கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக் கெடுப்பதற்கென்றே வருகிற கெட்ட சக்திகள் மீதான அச்சமும் கொடுமையானவை. யதியையோ, சலத்தையோ ஒருநாள்கூட நான் நிம்மதியாக எழுதிய நினைவில்லை. எப்போதும் பதற்றமும் கவலையும் இருக்கும்.
இம்முறை அந்தப் பதற்றம் இருக்கக்கூடாது; கைவசம் சில அத்தியாயங்களாவது எப்போதும் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். அதனால்தான் ஆரம்பிப்பதையே அவ்வளவு நாள் தள்ளிப் போட்டேன்.
ஆரம்பிக்கும்போது என் கையில் ஐந்து அத்தியாயங்கள் இருந்தன. வாழ்வில் முன்னெப்போதும் அவ்வளவு அத்தியாயங்களைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு தொடரை அறிவித்ததே இல்லை. மிகுந்த பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் அப்போது உணர்ந்தேன். ஆனால் அந்நிம்மதி நிலைக்கவில்லை.
ஐந்து என்பது நான்கானது. மூன்றானது. பிறகு இரண்டானது. ஒன்றும் ஆனது. சென்ற வாரம் சனி ஞாயிறுகளில் உக்கிரமாக அமர்ந்து இரண்டு அத்தியாயங்களை எழுதி, மீண்டும் இரண்டு அத்தியாயங்கள் கைவசம் உள்ளன என்கிற நிம்மதியை எனக்கு நானே அளித்துக்கொண்டேன். அதை மட்டுமாவது தொடர வேண்டும் என்று முடிவு செய்தேன்.
விதி யாரை விட்டது?
இந்த வாரம் உதவி ஆசிரியர் வேலை நிறுத்தம் செய்துவிட்டபடியால் திங்கள் செவ்வாயில் மெட்ராஸ் பேப்பர் பணிகள் கொன்று தின்றுவிட்டன. நேற்றெல்லாம் வேறு சில தவிர்க்க முடியாத வெளி வேலைகள். ஒரு சொல்லைக்கூட எழுத முடியவில்லை. விளைவு, நாளைய அத்தியாயத்தை இன்று எழுத வேண்டிய கட்டத்துக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தேன்.
எனக்கு இதுதான் தொட்டில் பழக்கம். இம்முறை மாற்றலாம் என்று நினைத்து ஆரம்பித்தது. பதினைந்தாவது அத்தியாயத்தில் திட்டம் தவிடுபொடி ஆகிவிட்டது.
ஒருமுறை ஜெயமோகன் சொன்னார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று எங்கே போவதென்றாலும் எழுத வேண்டியதை மிச்சம் வைக்காமல் எழுதி ஷெட்யூல் செய்துவிட்டுப் போய்விடுவதாக. காந்தி, கோகலே தொடர்களை மெட்ராஸ் பேப்பரில் எழுதியபோது சொக்கனும் பல அத்தியாயங்களை முன்கூட்டியே எழுதிக் கைவசம் வைத்திருப்பதைக் கண்டேன்.
எல்லோரும் ஏதோ ஓர் ஒழுங்கில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். நானொருவன் மட்டும்தான் ஒழுங்கீனத்தை ஒழுக்கமாகக் கடைப்பிடிக்கிறேன் போலிருக்கிறது.
All rights reserved. © 2004-2025 Pa Raghavan .


