எண்ணத்தால், தான்தான் என்ற அகந்தையால், அவள் தனக்கானவள் - தனக்கு மட்டுமே உரியவள் என்ற அடிமைப்படுத்தும் பாசிச மனநிலையில் பாதிக்கப்பட்டவளின் மனத்தெளிவின்மையின் வெளிப்பாடாகத்தான் நான் இதை பார்க்கிறேன், பார்ப்பேன்.

சமூகத்தில் துவங்கி சமூக வளைதளங்கள் வரையில் பெண்களை அவளின் விருப்பத்திற்கு இயங்க அனுமதிக்காத ஒரு சூழல் நிலவுகிறது என்பதை மறுக்க இயலாது. பெண்ணியம் பேசுபவர்கள் பெரும்பாலும் எந்த ஒரு உறவுகளிலும் இருக்காமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். வெடித்துச் சிதறாமல் கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைகள் எத்தனை எத்தனை?

சம உரிமை என்பதெல்லாம் வெறும் பேச்சாகவே இருக்கிறது என்பதுதான் இங்கே பெரும் வேதனையும்கூட. பாதிக்கப்பட்டவனாக இருக்கும் நான், ஒருவேளை நானாக இல்லாமல் இதை சிந்திக்காமலே சென்றிருந்தால் வெறும் ஆணாக, நான் செய்தது சரியாகவும் அவள் தவறானவளாகவும் நினைத்துக் கொண்டு என் காலத்தை கழித்திருப்பேன் அல்லது அது அவளாக இல்லாமல் இருந்திருந்தால் இதுதான் வாழ்க்கை இதுதான் காதல் போல என்ற எண்ணத்திற்கு வந்திருப்பாள்.

ஆண்கள் வேலைக்கு செல்கிறோம், குடும்பத்தை பார்க்கிறோம், உற்றார் உறவினர்களுடன் உறவோ பிரச்சனையோ அத்தனையும் சந்திக்கிறோம், குழந்தைகளின் கல்வி, பெற்றோர் நலன் என அத்தனையும் இருந்தாலும் காதலி மற்றும் மனைவி என வரும் இடத்தில் அவளுக்கான தனித்துவமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுதில்லை. அதை அவர்களாக கேட்டு பெறும் இடம் வரும்பொழுது சண்டைகள் சச்சரவுகள் பிரிவுகள் அத்தனையும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் கேட்பதை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் அல்லது அவர்கள் கேட்பதை நாம் சகித்துக் கொண்டு வாழ ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் புரிதல்? அது கடைசிவரை இருப்பதே இல்லை. யாராவது ஒருவர் அத்தனை திருமணத்திலும் காதலிலும் தியாகி ஆகத்தான் வேண்டி இருக்கிறது. ஏன் அப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு காதலிக்கிறோம் திருமணம் செய்திருக்கிறோம் என்ற பதில் மட்டுமே கிடைக்கிறது. இது நியாயமானதா? இப்படி உறவுக்குள் இருந்தால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் நிச்சயம் இருக்க வேண்டுமா? அல்லது உறவுகள் கட்டாயத்திற்கு உட்பட்டதா? எந்தவொரு தெளிவும் இல்லா நிலைதான் காதலும் திருமணமும். ஆனால் இதை புரிதலின் மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால் சரி செய்ய நாம் தயாராக இருக்கிறோமா? இல்லை. காரணம் ஈகோ.

ஆனால் நான் சரி செய்ய முயன்றேன். அத்தனை சுய உணர்தலுக்குப் பின் அவளிடம் தவறு என்னுடையது. இருப்பினும் நீ கொஞ்சமாவது உன்னுடைய பக்கத்தில் இருந்து இந்த காதலை தக்க வைக்க நினைத்திருக்கலாம் என்ற என்னுடைய உரையாடலின் துவக்கத்திற்கு அவளின் பதில் முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது,"நான் சோர்வடைந்துவிட்டேன்."

எல்லா காதலிலும் அதன் முடிவில் அழகிய நினைவுகள் இருக்கும். எனக்கு அழகிய நினைவுகளைவிட அதிகமாக ஆழமான புரிதல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையை அடைய நிச்சயமாய் ஈகோவை தூக்கி எறிய வேண்டும். நான்தான் என்ற அகந்தை அறவே அழிய வேண்டும். இந்த நிலையில் உலகமே அதனதன் பார்வையில் அது சரியானது என புரியும்.

வண்ணத்துப்பூச்சி அழகாக இருக்கும் ஆனால் புழுவாக இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்குள் அது எத்தனை கஷ்டங்களை கடந்திருக்கும் என்பதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை என்பதே நிதர்சன உண்மை. ஆனால் இந்த மாற்றம் மதிப்பானது. வைரத்தைப் போன்றது. புரிந்துகொள்ளுங்கள் அல்லது புரிந்து கொள்ள முயலுங்கள் எக்காரணத்தைக் கொண்டும் புரிந்து கொண்டதைப்போல நடிக்காதீர்கள். வெளிப்படைத்தன்மை இல்லா எந்த உறவும் நிச்சயமாக நிலைக்காது.

நான் என் வாழ்வில் இழந்த கடைசி காதல் இதுவாகவே இருக்க விரும்புகிறேன். அவள் என்னைவிட்டு போகட்டும். அவளுடைய வாழ்வை வாழட்டும். நான் சரியானவனாக, தகுதியானவனாக இருந்திருந்தால் அவள் நிச்சயமாக இருந்திருப்பாள். நான் அப்படி இல்லை என்பதை மறுக்க இயலாது. இப்பொழுது புரிந்துகொண்டேன் என்பதனால் வெட்டிய கழுத்தை ஒட்ட வைக்கலாம் ஆனால் என்ன செய்தாலும் தழும்பு மறையாது.


- எழுத்தாளுமை இக்ரிஸ் (18/08/2025)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2025 23:59
No comments have been added yet.